Friday, April 4, 2008
வழி 3-அ
இத நமக்கு சாதகமா பயன்படுத்திக்கலாம்.
எப்படி?
சும்மா கொஞ்ச நேரம் படுங்க. கை கால் உடம்பு முழுதும் விறைப்பா ஆக்குங்க. நல்லா முறுக்கேறட்டும். ஆச்சா, இன்னம் கொஞ்சம், இன்னும் கொஞ்சம்..... இப்ப டக் குன்னு லூஸா விடுங்க. இ.கொ சொல்றா மாதிரி Freeயா விடு மாமே....!
நல்லா ஆழமா, மெதுவா மூச்ச இழுத்து விடுங்க. ஒவ்வொரு மூச்சு இழுக்கிறதும் எண்ணிட்டே வங்க. ஆரம்ப காலம். அதனால ஒரு 10 ல ஆரம்பிச்சு 9. 8. 7 இப்படியே 0 வாங்க. இப்ப உங்களையே கவனிங்க. ஜிம்னு இருக்கு இல்ல. ரிலாக்ஸ்டா..
அதான்.
உடம்பை தளர விட்டது மனசையும் இறுக்கம் இல்லாம ஆக்கிடுச்சு!
அந்த மாதிரி சமாசாரம் எல்லாம் பின்னால விரிவா பாக்கலாம். இப்ப இது ஒரு முன்னோட்டம்தானே!
[ஒரு சுட்டி தரேன். முன்ன இத செஞ்சு பாத்திருக்கேன். அப்ப ஆடியோ டேப் இலவசமா கிடச்சது. இப்ப கட்டணம் வசூல் செய்யறாங்க. ஆனா வேலை செஞ்சதுன்கிறது நிச்சயம். http://www.svyasa.org/course/smet.asp ]
4. பிராணாயாமம்.
இதுவும் இப்ப கொஞ்சம் பாஷன் ஆகிட்டு வருது. ஆனா இது கொஞ்சம் சரியா செய்யலேன்னா நிறையவே பாதிப்பு ஏற்படுத்தும். ஒரு யோக ஆசான் கிட்ட கத்துகிட்டு செய்யனும்.
மூச்சை நல்லா இழுத்து உள்ளே பிடிச்சு மெதுவா வெளியிடறது மூச்சு பயிற்சி. மேலோட்டமா பாக்க இது நல்லா மூச்சு விடறதால ஆக்ஸிஜன் மூளைக்கு சரியா கிடைக்குதுன்னு நினச்சாலும் அதுக்கும் மேலேயே சக்தி ஊட்டறது இது.
மனசையும் உடம்பையும் இணைக்குது. பிராணாயாமம் என்கிறது இந்த மாதிரி சில பல மூச்சு பயிற்சிகளால கிடைக்கிற உயிர் மூச்சு மேலே கிடைக்கிற கட்டுப்பாடு.
5. ப்ரத்யாஹாரம்: கண் காது மாதிரி உணர் கருவிகள் இருக்கு இல்லையா அதை எல்லாம் கட்டுக்கு கொண்டு வரது ப்ரத்யாஹாரம். சாதாரணமா கண் பாக்க விரும்பறத பாக்க நம்மை இழுத்துட்டு போகுது. அதே போல எல்லா உணர்ச்சிகளுமே. இங்கே வேண்டியது என்னன்னா நாம நினச்ச மாதிரி உணர் கருவிகள் செயல்படனும். அதுகள் எல்லாம் இழுத்தபடி நாம போகக்கூடாது.
6. மேலே பாத்த மாதிரி ப்ரத்யாகாரம் செஞ்சா மனசை ஒரே இடத்தில நிலைக்க வைக்கலாம். இது தாரணை. ஆங்கிலத்துல concentration, one-pointedness of mind
அப்படிங்கறாங்களே அதுதான்.
7.தியானம்: இதுவும் நமக்கு தெரிஞ்ச மாதிரி இருக்கிறதுதான். ஆனா சரியா புரிஞ்சுக்காம இருப்போம். தாரணையால குவிஞ்ச மனசை ஒரே பொருள் மேலே வைக்கிறது த்யானம்.
8. சமாதி: டில்லி மாதிரி ஊர்ல எல்லாம் இருக்கே, டூரிஸ்ட்ட கொண்டு காட்டுவாங்களே அந்த மாதிரி சமாதி இல்ல. தியானத்து மூலமா உள்ள்ள்ளுக்குள்ள இருக்கிற அந்த நிசமான “நாம்” ஓட தொடர்பு கொள்ளறது.
இப்படி எட்டு நிலைகள் கொண்டது அஷ்டாங்க யோகம்.
இதுல ரொம்ப முக்கியமானது ஒரு சரியான குரு இல்லாம பல விஷயங்கள் செய்யக்கூடாது என்கிறதுதான். பிராணாயாமம்தானே வெறும் மூச்சு பயிற்சிதானே என்ன ஆயிடும் னு நினைச்சு நாம பாட்டுக்கு செய்ய ஆரம்பிச்சா ஏடாகூடமாயிடும்.
எனக்கு நல்லா தெரிஞ்ச ஒத்தர். ஒரு டஜன் தொண்டு நிறுவனங்கள் வச்சு நடத்துரார். இதுக்காக பலரை பார்த்து பேசுவார். அப்படி பார்த்து பேசினதுல ஒத்தர் யோகம் பயிற்சி செய்யறவர். நண்பர் யாரை பாத்தாலும் அவரவருக்கு பிடிச்ச சப்ஜெக்ட்டா பேசிடுவார். இவர் யோகின்றதால அது பத்தி பேசினார். தனக்கும் அதை கத்துக்க ஆசைன்னார். யோகியோ உனக்கு வேண்டாம்னு மறுத்தார். எதை மறுக்கறாங்களோ அது மேல ஆசை அதிகமாகும்தானே? நண்பர் விடாப்பிடியா தொடர்ந்து யோகியை தொந்திரவு பண்ணி கத்துக்கொடுங்கனார். கடேசியா ஒரு நாள் சரின்னு யோகி இவரை உக்காத்தி வெச்சு கண்ணை மூடிக்க சொல்லி தலை மேலே கையை வச்சு ஏதோ செஞ்சார். பிறகு ஒரு மந்திரமும் பயிற்சியும் சொல்லித்தந்து இதை ரெண்டு வாரம் பயிற்சி செஞ்சுவிட்டு வாங்கன்னு சொல்லி அனுப்பினார்.
நண்பர் யோகிகிட்ட கத்துக்கனும்னு நினைச்சு அது கிடச்சாச்சு இல்ல, அதனால அத அப்படியே விட்டுட்டு மத்த வேலையை பாக்க போயாச்சு. ஒரு மாசம் ஆச்சு. நாளாக ஆக நண்பருக்கு மனக்குழப்பம் அதிகமாகி என்னன்னே புரியாம கஷ்டப்பட்டார். திடீர்னு ஒரு நாள் யோகி பத்தி நினைப்பு வந்து அவரை பாக்கப்போனார். யோகி இவரை “வேண்டாம்னு சொன்னேனே கேட்டயா” ன்னு திட்டிட்டு தலை மேலே கை வச்சு ஏதோ செஞ்சுவிட்டு இனிமே இந்த மாதிரி சமாசாரத்துல எறங்காதேன்னு சொல்லி துரத்திட்டார்.
எதுக்கு சொல்ல வந்தேன்னா இது சாக்கிரதையா எறங்க வேண்டிய சமாசாரம். ஏதோ புக்க பாத்துட்டு எல்லாம் இறங்க வேணாம். கத்தி முனைல நடக்கிறது போல இது. நல்ல குரு இல்லாம இறங்கவே கூடாது.
அடுத்த வழி?
Labels:
நுழைவாயில்
Subscribe to:
Post Comments (Atom)
13 comments:
//அடுத்த வழி?//
Back to Bhakthi?
:-)
ம்ம், ரொம்பவே சுவாரசியமா போகுது.
லலிதா சகஸ்ர நாமத்துலயே எட்டு சக்ரத்தையும் தொட்டு செல்வார்களே!
இப்ப இந்த குண்டலினிய எழுப்பறேன்னு விளம்பரம் செய்றது பேஷனா போச்சு.:))
அதை பத்தியும் கொஞ்சம் எழுதுங்க சார்.
அடுத்த வழிக்கு காத்திருக்கேன்.
@ஜீவா, இன்னும் ஒன்னு பாக்கி இருக்கே! அப்புறமா பக்தி கொஞ்சம் விரிவா பாக்கலாம்.
@அம்பி
வேணும்னுதான் சக்கிரம் பத்தி எல்லாம் இப்ப எழுதலை. இப்ப சும்மா கொஞ்சம் முன்னோட்டம்தான்.
அப்புறமா சுத்தி சுத்தி விரிவா பாக்கலாம்.
இதெல்லாம் உங்களுக்கு அனேகமா தெரிஞ்சதுதான். வித்தியாசமா எளிமையா சொல்லவும் சொல்லும்போது எனக்கு இன்னும் தெளிவு பிறக்கவும்தான் சொல்றேன். அதே போல உங்களுக்கும் இருக்கும் ன்னு நம்பறேன்.
தொடர்ந்து படிங்க.
நன்னி!
என்ன சார் இப்படி பயமுடுத்துறீங்களே..:)
எது பயமுறுத்தல்?
திருப்பி ஒரு ரவுண்டு எழுதுவேன்கிறதுதானே?
பாடல் எண் : 4
பிராணன் மனத்தொடும் பேரா தடங்கிப்
பிராணன் இருக்கிற் பிறப்பிறப் பில்லை
பிராணன் மடைமாறிப் பேச்சறி வித்துப்
பிராணன் அடைபேறு பெற்றுண் டிரீரே.
பொழிப்புரை :
பிராண வாயுவால் கிளர்ச்சியுற்று ஓடும் இயல் புடைய மனத்தை உடன்கொண்டு, அப்பிராண வாயு வெளியே ஓடாது உள்ளே அடங்கி இருக்குமாயின், பிறப்பு இறப்புக்கள் இல்லா தொழியும். ஆகவே, அந்தப் பிராண வாயுவை அதன் வழியினின்றும் மாற்றி வேறு வழியில் செல்லச் செலுத்தி, அதனால் மோனநிலையை எய்தி, பிராண வாயுவால் அடையத்தக்க பயனை அடைந்து இன்புற்றிருங்கள்.
குறிப்புரை :
மனம் செயற்பட்டுப் பயன் தருதற்பொருட்டு அமைந்ததே பிராண வாயுவாயினும், இங்கு நுதலிய பொருள் பிராண வாயு ஆதல் பற்றி அதனைத் தலைமைப் பொருளாக வைத்து, `மனத் தொடும் அடங்கிப் பிராணன் பேராது இருக்கின்` என்றார். ``மனத் தொடும்`` என்றதில் ஓடு, `கைப்பொருளொடு வந்தான்` என்றாற்போல உடைமைப் பொருட்கண் வந்தது. எனவே, பிராணாயாமத்தால் மனம் அடங்குதலாகிய பயன் கூறப்பட்டதாம். வழியை `மடை` என்றது, ஒப்புமை வழக்கு.
பிராண வாயு உலாவும் வழி இட நாடி (இட மூக்கு) ஆகிய இடைகலையும், வல நாடி (வல மூக்கு) ஆகிய பிங்கலையும், நடு நாடி (முதுகந்தண்டைச் சார்ந்துள்ள வழி) ஆகிய சுழுமுனையும் என மூன்று. அவற்றுள் பிராணவாயு இயல்பாக உலாவும் வழி இடைகலை பிங்கலைகளாம். அவைகளை மாற்றிச் சுழுமுனையில் செலுத்து தலையே, ``மடை மாற்றி`` என்றார். `நடை மாற்றி` என்னாது, `மடை மாற்றி` என்றதனால், அதற்கு, `இடைகலை பிங்கலைகளுள் ஒன்றின் வழியாகவே விடுதலும் வாங்குதலும் செய்தல்` என உரைத்தல் கூடாமை அறிக. `பேச்சறுதல்` என்பது, `மோனம்` என்பது குறித்த வாறு. உண்மை மோனம், வாய் வாளாமையோடு ஒழியாது மனம் அடங்குதலேயாம் என்க. உண்ணுதல் இங்கு, துய்த்தல். இத்திருமந்திரம் சொற்பொருட் பின் வருநிலை.
இதனால், பிராணாயாமத்தால் மன அடக்கம் உளதாதல் கூறப்பட்டது.
திருமூலர் திருமந்திரத்தின்
மூன்றாம் தந்திரம் 5 ம். அத்தியாயம் 4-ம் பாடல்.
அட, மேற்கண்ட பாடல் "பிராணாயாமம்" பற்றியதுனு சொல்ல மறந்துட்டேன். :(
"பிரத்தியாஹாரம் திருமந்திரம் மூன்றாம் தந்திரம், 6-ம் அத்தியாயம் பாடல் எண்
பாடல் எண் : 5
சோதி இரேகைச் சுடரொளி தோன்றிடிற்
கோதில் பரானந்தம் என்றே குறிக்கொண்மின்
நேர்திகழ் கண்டத்தே நிலவொளி எய்தினால்
ஓதுவ தும்முடல் உன்மத்த மாமே.
பொழிப்புரை :
`சுவாதிட்டானத்தில் உள்ளது` என மேலே சொல்லப் பட்ட பேரொளி, உங்களுக்குக் கீற்றுப்போன்ற விளக்கொளியாகப் புலப்படுமாயின், `அப்பொழுதே பேரின்பம் கிடைத்து விட்டது` எனக்கொண்டு, அவ்வொளியை நோக்குதலையே குறியாகக் கொள்ளுங்கள். இருதயத்திற்கு அடுத்ததானமாய் விளங்குகின்ற கண்டத்தில் (மிடற்றில்) நிலைத்துள்ளதாகிய அவ்வொளியைத் தலைப் பட்டால், அதன் பயனாகச் சொல்லப்படுவது, அதுகாறும் கண்டறியாத ஒரு புதிய இன்ப அனுபவமாம்.
குறிப்புரை :
இங்ஙனங் கூறவே, `ஞான நாட்டம் உடையோரே முற்கூறிய நிலையின் மேலும் முயன்று இவ்வொளியைக் காண்பர்` என்பதும், `அந்த நாட்டம் இல்லாதோர் முற்கூறிய நிலையோடே நின் றொழிவர்` என்பதும் பெறப்பட்டன. கண்டம் `விசுத்தி` எனப்படும். `மிக்க தூய்மை` என்பது இதன் பொருள். ஞான நெறியிற், செல்லும் முதல் இடமாதல் பற்றி இப்பெயர் பெற்றது. `நிலவொளி` வினைத் தொகை. ``ஆம் அதுவே`` என்பதில் `அது` என்பது எஞ்சிநின்றது.
இதனால், `விசுத்தி` என்னும் ஐந்தாவது ஆதார நிலை கூறப்பட்டது.
பொருத்தமான பகுதிகளை கீ அக்கா தேடி போட்டிருக்காங்க. கொஞ்சம் பொறுமையா படிச்சு புரிஞ்சுக்கலாம்.
நன்ஸ் அக்கா!
தாரணை என்னும் ஐந்தாம் நிலை பற்றித் திருமூலர் சொல்லி இருப்பது. திருமந்திரப் பாடல் மூன்றாம் தந்திரம், 7-ம் அத்தியாயம், முதல் பாடல்
பாடல் எண் : 1
கோணா மனத்தைக் குறிக்கொண்டு கீழ்க்கட்டி
வீணாத்தண் டூடே வெளியுறத் தான்நோக்கிக்
காணாக்கண் கேளாச் செவியென் றிருப்பார்க்கு
வாணாள் அடைக்கும் வழியது வாமே.
பொழிப்புரை :
கோணுதல் (புலன்வழி ஓடுதல்) உடையதாய் இருந்த மனம், பிரத்தியாகாரத்தில் அதனை விடுத்து ஒருவழிப் பட, அதனை அவ்வழியில் முன்போல மீளாதவாறு குறிக் கொண்டு தடுத்து, சுழுமுனை வழியாக மேலே செல்கின்ற வாயுவே பற்றுக்கோடாக மேற்செலுத்தி, ஆஞ்ஞையை அடையு மாற்றால் அவ்விடத்திலே செய்யும் தியானத்தால் ஐம்பொறிகள் செயலற்றிருக்கும் நிலையை எய்தினவர்கட்கு, அந்நிலைதானே பிறவி வரும் வழியை அடைக்கின்ற உபாயமாகிவிடும்.
குறிப்புரை :
கீழ் - கீழ்மையான வாயில்; அவை ஐம்பொறிகள் கட்டுதல், இங்கு, ``தடுத்தல்`` என்னும் பொருளது. விலா எலும்பு, நாடிகள் முதலியவைகளைக் கட்டியுள்ளமையால், முதுகெலும்பைத் தந்திகள் முதலியவற்றை உடைய வீணைத் தண்டோடு உவமித்தல் நூல் வழக்கு. ``சிவபெருமான் திரிவிக்கிரமரது முதுகெலும்பை வீணை யாகக் கொண்டார்`` என்பது புராணம். ஆஞ்ஞை ஆகாயமாகச் சொல்லப்படுதலின், ``வெளி`` என்றார். நோக்கப்படும் பொருள் அவரவர்க்கு ஏற்ற பெற்றியான் அமைதலின், அதனைக் கூறாராயினர். ``கண், செவி`` என்பவை பிற பொறிகளையும் தழுவி நின்ற உப லக்கணம். `என்று`, என்னும் எண்ணிடைச் சொல்லின்பின் `இவற்றை உடையராய்` என்பது வருவிக்க. இனி, `காணா கண் கேளா செவி` என முற்றுத் தொடராகப் பாடம் ஓதுதலுமாம். ``வாணாள் வழி அடைக்கும் வழி`` என்பதனை, ``வாழ்நாள் வழியடைக்குங் கல்`` (குறள், 38) என்னும் திருக்குறளோடு ஒப்பிட்டு நோக்குக. `பிறவாமைக்கு வழியாதல், ஞானத்தின் வழியாக` என்க.
இதனால், `தாரணையாவது இது` என்பதும், அதனது சிறப்பும் கூறப்பட்டன.
தியானம் குறித்துத் திருமூலர் சொல்வதில் இருந்து இந்தப் பதிவுக்குப் பொருந்திய பாடல் இரண்டும் கொடுத்துள்ளேன். அத்தியாயம் 8, மூன்றாம் தந்திரம்
பாடல் எண் : 1
வருமாதி யீரெட்டுள் வந்த தியானம்
பொருவாத புந்தி புலன்போக மேவல்
உருவாய சத்தி பரத்தியானம் உன்னும்
குருவார் சிவத்தியானம் யோகத்தின் கூறே.
பொழிப்புரை :
தாரணை இறுதிக்கண் சொல்லியவாறு, `பூதம் ஐந்து, தன்மாத்திரை ஐந்து, அந்தக்கரணம் நான்கு, பிரகிருதி ஒன்று` என்னும் பதினைந்துடன் புருடன் ஒன்று கூடப் பதினாறையும் தியான முறைப் படி அவ்வவ் வாதாரங்களில் வைத்துத் தியானித்தல், கருவி கரணங்களினின்று நீங்கிநிற்கும் சாதன யோகமாகவே முடியும். அதற்குமேல் ஒளி வடிவாகிய சத்தியையும், அதற்குமேல் அருவாய் நிற்கும் சிவத்தையும் தியானித்தலே சாத்திய யோகமாம். ஆகவே, தியான யோகம், சாதன சாத்திய வகையால் இங்ஙனம் இருகூறாய் நிற்கும் என்க.
குறிப்புரை :
வரும் - வந்த; தாரணையுள் சொல்லிப் போந்த. ஆதி - முதல்; தத்துவம். அவைகளை ஆதாரங்களில் வைத்துத் தியானிக்கும் முறை, ``நிலம்`` என்னும் பூதத்தையும், அதற்குரிய ``கந்தம்`` என்னும் தன்மாத்திரையையும் மூலாதாரத்திலும், பின்னும் முறையே ஏனைய பூதங்களையும், தன்மாத்திரைகளையும் சுவாதிட்டானம் முதலிய வற்றிலும் வைத்தும், அந்தக்கரணங்களை ``மனம், அகங்காரம், புத்தி, சித்தம்`` என்னும் முறையில் சுவாதிட்டானம் முதலாக முறையே வைத்தும், சித்தமே பிரகிருதியாய் அடங்கப் புருடனை ஆஞ்ஞையில் வைத்தும் தியானித்தல். பொருவாத புந்தி புலன் போக மேவல் - ஆன்ம அறிவொடு மாறுபட்டு வாதிக்கின்ற பொறி புலன்களின் வாதனை அற்றுப்போக, அமைதியுற்று நிற்றற்குரிய சாதனையாம். புந்தி, மேவல் இவை ஆகுபெயர்கள். ஆஞ்ஞையில் புருடனை விழுங்கி நிற்கும் ஒளி வடிவாக இறைவனைத் தியானிப்பின், அது சத்தித் தியானமாகும். பரம் - மேலானது. ஒளி வடிவிற்கு மேலானது அருவம். இறைவனை நிராதாரமான உச்சியில் அருவமாகத் தியானித்தல் சிவத்தியானமாகும். இந்தச் சத்தி சிவத் தியானமே சாத்திய யோகத்தியானம் என்க. `பரத்தியானமாக` என ஆக்கம் வருவிக்க. குரு - திட்பம்.
இதனால், ஞான யோகத்தின் நிலைகள் இவை என்பது கூறப்பட்டது. இயமம் முதலிய எட்டனுள் `தியானம், சமாதி` என்னும் இறுதி இரண்டுமே யோகத்தில் சாத்தியக் கூறாதலின், இதனை, ஈண்டுப் போதந்து கூறினார்.
11ம் பாடல்:
நாத முடிவிலே நல்லாள் இருப்பது
நாத முடிவில்நல் யோகம் இருப்பது
நாத முடிவிலே நாட்டம் இருப்பது
நாத முடிவிலே நஞ்சுண்ட கண்டனே.
பொழிப்புரை :
தத்துவ நிலையிலும் சத்தியும் சிவமும் இருப்பது நாத தத்துவத்திற்கு அப்பாலாகலின், தியான யோகத்தின் முடிவு நிலையும் மேற்கூறிய பத்து வகை ஓசைகள் அடங்கிய இடமேயாம். அதனால், யோகியரது நோக்கம் அவ்விடத்திற் செல்வதே.
குறிப்புரை :
`தியான முதிர்ச்சியில் சிவாநுபவத்தைத் தலைப்படல் கூடும்` என்பதற்கு, ``நாத முடிவிலே நஞ்சுண்ட கண்டன்`` என்பதனை இறுதிக்கண் கூறினாராயினும், அதனை இரண்டாம் அடியாக வைத்து, அதன்பின், `ஆதலால்` என்னும் சொல்லெச்சம் வருவித்துரைத்தல் கருத்தென்க. நல்யோகம் - தியானம். ``இருப்பது`` எனவந்த எழுவாய்கள் மூன்றும், ``முடிவில்`` என்னும் பயனிலைகளை முதலிற் பெற்று நின்றன. ``நஞ்சுண்ட கண்டன்`` என்பதன் பின்னும் அவ் எழுவாய் எஞ்சிநின்றது.
இதனால், ஓசை அடங்கிய இடமே தியான யோகத்தின் முடிவு நிலையாதல் தத்துவத்தில் வைத்து வலியுறுத்தப்பட்டது.
மிச்ச படிகளையும் படிச்சேன் திவா அண்ணா. எளிமையா சொல்லிட்டீங்க.
ப்ரத்யாஹாரம் படிக்கும் போது நினைவுக்கு வந்தது - உணவு என்பது வாயினால் உட்கொள்வது மட்டும் இல்லை; எந்தப் புலனால் உட்கொள்வதும் உணவு தான். எல்லாவகை உணவுகளிலும் கட்டுப்பாடு வேண்டும்.
படிச்சிருக்கேன். ஆனா செயல்படுத்துறதுல கொஞ்சம் சோம்பல். :-)
குமரன்,
எளிமையா இருக்குன்னு கேட்க மகிழ்ச்சி. இந்த பதிவுகள் அத்தனையிலுமே ஒண்ணும் புதுசா சொல்லப்போறதில்லை. எளிமையா புரிகிறாப்போல சொல்லனும். அதற்குத்தான் முயற்சி செய்தேன்.
Post a Comment