Pages

Tuesday, May 25, 2021

பெரியவர்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்?

பல நாட்களாக எழுத நினைத்தது இப்பொழுது எழுத வாய்த்து இருக்கிறது.

முதலிலேயே சொல்லிவிடுகிறேன். இது எந்த குறிப்பிட்ட நபரைப்பற்றியும் இல்லை. நாட்டு நடப்பை சொல்கிறேன். அப்படி இல்லை என்றால் ரொம்ப சந்தோஷம்!

பல வருஷங்கள் முன்னே கடலூரில் ஒரு பலத்த புயல் வீசி எறிந்து சேதங்களிலிருந்து நீண்டு கொண்டிருந்த சமயம், சென்னையிலிருந்து குடும்பத்துடன் ஒரு நபர் வந்திருந்தார். புயல் நிவாஅணத்துக்கு உதவ வேண்டும் என்று சொன்னார். அவரை முன்னேயே பார்த்திருக்கிறேன். ஆசார வேஷத்துடன் இருந்த என்னை அவரும் பார்த்திருக்கிறார். அவர் ஒரு குரு பீடத்தின் சிஷ்யர் என்று பெயர் பெற்றிருந்தார். மனைவி ஒரு புரோபஷனல். மகள் விஷுவல் கம்யூனிகேஷன் படிப்பதாக சொன்னார்.

இங்கே விஷயம் அவர் வந்த நோக்கத்தை நோக்கத்தைப் பற்றி இல்லை அது ஒருவாறு நடந்தேறி விட்டது. விஷயம் அந்த காலேஜ் பெண்ணைப்பற்றி. அவர் ஆசார குடும்பத்தில் பிறந்ததாக பெயர் பெற்று இருந்தாலும் மிகவும் டைட்டான ஜீன்ஸ் ஒன்றையும் மிக மிக இறுக்கமான பனியன் பாணி டி-ஷர்ட்டும் அணிந்து இருந்தார். மிகவே கண்ணை உறுத்தியது. சங்கடப்படுத்தியது. போகட்டும்.

சில வருடங்கள் கழித்து என்னுடைய சம்பந்தியின் 60 ஆண்டு பூர்த்தி விழா வுக்கு சென்றிருந்தேன். அங்கே சில பேர் பேசிக்கொண்டிருந்தோம். அப்போது நான் முழுக்க முழுக்க ஆச்சார வேஷத்திற்கு மாதிரி இருந்தேன் என்பதால் அதைப்பற்றி எல்லாம் பேச்சு வந்தது. ஒரு பெண்மணி - வேண்டுமென்று பேசினாரோ இல்லை என்ன பேசுகிறோம் என்று தெரியாமல் பேசினாரோ, அறியேன் - அவர் "உங்களை மாதிரி ஒரு பெரியவர் எட்டாம் வகுப்பு படிக்கும் ஒரு குழந்தையை என்ன செய்தார் என்று தெரியுமா?” என்று ஆரம்பித்தார். மேலே பேச யோசித்துக்கொண்டு இருந்தார். பக்கத்தில் இருந்தவர் "அதற்கு காரணம் இருக்கிறது. இந்த காலத்து குழந்தைகளுக்கு பெரியவர்களிடம் எப்படி பேச வேண்டும் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று தெரியவில்லை. அதை நாம் கற்றுக் கொடுக்கவில்லை" என்று சொன்னார். இந்த விஷயம் உடனே மனதில் தைத்தது. உண்மைதானே! கொஞ்சம் பின்நோக்கி பார்த்து இங்கே முன் சொன்ன நிகழ்வு போல பல விஷயங்கள் பல சந்தர்ப்பங்களில் இந்த மாதிரி நடப்பதை நினைவுக்கு கொண்டுவர முடிந்தது. இவர் சொல்வதில் பெரிய உண்மை இருக்கிறது என்று தோன்றியது. ஒருகாலத்தில் மடத்துப் பெரியவர்களை எல்லாம் பார்க்கப் போனோம் என்றால் அன்றைக்காவது பஞ்சகச்சம் மடிசார் என்று உடை உடைத்துக் கொண்டு போவோம். மகா பெரியவர் நல்லா ஆசாரத்துடன் இல்லை என்றால் தரிசனம் கொடுக்க மாட்டார் என்று என்று கூட சொல்வார்கள். ஆனால் காலப்போக்கில் எப்படி வேண்டுமானாலும் உடை உடுத்துக் கொண்டு போகலாம் என்று ஆகிவிட்டது. இதில் வந்து இந்த ஜாதி அந்த ஜாதி என்றெல்லாம் விஷயமே இப்போதெல்லாம் காணோம். ஆச்சாரமான வைதீக குடும்பத்தின் திருமணத்தில் குழந்தைகள் இதுபோல் உடை உடுத்திக்கொண்டு திரிவதை பார்த்திருக்கிறேன். அதேபோல் கோவில் எதிரில் சிறுகதைகள் போட்டிருக்கும் குருக்கள் வீட்டு குழந்தைகளும் இதை போல திரிவதை பார்த்திருக்கிறேன். இந்த மாதிரி குழந்தைகளைப் பொறுத்தவரை நாம் 'குழந்தைகள்தானே! விருப்பப்படி உடுத்துக் கொள்ளட்டுமே!’ என்று கண்டுகொள்ளாமல் விட்டுவிடுகிறோம். அதேசமயம் சில பெண்களுக்கு - அம்மாக்களுக்கு - நாம் இப்படியெல்லாம் உடுத்திக் கொள்ள முடியாமல் சமூக உணர்வு தடுக்கிறதே என்று மனதிற்குள் ஒரு ஆதங்கம் இருக்கு இருக்கிறதோ என்னவோ! மொத்தத்தில் குழந்தைகளின் உடை விஷயத்தில் நாம் கவனம் செலுத்துவது இல்லை. நான் பாரம்பரிய உடையை ஆதரித்தாலும் நவீனகால உடைக்கு எதிரானவன் இல்லை. விஷயமே அதை எப்படி உடுத்துகிறார்கள். மொத்தத்தில் எந்த மாதிரி மற்றவர்கள் உணர்வை தூண்டுவதாக அமைகிறது என்பதே இங்கே விஷயம். சிலரைப் பார்த்தாலே லட்சுமிகரமாக இருக்கிறது என்று தோன்றி கையெடுத்து கும்பிடக் கூட தோன்றும். அதுவே சில பேரை....

காஞ்சி மகா பெரியவர் இந்த விஷயத்தில் மகா ஜாக்கிரதையாக இருந்திருக்கிறார் என்ற கேள்வி. அவருடைய இளம் வயதில் ஒரு பெண்மணி தனியாக பெரியவர்களுடன் பேசவேண்டும் என்று கேட்டதற்கு அனுமதித்த அவருடைய கிங்கரர்களை கடிந்து கொண்டிருந்திருக்கிறார். பின்னால் தவிர்க்க முடியாமல் ஒரு பெண்மணி அவசியம் தனியாகத்தான் பேசவேண்டும் என்று மன்றாடிக் கேட்டுக் கொண்டதன் பேரில் சுத்தமாக காது கேட்காத ஒரு நபரை அருகில் வைத்துக்கொண்டு அந்தப் பெண்மணியுடன் நிறைய பேசி இருக்கிறார். இந்த மாதிரி எச்சரிக்கையுடன் எல்லோரும் இருக்கிறார்களா என்றால் கிடையாது. இதுவேதான் பிரச்சினையாக அவர்களுக்கு சில சமயம் அமைந்துவிடுகிறது. தனியாக பேசிவிட்டு வந்தார்கள் என்ன நடந்ததோ யாருக்கு தெரியும் என்று வெளியே யாரும் புரளி கிளப்பி விட்டால் - அதற்குத் தான் நிறைய நபர்கள் இருக்கிறார்களே- சிலருக்கு சந்தேகம் எழத்தான் செய்யும். இந்த மாதிரி விஷயங்களில் ஆன்மீக முன்னேற்றத்தில் கவனம் கொண்டவர்கள் மகா ஜாக்கிரதையாக இருக்க வேண்டியது மிக மிக அவசியம்.

ஆன்மீகப் பெரியவர்கள் ஆக நானறிந்த குறைந்தபட்சம் இரண்டு பேர் இந்த ஜாக்கிரதை சமாசாரத்தை விட்டு விட்டு தம் வாழ்வை தொலத்து குப்புற விழுந்து தலைமறைவாகவோ சிறைச்சாலையிலோ இருக்கிறார்கள். இந்த அவல நிலை யாருக்கும் ஏற்படுவது அனாவசியம். ஆகவே ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். நொச்சூரார் சொல்லுவார் "சன்னியாசி காவி உடை அணிவதுடைய விஷயமே அவன் மற்றவர்களுக்கு விடுக்கும் எச்சரிக்கைதான். நான் வேறு வழியில் இருக்கிறேன்; தயவு செய்து என்னை என் போக்கில் விட்டு விடுங்கள் என்பது!" இதை நினைவில் கொள்ள வேண்டும்.


இந்த விஷயத்தில் நாம் கவனம் செலுத்தாததன் பலன் என்ன ஆகிறது? பெரியவர்கள் என்றால் அவர்கள் அனைவரும் ஞானியர் இல்லை. ஞானி இந்த லோகத்திலேயே இருப்பதில்லை. அவன் ஏதோ ஒரு உலகத்தில் சஞ்சரித்துக் கொண்டிருக்கிறான் .எதிரே யாரோ வருகிறார்கள் பேசுகிறார்கள் போகிறார்கள் ... அதெல்லாம் அவனுக்கு பொருட்டே கிடையாது. அந்தந்த நேரத்துக்கு அவசியமான பேச்சு செய்கையுடன் முடித்துவிடுகிறான். அந்த நிலையை அடைந்துவிட்டவர்களுக்கு இதெல்லாம் விஷயமே இல்லை. ஆனால் பெரும்பாலான பெரியவர்கள் என்று போற்றப்படும் மனிதர்களின் விஷயம் என்ன? அவர்கள் ஞானத்தை நோக்கி போய்க்கொண்டு இருக்கலாம். அதை அடைந்து விடவில்லை. ஞான நாட்டம் உள்ளவர்கள். அவ்வளவுதான். ஆகவே இந்த உலகத்தில் ஆசாபாசங்களுக்கு அவர்களும் பாதிக்கப்படக்கூடியவர்களே! இந்த விஷயத்தில்தான் நம் ஜாக்கிரதை அஜாக்கிரதை சிலசமயம் விரும்பத்தகாத விளைவுகளை ஏற்படுத்தி விடுகிறது. ஒரு ஆன்மிகப் பெரியவர் மீது இருக்கும் மரியாதை ஒரு அன்பு ஒரு காதலாக கூட மாறிவிடுகிறது. அந்த சமயத்தில் இந்த நபருடைய இந்த காதல் அவரை எப்படி பாதிக்கும் என்று யோசிக்க வேண்டியிருக்கிறது. ஞான வழியில் இறங்கிவிட்டார்கள் என்றால் அம்பாள் ஏதோ ஒரு தருணத்தில் பரிட்சை வைப்பாள் என்று சொல்வார்கள். அந்தப் பரீட்சையில் பாஸ் பண்ணி விட்டாள் ஞான மார்க்கத்தில் மேலே போகலாம் .இதில்லாமல் இந்த பரிட்சையில் தோல்வியடைந்து அதலபாதாளத்தில் விழுபவர்கள் உண்டு. இதற்கெல்லாம் உதாரணம் சொல்ல வேண்டியதில்லை உங்களுக்கே தெரிந்து இருக்கும். 'அட இப்படிப்பட்டவரா! இந்த மாதிரி செய்தி வருகிறது இவரைப்பற்றி!’ என்றெல்லாம் நாம் நினைத்தது இல்லையா என்ன?

உன் பார்வையில்தான் தப்பு இருக்கிறது என்று குற்றம்சாட்டி பலன் இல்லை. தப்பு சரி எல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். முக்கால்வாசி சாதாரண மனிதர்கள்தான். அவர்கள் இப்படி இருக்க வேண்டும் என்று நாம் நினைப்பதில் அர்த்தம் இல்லை. அவர்கள் எப்படி இருப்பார்கள் என்று நாம்தான் யோசித்து உசிதம் போல நடந்து கொள்ள வேன்டும்.

ஆகவே நான் வேண்டிக் கொள்வது நம் வீட்டில் எப்படி இருக்கிறோமோ இல்லையோ அது அவரவர் இஷ்டம். பொதுவில் என்று வந்து விட்டாலே நாம் இந்த விஷயங்களில் ஜாக்கிரதையாக இருக்கவேண்டி இருக்கிறது. அது பள்ளிக்கூடம். காலேஜ், மடம் பஜனைக் கூடம் இன்ன பிற பல பொதுமக்கள் கூடும் இடங்கள் ... இங்கே எல்லாம் நாம் எங்கே செல்கிறோம், எதற்காக செல்கிறோம், யார் யார் எங்கே இருப்பார்கள், யாரிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதை பற்றியெல்லாம் நாமும் யோசித்து அதற்கு தக்க நடந்து கொள்ள நமது குழந்தைகளுக்கும் சொல்லிக் கொடுக்க வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்.

ரைட்! அவ்ளோதான். உங்கள் பூச்செண்டு செங்கல் எல்லாவற்றையும் எறியலாம். பதில் சொல்லுவேன் என்ற எதிர்பார்ப்பு வேண்டாம். அதுவே நல்லது.

வந்தனம்.



No comments: