Pages

Friday, June 29, 2018

பறவையின் கீதம் - 24




வாழ்க்கை மயக்கும் வைன் போல. எல்லாரும் லேபிளில் என்ன எழுதி இருக்கிறது என்றே பார்க்கிறார்கள்.
பலரும் சுவைப்பதில்லை!

புத்தர் ஒரு மலரைக்காட்டி சீடர்களிடம் அதைப்பற்றி சொல்லுமாறு பணித்தார்.
ஒருவன் அது குறித்து ஒரு சொற்பொழிவே ஆற்றினான்.
இன்னொருவன் அது கூறித்து ஒரு கவிதையை சொன்னான்.
மற்றவன் ஒரு குட்டிக்கதையை சொன்னான்.
எல்லாரும் லேபிள் ஒட்டுகிறவர்கள்.
மஹா கஷ்யப் அதை உள்ளபடி பார்த்தார். ஆகவே வாயை திறக்கவே இல்லை!

என்னால் மட்டும் ஒரு மலரை, பறவையை, ஒரு மரத்தை... சுவைக்க முடியுமானால்..... ஹும்! என்ன செய்ய? என் நேரமும் ஆற்றலும் முழுதும் லேபிலை ஆரய்வதிலேயே போய்விடுகிறது.

Thursday, June 28, 2018

பறவையின் கீதம் - 23





சாது கேட்டார்: அதோ அந்த மலைகள், நதிகள், நக்‌ஷத்திரங்கள்... இவை எல்லாம் எங்கிருந்து வந்தன?
மாஸ்டர் சொன்னார்: உங்கள் கேள்வி எங்கிருந்து வந்தது?

உள்ளே கவனி

Wednesday, June 27, 2018

பறவையின் கீதம் - 22





நசருதீன் வீதியில் எதையோ தேடிக்கொண்டு இருந்தார்.
முல்லா என்ன தேடுகிறாய்?
என் சாவி!
அட! எங்கே அதை தொலைத்தாய்?
வீட்டில.
பின்ன? இங்கே தேடினா என்ன அர்த்தம்?
இங்கதானே வெளிச்சம் இருக்கு?

இறைவனை எங்கெங்கோ தேட வேண்டாம்.

Tuesday, June 26, 2018

பறவையின் கீதம் - 21





கப்பல் கவிழ்ந்து போய் ஒரு கடல் வணிகன் இலங்கையில் ஒதுங்கினான். அப்போது அங்கே விபீஷணன் ஆட்சி செய்து கொண்டு இருந்தார். வீரர்கள் வணிகனை கொண்டு போய் விபீஷணன் எதிரில் நிறுத்தினர். விபீஷணர் மிகவும் சந்தோஷமடைந்தார். இவர் என் ராமன் மாதிரியே இருக்கிறார் என்று கூறி அரச உடைகளை அணிவித்து நகைகளையும் அணிவித்தார்.

ராமக்ருஷ்ணர் இந்த கதையை கேட்டபின் சொன்னார்: “ முதன் முறை இந்த கதையை கேட்ட போது புளகாங்கிதம் அடைந்தேன். ராமரை களிமண் சிலையில் பார்க்க முடியுமானால் மனிதனில் ஏன் பார்க்கக்கூடாது?

Monday, June 25, 2018

பறவையின் கீதம் - 20





ஒரு தீவில் ஒரு கோவில் இருந்தது. அதில் ஆயிரம் மணிகள் கட்டப்பட்டு இருந்தன. காற்று அடிக்கும் போலெல்லாம் அவை அருமையான ஒலி எழுப்பும். கேட்போர் மனதை கொள்ளை கொள்ளும்.

சில நூற்றாண்டுகளில் கடல் மட்டம் உயர்ந்து அந்த தீவு முழ்கிவிட்டது. அந்த மணிகளும் கோவிலுடன் சேர்ந்து முழுகின. ஆனால் அவை இன்னும் ஒலிப்பதாகவும் கூர்ந்து கேட்போருக்கும் இன்னமும் கேட்பதாகவும் உள்ளூர்வாசிகள் நம்பினர்.

இதை கேள்விப்பட்டு ஒரு இளைஞன் அந்த ஒலியை கேட்க வேட்கை கொண்டான். எவ்வளவு நாளானாலும் சரி; அந்த கிராமத்தில் தங்கி மணிஓசையை கேட்டுவிட வேண்டும் என்று திட்டம். காலை முதல் இரவு வரை கடற்கரையிலேயே பழியாக கிடந்தான். என்ன கூர்ந்து கேட்டாலும் கடல் அலையின் ஓசைதான் கேட்டது. அதை கஷ்டப்பட்டு விலக்கிவிட்டு உன்னிப்பாக கேட்க முயன்றான். கடலோசையை விலக்கவே முடியவில்லை. நாட்கள் உருண்டோடின. மணிகளின் ஓசையை கேட்க முடியும் என்ற நம்பிக்கை போய்விட்டது. சரி இன்றே கடைசி நாள்; நாளை ஊருக்கு கிளம்பவேண்டியதுதான் என்று உறுதி செய்து கொண்டு கடற்கரைக்கு சென்றான். கடலோசையை விலக்க முயலவில்லை. ஆனந்தமாக அதை செவி மடுத்தான். கூடவே தென்னை மரங்களின் ஓசையையும். இந்த ஓசைகளை விலக்க முயலாமல் பேச்சற்று கிடந்தான். அப்படியே ஒரு த்யான நிலைக்கு போய்விட்டான். அந்த சப்தம் அவ்வளவு அமைதியை தருவதாக இருந்தது. திடீரென்று மணியோசை கேட்டது. முதலில் ஒன்று. பின் மற்றவையும் ஒன்றன்பின் ஒன்றாக கீதம் இசைக்க ஆரம்பித்தன. பேரானந்த நிலைக்கு சென்றான்.

மணியோசை கேட்க வேண்டுமா? கடலோசையை கேள்.

கடவுளை தெரிந்து கொள்ள வேண்டுமா? அவரது படைப்பின் அற்புதத்தை பார்!

Friday, June 22, 2018

பறவையின் கீதம் - 19





புத்தரை யாரோ கேட்டார்கள். யார் புனிதர்?

புத்தர் சொன்னார் ஒவ்வொரு மணி நேரமும் பல நொடிகள். அந்த ஒவ்வொரு நொடியையும் பல கணமாக பகுத்தால் ஒவ்வொரு கணத்திலும் யாரால் முழுக்க வாழ முடிகிறதோ அவரே புனிதர்.

ஒரு ஜப்பானிய வீரனை சிறை பிடித்துவிட்டார்கள். இரவாயிற்று. அவனால் தூங்க முடியவில்லை. நிச்சயம் அடுத்த நாள் காலை தன்னை துன்புறுத்தப்போகிறார்கள் என்று பயந்தான். அப்போது அவனது குரு சொன்னது நினைவுக்கு வந்தது. “ நாளை என்பது மாயை. உண்மையானது இந்த தருணம் மட்டுமே!” ஆகவே அவன் அந்த தருணத்துக்கு மீண்டான். நிம்மதியாக உறங்கினான்.

எதிர்காலம் என்பது யார் மீது தன் பிடியை விட்டுவிட்டதோ அவன் பறவைகள் போல; வயலில் பூத்த மலர்களைப்போல. நாளை என்பது குறித்த அச்சமே இல்லை. தற்போதில் இருப்பு! புனிதர்!

Thursday, June 21, 2018

பறவையின் கீதம் - 18





மடாலயங்களில் குறைந்த பட்சம் பத்து வருடங்கள் குருவுடன் சீடனாக இருந்தால்தான் மற்றவர்களுக்கு உபதேசிக்கும் தகுதி உள்ளதாக கொள்ளலாம்.

'டென்னோ' பத்து வருடம் முடித்ததால் அவனை ஆசிரியனாக அறிவித்தார்கள்.
டென்னோ 'நான் இன்' ஐ சந்திக்க ஒரு நாள் போனார். மழைக்காலம். காலில் மரச்செருப்புகள் அணிந்து குடை ஒன்றையும் எடுத்துக்கொண்டு போனார்.
அறைக்குள் நுழைந்ததும் 'நான் இன்' கேட்டார்: “மரச்செருப்புகள் அணிந்து குடையை ஏந்தி வந்தாய் அல்லவா? அவற்றை வெளியே விட்டுவிட்டாய். குடையை எங்கே வைத்தாய்? செருப்புக்கு வலது பக்கமா இடது பக்கமா?”

டென்னோ விடை சொல்ல முடியாமல் தலை குனிந்தார்.விழிப்புணர்வு இன்னும் வளரவில்லை என்று உணர்ந்தார். ஆகவே அடுத்த பத்து வருடங்கள் நான் இன் உடன் சீடனாக இருந்து தொடர் விழிப்புணர்வு பெற்றார்.

எப்போதும் விழிப்புணர்வுடன் இருப்பவர், எப்போதும் அந்த கணத்திலேயே வாழ்பவர் - இதோ குரு இருக்கிறார்!

Wednesday, June 20, 2018

பறவையின் கீதம் - 17





புத்தர் ஞானம் பெற பல வருடங்கள் பல இடங்களுக்கு அலைந்து திரிந்தார். கடைசியில் கயாவில் ஒரு போதி மரத்தின் கீழ் அமர்ந்து இருந்த போது ஞானம் பெற்றார்.
பாமரர்களுக்கு புரியாதபடி அந்த ரகசியத்தை உபதேசித்தார். “துறவிகளே, நீண்ட மூச்சை இழுக்கும்போது நீண்ட மூச்சை இழுக்கிறோம் என்று நினைவில் இருத்துங்கள். சிறிய மூச்சை இழுக்கும்போது சிறிய மூச்சை இழுக்கிறோம் என்று நினைவில் இருத்துங்கள். மத்தியமாக மூச்சை இழுக்கும்போது மத்தியமாக மூச்சை இழுக்கிறோம் என்று நினைவில் இருத்துங்கள்.
நினைவில் கொள்ளுதல், கவனித்தல், உள்வாங்குதல்.... இப்படி சிறு குழந்தைகளுக்கு இயற்கையாக நிகழ்கிறது.

Tuesday, June 19, 2018

பறவையின் கீதம் - 16





பல வருட பயிற்சிக்குப்பின் சீடன் ஜென் மாஸ்டரிடம் ஞானத்தை அருளுமாறு மன்றாடினான். மாஸ்டர் அவனை அருகில் இருந்த மூங்கில் காட்டுக்கு அழைத்துச்சென்றார். "அதோ பார்த்தாயா அந்த மூங்கில்? எவ்வளவு உயரமாக இருக்கிறது!”
"ஆமாம் குருவே!”
"இதோ இந்த மூங்கிலை பார்த்தாயா, எவ்வளவு குள்ளமாக இருக்கிறது?”
அந்த கணத்தில் சீடன் ஞானம் பெற்றான்.

Monday, June 18, 2018

பறவையின் கீதம் - 15





எங்கள் நாய் ஒரு நாள் மரத்தின் கிளையை கவனிப்பதை பார்த்தேன். காதுகள் விறைத்து வால் விறைப்பாக ஆடிக்கொண்டு..... அது கிளை மீது உட்கார்ந்திருந்த குரங்கை கவனிக்கிறது என்று அறிந்தேன். அதற்கு அப்போது குரங்கைத்தவிர வேறு எதுவும் கவனத்தில் இல்லை. முழுக்க முழுக்க குரங்கே அதன் மனதில் நிறைந்து இருந்தது. அடுத்த நாள் பற்றிய கவலை அதற்கில்லை

அது அப்போது இருந்த நிலை த்யானம். அது போன்ற த்யான நிலையில் அதை நான் அது வரை பார்க்கவே இல்லை.

த்யானத்துக்கு மற்றதைப்போலவே சுலபமான ஒரு வழி முழுக்க முழுக்க இந்த கணத்தில் இருப்பதுதான். கடந்த காலம் குறித்தோ வரும் காலம் குறித்தோ ஒரு சிந்தனையும் இல்லாமல்.... விளையாடும் ஒரு பூனைக்குட்டியை பாப்பது போல....

Friday, June 8, 2018

பறவையின் கீதம் - 14





ஜென் மாஸ்டர் ஞானம் பெற்றார்! பின் வரும் வரிகளை எழுதி வைத்தார்.

என்னே அற்புதம்!
நான் விறகு வெட்டுகிறேன்!
கிணற்றில் இருந்து நீர் இறைக்கிறேன்!”

ஞானம் பெற்றதும் உலகம் மாறுவதில்லை. மரம் மரமாகவே இருக்கிறது. மக்களும் மக்களாகவே இருக்கிறார்கள். நீங்களும் அப்படியேத்தான் இருக்கிறீர்கள். முன்னே கோபக்காரனாக இருந்திருந்தால் கோபக்காரனாக; சாந்தமாக இருந்திருந்தால் சாந்தமாக; புத்திசாலியாக இருந்திருந்தால் புத்திசாலியாக; முட்டாளாக இருந்திருந்தால் முட்டாளாக.
ஒரே வித்தியாசம் என்னவென்றால் உங்கள் பார்வைக்கோணம் மாறிவிட்டது.

நீங்கள் எல்லாவற்றிலிருந்தும் பற்றற்றுவிட்டீர்கள். இதயம் ஆனந்தத்தில் நிரம்பி வழிகிறது. பற்றற்றுவிட்டது என்பதால் எல்லாவற்றிலிருந்தும் விலகிவிடவில்லை. எதை செய்கிறோமோ அதை த்யானமாகவே செய்கிறோம். அந்த கணத்தில் வேறு எதற்கும் அங்கே இடமில்லை. அதனாலேயே இன்னும் விறகு வெட்டுகிறோம்; நீர் இறைக்கிறோம். எதை செய்தாலும் ஆனந்தமே நிறைந்து இருக்கிறது. சாதாரணமாக காண்பதில் /செய்வதில் - ஒரு சித்திரமோ இயற்கை காட்சியோ- இன்பம் உண்டாகிறது. த்யானமாக செய்வதில் பேரின்பம் உண்டாகிறது. இப்படி அமிழ்ந்து போவது சிறு குழந்தைகளுக்கு இயற்கையாக நிகழ்கிறது.

Thursday, June 7, 2018

பறவையின் கீதம் - 13





மாஸ்டரிடம் சீடர் புகார் செய்தார். “ஜென் என்பது என்பதன் கடைசி ரகசியத்தை என்னிடமிருந்து மறைக்கிறீர்கள்!” 

மாஸ்டரின் மறுப்புகளை அவன் ஏற்கவில்லை.

ஒரு நாள் இருவரும் குன்றுகளில் உலாவிக்கொண்டு இருந்தனர். எங்கே ஒரு பறவை பாடுவது கேட்டது.

பறவை பாடுவதை கேட்டாயா?” என்றார் மாஸ்டர்.
ஒரு சில கணங்கள் கழித்து சீடர் சொன்னார்: “கேட்டேன் குருவே!”
"நான் உன்னிடம் எதையும் மறைக்கவில்லை என்று உணர்ந்து கொண்டாயா?”
ஆம் குருவே!”

நீங்கள் உண்மையிலேயே ஒரு பாடலை கேட்டாலோ அல்லது மரத்தை பார்த்தாலோ ... உங்களுக்கு புரியும். வார்த்தைகளுக்கும் கருத்துகளுக்கும் அப்பாற்பட்டு.
என்ன சொன்னீர்கள்? நீங்கள் நூறு பறவைகளின் பாடல்களை கேட்டு இருக்கிறீர்களா? ஆயிரம் மரங்களை பார்த்து இருக்கிறீர்களா?

நீங்கள் மரத்தை பார்த்தீர்களா அல்லது மரம் என்னும் அடையாளத்தை பார்த்தீர்களா? நீங்கள் மரத்தை பார்க்கையில் மரத்தை மட்டும் பார்த்தால் .... உண்மையில் நீங்கள் அதை பார்க்கவில்லை. மரத்தை பார்க்கபோய் படைப்பின் அற்புதத்தை பார்த்திருந்தால் - ஹும்! கடைசியாக இப்போதாவது பார்த்திருப்பதாக சொல்லலாம். பாடும் பறவையின் கீதத்தை கேட்டபோது உங்கள் இதயம் சொற்களற்ற அற்புதத்தால் நிறையவில்லையா?

Wednesday, June 6, 2018

பறவையின் கீதம் - 12





ஹிந்து இந்தியா கடவுளையும் அவரது படைப்பையும் விளக்க ஒரு அருமையான பிம்பத்தை வைத்திருக்கிறது. இறைவன் நடனமாடுபவர். படைப்பு நடனம். நடனம் நடனமாடுபவர் இல்லை. ஆனால் அவரில்லாமல் நடனமும் இல்லை! அது அருமையாக இருக்கிறது என்று எடுத்து பையில் போட்டுக்கொண்டு போக முடியாது! நடனமாடுபவர் நிறுத்தி விட்டால் நடனமும் நின்று போகிறது!

கடவுளைத்தேடி நாம் மிக அதிகமாக யோசிக்கிறோம்; சிந்தனை செய்கிறோம்; பேசுகிறோம். படைப்பு என்னும் இந்த உலகத்தை பார்த்தபடி பேசிக்கொண்டே இருக்கிறோம்; சிந்தனை செய்து கொண்டே இருக்கிறோம். ஆராய்கிறோம்; தத்துவங்களை உருவாக்குகிறோம். எல்லாம் வெற்று இரைச்சல் மட்டுமே!

அமைதியாக அந்த நடனத்தை பாருங்கள். வெறுமனே கவனியுங்கள். ஒரு விண்மீனை; ஒரு பூவை; ஒரு காயும் இலையை; ஒரு பறவையை; ஒரு கல்லை..... நடனத்தின் எந்த ஒரு பகுதியானாலும் சரியே! கூர்ந்து பாருங்கள்; கேளுங்கள், உணருங்கள், சுவையுங்கள், நுகருங்கள்! விரைவிலேயே நடனமாடுபவரையும் கண்டுகொள்ளலாம்!

Tuesday, June 5, 2018

பறவையின் கீதம் - 11





ஒரு குட்டி மீன் பெரிய மீன் ஒன்றை சந்தித்தது.
"நான் சமுத்திரத்தை தேடிக்கொண்டு இருக்கேன். நீங்க பாத்திருக்கீங்களா?”
"நீ எதுலே இருக்கியோ அதுதான் சமுத்திரம்!”
"ஹும். இது தண்ணி. நா சமுத்திரத்தை தேடறேன்" என்று சொல்லி குட்டி மீன் தேடலை தொடர்ந்தது.

ஏ குட்டி மீனே! நீ தேட வேண்டாம். இருப்பதை உணந்து கொண்டா போதும்!

Monday, June 4, 2018

பறவையின் கீதம் -10





ஒரு சன்னியாசியிடம் ஒரு இளைஞன் வந்தான்.
நான் பல வருஷங்களாக கடவுளைத்தேடிக்கொண்டு இருக்கிறேன். அவர் இருக்குமிடமாக சொல்லும் எல்லா இடங்களுக்கு போயிருக்கிறேன். கோவில்கள், மலையுச்சிகள், பாலை வனங்கள், அடந்த காடுகள் நதிகள்... போகாத இடமில்லை!”
கடவுளை கண்டு பிடித்தாயா?”
"இல்லையே! நீங்கள் பார்த்து இருக்கிறீர்களா?”
மாலை சூரியன் தன் பொன்னொளியை மரக்கிளைகளூடாக அந்த அறையில் பரப்பிக்கொண்டு இருந்தான். ஆல மரத்தில் நூறு கிளிகள் சப்தமிட்டுக்கொண்டு இருந்தன. தூரத்தில் இடி இடித்துக்கொண்டு இருந்தது. ஒரு கொசு ரீங்காரமிட்டு எச்சரிக்கை செய்து கொண்டு இருந்தது. இவனோ இங்கே உட்கார்ந்து கொண்டு கடவுளை காணவில்லை என்கிறான்! இவனிடம் என்னத்தை சொல்ல என்று சன்னியாசிக்கு தோன்றியது.
சற்று நேர மௌனத்துக்குப்பிறகு அந்த இளைஞன் வருத்தத்துடன் விடை பெற்றான்.


Friday, June 1, 2018

பறவையின் கீதம் - 9





மாஸ்டரை ஒருவர் கேட்டார்: ஆன்மீக வழி என்பது என்ன?
உள்ளே மாற்றத்தை கொண்டு வருவது எதுவோ அதுவே ஆன்மீக வழி.
ஏன்? கடந்த கால மாஸ்டர்கள் சொன்ன வழிகளை கடைபிடித்தால் நான் ஆன்மீகவாதி இல்லையா?
அது உன்னுள்ளே மாற்றத்தை ஏற்படுத்தவில்லையானால் அது ஆன்மீகம் இல்லை. ஒரு போர்வை உனக்கு கதகதப்பை தரவில்லையானால் அது போர்வை இல்லை.
அப்போ ஆன்மீக வழி மாறுமா என்ன?
மனிதர்கள் மாறிக்கொண்டே இருக்கிறார்கள். அவர்களுக்கு தேவையான வழியும் மாறிக்கொண்டே இருக்கிறது. பொதுவாக இப்போது ஆன்மீகம் என்று எதை குறிப்பிடுகிறார்கள் என்றால் கடந்த கால வழிகளைத்தான்.

செருப்புக்கு தகுந்தபடி காலை வெட்ட முடியாது!