காஞ்சீ ஶ்ரீமடத்தின் வருடாந்தர பஞ்சாங்க ஸதஸ்ஸின் ஒருங்கிணைப்பாளரான
நெரூர் ஶ்ரீரமண ஶர்மா ஆஸ்திக மஹாஜனங்களுக்கு செய்துகொள்ளும் ஒரு
விஜ்ஞாபனம்.
வேதம் ஓதிய வேதியர்க்கோர் மழை என்பது ஆன்றோர் வாக்கு. அந்த வேதத்தை ஓதும்
பொறுப்பு உள்ளவர்கள் அனைவரும் (அவர்களால் அதனை முழுதாக ஓத இயலுகிறதோ
இல்லையோ) அதற்கு அங்கமாக செய்யவேண்டியதான வருடாந்தர அனுஷ்டானமானது
உபாகர்ம என்பது. எந்த மஹர்ஷிகள் நமக்கு வேதத்தைக் கொடுத்துள்ளார்களோ
அவர்களுக்கு நன்றியுடனும் பக்தியுடனும் அக்னியில் ஆஹுதியளித்து அவர்களது
ஆசியுடன் அடுத்த வருடமும் வேத மந்திரங்களைத் தொடர்ந்து ஓதத் தொடங்குவதே
உபாகர்ம.
இந்த உபாகர்மாவுக்கு ஆவணி அவிட்டம் என்று பரவலாக தமிழில் இன்று பெயர்
வழங்கினாலும் ஆவணி தான் அவிட்டம் தான் என்று கிடையாது. இதற்கு பலவேறு
தர்ம ஶாஸ்த்ர க்ரந்தங்களில் பலவேறு காலங்களைச் சொல்லியுள்ளார்கள் மனு
முதலியோர். முக்கிய காலமாக ருக்வேதத்திற்கு ஶ்ராவண மாஸத்தின் ஶ்ரவண
(திருவோண) நக்ஷத்ரத்தையும், யஜுர்வேதத்திற்கு அதே மாதத்தின்
பௌர்ணமியையும், ஸாமவேதத்திற்கு பாத்ரபத மாதத்தின் ஹஸ்த நக்ஷத்ரத்தையும்
கூறியுள்ளார்கள்.
(ஶ்ராவண மாஸம் என்பது ஆடி மாதத்தில் வரும் அமாவாஸ்யைக்கு அடுத்த
ப்ரதமையில் தொடங்கி அதற்கடுத்த அமாவாஸ்யை முடிய. இதற்கு அடுத்தது
இப்படியே பாத்ரபத மாஸம். இதில் ஶ்ராவண ஶ்ரவணமும் ஶ்ராவண பௌர்ணமியும்
பெரும்பாலும் சேர்ந்து வரும். அதனால்தான் அந்த மாதத்திற்கு ஶ்ராவணம்
என்று பெயர். ஆகவே பெரும்பாலும் ருக் யஜுர்வேதங்களுக்கு சேர்ந்தே உபாகர்ம
வரும், ஆனால் சில வருடங்கள் ஒரு நாள் முன்பு பின்பாக வரலாம்.)
இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் க்ரஹணம் மற்றும் ஸங்க்ரமணம்
(மாதப்பிறப்பு) ஏற்படும் தினத்தன்று உபாகர்ம அனுஷ்டிக்கக்கூடாது என்கிறது
ஶாஸ்த்ரம். அதிலும் ஸூக்ஷ்மமாக என்றைய தினம் உபாகர்ம செய்யவேண்டுமோ
அன்றைய தினம் நடுநிசிக்கு முன்பு க்ரஹணம் இருக்கக்கூடாது.
நிகழும் ஹேமலம்ப ௵ ஶ்ராவண மாஸ பௌர்ணமியன்று (2017-ஆகஸ்ட்-07):
பார்ஶ்வ க்ரஹண ஆரம்பம் 22:52
க்ரஹணம் விட ஆரம்பிப்பது 23:50
மோக்ஷம் +0:48
ஆகவே நடுநிசிக்கு முன்பே (22:52) க்ரஹணம் இருப்பதால் அன்றைய தினம்
அனுஷ்டிக்கப்படவேண்டிய ருக் யஜுர் உபாகர்மத்திற்கு தோஷம் ஏற்படுகிறது.
ஆகவே முக்கிய காலத்தில் இதனை அனுஷ்டிக்கமுடியாது. (க்ரஹணம் மற்றும்
ஸங்க்ரமணத்தைத் தவிர வேறு சில தோஷங்களும் சொல்லப்பட்டுள்ளன ஆனால் அவை
யாதும் இவ்வருடம் ஏற்படவில்லை. ஆகவே இவ்வருடம் க்ரஹணம் தான் தோஷம்.)
இத்தகைய விஷயத்தில் ருக்வேதத்திற்கும் ஶுக்ல யஜுர் வேதத்திற்கும் ஶ்ராவண
மாஸ ஶுக்ல பக்ஷத்தில் (பெரும்பாலும் ஹஸ்தத்துடன் கூடிய) பஞ்சமியன்று
உபாகர்ம அனுஷ்டிக்கும்படி ஶாஸ்த்ரம் கூறுகிறது. (பழைய பஞ்சாங்கங்களில்
வாஜஸநேயி என்ற பெயரில் ஶுக்ல யஜுர் வேதத்தையும் குறிப்பர், இஃது இன்றைய
பஞ்சாங்கங்களில் விட்டுப்போயிருக்கிறது.) ஆகவே இவ்வருடம் வரும் ஆடி ௴ 13
௳ (2017-ஜூலை-28) அன்று ருக்வேதிகளும் ஶுக்ல யஜுர்வேதிகளும் உபாகர்ம
செய்யவேண்டியது.
க்ருஷ்ண யஜுர்வேதத்திற்கோ ஶ்ராவண மாஸத்தில் தோஷம் ஏற்பட்டால் அதற்கு
முந்தையதான ஆஷாட மாஸ பௌர்ணமியன்று செய்யவேண்டும் என்ற போதாயன வசனம்
இருப்பதால் போதாயன ஸூத்ரத்தை அனுஷ்டிப்பவர்கள் சிலர் அவ்வாறு செய்யும்படி
அபிப்ராயப்படுகிறார்கள். (இந்த காலம் ஜூலை 8 அன்று கடந்துவிட்டது.) ஆனால்
ஆனி மாதத்தில் வரும் ஆஷாடம் கூடாது என்று வேறு சிலர் கருதுகின்றனர்.
போதாயனம் என்றில்லாமல் பொதுவான ஶாஸ்த்ரமாவது – முக்கிய காலமான ஶ்ராவண
பௌர்ணமிக்கு தோஷம் வந்தால் அடுத்த பாத்ரபத பௌர்ணமியன்றும், அதற்கும்
வந்தால் முந்தைய ஆஷாட பௌர்ணமியன்றும், அதற்கும் வந்தால் முக்கிய காலமான
ஶ்ராவண பௌர்ணமியிலேயே தோஷ பரிஹார ஹோமம் செய்தும் அனுஷ்டிக்கவேண்டும் –
என்றுள்ளது.
ஆகவே இவ்வருடம் முக்கிய காலமான ஶ்ராவண பௌர்ணமிக்கு தோஷம் இருப்பதாலும்
இரண்டாவதாக சொல்லப்பட்ட பாத்ரபத பௌர்ணமிக்கு தோஷம் இல்லாததாலும் அன்றே
(ஆவணி ௴ 21 ௳, 2017-செப்-6) க்ருஷ்ண யஜுர்வேதிகள் உபாகர்ம
செய்யவேண்டியது. போதாயன ஸூத்ரத்தவர்களும் ஆஷாடத்தில் செய்யவியலாது என்ற
பக்ஷத்தில் இந்த காலத்திலேயே செய்யவேண்டும்.
ஸாம வேதிகளுக்கோ சதுர்த்திைய ஒட்டி உபாகர்ம வருவதால் க்ரஹண தோஷம்
வாய்ப்பே இல்லை. (மற்ற தோஷங்கள் ஸம்பவிக்கலாம் ஆனால் இவ்வருடம் ஒன்றும்
இல்லை.) ஆகவே அவர்கள் ஆவணி ௴ 9 ௳ (2017-ஆகஸ்ட்-25) பிள்ளையார்
சதுர்த்தியன்றே உபாகர்ம செய்யவேண்டியது.
ப்ரதிவருடமும் காஞ்சீ ஶ்ரீ பெரியவாளின் உத்தரவுபடி அன்னாரது சாதுர்மாஸ்ய
ஸமயத்தில் நடத்தப்படும் பஞ்சாங்க ஸதஸ்ஸில் தமிழ்நாட்டிலுள்ள சுமார்
15க்கும் மேற்பட்ட பஞ்சாங்கங்களின் வெளியீட்டாளர்கள் தர்ம ஶாஸ்த்ர
வித்வான்களின் கலந்தாலோசனையின்படி அடுத்த வருடத்திற்கான அனுஷ்டான
உத்ஸவாதிகளை முன்னதாகவே தீர்மானித்துக்கொள்கிறார்கள். பிறகு சித்திரை
மாதத்திற்கு முன்பாகவே (அடுத்த வருட முஹூர்த்தாதிகளைப்
பார்த்துக்கொள்வதற்கு ஏதுவாக) வெளியிடுகிறார்கள். கடந்த வருடம்
விஜயவாடாவில் ஶ்ரீ பெரியவாளின் சாதுர்மாஸ்ய ஸந்நிதியில் இந்த
வருடத்திற்காக நடந்த ஸதஸ்ஸில் மேற்கண்டபடியே நிர்ணயம் கொடுத்துள்ளோம்.
வைஷ்ணவ ஸம்ப்ரதாயத்தைச் சேர்ந்தவர்கள் சிலர் அவர்களது மூல நூல்களை
ப்ரமாணம் காட்டி க்ரஹணத்தன்றே அனுஷ்டிக்க வேண்டும் என்று கூறுகின்றனர்.
அதைப்பற்றி நாம் ஒன்றும் சொல்வதற்கில்லை. அந்த ஸம்ப்ரதாயத்தவர்கள்
அவரவர்களது பெரியோரைக் கேட்டுக்கொள்ளல் நலம். வைஷ்ணவர்கள் அல்லாதவர்களைப்
பொறுத்தவரை க்ரஹண தோஷம் உண்டு என்பதில் ஐயமில்லை. ஆகவே தான் ஶ்ரீமடத்து
ஸதஸ்ஸில் மேற்கூறியபடி நிர்ணயம் கொடுக்கப்பட்டது.
இதில் சிலர் தேவையின்றி பரவலாக ஊடகங்களில் மாற்றுக்கருத்துக்களைப்
பரவவிட்டு பொதுமக்களுக்கு குழப்பங்களை உண்டுபண்ணியிருப்பது வருந்தத்தக்க
விஷயம். கடந்த 2017-ஜூன்-16 தேதியிட்டு நமது ஶ்ரீ பெரியவாள் பஞ்சாங்க
ஸதஸ்ஸின் நிர்ணயத்தையே உறுதி செய்து கடிதம் கொடுத்திருப்பது சமூக
ஊடகங்களில் ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ளது. இருப்பினும் மீண்டும் மீண்டும்
சில ஊடக ப்ரசாரங்கள் ஏற்பட்டுள்ளன. பொதுமக்கள் இதனைக் கண்டுக் குழப்பம்
அடையாமல் இருக்கவேண்டும்.
ஏன் இப்படிச் சிலர் மாற்றுக்கருத்தை ப்ரசாரம் செய்கிறார்கள் என்பது
நமக்குத் தேவையில்லை. இத்தகைய குழப்பங்களுக்கு ஆளாகாமல் “தெளிவு குருவின்
திருவார்த்தை கேட்டல்” என்ற ஆன்றோர் வாக்கின்படி லோக க்ஷேமார்த்தமாக ஶ்ரீ
பெரியவாள் நடத்தும் இந்த ஸதஸ்ஸின் மேற்படி நிர்ணயத்தை அனுசரித்து க்ரஹண
தோஷம் இல்லாத தினங்களில் உபாகர்ம அனுஷ்டானத்தைச் செய்து ஶ்ரேயஸ்ஸை
அடைவோமாக!
ஜய ஜய ஶங்கர ஹர ஹர ஶங்கர.
No comments:
Post a Comment