Pages

Thursday, April 10, 2008

வழி4 ஆஅதுக்கு சாதனா சதுஷ்டயம் ன்னு பேர். பயப்படாதீங்க.
சாதனை என்கிற வார்த்தை தெரிஞ்சதுதான். சதுஷ்டயம் ன்னா நான்கு. நாலு படிகள். அவ்வளவுதான்.
அதெல்லாம் என்ன?

1. நித்திய அநித்தியங்களில் நிர்ணயம் தெரிகின்ற விவேகம்
2. இந்த லோக/ மறு லோகங்களில் வரும் சுகங்களில் ஆசை இல்லாம இருப்பது.,
3. சமாதி என்று ஆறு கூட்டம் (சமம் முதலான ஆறு தொகுதி)
4. முத்தியை விரும்பும் இச்சை- உண்மையாக அதிகாரிக்கு உரிய சாதனம் இந்த நான்கே அப்படின்னு பெரியவங்க சொல்லி இருக்காங்க.

இப்ப ஒவ்வொண்ணா பாக்கலாமா?
1.நித்திய அநித்தியங்களில் நிர்ணயம் தெரிகின்ற விவேகம்

எதையும் இது எப்பவுமே இருக்கக்கூடியது. இது அழிந்து போகக்கூடியது அப்படின்னு பாகுபாடு செய்து பாக்கனும். எது எப்பவுமே இருக்கக்கூடியதோ அது விரும்பி அடையக்கூடியது. அழியக்கூடியதை தேடிப்பிடித்து என்ன பிரயோசனம்?
நாம தேடற விஷயத்தை ஒவ்வொண்ணையும் இப்படி பாக்கணும். ஒரு திண்பண்டம் வாங்கறேன். சாப்பிடறேன். அது ஆறு மணி நேரத்துல ஜீரணமாகி போயிடும். அப்ப அதை அடைய எவ்வளவு முயற்சி எடுக்கலாம்னு நான் முடிவு செய்துக்கலாம். உயிர் வாழ சாப்பாடா இல்லை சாப்பிட உயிர்வாழனுமான்னு யோசனை செய்யலாம். இது போல நமக்கு வேண்டியது எல்லாமே யோசனை பண்ணிவிடலாம். அப்ப உண்மைல பல விஷயங்கள் அவசியம் இல்லைனு தெரிய வரும். அதெல்லாம் தேடி கஷ்டப்படறதை விட்டுவிட்டு சுகமாக இருக்கலாம்.

வாழ்க்கைக்கு தேவையானதா நம்ம முன்னோர் சொன்னது சாப்பாடு துணிமணி இருக்க ஒரு இடம். அவ்ளோதான். இதற்கு மேல நம்ம தேவைகள் அதிகமானா பிரச்சினைகள்தான் அதிகமாகும்.

2. இந்த லோக/ மறு லோகங்களில் வரும் சுகங்களில் ஆசை இல்லாம இருப்பது.,
ஆசையே அழிவுக்கு காரணம்னு புத்தர் மாதிரி பெரியவங்க சொல்றாங்க. யோசிச்சு பாத்தா உண்மைதான்னு தோணுது. ஒரு விஷயத்தின் மேல ஆசை வச்சா அதை அடைய முயற்சி பண்ணுவோம் அதுக்கு தடையா இருக்கிறது மேல கோவம் வரும். அது மற்ற எல்லா பிரச்சினைகளையும் கொண்டுவரும். ஆன்மீக முன்னேற்றத்துக்கு தடை எப்பவுமே இந்த காமம் குரோதம்தான். அதாவது ஆசையும் கோபமும்.

இந்த பிறவில கிடைக்கிற சுகங்களில்தான் ஆசை ன்னு இல்ல. அடுத்ததா நான் சொர்கத்துக்கு போகணும். அங்க ஜாலியா இருக்கலாமாமேன்னு யாரை பூஜை பண்ணலாம் என்ன ஹோமம் பண்ணலாம் னு தேடறவங்களும் உண்டு. அது இப்ப குறைஞ்சு போச்சு. இது மேலோட்டமா பாத்தா நல்லது போல தோணினாலும் இதுவும் இந்த உலக ஆசைகள் போல பிரச்சினைகளை உண்டு பண்ணுவதுதான்.

3. சமம் முதலான ஆறு தொகுதி அப்படி வேற சொல்லிட்டீங்க அது என்ன? என்னன்னா..

1.சமம் 2.தமம் 3.விடல் 4. சகித்தல் 5.சமாதானம் 6.சிரத்தை ஆறாம்.

சமம்னா மனச அடக்கறது. (அகக் கரண தண்டம்)
இந்த மனச பாருங்க. நம்மை பாடா படுத்தறது இதுதாங்க. சும்மா விட்டா எங்க எங்கயோ ஓடுது. எப்பவோ நடந்ததை எல்லாம் அசை போடுது. நாப்பது வருஷம் முன்னாடி நடந்ததை நினச்சு இப்ப வருத்தப்பட வைக்குது. கோபப்பட வைக்குது.
அது வேணும் இது வேணும்னு கேட்டுக்கிட்டே இருக்கு. சரி இந்தான்னு கேட்ட ஒண்ண சம்பாதிச்சு கொடுத்தா சும்மா இருக்கா? அடுத்ததா வேற ஒண்ணு மேல ஆசை. ஒரு நிலையா இல்லாம படுத்துது. இதுக்கு தீனி போட்டு மாளாது. அதனால இதுக்கு ஒரு செக் வைக்கனும். “தா சும்மா கெட” ன்னு சொல்ல பழகணும். அதான் சமம்.


Post a Comment