Pages

Wednesday, April 30, 2008

எல்லா தீமைகள், நற்கருமம்



ம்ம்ம்ம்....
சரி ஏன்தான் அப்படி சொல்கிறார்னு பாக்கலாம்.
த்யாயதோ விஷயான் பும்ஸ: ஸங்கஸ்தேஷு பஜாயதே.
ஸங்காத் ஸஞ்ஜாயதே காம: காமாத் க்ரோதோsபி ஜாயதே
கீதை 2-62


பொருட்களை நினைச்சா பற்று வரும். பற்று வந்தா ஆசை வரும். ஆசை (தீர்க்க முடியலைனா) சினமா வடிவெடுக்கும்.
தீ தொட்டாத்தான் சுடும். விஷம் சாப்பிட்டாத்தான் கொல்லும். ஆனா புலன் உணர்ச்சிகள் நினைத்த மாத்திரத்துல நிலை குலைய வைக்கும்.

"சரிப்பா, நான் நல்லதே நினைக்கிறேன்" அப்படின்னா அதையும் கண்டிக்கிறாங்க. அத பொன் விலங்கு என்கிறாங்க. தீய எண்ணம் இரும்பு விலங்காம். இப்படி ராம கிருஷ்ணர் சொல்லி இருக்கார்.
இத பாத்து எல்லாம் பயப்படாதீங்க. அந்த நிலை ரொம்ப தூரத்துல இருக்கு. முதல்ல தீய எண்ணங்கள துரத்திட்டு அப்புறமா நல்ல எண்ணங்களை பத்தி யோசிக்கலாம்.

மேலே போலாமா?
சினத்தால மனக்குழப்பம்; குழப்பம்தால நினைவு இல்லாமை; நினைவு நாசமாச்சுனா புத்தி நாசம்; புத்தி போச்சுனா மனுஷன் அழிவான்.

இப்படி தீமைகள் ஒண்ணொண்ணா அடுத்தடுத்து வந்து மனுஷனுடைய வீழ்ச்சிக்கு காரணமா ஆயிடும்.
க்ரோதாத் பவதி ஸம்மோஹ:
ஸம்மோஹாத் ஸ்ம்ருதி விப்ரம:
ஸ்ம்ருதி ப்ரம்சாத் புத்தி நாசோ
புத்தி நாசாத் ப்ரணஸ்யதி

இதனாலதான் நாரதர் மத்த தீமைகளிலிருந்து விலக்குன்னு சொல்கிறார்.

கிரியை:

இதை நற்கருமம்னும் சொல்லலாம். இது சத்வ குணத்திலேந்து வருது. இதையே கல்யாணம்னு சொல்கிறாங்க. ராமானுஜர் "இது இருந்தா சத்தியத்தோட கூடிய தூய்மை நேர்மை அன்பு அகிம்சை தர்மம் இதெல்லாம் இருக்கும்" னு சொல்றார்.
இதுக்கு உடல் உள்ளம் சொல் மூணுமே தூய்மையா இருக்கனும். எதை நினைக்கிறோமோ அதையே சொல்லணும். எதை சொல்லறோமோ அதையே செய்யனும்.
உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும்
னு ராமலிங்க வள்ளலார் சொன்னது போல.

சத்யோ நாஸ்தி பரோதர்ம - சத்தியத்துக்கும் உசத்தியான தர்மம் இல்லைங்கிறது வேதங்கள். சத் சித் ஆனந்தமான அந்த பரமாத்மாவை உணரனும்னா நம் வாழ்வு சத்திய நெறில இருக்கனும். அந்த சத்திய தாகம் வெளியுலக கவர்ச்சியால சரிஞ்சு போகிறதா இருக்கக்கூடாது. எப்ப நம் உள்ளம் உள் பக்கம் திரும்பறதோ அப்ப சக்தி அதிகமாகும். உள்ளம் வெளிப்பக்கம் திரும்பறப்ப சக்தி செலவாகும். பலவீனமாகும். மனசு அப்படி பலவீனமானா சத்தியத்தோட நடக்கிறது அவ்ளோதான். அதனால புலன்களால அனுபவிக்கிறதுல பற்று போற வரை சத்திய வாழ்வு அமையறது கஷ்டம்.
இதையல்லாம் தியாகம் செய்கிறதாலதான் ஆன்மீகத்தில் முன்னேற முடியும்.
அதனால சாதகன் சத்தியத்தோட வாழ பயிற்சி செய்யனும்னு ராமானுஜர் சொல்கிறார்.


Tuesday, April 29, 2008

அகந்தை, டம்பம்



அடுத்து அபிமானம் என்கிற அகந்தை.

செய்கிற அத்தனையும் நானே செய்யறேன் என்கிற நினைப்பு. இது தமோ குணத்தை அடிப்படையா கொண்டு எழும்புகிற ராஜஸ குணத்தோட இயல்பு. நாம் செய்கிற காரியம் சிறப்பா இருக்குன்னா அதுக்கு நான்தான் காரணம் என்று நினைக்கிற ஆசாமி அறிவு கலங்கி இறைவனை அடைகிற முனைப்பு இல்லாம போவான்.

நர ஜன்மத்துலதான் ஆன்மிக சிந்தனைகள் வந்து முன்னேற முடியும். அதை இப்படி வீணாக்கிக்கிறதுல பலன் இல்லை.

அதனால அகந்தை போகணும். நான் செய்கிறேன் என்கிற நினைப்பு போய் பகவான் செய்கிறான் , நான் அதுக்கு ஒரு கருவிதான்னு உணரணும்.

டம்பம்

பகட்டி திரியறான்னு சொல்கிறோமே அதான் இது. ஆடம்பரமான வெளிப்பாடு.

சாதாரணமா செய்கிற ஒரு வேலையை நிறைய விளம்பரம் பணம் செலவோட செய்கிறது. சிலர் ஆயிரம் ரூபாய் செலவழிச்சு வாங்கின நோட்டுப்புத்தகங்களை இரண்டாயிரம் செலவழிச்சு விழா எடுத்து வினியோகம் செய்யறாங்களே அது போல.

டம்பம் சத்தியத்துக்கு வெகு தொலைவுல சாதகனை தள்ளிடும். எளிமையும் இனிமையும் போய் வன்மையும் கசப்பும் ஒட்டிக்கும். அப்படின்னு நாரதர் சொல்றார்.


மத்த தீய சமாசாரம் எல்லாம் விலக்குன்னு பொதுவா சொல்றார் நாரதர்.

அப்ப எதுடா தீயது லிஸ்ட் போடுன்னா......

எதெல்லாம் மனசை புலன்கள் பின்னால துரத்துதோ அதெல்லாம்தான் கெட்டதுன்னு அனியாயமா சொல்கிறார்.

:-))



பக்தர்கள் விலக்க வேண்டியவை


இப்படி செய்கிற காரியங்கள் இயல்பாவே தர்மத்துக்கு புறம்பா இல்லாம நல்ல பலன் கொடுக்கிறதா அமைந்திடும் அப்படின்னு நாரதர் சொல்றார்.


ஸ்திரீ தன நாஸ்திக வைரீ சரித்திரம் ந ஸ்ரவணீயம்


என்கிறார் நாரதர்.

அதாவது பெண்கள், பணம், நாத்திகன், விரோதி இவர்களைப்பற்றிய கதைகளையும் வர்ணனைகளையும் கேக்காதேன்னு நாரதர் சொல்கிறார். இதனால் பெண்களைப்பற்றி இழிவா சொன்னதா அர்த்தம் இல்லை. ஆண்- பெண்கள் நடுவே இருக்கிற ஈர்ப்பைதான் அவர் சொல்கிறார். அப்ப பெண்கள் இதை படிக்கிறப்ப ஆண்கள் பத்திய வர்ணனைன்னு படிச்சுக்கணும்.
அப்படிப்பட்டவை காமத்தை தூண்டும். காமம் காட்டுத்தீ போல வலிமையானது, கொடியது. விட்டா மனிதனை அணுஅணுவா எரிச்சு மன ஆற்றல்களையும் ஆன்ம பலத்தையும் உ றிஞ்சிடும். சாதகர்கள் பலர் ஆண்டவன் வைக்கிற இந்த பரீட்சையில்தான் தோத்து போயிடுவாங்க. விஸ்வா மித்திரர் பட்ட பாடுதான் தெரியுமே. எப்படிப்பட்ட தபஸ் என்னவாச்சு? பெரிய பெரிய ஞானிகளைக்கூட கண நேரத்தில நிலை தடுமாற வைக்கிற சக்தி இதுக்கு இருக்கு.

அதனால சாதனைல இருக்கிறவர் சமூகத்தில வாழந்து செயல்பட்டு வரும் போது இந்த அபாயம் குறித்து விழிப்போட இருக்கனும்.

நாரீஸ்தன பர நாபி தேசம் த்ருஷ்ட்வா மாகா மோஹாவேசம்

ஏதன் மாம்ஸவ சாதி விகாரம் மனசிவிசின்தய வாரம் வாரம்


சங்கரர் பஜகோவிந்தத்துல எச்சரிக்கிறார்.


செல்வம் இன்னொரு கவர்ச்சி. இது போகம் என்கிற அனுபவிக்கிறதுல தூண்டுதல் உண்டாக்கும். சாதனை சலித்துப்போகும். ஆன்மீகத்தில் முன்னேற்றம் தடை படும். புலன்கள் இச்சைக்கு தீனி போடும். மன நிறைவு வராது. மேலும் மேலும் செல்வம் சேக்கணும் என்கிற நினைப்பு வந்திடும். இதனால சம நிலை போய் சாந்தி போயிடும்.


அப்படின்னா பணமே வேண்டாம்னு அர்த்தமா?

அப்படி இல்லை. அதை தேடி ஓடாம நாம இருக்கிற வேலைல நம்ம கர்ம வசத்தால் என்ன கிடைக்குதோ அதுல நிறைவா இருக்கப்பாக்கணும்.

யல்லபதே நிஜகர்மோ பாத்தம் வித்தம்

தேன வினோதய சித்தம்


சங்கரர்தான் திருப்பியும்.

நாத்திகர் பத்தி காதுல போட்டுக்காதேன்னு அடுத்து சொல்கிறார்.

அது இயல்பாகவே உலக வாழக்கைல பற்று உண்டாக்குவது. சாதனைல இறங்கும் முன்னால எவ்வளோ வேணா யோசிக்கலாம். தீர்மானம் செஞ்சு இறங்கிட்டு அப்புறம் திருப்பியும் இந்த விசாரணைல இறங்கினா குழப்பம்தான் மிஞ்சும்.


அடுத்து அபிமானம் என்கிற அகந்தை.


Friday, April 25, 2008

குழந்தைகள் வளர்ப்பு



இப்போதெல்லாம் குழந்தைகள் வளர்ப்பில் நாம் போதுமான கவனம் கொடுக்கவில்லையோ என்று தோன்றுகிறது. அவர்கள் உடம்பு நல்லாயிருக்கவும் அறிவு படிப்பு மூலமா வளரவும் நிறையவே முயற்சி எடுக்கிறோம். இதுக்கெல்லாம் செலவு செய்ய நாம் தயங்கறது இல்லை. ஆனால் அவங்களோட ஆன்மீக வளர்ச்சிக்கு நாம் ஒண்ணும் செய்வதில்லை. இதை உறுதி செய்துக்க இருக்கவே இருக்கின்றன பள்ளிகள். நாம் கோவிலுக்கு கிளம்பினாலும் ஒரு உபன்யாசம் கேட்க கிளம்பினாலும் அவர்களை விட்டுவிட்டு போகிறோம். காரணம் அவர்கள் நிறைய படிக்க வேண்டி இருக்கிறது; வீட்டுப்பாடம் எழுத வேண்டி இருக்கிறது. அல்லது அவர்களுக்கு பிடிக்காது. பள்ளிக்கு ஆரம்ப நாள் போகும் போது சிரித்துக்கொண்டு போனார்களா? இல்லை இப்பதான் சந்தோஷமாக போறாங்களா? நம்மை நாமே ஏமாத்திக்க இன்னொரு விஷயம் வேற இருக்கிறது. அவங்களே முடிவு செய்து கொள்ளட்டும் என்கிறார்கள். எந்த வயசில்?

தானாக முடிவு எடுக்கிற வயசில் இதற்கெல்லாம் நேரம் இருக்காது. பணத்தின் பின்னே ஓடவே நேரம் போதாது. அப்படியே இருந்தாலும் மனது அதில் போகாது. உலக சுகங்களை நாடியே ஓடும். அதனால் சிறு வயதிலேயே அவர்களை இந்த பக்கம் திருப்பிவிட்டு தினசரி கொஞ்ச நேரம் இதில் மனசை செலுத்த வைக்க வேண்டும். நாம் செய்யும் பூஜை முதலிய கர்மாக்களின் போது அவர்களை சிறு வயதிலிருந்து பக்கத்திலேயே வைத்துக்கொள்ளலாம். அப்போது அது இயல்பாக பழகிவிடும். அந்த சமயம் அவர்களை தொந்திரவு என்று நினைத்து விலக்கி வைத்தால் பின்னால் இப்படி செய் என்று சொல்லும்போது ஏதோ நாம் அவர்கள் சுதந்திரத்தை பறிப்பதாக நினைப்பார்கள். அவர்கள் பெரியவர்களான பின் வேண்டுமானால் நம்பிக்கை இல்லாது போனால் விட்டுவிட்டு போகட்டும். நாம் சரியாக வளர்த்தால் அதற்கு தேவையே இருக்காது. ஆன்மீகத்தில் ருசி வந்து அதன் பலனை அனுபவித்ததால் அது நிச்சயம் திடப்படும்.


Thursday, April 24, 2008

பயிற்சி



அடுத்து பயிற்சி.

ஏற்கெனவே மனசையும் புலன்களையும் கட்டுப்படுத்தனும்னு போர் அடிக்கற அளவு சொல்லியாச்சு. :-))
அது எப்படின்னும் பாத்துட்டோம்.

இந்த கட்டுப்பாடு திடீர்னு வராதில்லையா? நாம் குதிரையோட கடிவாளத்த பதமா பிடிக்கிற மாதிரி இவைகள பிடிச்சு கொஞ்சம் கொஞ்சமா கட்டுக்கு கொண்டு வரணும். ஒரேயடியா இழுத்தா அறுத்துக்கிட்டு ஓடிடும். ரொம்ப லூஸா விட்டா கட்டுக்கே வராது. இப்படி மனசையும் புலன்களையும் கட்டுக்கு கொண்டு வரதே பயிற்சி.

இதை தினசரி செய்யனும். எல்லாமே கட்டுக்குள்ள வந்தாச்சுன்னு தோன்றினா கூட செய்யனும். இல்லாட்டா பழைய விஷயங்கள் மெதுவா வரதே தெரியாம உள்ளே வந்திடும். வீட்டை பெருக்கி சுத்தமாக்கினா கூட தினசரி பெருக்கறோம் இல்லையா?

விடாத பயிற்சி செய்யும் போது அலுப்பு ஏற்படும். "அட எவ்வளோ நாள் இப்படியே இருக்கிறது? ஒரு நாள் வெங்காய சாம்பார் சாப்பிட்டா கெட்டா போயிடும்?” ன்னு மனசு கேக்கும். இதுக்கெல்லாம் இடம் கொடுத்தா அவ்ளோதான். குதிரைங்க நம்மள இழுத்துக்கிட்டு ஓட ஆரம்பிக்கும்.

எப்போ காம குரோதங்களிலேந்து விடுபட்டு வெறும் இறை அன்பு மட்டுமே நிக்குமோ அது பயிற்சியோட முதிர்ந்த நிலை.

லோக ஹாநௌ சின்தா ந கார்யா
நிவேதி தாத்ம லோக வேதத் வாத்


என்கிறது நாரத பக்தி சூத்ரம். அதாவது பக்தன் உலகத்துக்கு சேவை செய்ய விரும்பறான். ஏன்? உலகம் துன்பப்படறதே என்பதால இல்ல. உலகம் முழுதும் இறைவனை பாக்கிறதால உலகத்துக்கு செய்யறது இறைவனுக்கே செய்கிறது என்று புரிஞ்சதால அதுல கிடைக்கிற சந்தோஷத்துக்காக செய்கிறான்.
இதையே உலகத்துக்கு செய்கிறதா நினைச்சா அதால துன்பமே ஏற்படும்.

சிவானந்தர் ரிஷி கேசத்திலே ஆச்சிரமம் நிறுவி வேலை செய்கிற போது அவரோட தொண்டர் ஒத்தரை வெறிநாய் கடிச்சு விட்டது. சிவானந்தர் சன்னியாசி ஆகு முன்னே டாக்டரா இருந்தவர். அதனால அவரே தொண்டரை கவனிச்சுகிட்டார். இப்பவும் சரி அப்பவும் சரி வெறிநாய் கடிக்கு நல்ல வைத்தியம் கிடையாது. அவர் கவனிப்பை பாத்து மத்தவங்க "ஆஹா! தன் தொண்டரை எவ்ளோ நல்லா பாத்துக்கிறார்"ன்னு நினச்சாங்க. சில நாட்களுக்குள்ள அவரை வேற ஊருக்கு அனுப்பி வைத்தியம் பாக்கிறது நல்லதுன்னு தெரியவே சிவானந்தரை கேட்டாங்க. அவரும் சரின்னு சொல்லி தேவையான பணம் கொடுத்து அனுப்பி வைத்தார். அடுத்த ஆசிரம வேலையை பாக்க ஆரம்பிச்சார். ஊருக்கு போனவர் நலன அப்பப்ப விசாரிச்சார். வைத்தியம் எதுவும் பலனில்லாம தொண்டர் இறந்து போனார். செய்தி வந்த பிறகும் சிவானந்தர் வழக்கமான வேலையை பாத்துக்கிட்டு இருந்தார்; பதறவும் இல்லை; வருத்தப்படவும் இல்லை.

உயந்த நிலைக்கு போன பக்தனுக்கு எல்லாம் இறைவன் திருவிளையாடல்னு தோணும். அதனால செய்கிற காரியம் பத்தி பெருமிதமும் இருக்காது துயரமும் இருக்காது. இறைவன் தொண்டை செய்கிற நினைப்பு மட்டுமே இருக்கும். இப்படி எல்லாத்தையும் கடவுளுக்கு அர்ப்பணம் செய்கிறது சமர்ப்பண பாவம். இது வரணும்.

இப்படி பயிற்சி செய்கிற போதோ இல்லை பக்தி திடமான பிறகோ எந்த நிலையிலும் நம்ம சமூக வாழ்கையை புறக்கணிக்கவே வேண்டாம். ஆனால் கர்ம பலன் முழுதும் ஆணடவனுக்கு கொடுத்துடணும்.


Wednesday, April 23, 2008

புலன்கள் -திருப்பம்



மிருகங்களுக்கோ புலன்களால கட்டுப்பட்டு தளைதான் உண்டாகும். மனிதனுக்கோ அதால பாபமும் ஏற்படும்.

பக்தி சாதனைல இருக்கிற மனிதன் இந்த காம குரோதங்கள் கீழ் தரமான உலக விஷயங்கள்ல போகிறபோது அதை எல்லாம் மடை கட்டி தண்ணிய திருப்பறாப்போல பகவான் பக்கம் திருப்பறான். ஆசை படனுமா ஆண்டவனை பாக்கணும்னு ஆசை; தாபம் படனுமா அவனை பிரிஞ்சு ஒரு கணமும் வாழ முடியாதுன்னு தாபம்; அவனை பாத்தா மட்டுமே மனசு சமாதானமா ஆகும் என்கிற முடிவு - இதெல்லாம் உலக பற்றால வர காமத்தை தூயதா ஆக்கும்.

என்னடா இவ்வளோ கதறறேனே, ஆண்டவன் இன்னும் அருள் பாலிக்கலையே என்கிற ஏக்கம் அதனால வர ஆத்திரம் இவை குரோதத்தை தூய்மை ஆக்கும்.

என் கடவுள், என் பகவான், அவன் எனக்குத்தான், எனக்கே சொந்தம் என்கிற தீவிர பற்றுதலால் சாதாரணமா செல்வத்து மேலேயும் உறவினர் மேலேயும் காட்டுகிற லோபம் தூய்மையா ஆகும். என்னோடது எனக்கு மட்டும்தான் என்கிற மோகத்தையும் தூயதா ஆக்கும்.

"கடவுளே என்னை விட்டுவிட்டுபோயிடுவியா? உன்னை ஜெயிப்பேன். உன்ன என் மனசுல போட்டு பூட்டி வைப்பேன். என் கல்வி செல்வம் பதவி எல்லாத்தையும் உன்னை பிடிக்கிறதுல செலவழிப்பேன்" என்கிற உறுதியும் ஆர்வமும் கல்வி செல்வத்தால வர மதம் அல்லது அகந்தையை தூய்மையாக்கும். பிரம்ம ஞானம் பெற்றவங்களை பாக்கிறப்ப "ஆண்டவா அவங்களுக்கு மட்டும் காட்சி தர, எனக்கு இல்லியா?” என்கிற மாத்சர்யம் (பொறாமை) தூயதாகும்.

இப்படி புலன்கள் மூலமா நமக்கு ஏற்படுகிற பற்றை திருப்பி கடவுள் மேலே செலுத்தறப்ப உலகத்து மேலே பற்று போய் பரம் பொருள் மேலே பற்று வரும் .

"பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றை
பற்றுக பற்று விடற்க்கு"


ன்னு சொல்லி இருக்காங்க இல்லை?

Tuesday, April 22, 2008

விமோகம்



அடுத்ததா நாம் பாக்க வேண்டியது
விமோகம்.
இதுக்கு தப்பா பொருள் சொல்லிட்டேன். சுத்தி வளைச்சு பாத்தா சரியா இருந்தாலும்...மோகம் இல்லாம இருப்பதே விமோகம். அதாவது பற்றுக்களில் இருந்து விடுபடுதல்.
இது நம்ம கர்ம கட்டுல இருந்து நம்ம விடுவிக்கும். புலன்கள் போற வழில பற்று போச்சுனா மனசோட சீரான நிலமை கெட்டு போகும். அதனால சாதகனோட முன்னேற்றம் பாதிக்கப்படும்.
"கண் போன போக்கிலே" போறவங்க சீக்கிரமே சஞ்சலத்துல மாட்டிப்பாங்க. அதனால் மனசு தூய்மையோட இருக்கணும்னா விமோகம் வேண்டும்.

கண்ணன் சொல்றான்:

நாஸ்தி புத்தி ரயுக்தச்ய
நசா யுக்தச்ய பாவனா
நசா பாவயுத: சாந்தி:
அசாந்தஸ்ய குதஸ்ஸுகம்? (கீதை 2:66)


புலன்களை ஜெயிக்காவிட்டா நிலைத்த புத்தி வராது; சஞ்சலமில்லாத எண்ணங்களும் வரா. யாருக்கு எண்ணங்கள் நிலையா இல்லையோ அவனுக்கு சாந்தி இல்லை. யாருக்கு சாந்தி இல்லையோ அவனுக்கு சுகம் ஏது?

இந்த பற்றுக்களுக்கு எல்லாம் காரணம் இந்த மனசும் புலன்களும் கை கோத்துகிறதுதான். இது ரெண்டும்தான் பண்பாடு என்னன்னு நிர்ணயம் பண்ணும். இந்த பண்பாடுகள் மனுஷனோட உயர்வு தாழ்வுகளுக்கு காரணமா ஆகும்.

மனசோட விகாரங்கள் அதாவது வேற வேற உருவங்கள் ஆறு. இதுக்கு பெயர்கள் கொடுத்து இருக்காங்க.
காமம், குரோதம், லோபம், மோஹம், மதம், மாச்சர்யம்.

இதையல்லாம் சாதாரணமான நம்ம கையாளறதும், சிறந்த பக்திமான்களும், (endangered species!) ஞானிகளும் பயன்படுத்தறதும் வித்தியாசப்படுது.
யார் யாரை கட்டுப்படுத்தறங்க என்பத பொறுத்துன்னு முன்னாலேயோ பாத்தோமோ?
பாம்பாட்டி பாம்புங்கள உடம்புல எங்கே வேண விட்டுப்பான். அவை அவனுக்கு கடுப்பட்டு இருக்கும். நாமோ பாத்தாலே பயப்படுறோம் இல்லையா?

புலன்கள ஜெயிச்சவங்க அதை எல்லாம் இஷ்டத்துக்கு ஆட்டிப்படைப்பாங்க. நம்மாலே முடியாது. இந்த ஆறுல ஏதாவது ஒண்ணு கூட போதும் நம்மளை ஆட்டி வைக்க.
விவேக சூடாமணில சங்கரர் நம்ம எச்சரிக்கை பண்ணுகிறார்.

உதாரணமா 5 மிருகங்களை சொல்றார்.
மானை பிடிக்க அந்த காலத்துல வேடர்கள் காட்டுக்கு போய் மான் இருக்கிற இடத்தைகண்டு பிடிச்சு புல்லாங்குழல் போல ஒரு வாத்தியமிசைப்பாங்களாம். மான் அதுல மயங்கி நிக்கும். அப்ப கிட்டே போய் பிடிச்சுடுவாங்களாம். யானைய பிடிக்க இன்னொரு யானையை விடுவாங்களாம். அது போய் உராய்ஞ்சுகிட்டு நிக்கும் போது யானை மயங்கி போக சுலபமா பிடிப்பாங்களாம். விட்டில் பூச்சி பாட்டுக்கு சௌக்கியமா பறந்துகிட்டு இருக்கும். ஒரு விளக்கு வெளிச்சத்தை பாத்தா அது ஈர்க்கப்பட்டு கிட்டே போய் அந்த விளக்கு சுடர்லேயே விழுந்துடும். மீனவன் ஒரு புழுவை தூண்டில்ல போட்டு தண்ணீக்குள்ள விடுறான். மீன் அத பாத்து ஜொள்ளு விட்டுக்கிட்டு சாப்பிட வந்து மாட்டிக்கும். வண்டு பூவோட வாசனையை பாத்து கிட்டே வந்து தேனை குடிச்சு மயங்கும். பூ சாயந்திரம் ஆகி திருப்பி கூம்பிடும். வண்டு உள்ளே மாட்டிக்கும்.

இப்படி உயிர்கள் ஒரே ஒரு புலனோட ஈர்ப்புல மாட்டிக்குது. மனுஷா நீயோ அஞ்சு புலன்கள் பின்னாடியும் ஓடறே! உன் கதி என்னன்னு யோசி.

Monday, April 21, 2008

பக்தி வகைகள் 2





இந்த அபர பக்தியிலே நிறைய வகைகள் இருந்தாலும் சிலது நிறைய பாக்கலாம். பயபக்தி என்பது கடவுளை வெளியே -அதாவது ஒரு சிலையிலோ, எண்ணிலோ, சித்திரத்திலோ, புத்தகத்திலோ வேற பொருளிலோ- பாக்கிறது. அவர் ஒரு கோவிலிலோ ரூமிலோதான் இருப்பார். இங்கே இருக்கிற கடவுள் எல்லாம் வல்லவர். அவரை வேண்டிக்கிட்டு பூஜை எல்லாம் செய்தால் வேண்டியது கொடுப்பார். செய்யாவிட்டால் கெட்டது நடக்கும்; நம்மை தண்டிப்பார். நம் நாட்டு மதங்கள்ல முக்காலே மூணு வீசம் இப்படித்தான் இருக்கும். தமஸ் அதிகமா இருக்கிற நபர்கள் இப்படி கடை பிடிப்பாங்க.

அடுத்தது அனன்ய பக்தி. இது தனிப்பட்டது, தீவிரமானது. ரஜசிக குணம் கொண்டவங்க இப்படி இருப்பாங்க. இதுல ஒரே கடவுள்தான். அவர் என் இதயத்துல இருப்பார்; நான் விரும்புகிற உருவுல இருப்பார். அவர் என் இஷ்ட தெய்வம். மத்தவங்ககிட்டே அவரேதான் வேற உருவுல இருக்கார். அதனால இப்படி இருக்கிறவங்க மத்தவங்களோட கடவுளையோ வழிபாட்டையோ கேலி செய்ய மாட்டாங்க.

அடுத்து ஏகாந்த பக்தி. அழுக்கில்லாத சாத்விக எண்ணங்கள் இருக்கிறவங்க இப்படி இருப்பாங்க. இந்த நபர் பக்தி செலுத்துவது ஒரு காரணமில்லாமதான். “கடவுள் எனக்கு இது கொடுப்பார், அது நடக்கணும்” னு எதுவும் இல்லாத பக்தி. கஷ்டமோ நஷ்டமோ இந்த பக்தி மாறாம அப்படியே இருக்கும். இவரோட கடவுள் எப்போதும் எங்கேயும் இவருடனேயே இருப்பார்.


Saturday, April 19, 2008

பக்தி, வழிபாடு வகைகள்



பக்தி என்கிறது நம்மைவிட அதிகமான சக்தி வாய்ந்த, எல்லாம் தெரிந்த, எல்லாம் செய்ய வல்ல கடவுள் மேலே அன்பும் பற்றும் வைக்கிறது. அந்த கடவுளே ஆகமங்கள் புராணங்கள் மூலமாக எப்படி தன்னை வழிபட வேண்டும் என்று சொல்லி இருக்கிறார். சம்பிரதாயமாக வந்து இருக்கிற பூஜைகள், பஜனைகள் போன்றவற்றால் அவரை போற்றுகிறோம். இது கொஞ்சம் கொஞ்சமாக ஒரு குறிப்பிட்ட உருவத்திலே கடவுளை பார்க்க ஆரம்பித்து படிப்படியாக முன்னேறி ஒரு மிக உயர்ந்த நிலையில் அவரை சரணாகதி செய்ய வேண்டும்.

பக்தில 2 வகை உண்டு. ஒன்று ஒரு விதிக்கப்பட்ட வழில வழிபாடு செய்யறது. நிறைய பெரியவங்க வழிபாட்டுக்கான விதிகள் வரிசைகளாக எழுதி வச்சிருக்காங்க. இத தெரிஞ்சிகிட்டு முடிஞ்சா ஒரு குரு மூலமா உபதேசத்தோட வழிபாட்டை ஆரம்பிக்கலாம். இந்த பெரியவங்க ஆரம்பிச்சு வைக்கிறதுல ஒரு தனி மதிப்பு இருக்கு. இத வைதேய பக்தி- கிரம வழிபாட்டுன்னு சொல்வாங்க.

இப்படி இல்லாம பக்தி ப்ரேமை அதிகமா இருக்கிறவங்க ஒரு விதியும் இல்லாம வழிபடுவது உண்டு. கண்ணப்ப நாயனார் எந்த விதிகளை கடைபிடிச்சார்? இதில அன்பு தீவிரமா இருப்பதே முக்கியம். பக்தி பித்து என்கிறாங்களே அப்படி.

அதுக்காக “நமக்கு அன்புதான் முக்கியம்; வழி இல்லை; நான் எப்படி வேணா வழிபடுவேன்” னு கிளம்பறது தப்பு. நாம பலர் அதுக்கு தேவையான அளவு பக்தி இல்லாமதான் இருக்கோம். அப்படி இருந்தா எல்லா சீவன்களிடமுமே அன்பு காட்டுவோம். தேவையான பக்தி இருக்கிறதா நினைக்கிறீங்களா? கண்ணை கொடுக்க தயாரா? இல்லைதானே? அவ்வளவுதான்.

பர பக்தி என்பது உருவமில்லாமல் பரப்பிரம்மத்தின் மேலே பக்தி வைப்பது. இது ஞான யோகத்தில் ஒரு பகுதி.

நாம் சாதாரணமாக அப்படி ஒரு கண்ணுக்கு தெரியாத கடவுளிடம் பக்தி வைக்க முடியாததாலே கடவுளுக்கு நம் மனசுக்கு மகிழ்ச்சி தரும்படி ஒரு உருவத்தை கற்பனை செய்துக்கிறோம். சிலருக்கு கடவுள் குழந்தையா இருப்பது பிடிக்கும். அவர்கள் கண்ணன் பால முருகன் போல சில தெய்வ உருவங்களை வழி படுவாங்க. சிலருக்கு கடவுளை தாயா பாக்க பிடிக்கும். அவர்கள் அதுபோல கற்பனை செய்துபாங்க. சிலர் எல்லாம் வல்ல சக்தி வாய்ந்த மூர்த்தியாக பாக்க நினைப்பாங்க. இவங்க கடவுளை பல ஆயுதங்களோட கூடிய தெய்வமா கற்பனை செய்வது சுலபம்.

இப்படி மக்களோட மனசு வித்தியாசமா இருப்பதால அவர்கள் மனசுக்கு ஏற்றபடி கடவுளை கற்பனை செய்கிற சுதந்திரத்தை பெரியவங்க கொடுத்து வெச்சிருக்காங்க. அப்பதான் அவங்க மனசு கடவுள்ல சுலபமா லயிக்கும். பக்தியும் பலப்படும். இதை “இந்துக்களுக்கு நிறைய கடவுள்கள் இருக்காங்க, அது எப்படி நிறைய கடவுள்கள் இருக்க முடியும்? அப்படி இருந்தால் யார் உசத்தி? யார் தாழ்த்தி? ஏன்?” என்கிற கேள்விகள் எல்லாம் அசட்டுத்தனம்தான்.

இந்த மாதிரியான பக்தி அபர பக்தி என்கிறாங்க.


Friday, April 18, 2008

ராமனுஜர் பட்ட பாடு!



ஸ்ரீ ராமானுஜர் சிஷ்யர்களுக்கு பாடம் எடுப்பார். மடை திறந்த வெள்ளம் போல பாடம் ஓடிகிட்டே இருக்கும். அப்படி ஒரு ஞாபக சக்தி. ஆனா திடீர்ன்னு ஒரு நாள் அவர் பாடம் சொல்லிகிட்டு இருக்கறப்ப அடுத்த வரி ஞாபகம் வரலை; நின்னு போச்சு! கூட இருந்தவங்க எல்லாருக்கும் ஆச்சரியம். ராமானுஜரும் ஆச்சரியப்பட்டு ரொம்ப முயற்சி பண்ணி திருப்பி சொல்லி பாத்து, அடுத்த வரியை நினைவு படுத்தி பிறகு மேலே பாடம் சொன்னார்.
பாடம் முடிந்த பிறகு, “ஏன் இப்படி ஆச்சு?" ன்னு ரொம்ப யோசனை பண்ணார். ஒண்ணுமே பிடிபடலை.

அடுத்த நாளும் அதே போல தடங்கல் ஏற்பட்டது. இன்னிக்கு இது ஏன்னு ஒரு வழியா கண்டு பிடிச்சே ஆகணும்னு தீர்மானம் பண்ணினார். இரண்டு நாளா என்ன செய்தோம் என்று எல்லாம் யோசனை பண்ணி பண்ணி ஒண்ணும் புரியலை.

மதிய உணவின் போது காய்கறி எல்லாம் பச்சுன்னு நல்லா இருக்கிறது தெரிஞ்சது. மடப்பள்ளி ஸ்வாமிகிட்டே விசாரிச்சார். ஏது இந்த காய்கறி எல்லாம்னு. அவர் "இப்பல்லாம் புதுசா ஒத்தர் கொண்டு வரார். நல்லா இருக்கு" ன்னார். ராமானுஜருக்கு ஏதோ புரிஞ்ச மாதிரி இருந்தது. "யார்பா அது? எப்போ வருவார்?" ன்னு கேட்டார். ஸ்வாமி நாளை கால அவர் வறப்ப உங்களுக்கு சொல்லறேன் அப்படின்னார். நிச்சயமா சொல்லுப்பா என்று ராமானுஜரும் சொன்னார்.

அடுத்த நாள் காலை பூஜை எல்லாம் முடிந்த பிறகு காய்கறிகாரர் வந்திருக்கிறதா தகவல் வந்தது. ராமானுஜர் போய் வியாபாரியை விசாரிச்சார். பேர் ஊர் எல்லாம் கேட்ட பிறகு "இந்த காய்கறி எல்லாம் எங்கிருந்து வருது?" ன்னு கேட்டார். "என் தோட்டத்திலேந்துதான், ஸ்வாமி!” என்றார் அவர். அந்த இடத்தை பாக்கலாம் வான்னு கிளம்பிட்டார் ராமானுஜர். வியாபாரி கொஞ்சம் தயங்கினாலும் வேற வழியில்லாம போனார். ஊர் எல்லையை தாண்டியும் போய்கிட்டே இருக்கிறதை பாத்து ராமானுஜருக்கு ஏறக்குறைய புரிஞ்சே போச்சு. கடைசியில் "இதுதாங்க என் தோட்டம்" ன்னு வியாபாரி சொல்ல கூட வந்தவங்க திகைச்சு போயிட்டாங்க. அவங்க நின்னுகிட்டு இருந்தது சுடுகாட்டுப்பக்கத்துலே! "ஏம்ப்பா தோட்டம் போட இந்த இடம்தானா கிடைச்சுது" என்று சொல்லி எல்லாரும் திரும்பி வந்துட்டாங்க.

பழைய காய்கறிகாரர்கிட்டே திருப்பியும் வாங்க ஆரம்பிக்க மறதி பிரச்சினை மறைஞ்சு போச்சு.
இப்படி எங்கே பயிர் விளையுது என்கிறது கூட முக்கியமா போயிடுது.


Thursday, April 17, 2008

விவேகம் -ஆகாரம்






நேத்து பக்தி யோகத்துல இருக்கிறவங்க வளத்துக்க வேண்டிய விஷயங்கள்ன்னு ஒரு பட்டியலே பாத்தோம். இன்னிக்கு அதுல ஒண்ணைப்பத்தி மட்டும் கொஞ்சம் மட்டும் பாக்கப்போறோம்.
இந்த பட்டியல்லே இருக்கிறதுல விவேகம் என்பத ஸ்ரீராமானுஜர் வேற மாதிரி பொருள் பண்ணறார். விவேகம் உணவை குறிச்சதாகவே சொல்கிறார். அந்த ரீதியிலேயே பாக்கலாம்.
விவேகம் உணவை பகுத்து ஏத்துக்கொள்வது. உணவில ஏன் அவ்வளவு முக்கியத்துவம்னா அது நம்மோட குணங்களுக்கும் சாப்பாடு போடுது. குணங்கள் நம்மோட கூட பிறந்தது ஆனாலும் நம் சாப்பாடுக்கு தக்கபடி அதிகமோ குறைவோ ஆகும்.

பல இடங்களிலேயும் நாம உணர்சிகளை கட்டுப்படுத்தனும்னு பாத்துக்கிட்டே வந்தோம் இல்லையா? அதுக்கு சுலபமான வழி சாப்பாட்டை சரி செய்யறதுதான். எப்பவுமே குணம் ஒரே மாதிரி இருக்காது. சில சமயம் ரஜோ குணம் அதிகமாகும்; சில சமயம் தமோ குணம். இப்படி மாத்தி மாத்தி ஒண்ணு அதிகமாகும். நம்ம நோக்கம் சத்வ குணத்தை அதிகப்படுத்தி அதையே முடிந்த வரை நிலைச்சு நிக்க முயற்சி செய்யறதுதான். தமோ குணத்தை ரஜோ குணம் முழுங்கிடும். சத்வம் மேலானா ரஜோ குணம் அடங்கும்.

ரொம்ப உப்பு காரமா இருக்கிறது, கசப்பு, புளிப்பு, ரொம்ப சூடு பொதுவா அதிக ருசி உள்ளது இதெல்லாம் ராஜஸம்.
நாள் பட்டது, பழையது, ஊசிப்போனது, மாமிசம். எச்சில் இதெல்லாம் தாமஸமானது. அதிக சுவை இல்லாம ஒரு அசட்டு திதிப்பு கொஞ்சம் துவர்ப்பு இதெல்லாம் சத்துவம்.

அதாவது பொதுவா வாய்க்கு ரொம்ப ருசியா இருக்கிறது மனசுக்கு நல்லது செய்யாது.
ராஜஸ உணவு மனசோட சலனத்தை அதிகப்படுத்தும். தாமஸ உணவு தூக்கம் வர வழைக்கும். நம்ம செய்கைகள் மந்தமாகும்.என்னடா தூங்கி வழியறியேன்னு மத்தவங்க கேட்பாங்க. அதனால நாம் தூய சத்துவ உணவையே சாப்பிடனும்.

ஆஹார சுத்தெள ஸத்வ சுத்தி:
ஸத்வ சுத்தெள த்ருவா ஸ்ம்ருதி:
என்கிறது சாந்தோக்யோபநிஷத். அதாவது ஆகாரம் தூய்மையானால் மனத்தூய்மை உண்டாகும். மனத்தூய்மையால் இறை உணர்வு உறுதி படுகிறது.

இந்த உணவுல மூன்று குற்றங்கள் வரும் என்கிறாங்க.
இயல்பான குற்றம் ஒன்று. பூண்டு வெங்காயம் (வெங்காய சாம்பார் கூடாதுன்னா ஆன்மீகமே வேண்டாம்ன்னு சொல்கிறது காதுல விழுது! :-)) மது மாம்சம் இவை எல்லாம் இயற்கையாகவே பிரச்சினை பண்ணும். இவற்றை சாப்பிட்டா இறை உணர்வில மனசு லயிக்காது. மனத்தூய்மை கெட்டுப் போகும். காமமும் குரோதமும் மேலோங்கும். பூமில விளையும் கிழங்குகள் தமோ குணத்தை அதிகப்படுத்தும்.

நம்ம மனசு ரொம்பவே சக்தி உள்ளதுன்னு பாத்திருக்கோம். நல்ல மனசுள்ளவங்களோட பழகினா நம்மை அறியாம மனசு அதே போல ஆகுது. இப்படி மனுஷனோட மனவீச்சு சுற்றுப்புறத்தையே பாதிக்கும். இது கண்ணுக்கு தெரியாத நுட்பமான சக்தி. இது ஒத்தரோட எல்லா பொருட்களிலேயும் கூட பரவும். அதனால யாரிடம் இருந்து உணவு கிடைக்குதுங்கிறது முக்கியமாகுது. நம்மிடம் ரொம்ப பிரியம் வச்சு இருக்கிற அம்மா சமைக்கிறது நல்லதே பண்ணும். கடனேன்னு, வீட்டு/ மத்த பிரச்சினை எல்லாம் மனசில போட்டு உழப்பிக்கிட்டு சமையல்காரர் சமைக்கிறது கெட்டதுதான் பண்ணும். அத ஆச்ரேய தோஷம் என்கிறாங்க.

மூணாவதா சுத்துப்புற சூழலால உணவு கெட்டு போகலாம். பாத்திரம் சரியா சுத்தமா இல்லாம இருக்கலாம். பூச்சி ஏதாவது விழுந்திருக்கலாம். குப்பை தலைமயிர் மண் இப்படின்னு ஏதாவது கலக்கலாம். இப்படி பட்ட சாப்பாடு சாப்பிடறவங்க மனசை மாத்தும் அதனால யார்கிட்ட எந்த மாதிரி உணவை ஏத்துக்கொள்வது என்பதில ரொம்பவே கவனம் இருக்கனும்.

ராமானுஜர் சொந்த அனுபவத்துலேந்து சொல்லி இருக்கனும். ஏன்னா சாப்பாட்டால அவர் பட்ட கஷ்டம்..
நாளைக்கு சொல்றேன்.

Tuesday, April 15, 2008

-பக்தி யோகத்துல இறங்கறவங்க எப்படி இருக்கனும்?


-பக்தி யோகத்துல இறங்கறவங்க எப்படி இருக்கனும்னு ஏதாவது உண்டா?

உண்டே? இப்ப சொல்லப்போறதை செய்ய செய்ய பக்தி வழி பலப்படும்.

1. பயிற்சி: அசையாத மனசோட எப்போதும் தொடர்ச்சியாக கடவுளை நினைச்சுக்கிட்டே இருப்பது. அதெப்படி எப்பவுமே நினைக்க முடியும்ன்னா, முடியும். வழியை அப்புறமா பாக்கலாம்.
2. விவேகம்: சரி தவறு என்கிற பாகுபாடு தெரியணும். அதில் சரியானதையே எப்பவும் தேர்ந்தெடுக்க முடியனும்.
3. விமோகம்: மோகம் நமக்கு தெரிஞ்சதுதானே. அது உலக விஷயங்கள்ல. கடவுள்கிட்ட வைக்கிறது நல்ல மோகம். அதாவது விமோகம்.
4. சத்தியம்: வாய்மை. ஆன்மீகத்தில எந்த வழியா போனாலும் கடை பிடிக்க வேண்டியது. உண்மையே நினைத்து உண்மையே பேசி மனச்சாட்சி சொல்கிறதை கேட்டு நடப்பது.
5. அர்ஜவம்: நேர்மை
6. கிரியை: எல்லா சீவ ராசிகளுக்கு நல்லதே செய்வது. ஏன்னா எல்லா சீவராசிகளிடமும் கடவுள் இருக்கிறார் இல்லையா?
7. கல்யாணம்: திருமணம் இல்லைங்க! இதுவும் சம்ஸ்கிருதத்திலிருந்து வந்து வேற விதமா பயன்படுகிற பல வார்த்தைங்கள்ல ஒன்னு! கல்யாணம் என்கிறது மற்றவர்களிடம் அன்பு பாராட்டி அவர்கள் நல்லா இருக்கணும்னு நினைக்கிறது. கடவுளிடம் வேண்டிக்கிறப்ப எல்லாரும் நல்லா இருக்கணும், உலகம் அமைதியா நல்லா இருக்கணும்னு வேண்டிக்கிறது.
8. தயை: கருணை. அன்பே சிவம். கடவுள் அன்பு, மன்னிக்கும் தன்மை, பரிவு கொண்டவன். அவனை புரிந்து கொள்ள , அடைய முய்ற்சி பண்ணுகிற நாமும் அவனை மாதிரி இருக்க பழக வேண்டும்.
9. அஹிம்சை: மனதாலும் செயலாலும் மற்ற சீவ ராசிகளுக்கு துன்பம் விளைவிக்காம இருப்பது.
10. தானம்: கஷ்டப்படுகிற ஏழை எளிய மக்களுக்கு முடிந்தவரை, சுத்தமான உள்ளத்தோட வாரி கொடுக்கிறது.
11. அனவஸ்தை: அவஸ்தை தெரியுமில்லையா? கஷ்டப்படுகிறது. அனவஸ்தை எப்பவுமே சிரிச்சுகிட்டு நம்பிக்கையோட இருப்பது.
இந்த பதினொரு விஷயமும் பக்தி வழில சீரியஸா ஈடுபடறவங்களுக்கு இருக்க வேண்டிய விஷயங்கள். நமக்கு இதெல்லாம் இல்லைன்னா வளர்த்துக்க வேண்டியது.

Monday, April 14, 2008

பக்தி - ஆனைமுகத்தோன்





இந்த பக்தி பிரிவை பிள்ளையாரோட ஆரம்பிக்க நினைக்கிறேன்.

நம்ம நாட்டுல எல்லா நல்ல வேலையும் பிள்ளையாருக்கு பூஜை போட்டு ஆரம்பிக்கிறதே வழக்கம். சிவனை கும்பிட்டாலும், பெருமாளை, அம்பாளை இப்படி யாரை கும்பிட்டாலும் பிள்ளையாருக்கு யாரும் விரோதமே கிடையாது. அப்படி எல்லாருக்குமே பிடிச்ச தெய்வம்.
தமிழ் தெய்வம்னு எல்லா உலகுக்கும் பொதுவான தெய்வங்களை குறுக்கறாங்க சிலர். ஒரு இடத்துலேயே அதிகமான வழிபாடு உள்ள தெய்வம்னு இதை எடுத்துக்கனும்னா தமிழ் நாட்டுக்கு இந்த ஆனைதான் தெய்வம். அந்த அளவுக்கு மூலை முடுக்கெல்லாம் கோவில் இருக்கிறது ஆனைக்குத்தான்.
தமிழ்னாலே நினைவுக்கு வர அவ்வை பாட்டிக்கும் இவர் ரொம்பவே ப்ரெண்டு. அவளோட பக்திக்கு அடையாளமா ஒரு கதை பாக்கலாமா?

சுந்தரர் சிவ பெருமானை பல இடங்களிலே கண்டு வழிபாடு செய்த பின்னே ஒரு நாள் "இன்னும் எவ்வளவு நாள் இப்படி இந்த உலகத்துலே நான் கஷ்டப்படணும்? சீக்கிரம் அழைத்துக்க மாட்டாயா" என்று கதறிட்டார். சிவ பெருமானும் சரி, இவன் உலகத்துலே கஷ்டப்பட்டது போதும் என்று நினைத்து இந்திரனை கூப்பிட்டு "ஐராவதத்தை கொண்டு போய் சுந்தரத்தை அழைத்து வாங்க" என்று உத்தரவு போட்டார்.

அப்படியே அவர்களும் யானையை கொண்டு போய் அழைத்து ஏற்றிக் கொண்டு கயிலைக்கு போக ஆரம்பித்தனர். சுந்தரருடைய உயிர் நண்பரான சேரமான் பெருமாள் அவர் வானத்தில் போவதை பார்த்து "எங்கே போறீங்க?” என்று கேட்க கயிலை என்றவுடன் நானும் வருகிறேன் என்று சொன்னார். தன் குதிரையின் காதில் பஞ்சாட்சரத்தை ஓத அது வானத்தில் பறந்து சுந்தரரின் யானைக்கு முன்னே பைலட் மாதிரி போக ஆரம்பித்தது. தம் ராஜா போவதை பார்த்து சேரமானின் மெய்காவலர்கள் வாளால் தம்மை வெட்டி உயிரை மாய்த்துக்கொண்டு சூக்ஷ்ம உடம்போட சேரமானுக்கு முன்னே பைலட்டாக போக ஆரம்பித்தார்கள்.

இவர்கள் எல்லோரும் இப் படி திருக்கோவிலூரை தாண்டி போகிற போது அங்கே அவ்வை பாட்டி பிள்ளையாருக்கு பூஜை செய்து கொண்டு இருந்தாள். நாங்க கைலாசம் போறோம் நீயும் வான்னு கூப்பிட்டார்கள். அவ்வையோ எனக்கு பிள்ளையார் பூஜைதான் முக்கியம் நான் அப்புறம் வரேன்னு சொல்லிட்டாங்க. பிள்ளையாரோ அவ்வையாரோட பக்தியை பாத்து நேரே வந்துட்டார். அவ்வை நிவேதனம் பண்ணதை எல்லாம் எடுத்து நிதானமா சாப்பிட ஆரம்பிச்சார். அவ்வை போட போட நிதானமா சாப்பிட்டார். கடைசில எனக்கு ரொம்ப சந்தோஷம் என்ன வேண்டும்னு கேட்டார். "உன் அருள் தவிர வேற என்ன வேண்டும்" ன்னு அவ்வை சொல்ல சரி, என் மேலே ஒரு பாட்டு பாடுன்னார். சீத களப என்று ஆரம்பித்தார் அவ்வை. விநாயகர் அகவல் அன்ற அருமையான பாடல் பாட பிள்ளையார் சந்தோஷப் பட்டு தும்பிக்கையால ஒரே தூக்கா தூக்கி பாட்டியை கைலாசத்துல கொண்டு வைத்தார்! இவள் சேர்ந்த பிறகு சேரமானும் சுந்தரரும் வந்து சேர்ந்தாங்க. எங்களுக்கு முன்னால எப்படி வந்து சேர்ந்தாய் என்று இருவரும் அதிசயிக்க அவ்வை இந்த பாட்டு பாடினாள்:

மதுர மொழி நல்உமையாள் சிறுவன் மலரடியை
முதிர நினைய வல்லார்க்(கு) அரிதோ? முகில்போல் முழங்கி
அதிரவரும் யானையும் தேரும் அதன்பின் சென்ற
குதிரையும் காதம் கிழவியும் காதம் குல மன்னனே
--
பொருள்:

சாக்ஷாத் பரா சக்தியின் பிள்ளையின் சரணாரவிந்தங்களையே தியானிக்கிறவர்களுக்கு எந்த ரத கஜ துரக பதாதியும் காத தூரம் பின் தங்கிதான் வர வேண்டும்.
--------
கடைசி 3 பத்திகள் எடிட் செய்யப்பட்டன- திவா

Saturday, April 12, 2008

வழி-4 இ



தமம் புறக் கரண தண்டம். அதாவது வெளி விவகாரங்களை கவனிக்கிற ஐந்து இந்திரியங்களை அடக்கறது. இந்திரியங்கள்னா என்னங்கிறீங்களா? அதாங்க senses. பாக்கிறது கேக்கிறது சுவைக்கிறது தொடறது வாசனை பாக்கிறது. இததெல்லாம் நம்ம கண்ட்ரோல்ல வரணும். ஒழிக்கணும்னு சொல்லலை. நம் வசப்படணும். அதுங்க இழுக்கறா மாதிரி நாம போக கூடாது. நாம சொல்கிற மாதிரி அதெல்லாம் கேட்கணும். அதெப்படி அது நம்ம கண்ட்ரோல்ல இருக்கா என்னங்கிறீங்களா. ஆமாம் இருக்கவே இருக்கு.

சினிமா பாக்கிறோம். நடுவில பக்கத்து சீட்டுல யாரோ வந்து உக்காரறாங்க. நாம மும்முரமா சினிமா பாத்துக்கிட்டு இருக்கோம். அது முடிஞ்ச பின்னால பக்கத்துல பாத்தா அட நம்ம நண்பர்தான் உட்கார்ந்தார்னு தெரிஞ்சுகிறோம். சினிமா பாத்தப்ப தியேட்டர்ல ஸ்கிரீன் கீழ நாய் ஓடினது கூடத்தான் பார்வைல இருந்தது. ஆளா அது உள்ளே போகலை. (நாய் இல்லை, நாய் ஓடின செய்தி உள்ளே போகலை:-) இப்படி பல விஷயங்கள் கண்ணுல பட்டும் ஏன் உள்ளே போகலை? ஏன்னா நம் கவனம் அதில இல்லை. டீச்சர் பாடம் எடுத்தாலும் அது காதில விழுந்தாலும் அதை கவனிக்காம இருக்கிற கலை நாம எல்லாருக்கும் தெரிஞ்சதுதானே.
இது போல எதையும் உணரக்கூடிய சக்தி நம்ம கண்ட்ரோல்லதான் எப்பவுமே இருக்கு.

பாவம் கலந்த காரியங்கள் செய்யறதையும் புண்ணிய காரியங்கள் செய்யறதையும் பலன் விரும்பாம அறுத்து விடறதே (நீக்குதலே) விடல் என்கிறாங்க.
பலனை எதிர் பார்த்துதான் நாம் பல காரியங்களை செய்யறோம். பலனே வேண்டாம்னா அதெல்லாம் செய்ய மாட்டோம். அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டியதை மட்டும் செஞ்சு நம் கடமையை மட்டும் செய்து விட்டு போய் விடுவோம்.

மயக்கம் செய்கிற காமம் குரோதம் முதலியவை வந்தா அடக்குதல் (பொறுத்தல்) சகித்தல்.
மனசை அடக்க தடையா இருக்கிறது இந்த காமம்தானே? ஆசைப்பட்ட பொருள் கிடைக்காம போனால் வருவது இந்த குரோதம்தானே? இவற்றையும் அடக்குவது.

வேதாந்தமாக கேட்டதோட அர்த்தத்தை உள்ளம் சிந்திக்கிறா மாதிரி எப்பவும் வச்சுக்கிறதை சமாதானம் என்கிறாங்க. நம்ம நிறைய பேர் பல நல்ல விஷயங்களை கேட்கிறோம். கேட்கும்போது ஆஹா இதுதான் சரின்னு மனசுல படுது. ஆனால் பிரசங்கம் முடிந்து வெளியே வருவதற்குள்ளே மனசு திருப்பி ஆட்டம் போட ஆரம்பிச்சுடும். கேட்ட தத்துவம் எல்லாம் காத்தோட பறந்திடும், இல்லையா? இப்படி நடக்காமல் மனசிலேயே அதை எல்லாம் இருத்தி வச்சு அப்பப்போ அதை அசை போடணும்.

பரம சற்குரு, ஈஸ்வரன், வேத சாத்திரங்கள் மேல அன்பு பற்றி இருக்கிறதே சிரத்தை.
இந்த சிரத்தை இல்லாவிட்டா நமக்கு வீணாக சந்தேகங்கள் எல்லாம் வந்து நம்மோட முன்னேற்றம் எல்லாம் காணாமப்போயிடும்.

4.
கடைசியாக முத்தியை விரும்பும் இச்சை. சம்ஸ்கிருதத்துல இதை முமுக்ஷு த்வம் என்பாங்க.

ஒரு சீடப்பிள்ளை கடவுளை பாக்கனும்னு குருவை தொந்திரவு பண்ணிகிட்டே இருந்தான். தீவிரமா தேடினா பார்க்கலாம் ன்னு குரு சொன்னார். அவனோ நான் தீவிரமாதானே தேடறேன் கிடைக்கலையே ன்னு நச்சரிச்சுகிட்டே இருந்தான்.
ஒரு நாள் குரு குளிக்க ஆத்துக்கு அவனோட போனார். இரண்டு பேரும் குளிக்கும்போது திடீர்னு சிஷ்யனை தண்ணிகுள்ள அமுக்கிட்டார். மூச்சு திணறிப்போனான். எப்படியாவது விடுவிச்சுக்கணும்னு பாத்தா முடியலை. குரு அவ்வளவு பலமா அவனை உள்ளே போட்டு அமுக்கிட்டாரு. ஏறக்குறைய அவ்ளோதான் இனி தாங்காதுன்னு நினைச்சப்போ அவனை விட்டுட்டார். அப்பாடான்னு வெளியே வந்தான்.
நல்லா மூச்சு எடுத்து ஒருவழியா நிலைக்கு வந்த பிறகு அவன் "குருவே! என்ன இப்படி பன்ணிட்டீங்கன்னு" கேட்டான்.
அப்போ குரு சொன்னார், ”அப்பனே, நீ கடவுளை பாக்க முடியுமான்னு கேட்டுக்கிட்டே இருந்த இல்லை?”
ஆமாம் சாமி!”
“இப்ப தண்ணிக்குள்ள இருந்தப்போ என்ன நினைவு இருந்தது?”
எப்படி வெளியே வந்து மூச்சு எடுக்கலாம்னு இருந்தது.”
“வேற ஏதாவது நினைவு?”
“வேற ஒண்ணுமே இல்லை சுவாமி!”
“இந்த தீவிரத்தோட நீ கடவுளை தேடினா அவரை பாக்கலாம்.”

இந்த தீவிரம்தான் முமுக்ஷு த்வம் .


Thursday, April 10, 2008

வழி4 ஆ



அதுக்கு சாதனா சதுஷ்டயம் ன்னு பேர். பயப்படாதீங்க.
சாதனை என்கிற வார்த்தை தெரிஞ்சதுதான். சதுஷ்டயம் ன்னா நான்கு. நாலு படிகள். அவ்வளவுதான்.
அதெல்லாம் என்ன?

1. நித்திய அநித்தியங்களில் நிர்ணயம் தெரிகின்ற விவேகம்
2. இந்த லோக/ மறு லோகங்களில் வரும் சுகங்களில் ஆசை இல்லாம இருப்பது.,
3. சமாதி என்று ஆறு கூட்டம் (சமம் முதலான ஆறு தொகுதி)
4. முத்தியை விரும்பும் இச்சை- உண்மையாக அதிகாரிக்கு உரிய சாதனம் இந்த நான்கே அப்படின்னு பெரியவங்க சொல்லி இருக்காங்க.

இப்ப ஒவ்வொண்ணா பாக்கலாமா?
1.நித்திய அநித்தியங்களில் நிர்ணயம் தெரிகின்ற விவேகம்

எதையும் இது எப்பவுமே இருக்கக்கூடியது. இது அழிந்து போகக்கூடியது அப்படின்னு பாகுபாடு செய்து பாக்கனும். எது எப்பவுமே இருக்கக்கூடியதோ அது விரும்பி அடையக்கூடியது. அழியக்கூடியதை தேடிப்பிடித்து என்ன பிரயோசனம்?
நாம தேடற விஷயத்தை ஒவ்வொண்ணையும் இப்படி பாக்கணும். ஒரு திண்பண்டம் வாங்கறேன். சாப்பிடறேன். அது ஆறு மணி நேரத்துல ஜீரணமாகி போயிடும். அப்ப அதை அடைய எவ்வளவு முயற்சி எடுக்கலாம்னு நான் முடிவு செய்துக்கலாம். உயிர் வாழ சாப்பாடா இல்லை சாப்பிட உயிர்வாழனுமான்னு யோசனை செய்யலாம். இது போல நமக்கு வேண்டியது எல்லாமே யோசனை பண்ணிவிடலாம். அப்ப உண்மைல பல விஷயங்கள் அவசியம் இல்லைனு தெரிய வரும். அதெல்லாம் தேடி கஷ்டப்படறதை விட்டுவிட்டு சுகமாக இருக்கலாம்.

வாழ்க்கைக்கு தேவையானதா நம்ம முன்னோர் சொன்னது சாப்பாடு துணிமணி இருக்க ஒரு இடம். அவ்ளோதான். இதற்கு மேல நம்ம தேவைகள் அதிகமானா பிரச்சினைகள்தான் அதிகமாகும்.

2. இந்த லோக/ மறு லோகங்களில் வரும் சுகங்களில் ஆசை இல்லாம இருப்பது.,
ஆசையே அழிவுக்கு காரணம்னு புத்தர் மாதிரி பெரியவங்க சொல்றாங்க. யோசிச்சு பாத்தா உண்மைதான்னு தோணுது. ஒரு விஷயத்தின் மேல ஆசை வச்சா அதை அடைய முயற்சி பண்ணுவோம் அதுக்கு தடையா இருக்கிறது மேல கோவம் வரும். அது மற்ற எல்லா பிரச்சினைகளையும் கொண்டுவரும். ஆன்மீக முன்னேற்றத்துக்கு தடை எப்பவுமே இந்த காமம் குரோதம்தான். அதாவது ஆசையும் கோபமும்.

இந்த பிறவில கிடைக்கிற சுகங்களில்தான் ஆசை ன்னு இல்ல. அடுத்ததா நான் சொர்கத்துக்கு போகணும். அங்க ஜாலியா இருக்கலாமாமேன்னு யாரை பூஜை பண்ணலாம் என்ன ஹோமம் பண்ணலாம் னு தேடறவங்களும் உண்டு. அது இப்ப குறைஞ்சு போச்சு. இது மேலோட்டமா பாத்தா நல்லது போல தோணினாலும் இதுவும் இந்த உலக ஆசைகள் போல பிரச்சினைகளை உண்டு பண்ணுவதுதான்.

3. சமம் முதலான ஆறு தொகுதி அப்படி வேற சொல்லிட்டீங்க அது என்ன? என்னன்னா..

1.சமம் 2.தமம் 3.விடல் 4. சகித்தல் 5.சமாதானம் 6.சிரத்தை ஆறாம்.

சமம்னா மனச அடக்கறது. (அகக் கரண தண்டம்)
இந்த மனச பாருங்க. நம்மை பாடா படுத்தறது இதுதாங்க. சும்மா விட்டா எங்க எங்கயோ ஓடுது. எப்பவோ நடந்ததை எல்லாம் அசை போடுது. நாப்பது வருஷம் முன்னாடி நடந்ததை நினச்சு இப்ப வருத்தப்பட வைக்குது. கோபப்பட வைக்குது.
அது வேணும் இது வேணும்னு கேட்டுக்கிட்டே இருக்கு. சரி இந்தான்னு கேட்ட ஒண்ண சம்பாதிச்சு கொடுத்தா சும்மா இருக்கா? அடுத்ததா வேற ஒண்ணு மேல ஆசை. ஒரு நிலையா இல்லாம படுத்துது. இதுக்கு தீனி போட்டு மாளாது. அதனால இதுக்கு ஒரு செக் வைக்கனும். “தா சும்மா கெட” ன்னு சொல்ல பழகணும். அதான் சமம்.


Tuesday, April 8, 2008

வழி 4 அ



எது நிரந்தரம் இல்லியோ அது மாயை. உதாரணமா இது என்ன?

இது குடம்.

இப்ப இத பாத்து குடம்னு சொல்றிங்க. நேத்து இது வெறும் மண்ணா இருந்தது.

சரிதான்.

நாளைக்கே இது உடஞ்சு போச்சுனா?

வெறும் ஓட்டஞ்சில்லி. காலப்போக்கில அதுவும் மண்ணாயிடும்.

அப்ப மண்ணு, குடம், ஓட்டஞ்சில்லிங்கிறது எல்லாம் வெறும் பெயர்தான். அதுல மாறாதது மண்ணுதான்.
நேத்து இன்னிக்கி நாளை. இறந்த காலம், நிகழ்காலம், எதிர் காலம், மூணு காலத்துலேயும் எது மாறாம இருக்குமோ அதுதான் நித்தியம். மத்ததெல்லாம் அநித்தியம்.

அப்ப இந்த குடம் நித்தியம் இல்லை. அதோ அந்த மலை நித்தியம். சரிதானா?

ம்ம்ம். யோசிச்சு பாருங்க. மலையும் நித்தியமா? அங்கே ஒரு க்வாரி இருக்கு. இன்னும் சில பல வருஷங்கள் போனா அத முழுக்க வெட்டி எடுத்துடுவாங்க.

நாராயணா! அப்படி பாத்தா பாக்கிற எதையுமே நித்தியம்னு சொல்ல முடியாது போல இருக்கே!

அப்பாடா. அதேதான். அது போலதான் இந்த உலகம். மேலோட்டமா பாக்கிறப்ப நித்தியமா தோணினாலும் என்னிக்கோ ஒரு நாள் அழிஞ்சு போயிடும்.

நம்ம மனசு என்ன சொல்லுதோ அததான் பாக்கிறோம். இதோ இந்த இலை பச்சையா இருக்கு இல்லை?

ஆமாம்.

இத நான் பார்கிற மாதிரி நீங்க பாக்கிறீங்கன்னு என்ன நிச்சயம்?

அட, இது பச்சைன்னு நீங்க சொன்னீங்க, நானும் அததான சொல்றேன்?

சரிதான்! நான் கேட்டது அது இல்லியே. உங்களுக்கு விவரம் தெரிஞ்சதுலேந்து இலைய காட்டி இது பச்சைன்னு சொல்லி இருக்காங்க. அதனால நீங்க இது பச்சைன்னு சொல்லிட்டீங்க. ஆனா நான் பாக்கிறா மாதிரியே நீங்க பாக்கிறீங்களா? நான் சிவப்பா பாக்கிறா மாதிரி பாத்துக்கிட்டே நீங்க இது பச்சைன்னு சொல்லலாம். ஏன்னா அப்படிதானே சொல்லி கொடுத்து இருக்காங்க?

பின்ன உங்க மனசுக்குள்ள பூந்தா நீங்க பாக்கிறத நான் பாக்க முடியும்?

அதேதான். ஆக நாம் மனசு சொல்லறத நம்பறோம். அது சரியா இருக்கனும்னு அவசியம் இல்லை.

இப்ப இந்த குடத்த ஒரு புவியியல் நிபுணர் கிட்ட காட்டறோம். அவர் அதை பாத்தா இது இந்த மண்ணு, கல்லு இல்லாத சுத்தமான மண், வலுவானதுன்னு ஏதாவது சொல்லுவார். வீட்டு அம்மாகிட்டே காட்டினா பானை பரவாயில்ல. வெய்யிலுக்கு தண்ணி பிடிச்சு வைக்கலாம்ன்னு சொல்வாங்க. மண்ணை பாக்கிறவங்க பானையை பாக்கிறதில்லை. பானையை பாக்கிறவங்க மண்ணை பாக்கிறதில்லை.

இந்த பிரம்மம்தான் இந்த பிரபஞ்சமா உருவெடுத்து இருக்கு. மண்ணு குடமானா மாதிரி. குடம்ன்னு சொல்றா மாதிரி இது உலகம்ன்னு நினைக்கிறவங்கதான் ஏறக்குறைய எல்லாரும். குடத்தை மண்ணுன்னு சொல்றா மாதிரி அதை பிரம்மம்னு தெரிஞ்சுகிறவங்க தன்னை புரிஞ்சுகிட்டவங்க. இதுதான் ஞான யோகம்.

அது எப்படி தெரியவரும்?

விசாரிச்சுதான் தெரியவரும்.

விசாரணைனா?

"நான் யார்? இந்த உலகம் என்னது? இது எப்படி வந்தது?” என்ற விசாரணை.
இப்ப இது போதும். இந்த விசாரணையை விரிவா அப்புறமா பாக்கலாம்.

இந்த ஞானம் வருவது எப்படின்னு கேட்டால் அதற்கு பாதை போட்டு வச்சு இருக்கிறாங்க நம் முன்னோர்கள்.
அதுக்கு சாதனா சதுஷ்டயம் ன்னு பேர். பயப்படாதீங்க.
சாதனை என்கிற வார்த்தை தெரிஞ்சதுதான். சதுஷ்டயம்னா நான்கு. நாலு படிகள். அவ்வளவுதான்.
அதெல்லாம் என்ன?


Sunday, April 6, 2008

வழி-4 ஞானம்



What is real? How do you define real? If you are talking about what you can feel, what you can smell, what you can taste and see they are simply electrical signals interpreted by your brain!

அடுத்து ஞான வழி

மனசை சுத்தமாக்கி கட்டுப்படுத்தி, மனசாலேயே விசாரிக்க ஆரம்பிச்சு, “நான் ஏது, பார்கிற இந்த உலகம் ஏது” ன்னு யோசிச்சு நாம் இல்லைங்கிறதை எல்லாம் தள்ளி தள்ளி கடைசில மிஞ்சி நிக்கிறதை நாம் அப்பிடின்னு அறிகிறது ஞான வழி.
சுருக்கமா நாம் பார்கிற உலகம் மாயை; நாம் பிரம்மம்; பிரம்மம்தான் எல்லாமே.
இது புரிய கொஞ்சம் சிரமப்படனும்.

என்னங்க ஒரேயடியா இப்படி ஒரு போடு போட்டுட்டீங்க? இதோ என் கண்ணுக்கு முன்னால தெரியறது எல்லாம் மாயைனா எப்படி ஒத்துக்கிறது?

சரி நம்ம கண் முன்னால தெரியறது எல்லாம் உண்மையான உண்மையான்னு பாக்கலாம்.
பின்ன பொய்யான உண்மையாவா இருக்கும்?
அட சரியா சொல்லிட்டீங்களே
கிண்டலா?
இல்ல, இல்ல, உண்மை பொய்யான உண்மை, பொதுவான உண்மை, உண்மையான உண்மைன்னு மூன்று வகை.
இத எங்கியோ கேட்ட மாதிரி இருக்கே
நீங்க சொல்லறது உண்மையான உண்மை. இப்ப நான் சொல்லறது எதுவும் புதுசு இல்ல. நம்ம பெரியவங்க சொல்லி வெச்சதுதான்.
சின்ன உதாரணம் பாக்கலாம். இப்ப ராத்திரி. நாம மொட்ட மாடில உக்காந்துகிட்டு இருக்கோம். கொஞ்சம் மேல பாருங்க. என்ன தெரியுது?
மேல ஆகாயம். நட்சத்திரமெல்லாம் தெரியுது.
அதோ அங்க ...
அது ஓரியன் நட்சத்திர கூட்டம்.
நடுவில?
மூனு நட்சத்திரங்க பக்கத்து பக்கத்துல இருக்கு.
பக்கத்து பக்கத்திலதானே?
ஆமாம்.
நாம பாக்கற இந்த நட்சத்திரங்க எல்லாம் இப்ப அங்கங்க அப்பிடியே இருக்கா?
ஆமாம். என்ன சந்தேகம்?
அறிவியல் இல்லைன்னு சொல்லுது.
எப்படி?
இப்ப நாம பாத்த ஓரியன் ரொம்ப தூரத்தில இருக்கு.
அத்தான் தெரியுமே.
ஓஹோ, எவ்வளோ தூரம்?
அதானே தெரியாது.
1500 ஒளி வருஷம்.
என்னங்க தூரத்தை கேட்டா வருஷங்கிறீங்க?
ம்ம்ம்...அதாவது சூரியன் எங்கே இருக்கு?
ஓ, அது ரொம்ப தூரம்.
சூரியன்கிட்டேந்து ஒரு ஒளி கத்தை கிளம்பினா அது பூமிக்கு 8 நிமிஷம் 18 வினாடில வந்து சேந்துடும்.
ம்ம்ம்ம்ம்.....சரிதான்.
அப்ப இப்ப பாக்கிற சூரியன் இப்ப அங்கே இல்லை. எட்டு நிமிஷம் முன்னால அங்கே இருந்தது.
அதே போல ரொம்ப தூரமா போனா ஒளி வர ஒரு மணி ஆகலாம் இல்லையா? அதே போல ஒரு ஒரு நாள்? ஒரு வருஷம்?
யப்பா! நினச்சு பாக்கவே முடியலையே! அது ரொம்ப ரொம்ப தூரமாச்சே!
அது சும்மா ஜுஜுபி. அந்த தூரத்த ஒரு ஒளி வருஷம்ன்னு சொல்வாங்க. நாம பேசறது 1500 ஒளி வருஷம். அதாவது இங்கே 1500 வருஷத்துக்கு முன் இருந்ததைதான் நாம இப்ப பாக்கிறோம்.
யம்மாடி!
அதாவது 1500 வருசங்க முன்னாடி இருந்தபடி இருந்த இடத்திலே அந்த நட்சத்திரத்த பாக்கிறோம். அது இப்ப இருக்கா வெடிச்சு சிதறியாச்சான்னு நமக்கு தெரியாது.

அப்ப நாம பாக்கிற ஆகாயம் ஒரு கலவையான சித்திரம். கோடிக்கணக்கான மைல் தூரத்துல நட்சத்திரம் இருக்கு. நமக்கு பக்கத்து பக்கத்துல இருகிறதா தெரியற இன்னொரு நட்சத்திரம் உண்மைல அது பக்கத்திலேயே இல்லை. பல கோடி மைல் இடை வெளில இருக்கு. நட்சத்திரங்கள்கிட்டேந்து வர ஒளிக்கத்தைகள்தான் பக்கத்து பக்கத்துல இருக்கு. சரியா?
சரியா சொன்னீங்க. ஆனா இப்ப நாம பாக்கிறது ஆகாயம். அதுல இங்க இங்க இன்ன இன்ன நட்சத்திரம் இருக்குன்னு சொல்கிறது எல்லாம் பொதுவான உண்மை. ஆராய்ஞ்சு பாத்தா உண்மை இல்லாட்டாலும் பொதுவா அதை தப்பா சொல்லறது இல்லே.
அது போலதான் இந்த உலகம். இந்த உலகம் இருக்குன்னு சொல்லறது பொதுவான உண்மை. ஆனாலும் அது உண்மையான உண்மை இல்ல.

சரி, ஒத்துக்கிறேன். ஆனா இதெல்லாம் மாயை; இல்லவே இல்லைங்கிறதை எப்படி ஒத்துக்கிறது?
மாயைனா இல்லவே இல்லைன்னு அர்த்தமில்ல.
போச்சுடா! பின்ன?

[மேலே ஆரம்பத்துல இருக்கிற மேற்கோள் எங்க வருதுன்னு சொல்ல முடியுமா?]


Friday, April 4, 2008

வழி 3-அ



இத நமக்கு சாதகமா பயன்படுத்திக்கலாம்.
எப்படி?
சும்மா கொஞ்ச நேரம் படுங்க. கை கால் உடம்பு முழுதும் விறைப்பா ஆக்குங்க. நல்லா முறுக்கேறட்டும். ஆச்சா, இன்னம் கொஞ்சம், இன்னும் கொஞ்சம்..... இப்ப டக் குன்னு லூஸா விடுங்க. இ.கொ சொல்றா மாதிரி Freeயா விடு மாமே....!
நல்லா ஆழமா, மெதுவா மூச்ச இழுத்து விடுங்க. ஒவ்வொரு மூச்சு இழுக்கிறதும் எண்ணிட்டே வங்க. ஆரம்ப காலம். அதனால ஒரு 10 ல ஆரம்பிச்சு 9. 8. 7 இப்படியே 0 வாங்க. இப்ப உங்களையே கவனிங்க. ஜிம்னு இருக்கு இல்ல. ரிலாக்ஸ்டா..
அதான்.
உடம்பை தளர விட்டது மனசையும் இறுக்கம் இல்லாம ஆக்கிடுச்சு!
அந்த மாதிரி சமாசாரம் எல்லாம் பின்னால விரிவா பாக்கலாம். இப்ப இது ஒரு முன்னோட்டம்தானே!
[ஒரு சுட்டி தரேன். முன்ன இத செஞ்சு பாத்திருக்கேன். அப்ப ஆடியோ டேப் இலவசமா கிடச்சது. இப்ப கட்டணம் வசூல் செய்யறாங்க. ஆனா வேலை செஞ்சதுன்கிறது நிச்சயம். http://www.svyasa.org/course/smet.asp ]

4. பிராணாயாமம்.
இதுவும் இப்ப கொஞ்சம் பாஷன் ஆகிட்டு வருது. ஆனா இது கொஞ்சம் சரியா செய்யலேன்னா நிறையவே பாதிப்பு ஏற்படுத்தும். ஒரு யோக ஆசான் கிட்ட கத்துகிட்டு செய்யனும்.
மூச்சை நல்லா இழுத்து உள்ளே பிடிச்சு மெதுவா வெளியிடறது மூச்சு பயிற்சி. மேலோட்டமா பாக்க இது நல்லா மூச்சு விடறதால ஆக்ஸிஜன் மூளைக்கு சரியா கிடைக்குதுன்னு நினச்சாலும் அதுக்கும் மேலேயே சக்தி ஊட்டறது இது.
மனசையும் உடம்பையும் இணைக்குது. பிராணாயாமம் என்கிறது இந்த மாதிரி சில பல மூச்சு பயிற்சிகளால கிடைக்கிற உயிர் மூச்சு மேலே கிடைக்கிற கட்டுப்பாடு.

5. ப்ரத்யாஹாரம்: கண் காது மாதிரி உணர் கருவிகள் இருக்கு இல்லையா அதை எல்லாம் கட்டுக்கு கொண்டு வரது ப்ரத்யாஹாரம். சாதாரணமா கண் பாக்க விரும்பறத பாக்க நம்மை இழுத்துட்டு போகுது. அதே போல எல்லா உணர்ச்சிகளுமே. இங்கே வேண்டியது என்னன்னா நாம நினச்ச மாதிரி உணர் கருவிகள் செயல்படனும். அதுகள் எல்லாம் இழுத்தபடி நாம போகக்கூடாது.

6. மேலே பாத்த மாதிரி ப்ரத்யாகாரம் செஞ்சா மனசை ஒரே இடத்தில நிலைக்க வைக்கலாம். இது தாரணை. ஆங்கிலத்துல concentration, one-pointedness of mind
அப்படிங்கறாங்களே அதுதான்.

7.தியானம்: இதுவும் நமக்கு தெரிஞ்ச மாதிரி இருக்கிறதுதான். ஆனா சரியா புரிஞ்சுக்காம இருப்போம். தாரணையால குவிஞ்ச மனசை ஒரே பொருள் மேலே வைக்கிறது த்யானம்.

8. சமாதி: டில்லி மாதிரி ஊர்ல எல்லாம் இருக்கே, டூரிஸ்ட்ட கொண்டு காட்டுவாங்களே அந்த மாதிரி சமாதி இல்ல. தியானத்து மூலமா உள்ள்ள்ளுக்குள்ள இருக்கிற அந்த நிசமான “நாம்” ஓட தொடர்பு கொள்ளறது.

இப்படி எட்டு நிலைகள் கொண்டது அஷ்டாங்க யோகம்.
இதுல ரொம்ப முக்கியமானது ஒரு சரியான குரு இல்லாம பல விஷயங்கள் செய்யக்கூடாது என்கிறதுதான். பிராணாயாமம்தானே வெறும் மூச்சு பயிற்சிதானே என்ன ஆயிடும் னு நினைச்சு நாம பாட்டுக்கு செய்ய ஆரம்பிச்சா ஏடாகூடமாயிடும்.

எனக்கு நல்லா தெரிஞ்ச ஒத்தர். ஒரு டஜன் தொண்டு நிறுவனங்கள் வச்சு நடத்துரார். இதுக்காக பலரை பார்த்து பேசுவார். அப்படி பார்த்து பேசினதுல ஒத்தர் யோகம் பயிற்சி செய்யறவர். நண்பர் யாரை பாத்தாலும் அவரவருக்கு பிடிச்ச சப்ஜெக்ட்டா பேசிடுவார். இவர் யோகின்றதால அது பத்தி பேசினார். தனக்கும் அதை கத்துக்க ஆசைன்னார். யோகியோ உனக்கு வேண்டாம்னு மறுத்தார். எதை மறுக்கறாங்களோ அது மேல ஆசை அதிகமாகும்தானே? நண்பர் விடாப்பிடியா தொடர்ந்து யோகியை தொந்திரவு பண்ணி கத்துக்கொடுங்கனார். கடேசியா ஒரு நாள் சரின்னு யோகி இவரை உக்காத்தி வெச்சு கண்ணை மூடிக்க சொல்லி தலை மேலே கையை வச்சு ஏதோ செஞ்சார். பிறகு ஒரு மந்திரமும் பயிற்சியும் சொல்லித்தந்து இதை ரெண்டு வாரம் பயிற்சி செஞ்சுவிட்டு வாங்கன்னு சொல்லி அனுப்பினார்.

நண்பர் யோகிகிட்ட கத்துக்கனும்னு நினைச்சு அது கிடச்சாச்சு இல்ல, அதனால அத அப்படியே விட்டுட்டு மத்த வேலையை பாக்க போயாச்சு. ஒரு மாசம் ஆச்சு. நாளாக ஆக நண்பருக்கு மனக்குழப்பம் அதிகமாகி என்னன்னே புரியாம கஷ்டப்பட்டார். திடீர்னு ஒரு நாள் யோகி பத்தி நினைப்பு வந்து அவரை பாக்கப்போனார். யோகி இவரை “வேண்டாம்னு சொன்னேனே கேட்டயா” ன்னு திட்டிட்டு தலை மேலே கை வச்சு ஏதோ செஞ்சுவிட்டு இனிமே இந்த மாதிரி சமாசாரத்துல எறங்காதேன்னு சொல்லி துரத்திட்டார்.
எதுக்கு சொல்ல வந்தேன்னா இது சாக்கிரதையா எறங்க வேண்டிய சமாசாரம். ஏதோ புக்க பாத்துட்டு எல்லாம் இறங்க வேணாம். கத்தி முனைல நடக்கிறது போல இது. நல்ல குரு இல்லாம இறங்கவே கூடாது.

அடுத்த வழி?


Wednesday, April 2, 2008

வழி 3



ராஜ யோக வழி:
யோகம் ன்னு பல இடங்கள்ல பல விதமா சொல்லை பயன்படுத்தறாங்க. யோகம் ன்னா ஒண்ணு சேக்கிறது. ராஜ யோகம் என்கிறது அட்டாங்க யோகம் னு சொல்லுவாங்க. அதில 8 படிகள். கொஞ்சம் புரியாட்டாலும் பட்டியல் போட்டுடுவோம்.

1. யமம்
2. நியமம்
3. ஆசனம்
4. ப்ராணாயாமம்
5. ப்ரத்யாகாரம்
6. தாரணை
7. தியானம்
8. சமாதி

என்னங்க நீங்க சமாதி, எமனை எல்லாம் கூப்பிட்டு பயமுறுத்தறிங்க?

பயப்படாதீங்க. சும்மா ஒரு பதிஞ்சு வக்கதான் அப்படி எல்லாம் சொன்னேன். அதெல்லாம் என்னன்னு பாத்தா பயம் இருக்காது. சரியா?

1. யமம் -எமன் இல்ல- அப்படின்னா சுய கட்டுப்பாடு.

அட, அத அப்படி முன்னேயே சொல்லக்கூடாதா?

இல்லைங்க. எல்லா சமாசாரத்துக்கும் ஒரு தனி அகராதி உண்டு. அத தெரிஞ்சு கிட்டோம்னா பின்னால பயன்படும். அதனால சொல்றேன்.

2. நியமம்: இது நமக்கு பழகினதுதானே?பூஜை கீஜை செய்யறப்ப நியமமா இருக்கணும்னு!
பெரியவங்க வீட்டுல ஆரம்பிச்சு வச்ச பழக்கங்களை கடை பிடிக்கிறது; அத பத்தி ஏன் எதுக்கு எப்படின்னு தெரிஞ்சுகிறது; அதுல ஈடு பாடு காட்டறது- இதான் நியமம்.

3. ஆசனம்: இதுதாங்க யோகா யோகான்னு எங்க பாத்தாலும் பேசறது. யோகாசனம். அதாவது செய்கைகளால உடம்பையும் மனசையும் இணைக்கிறது.

கொஞ்சம் விரிவா பாக்கலாமா?

இப்ப சில பேர் ஒரே டென்ஷன் பட்டுகிட்டு இருப்பாங்க. அவங்களுக்கு தூக்கம் வராது.

அட இதெல்லாம் தெரியாதா என்ன?

சரி சரி மேலே கேளுங்க. சிலர் மனசில நிறைய கஷ்டங்களை போட்டு பூட்டி வச்சு இருப்பாங்க. அவங்க காலைலை மலம் கழிக்க கஷ்டப்படுவாங்க. சிலர் அடிக்கடி மலம்கழிக்க போக வேண்டி இருக்கும். சிலருக்கு தோலெல்லாம் அரிப்பு, சிரங்கு போல வரும்.
இதுக்கெல்லாம் நாம வைத்தியர் கிட்டே போனா இருக்கிற, இல்லாத பரிசோதனை எல்லாம் பண்ணிட்டு ஒண்ணுமே இல்லைம்பாங்க. நமக்கா கோவமா வரும். பின்ன கஷ்ட படறது நாமதானே! அதாவது உடல் ரீதியா கோளாறு இல்லைன்னு அர்த்தம்.

அப்படின்னா?

நம் மனசுக்கும் உடம்புக்கும் ஒரு தொடர்பு இருக்கு. மனசில இருக்கிற வியாதி உடல் உபாதைகளா வெளிப்படும். அதுக்கு ஒரு பேரு வச்சிருக்காங்க. psycho somatic.

என்னது நாம சைக்கோவா?

நாம நினைக்கிற மாதிரி இல்ல அண்ணாச்சி, இங்க அதுக்கு “மன” ன்னு பொருள். சோமா =உடம்பு. அதாவது மனசால வர உடல் வியாதி.
இப்ப பாருங்க, மனசு உடம்ப பாதிக்குது; அதே போல உடம்பும் மனச பாதிக்கணுமே?

அதானே!

அதேதான். நமக்கு ரொம்ப சுரம் அடிக்குது. நாலு நாளா விடலை. அப்ப மனசு எப்படி இருக்கும்? ஒரு டிப்ரெஷன் வரும். சோர்ந்து போயிருவோம்.

இப்படி மனசு உடம்பையும் உடம்பு மனசையும் பாதிக்கிறதை நமக்கு சாதகமா பயன்படுத்திக்கலாம்.
எப்படி?