Pages

Tuesday, April 22, 2008

விமோகம்அடுத்ததா நாம் பாக்க வேண்டியது
விமோகம்.
இதுக்கு தப்பா பொருள் சொல்லிட்டேன். சுத்தி வளைச்சு பாத்தா சரியா இருந்தாலும்...மோகம் இல்லாம இருப்பதே விமோகம். அதாவது பற்றுக்களில் இருந்து விடுபடுதல்.
இது நம்ம கர்ம கட்டுல இருந்து நம்ம விடுவிக்கும். புலன்கள் போற வழில பற்று போச்சுனா மனசோட சீரான நிலமை கெட்டு போகும். அதனால சாதகனோட முன்னேற்றம் பாதிக்கப்படும்.
"கண் போன போக்கிலே" போறவங்க சீக்கிரமே சஞ்சலத்துல மாட்டிப்பாங்க. அதனால் மனசு தூய்மையோட இருக்கணும்னா விமோகம் வேண்டும்.

கண்ணன் சொல்றான்:

நாஸ்தி புத்தி ரயுக்தச்ய
நசா யுக்தச்ய பாவனா
நசா பாவயுத: சாந்தி:
அசாந்தஸ்ய குதஸ்ஸுகம்? (கீதை 2:66)


புலன்களை ஜெயிக்காவிட்டா நிலைத்த புத்தி வராது; சஞ்சலமில்லாத எண்ணங்களும் வரா. யாருக்கு எண்ணங்கள் நிலையா இல்லையோ அவனுக்கு சாந்தி இல்லை. யாருக்கு சாந்தி இல்லையோ அவனுக்கு சுகம் ஏது?

இந்த பற்றுக்களுக்கு எல்லாம் காரணம் இந்த மனசும் புலன்களும் கை கோத்துகிறதுதான். இது ரெண்டும்தான் பண்பாடு என்னன்னு நிர்ணயம் பண்ணும். இந்த பண்பாடுகள் மனுஷனோட உயர்வு தாழ்வுகளுக்கு காரணமா ஆகும்.

மனசோட விகாரங்கள் அதாவது வேற வேற உருவங்கள் ஆறு. இதுக்கு பெயர்கள் கொடுத்து இருக்காங்க.
காமம், குரோதம், லோபம், மோஹம், மதம், மாச்சர்யம்.

இதையல்லாம் சாதாரணமான நம்ம கையாளறதும், சிறந்த பக்திமான்களும், (endangered species!) ஞானிகளும் பயன்படுத்தறதும் வித்தியாசப்படுது.
யார் யாரை கட்டுப்படுத்தறங்க என்பத பொறுத்துன்னு முன்னாலேயோ பாத்தோமோ?
பாம்பாட்டி பாம்புங்கள உடம்புல எங்கே வேண விட்டுப்பான். அவை அவனுக்கு கடுப்பட்டு இருக்கும். நாமோ பாத்தாலே பயப்படுறோம் இல்லையா?

புலன்கள ஜெயிச்சவங்க அதை எல்லாம் இஷ்டத்துக்கு ஆட்டிப்படைப்பாங்க. நம்மாலே முடியாது. இந்த ஆறுல ஏதாவது ஒண்ணு கூட போதும் நம்மளை ஆட்டி வைக்க.
விவேக சூடாமணில சங்கரர் நம்ம எச்சரிக்கை பண்ணுகிறார்.

உதாரணமா 5 மிருகங்களை சொல்றார்.
மானை பிடிக்க அந்த காலத்துல வேடர்கள் காட்டுக்கு போய் மான் இருக்கிற இடத்தைகண்டு பிடிச்சு புல்லாங்குழல் போல ஒரு வாத்தியமிசைப்பாங்களாம். மான் அதுல மயங்கி நிக்கும். அப்ப கிட்டே போய் பிடிச்சுடுவாங்களாம். யானைய பிடிக்க இன்னொரு யானையை விடுவாங்களாம். அது போய் உராய்ஞ்சுகிட்டு நிக்கும் போது யானை மயங்கி போக சுலபமா பிடிப்பாங்களாம். விட்டில் பூச்சி பாட்டுக்கு சௌக்கியமா பறந்துகிட்டு இருக்கும். ஒரு விளக்கு வெளிச்சத்தை பாத்தா அது ஈர்க்கப்பட்டு கிட்டே போய் அந்த விளக்கு சுடர்லேயே விழுந்துடும். மீனவன் ஒரு புழுவை தூண்டில்ல போட்டு தண்ணீக்குள்ள விடுறான். மீன் அத பாத்து ஜொள்ளு விட்டுக்கிட்டு சாப்பிட வந்து மாட்டிக்கும். வண்டு பூவோட வாசனையை பாத்து கிட்டே வந்து தேனை குடிச்சு மயங்கும். பூ சாயந்திரம் ஆகி திருப்பி கூம்பிடும். வண்டு உள்ளே மாட்டிக்கும்.

இப்படி உயிர்கள் ஒரே ஒரு புலனோட ஈர்ப்புல மாட்டிக்குது. மனுஷா நீயோ அஞ்சு புலன்கள் பின்னாடியும் ஓடறே! உன் கதி என்னன்னு யோசி.

Post a Comment