Pages

Saturday, April 12, 2008

வழி-4 இதமம் புறக் கரண தண்டம். அதாவது வெளி விவகாரங்களை கவனிக்கிற ஐந்து இந்திரியங்களை அடக்கறது. இந்திரியங்கள்னா என்னங்கிறீங்களா? அதாங்க senses. பாக்கிறது கேக்கிறது சுவைக்கிறது தொடறது வாசனை பாக்கிறது. இததெல்லாம் நம்ம கண்ட்ரோல்ல வரணும். ஒழிக்கணும்னு சொல்லலை. நம் வசப்படணும். அதுங்க இழுக்கறா மாதிரி நாம போக கூடாது. நாம சொல்கிற மாதிரி அதெல்லாம் கேட்கணும். அதெப்படி அது நம்ம கண்ட்ரோல்ல இருக்கா என்னங்கிறீங்களா. ஆமாம் இருக்கவே இருக்கு.

சினிமா பாக்கிறோம். நடுவில பக்கத்து சீட்டுல யாரோ வந்து உக்காரறாங்க. நாம மும்முரமா சினிமா பாத்துக்கிட்டு இருக்கோம். அது முடிஞ்ச பின்னால பக்கத்துல பாத்தா அட நம்ம நண்பர்தான் உட்கார்ந்தார்னு தெரிஞ்சுகிறோம். சினிமா பாத்தப்ப தியேட்டர்ல ஸ்கிரீன் கீழ நாய் ஓடினது கூடத்தான் பார்வைல இருந்தது. ஆளா அது உள்ளே போகலை. (நாய் இல்லை, நாய் ஓடின செய்தி உள்ளே போகலை:-) இப்படி பல விஷயங்கள் கண்ணுல பட்டும் ஏன் உள்ளே போகலை? ஏன்னா நம் கவனம் அதில இல்லை. டீச்சர் பாடம் எடுத்தாலும் அது காதில விழுந்தாலும் அதை கவனிக்காம இருக்கிற கலை நாம எல்லாருக்கும் தெரிஞ்சதுதானே.
இது போல எதையும் உணரக்கூடிய சக்தி நம்ம கண்ட்ரோல்லதான் எப்பவுமே இருக்கு.

பாவம் கலந்த காரியங்கள் செய்யறதையும் புண்ணிய காரியங்கள் செய்யறதையும் பலன் விரும்பாம அறுத்து விடறதே (நீக்குதலே) விடல் என்கிறாங்க.
பலனை எதிர் பார்த்துதான் நாம் பல காரியங்களை செய்யறோம். பலனே வேண்டாம்னா அதெல்லாம் செய்ய மாட்டோம். அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டியதை மட்டும் செஞ்சு நம் கடமையை மட்டும் செய்து விட்டு போய் விடுவோம்.

மயக்கம் செய்கிற காமம் குரோதம் முதலியவை வந்தா அடக்குதல் (பொறுத்தல்) சகித்தல்.
மனசை அடக்க தடையா இருக்கிறது இந்த காமம்தானே? ஆசைப்பட்ட பொருள் கிடைக்காம போனால் வருவது இந்த குரோதம்தானே? இவற்றையும் அடக்குவது.

வேதாந்தமாக கேட்டதோட அர்த்தத்தை உள்ளம் சிந்திக்கிறா மாதிரி எப்பவும் வச்சுக்கிறதை சமாதானம் என்கிறாங்க. நம்ம நிறைய பேர் பல நல்ல விஷயங்களை கேட்கிறோம். கேட்கும்போது ஆஹா இதுதான் சரின்னு மனசுல படுது. ஆனால் பிரசங்கம் முடிந்து வெளியே வருவதற்குள்ளே மனசு திருப்பி ஆட்டம் போட ஆரம்பிச்சுடும். கேட்ட தத்துவம் எல்லாம் காத்தோட பறந்திடும், இல்லையா? இப்படி நடக்காமல் மனசிலேயே அதை எல்லாம் இருத்தி வச்சு அப்பப்போ அதை அசை போடணும்.

பரம சற்குரு, ஈஸ்வரன், வேத சாத்திரங்கள் மேல அன்பு பற்றி இருக்கிறதே சிரத்தை.
இந்த சிரத்தை இல்லாவிட்டா நமக்கு வீணாக சந்தேகங்கள் எல்லாம் வந்து நம்மோட முன்னேற்றம் எல்லாம் காணாமப்போயிடும்.

4.
கடைசியாக முத்தியை விரும்பும் இச்சை. சம்ஸ்கிருதத்துல இதை முமுக்ஷு த்வம் என்பாங்க.

ஒரு சீடப்பிள்ளை கடவுளை பாக்கனும்னு குருவை தொந்திரவு பண்ணிகிட்டே இருந்தான். தீவிரமா தேடினா பார்க்கலாம் ன்னு குரு சொன்னார். அவனோ நான் தீவிரமாதானே தேடறேன் கிடைக்கலையே ன்னு நச்சரிச்சுகிட்டே இருந்தான்.
ஒரு நாள் குரு குளிக்க ஆத்துக்கு அவனோட போனார். இரண்டு பேரும் குளிக்கும்போது திடீர்னு சிஷ்யனை தண்ணிகுள்ள அமுக்கிட்டார். மூச்சு திணறிப்போனான். எப்படியாவது விடுவிச்சுக்கணும்னு பாத்தா முடியலை. குரு அவ்வளவு பலமா அவனை உள்ளே போட்டு அமுக்கிட்டாரு. ஏறக்குறைய அவ்ளோதான் இனி தாங்காதுன்னு நினைச்சப்போ அவனை விட்டுட்டார். அப்பாடான்னு வெளியே வந்தான்.
நல்லா மூச்சு எடுத்து ஒருவழியா நிலைக்கு வந்த பிறகு அவன் "குருவே! என்ன இப்படி பன்ணிட்டீங்கன்னு" கேட்டான்.
அப்போ குரு சொன்னார், ”அப்பனே, நீ கடவுளை பாக்க முடியுமான்னு கேட்டுக்கிட்டே இருந்த இல்லை?”
ஆமாம் சாமி!”
“இப்ப தண்ணிக்குள்ள இருந்தப்போ என்ன நினைவு இருந்தது?”
எப்படி வெளியே வந்து மூச்சு எடுக்கலாம்னு இருந்தது.”
“வேற ஏதாவது நினைவு?”
“வேற ஒண்ணுமே இல்லை சுவாமி!”
“இந்த தீவிரத்தோட நீ கடவுளை தேடினா அவரை பாக்கலாம்.”

இந்த தீவிரம்தான் முமுக்ஷு த்வம் .


Post a Comment