Pages

Thursday, August 28, 2008

பும்ஸவனம் - சீமந்தம் படங்கள்


வீட்டிலே பும்ஸவனம் சீமந்தம் நல்லபடியா முடிஞ்சது.
கர்மா பத்தி அவ்ளோ எழுதினோமே அது தொடர்பா சில படங்களை போடலாமேன்னு தோணித்து. ஆற்காட்டார் பூந்து விளையாடிட்டார். ஹும்!

பெரியவங்க ஆசீர்வாதம் வாங்கிட்டு கர்மா ஆரம்பிக்கிறோம்.

IMG_0001
---


இது உதகசாந்தி அபிஷேகம். உதகம் ன்னா தண்ணீர் என்பது அர்த்தம்.

IMG_0003
---


பிரதிசர பந்தம். மஞ்சள் கயிற்றில -தேங்காய் மேலே பாருங்க- வாசுகி ஆவாஹனம். பக்கத்திலே குடத்திலே வருணன்.

IMG_0005
--

ஹோமத்துக்கு எல்லாம் ரெடி

IMG_0005
--

ரக்ஷை கட்டியாச்சு. காலைல வளைகாப்பு ஆயிடுத்து. வளையல்கள் கலர் புல்லா இருக்கு இல்லே?

IMG_0008
--

ஆல மொக்கு நசுக்கி....

IMG_0010
--

மூக்கிலே பிழியறாங்க.

IMG_0011
~~~~

வகிடெடுக்க. இதுதான் முள்ளம் பன்றி முள்ளு + தர்ப்பை+ பேத்தி கிடைக்கததால ஆலங்கொத்து.

IMG_0012
--

வகிடெடுக்கிறாங்க.

IMG_0013

அவ்ளோதான் ஆச்சு! அப்புறமா பூச்சூடல்ன்னு நடந்தது. அதுக்குள்ள காமிரா மின்கல சக்தி தீந்து போச்சு!

நன்றி! பசங்களை மானசீகமா ஆசீர்வாதம் பண்ணுங்க!

Wednesday, August 27, 2008

Strange are the ways of God...


Strange are the ways of God.
But i am no stranger to his ways.

என்ன ஆச்சுன்னு பாக்கிறீங்களா?
சில நல்ல காரியங்கள் செய்ய உத்தேசிச்சு களத்திலே இறங்கறோம். பல சமயங்கள் திட்டமிட்டு இறங்க முடியும். சில சமயம் செய்யணும்ன்னு தெரியுமே ஒழிய எப்படின்னு தெரியாது. ஆனா தயங்காம இது நல்ல காரியம் எப்படியாவது செய்யணும்ன்னு தீர்மானம் பண்ணியாச்சுனா மாஜிக் போல சிலது நடக்கும். திடீர்ன்னு யாராவது வருவாங்க. நாம் உத்தேசிச்ச காரியத்துக்கு அவங்க சாதகமா இருப்பாங்க. போகிற போக்கிலே யாரோ யோசனை சொல்லிட்டு போவாங்க. இல்லை அவருக்கும் நாம உத்தேசிச்ச விஷயத்துக்கும் சம்பந்தமே இருக்காது. ஆனா அவர் சொன்ன விஷயமோ செய்த காரியமோ நமக்கு ஒரு வழியை காட்டிடும். இறைவன் நமக்கு இப்படிதான் சில சமயம் உதவறார். இதனாலதான் "Strange are the ways of God.” அப்படின்னு ஆங்கிலத்துல ஒரு சொற்றொடர் இருக்கு.

இது என் வாழ்க்கையிலே அப்பப்ப நடக்கிற விஷயம்தான். முதல்ல பிரமிப்பா இருந்தாலும் அப்புறமா பழகிடுத்து. சின்ன சின்ன விஷயங்களில் கூட இப்படி நடக்கும். ஆனா இதில என் கண்ட்ரோல் ஒண்ணும் இருக்காது. சில விஷயங்கள் முக்கி முனகி என்ன கஷ்டப்பட்டாலும் நடக்கிறதில்லை. அதுக்குன்னு நேரம் வர வேண்டி இருக்கும்.

ஆன்மீகம் பார் டம்ப்மீஸ் எழுத ஆரம்பிச்சப்ப யார்ரா இதை எல்லாம் படிப்பாங்கன்னு தோணித்து. ஆனால் இது எப்ப வேண்டுமானாலும் படிக்கிற சமாசாரங்கள். இப்ப படிச்சாதான் ரெலவன்ட் ன்னு இல்லை. அதனால் யாரோ எப்பவோ படிச்சுட்டு போவாங்கன்னு ஆரம்பிச்சேன். இதுவரை வண்டி ஓடிகிட்டு இருக்கு.

சரி இதை இப்ப ஏன் சொல்லறேன்?

சமீபத்தில வசீகரா ஒரு காமெண்ட் எழுதினார். இங்கே.

/*ஹிந்துக்களுக்கு நாற்பது சம்ஸ்காரங்கள்னே விதிச்சாங்க*/
Is it for all varnaas?
I think its only for brahmins.
Now a days the problem is people of different varnas dont know what exactly their practices in the spritual community. For example brahmins know what they need to do as per sharstra.But for other varnas they dont know. can you please summarize the practices to be followed as per varnas instead of a generic one?

- kanda mani kandan

அதுக்கு இப்படி பதில் எழுதினேன்.


//Is it for all varnaas?
I think its only for brahmins.//

no, it is for all hindus.

// Now a days the problem is people of different varnas dont know what exactly their practices in the spritual community.//
it is a real problem. most practices are followed- in many cases more that "brahmins" as far as i know. only they dont know that it is as per shastra. they follow tradition and therefore usually right.

// For example brahmins know what they need to do as per sharstra.//
do they?
of course the sastras are available. vaidyanatha dikshitiiyam compiles all dharma sastras. if you read it you will realise it is common to all. while it is a must for brahmins it not not so strict for others. but what is and what is not a must- that is not easily understood.

// But for other varnas they dont know. can you please summarize the practices to be followed as per varnas instead of a generic one? //

i did make an effort in this direction. most practitioners are wary of me (i guess it is because they are not very confident of their knowledge.) i am yet to find someone who is confident to answer my questions.

so as of now the way is: follow traditions of the family. catch hold of an elder in the family and ask about the practices. //

thanks for sharing views. most welcome to comment on my pages.

please also note that it is only in karma yoga that such differentiation is prescribed.
no such differentiation for bhakti, raja gnana yogas

கர்மா சுற்றை ஆரம்பிச்சப்ப இது ஆண் அந்தணர்களுக்குன்னு மட்டும்ன்னு போகக்கூடாதுன்னு ஒரு விழிப்போடதான் இருந்தேன். ஆனால் விழிக்கிறதாதான் ஆச்சு. ஏன்னா பார்க்கிற, படிக்கிற ரெபெரன்ஸ் புத்தகங்களோ அப்படித்தான் இருந்தன. அதனால் தேடி தேடி எடுத்து போடறதாச்சு. மீதி பேர்களுக்கு கர்மா எப்படி சொல்லி இருக்கு என்பதை கண்டு பிடிக்கிறது கஷ்டமாவே இருந்தது. ஏன் என்கிறது நான் கொடுத்த பதில்ல தெரியும்.

வேற வழி?

வசீகரனுக்கு பதில் போட்ட அன்னிக்கு சாயந்திரம் வேத பாடம் எடுக்க போன போது யார் வராங்க? முன்னேயே இதைப்பத்தி நான் விசாரிச்ச ஒத்தர்.

" நான் புத்தகம் கேட்டேனே என்னப்பா ஆச்சு?"
"ஓ, புத்தகம் இருக்கு. தரேன்"
"இப்பவே கிடைக்குமா?”
"இப்ப வீடு மாறிட்டேன். பக்கம்தான். இதோ எடுத்து வரேன்.”

ஆக அவர் 198 பக்க லாங் சைஸ் நோட்டு ஒண்ணை கொண்டு வந்து கொடுத்தார். 5 வருஷம் முன்ன திருப்பதி போனப்ப அங்கே தெலுங்கில ஒத்தர் படிக்க படிக்க இவர் எழுதினாராம்! பின்ன முன்னே நான் கேட்டப்ப ஏன் கொண்டு வந்து கொடுக்கலை? தெரியலை.

ம்ம்ம்ம்ம்ம். போகட்டும் . இப்ப ஒரு நோட் புத்தகம் இருக்கு. சமீபத்திலே இன்னும் ஒரு புத்தகம் அச்சு போட்டு கொடுத்து இருக்காங்களாம். அதையும் கொண்டு வந்து தரேன்னு சொல்லி இருக்கார்.

மேலோட்டமா பாத்ததில கர்மாக்கள் பொதுதான். வழி முறைகள் வேறா இருக்கு. கொஞ்சம் ஆழ்ந்து படிக்கணும். படித்த பிறகு அதில என்ன எழுதி இருக்குன்னு சொல்லறேன்.
--
இந்த வாரம் சில கர்மாக்கள் வீட்டிலே. இன்னும் 6 மாசத்திலே நான் தாத்தாவாகவோ, பாட்டியாவோ ஆகப்போறேன். வீட்டில் விருந்தினர் வருகை, அது இதுன்னு பதிவு எழுத நேரம் இராது. அடுத்த திங்கள் அன்னிக்கு சந்திக்கலாம். அதுவரை இந்த வார நக்ஷத்திரம் நம்ம நண்பர் ஜீவாவோட பதிவுகளை படிச்சு பின்னூட்டம் போடுங்க.
வரட்டா?


Tuesday, August 26, 2008

அந்திம கர்மா - 4


சிதை அடுக்க தகுதியான இடத்தை கர்த்தா புரசு / வண்னி கொத்துக்களால பெருக்கணும். (மந்திரம் உண்டு). சில்லரை நாணயம் ஏதேனும் நடுவில் வைத்து தர்ப்பைகளை பரப்பி தகுதியான காய்ந்த கட்டைகளால சிதையை அடுக்கணும். கிழக்கே சுத்தமான இடத்திலே அக்னியை வைத்து காரியம் ஆரம்பிக்கணும். சவத்தை பாடையிலிருந்து இறக்கி பின் பாடையை நாசம் செய்யணும். கை கால் கட்டுக்களை பிரிக்கணும். சிதை உள்பட எல்லாவற்றையும் நீர் தெளித்து பிரேதத்தை சிதை மீது வைப்பர்.

வாய், கண்கள், காதுகள், மூக்கு துவாரங்கள் ஆகியவற்றில் தங்க காசு வைப்பர். அல்லது நெய் விடுவர். தாயாதிகளும் கர்த்தாவும் பிரேதத்தின் வாயில் எள்ளும் அரிசியும் (கையை மரித்து) வைப்பர். பின் கர்த்தா அக்னியை மிச்சமில்லாமல் எடுத்து கொண்டு மந்திரம் சொல்லி கிழக்கில் மேற்கு முகமாக நின்று அக்னியை சிதையில் இடுவார்.

பிறகு வடக்கே வந்து தெற்கு நோக்கி மந்திரம் சொல்லுவார். பிறகு கிழக்கே பாத்து 9 ஹோமம். ஹோமம் செய்த கரண்டிகளை அக்னியில் போட்டுவிட்டு கிழக்கு நோக்கி உட்கார்ந்து ஜபம்.

இது முடிந்தா அனேகமா கர்மா முடிந்தது. மேற்கே வடக்கு நோக்கி கால்வாய் மாதிரி பூமியில் வெட்டி கல்லு, மண்ணு போட்டு, குடம் தண்ணீர் ஊத்தி, மந்திரம் சொல்லி -அதால எல்லா தாயாதிகளும் தலைல தெளிச்சுப்பாங்க. இது குளிக்கிறா மாதிரி. பிறகு வன்னி அல்லது பலாச கிளைகளை வடக்கு தெற்காக நட்டு அவற்றின் நடுவில தர்ப்பையால தோரணமா கட்டி அதன் கீழே தாயாதிகள் போவாங்க. இது சுத்தி செய்கிற கர்மா. அந்த கிளைகளை உடைச்சுபோட்டு, நீரை தொட்டு, சூரியனை துதித்து, சவத்தை பாக்காமல் விலகி முழுக்கு போட நீர் இருக்கிற இடத்துக்கு போகணும்.

வயதானவர்கள் துக்கத்துக்கான அடையாளங்களை கைக்கொள்ளுவர். கர்த்தா தெற்கு நோக்கி வணங்கி அந்தணர்களிடம் கர்மா நல்லபடியாக நடந்ததாக சொல்ல வேண்டும் என வேண்டி தக்ஷிணை கொடுத்து குளிக்கப்போவார். வீட்டுக்கு போய் அக்னியை பார்க்கிறது, நெய்/வேப்பிலை சாப்பிடறது, கல் மேல நிக்கிறது போல சம்பிரதாயங்களை ஸ்திரீக்கள் சொன்ன படி செய்து வீட்டுக்குள் போவர்.

இனி மேல் உள்ள இதன் தொடர்பான கர்மாக்களை இங்கே இப்ப பார்க்கப்போறதில்லை. அது ரொம்பவே பெரிசு. முதல்ல இவ்வளோ எழுதறதாவே இல்லை. ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.

இதில நடை பெறுகிற தவறுகளை பாத்துட்டு முடிச்சுக்கலாம்.
1. முதலில் சொன்னபடி காலம் கடந்து தகனம் செய்தல். காலம் கடந்தா பூத பிசாசங்கள் உடலை கொத்துகின்றனவாம். அதனால் துன்பம் ஏற்படும். கர்மாவும் சரியா செய்தது ஆகாது.
2. மாலைகளா போட்டு "அலங்காரம்" செய்கிறது.
3. சவம் போகிற பாதை எல்லாம் அந்த நேரத்துக்கு தீட்டு உண்டாகும். குறிப்பா கோவில்கள் சாத்தப்படணும். சவம் போன பிறகு சுத்தி கர்மா செய்தே நடை திறக்கனும். பல இடங்கள்ளே சன்னதி/ பிரகார தெருக்களிலேயே சவத்தை எடுக்காம காத்து இருக்கிறாங்க. வருமானத்துக்காக பாத்து கோவில்களையும் திறந்து விடறாங்க.,
4. நம்மில் 99.99% பேருக்கு சிகையே இல்லை. அப்ப எப்பவுமே தலைவிரி கோலமாதான் இருக்கோம். ஒரு பக்கம் பிரித்துங்கிற பேச்சுக்கே இடமில்லை.
5. பலர் (எங்க ஊர்லே) அக்னியை பிரேதத்தின் மார்பிலே போடறாங்க. ஏன், என்ன பிரமாணம்ன்னு கேட்டா தெரியலை. இதுதான் வழக்கம் என்கிறாங்க. வெட்டியானை விசாரிச்சா ஐயர்மாரை தவிர எல்லாரும் கீழேதான் கொளுத்துவாங்க என்கிறான். அவர்கள் அந்தப்பக்கம் போன பின் வெட்டியானே ஒரு முஷ்டி தர்ப்பை/ வைகோலை கொளுத்தி கீழே வைக்கிறான். அப்ப எல்லாருக்கும் கொள்ளி போடறது வெட்டியான்தான். :-(
6. வெட்டியான் எல்லாத்திலேயும் காசு பாக்கத்தான் பார்கிறான். கொடுக்கிற காசுக்கு பொருட்கள் வாங்கறதில்லை. எப்படி குறைந்த அளவு விராட்டியிலே அதிக இடம் மூடறதுன்னு அவங்களை பாத்து தெரிஞ்சுக்கலாம். இதனால சவத்தை முழுக்க எரிக்க முடியாது. பின்னே? நாம போன பிறகு தேவையான அளவு கெரோசின் ஊத்தி எரிய விடுவாங்க. இது ரொம்பவே பாபம். பின்னே என்ன செய்கிறது?
எல்லாரும் வீட்டுக்கு உடனேயே போகணும்ன்னு இல்லை. தைரியமா இருக்கிற சிலர் நின்னு முடிகிறவரை பார்த்துவிட்டு போகலாம். ஏன் தைரியம்ன்னு சொல்கிறேனா? நெருப்பால தசைகள் எரிக்கப்படுகிறபோது தசைகள் சுருங்கும். அதனால கை கால்கள் மடங்கும் / நீளும். இது தெரியாதவங்க உசுர் இருக்கோ என்னவோன்னு பயந்து போயிடுவாங்க.

முடிந்தவரை தகனம் செய்கிற இடத்திலே புதுசா மணல் கொட்டி நிறைய மரக்கட்டை/ விராட்டி அடுக்கி சவத்தின் மேலே ஒரு கிலோ சர்க்கரையும் தூவி, கீழே நெருப்பு வைக்கணும். கர்மா முடிந்து இந்த நெருப்பை கர்த்தாவே சுற்றிலும் பரவ செய்யலாம். வெட்டியானிடம் முன்னேயே பேசி ஏற்பாடு செய்துகொண்டு அங்கேயே நின்று தகனம் பூர்த்தி ஆவதை பார்த்துப்போகலாம்.


Monday, August 25, 2008

அந்திம கர்மா- 3


மரணம் ஏற்படும்போது உள்ள நேரம், சம்பவம் முதலியதை முன்னிட்டு சில பிராயச்சித்தங்கள் உண்டு.
கை, கால் கட்டை விரல்களை வெள்ளை நூலால இறுக முடிந்து, ஒரே ஒரு வழலை கோரை மாலையை அணிவிக்கணும். இப்ப செய்கிற மாதிரி மாலையா குவிச்சுட கூடாது. ஆனா சமுதாயத்திலே செய்தி கேட்தும் போய் ஒரு மாலை போட்டு "மரியாதை" செய்கிற பழக்கம் இருக்கும் போது எப்படி இதை தவிர்ப்பதுன்னு புரியலே. அத்தி கட்டை பாடை மேலே வைத்து புது துணியால கால் முதல் தலை வரை மூடணும். முன் அணிந்து இருந்த துணியை எடுத்து அவர் நினைவா வைச்சுக்கொள்ளலாம்.

பிரேதத்தின் முன் தீவட்டி பிடித்து செல்ல சாஸ்திரத்தில் ஒரு பிரமாணமும் இல்லை. பேரன்மார்கள் நெய் தீவட்டி எடுத்து செல்வதாக வழக்கத்தில் இருக்கு. இப்படி அமையலைன்னா அதுக்கு வருத்தப்பட வேண்டாம் என்பதற்காக சொன்னேன்.
அரிசியை ஒரு முறை களைந்து அக்னியில அதை மண் பாத்திரத்தில் வேக வைத்து எடுத்துக்கொண்ட பின்னே;
தேவையான சாமான்களை சேகரித்து எடுத்துக்கொண்டு அக்னி சட்டியை ஏந்திக்கொண்டு முன்னால் கர்த்தா முன்னால் போவார். இந்த தேவையான பொருட்களை எடுத்து போகிறவர்கள், பாடையை சுமப்பவர்கள் நீங்கலா, தாயாதிகள் மூத்தவர் முதலில் என்ற வரிசையில் போகணும். மற்றவர் அதன் பின்னாலே எந்த வரிசைல வேணும்னாலும் போகலாம்.

வீட்டுக்கு வெளியே பிரேதம் போன பின் வீட்டு ஸ்திரீக்களும் சிறுவர்களும் புழுதியை தலை தோளிலே பூசிக்கொள்ளணும். கேசத்தை பிரித்து விரித்த தலையோட இருக்கணும்.
இப்ப இந்த அமங்களமான தலை விரிகோலமே பாஷன் ஆகிவிட்டது.

மாயனம் போகும் வழியில் கால் பாகம் போன பின்  அக்னியை கீழே வைத்து தெற்கே பிரேதத்தை இறக்கி வைத்து வலது பக்கம் வெந்த அரிசியை மண் கட்டிகள் மேலே வைத்து ஸ்த்ரீக்களும் (கீ அக்கா நோட் திஸ்!) தாயாதிகளும் மேல் துணியை வேறிடம் வைத்து, ஒரே துணியுடன் வலது பாதி சிகையை முடிந்து, வலது கைகளால் வலது துடைகளை தட்டிக்கொண்டு, இளையவன் முன் போக இடப்பக்கமா சுத்தி வருவர். (துடையை தட்டக்கூடாதுன்னு பெரியவங்க சொல்வாங்க இல்லை?) பிறகு இடது சிகையை முடிந்து வலதை பிரித்து வலப்பக்கமாயும் 3 முறை சுத்தி வருவாங்க. பின் கர்த்தா தெற்கு முகமாக உக்காந்து இடது புறமா மண்டி போட்டு 3 குவியலா மண் கட்டிகளை வைத்து அதன் மேலே எள்ளும் நீரும் விடுவார். அரிசியில் 1/3 எடுத்து மூன்றா பிரித்து 3 மண் கட்டிகள் மேலேயும் போட்டு தெற்கே ஒரு முறை போட்டு திருப்பி எள் நீர் இறைத்து விடுவர்.
இது போல 3 இடங்கள்ளே நின்னு இந்த விஷயத்தை செய்வர்.

இதற்குள்ளே மாயனத்துக்கு கிட்டே வந்திருப்பர். கடைசி முறை இதை செய்தபின் சரு இருந்த மண் பாத்திரத்தை சுக்கு நூறாக- தண்ணீர் தேங்காதபடி- உடைப்பர். (கொசுவுக்கு இடம் கொடுக்காம இருக்கவோ?!) நாலாம் முறை மௌனமாகவே தூக்கிக்கொண்டு தகனம் செய்கிற இடத்துக்கு போகணும். பிரேதத்தை தெற்கு தலையா இறக்கி வைத்துவிட்டு இன்னும் கொஞ்சம் வடக்கே போய் திரும்பணும்.



Friday, August 22, 2008

அந்திம கர்மா-2


பிராணன் போகும் போது மூத்த மகன் அருகில் இருந்தா வலது காதில மந்திரம் சொல்ல வேண்டும். இந்த மந்திரம் உடம்பில இருக்கிற ஐந்து பிராணன்களையும் ஒன்றில் ஒன்றாக ஐக்கியம் செய்யும். அப்புறம் பஞ்சாக்ஷரீ, அஷ்டாக்ஷரீ மந்திரங்களை ஜபம் செய்யலாம். இறை நாம ஜபங்கள், கீர்த்தனைகள் செய்யலாம். இறக்கிறவர் எதை நினைத்து கொண்டு இறக்கிறாரோ அதுவாகவே மீண்டும் பிறப்பதாக ஐதீகம். அதனால இறை நினைவை அவருக்கு கொடுக்கணும். யாருக்கு இறக்கிற தருவாய்ல இறை நினைவோ ஓங்கார த்யானமோ இருக்கோ அவங்களுக்கு அடுத்த பிறவி இருக்காது. பிராணன் போன பின்னே தர்பை புல்லை பரப்பி தெற்கு தலையா படுக்க வைக்கணும். (இதை நினைத்து கொண்டு தெற்கே தலை வைத்து படுக்கக்கூடாது என்று நினைக்கலாகாது) எல்லாரும் தெற்கு நோக்கி வணங்கணும்.

யார் இறுதி சடங்கை செய்யணும்ன்னு வரிசை பட்டியலே உண்டு. சாதாரணமா அவருடைய தாயாதிகளே அருகதை உள்ளவங்க. குழப்பம் இருந்தா பெரியவங்களை கேட்டு செய்யணும். ஸ்த்ரீக்கள் விஷயத்தில அவரோட கணவன் வழியாதான் கிரமம்.

எந்த அக்னிலே செய்கிறது?
அவரவர் ஔபாஸன அக்னிலேதான். இறந்தவர் அப்போது ஔபாஸனம் செய்யாமல் இருந்தாலும் அப்போதைக்கு சூத்திரப்படி அக்னி உண்டாக்கிகிட்டு ஔபாஸனம் செய்து ஆரம்பிக்கணும். இறந்தவருக்கான அக்னி காரியம் வரும்போது எல்லாமே சாதாரண அக்னி காரியத்துக்கு நேர் மாறா சிராத்தத்திலே செய்கிற மாதிரி போகும். இந்த வகை காரியம் பித்ரு மேதம் என்பர்.
வேத பாடம் முடித்தவர்களுக்கு பிரம்ம மேதம் என வேறு வழி உண்டு. அனேகமா மந்திரங்கள் தான் வேறே. கர்மா ஒண்ணுதான்.
அக்னிஹோத்திரம் செய்து 3 அக்னிகளை ஆரதிப்பவங்களுக்கு 3 அக்னிகளினாலும் சம்ஸ்காரம்.
ஔபாஸன அக்னி இல்லாதவர்களுக்கும் மத்தவங்களுக்கு சாதாரண (லௌகீக) அக்னியாலே காரியம்.

மேதம் ன்னு சொல்கிறதாலே அச்வமேதம் மாதிரி இதுவும் ஒரு உயர்ந்த கர்மான்னு தெரிஞ்சு கொள்ளலாம். இறந்தவர் உடலே ஹவிஸ். உண்மையிலே அனாதை பிரேதத்தை சம்ஸ்காரம் செய்வது அச்வமேதத்துக்கு ஈடு என்கிறார்கள்.

இந்த இடத்திலே இன்னும் ஒண்ணை பார்க்கணும். கர்மா ஆரம்பிக்கும் முன்னாலே சந்தியா உபாசனை நேரம் வந்தால் அதை முடித்துவிட்டே கர்மாவை துவங்கணும். ஆமாம், பிரேதம் இருக்கும் வீட்டிலேயேதான். இதிலிருந்து அது எவ்வளவு முக்கியம்ன்னு தெரிந்து கொள்ளலாம்.

இறந்த 10 மணி நேரத்தில் கர்மா -தகனம்- செய்யணும். இல்லாட்டா அது பழைய சோறு போல ஆகும். அப்படி இருக்கிறதை நாம் ஹோமம் செய்ய மாட்டோம் இல்லியா? இப்பல்லாம் இது கொஞ்சம் பிரச்சினை ஆகிகொண்டு இருக்கு. பலர் வெளி ஊர் அல்லது வெளி நாட்டிலே இருந்து கொண்டு "இதோ வரேன், அப்படியே ஐஸ்ல வையுங்க" ன்னு சொல்லறாங்க. புதுசா குளிரூட்டும் சவப்பெட்டிகள் எல்லாம் கூட வந்தாச்சு.

இரவு 9 ¾ மணிக்குள்ள தகனம் செய்யலாம். அப்படி முடியாட்டா அடுத்த நாள் காலைதான். நேரம் ஆயிடுத்து வேற வழி இல்லாமன்னா சவத்தை பஞ்சகவ்யத்தால் குளிப்பாட்டி, மந்திர நீரால் தெளித்து பின் தகனம் செய்யணும். இல்லாவிட்டால் காரியம் பயனில்லாது போகும். இந்த விஷயம் இப்ப நடை முறையில் இல்லாம போய் கொண்டு இருக்கு. சிரத்தை உள்ளவங்க இப்பவே சொல்லி வைங்க - தாமதிக்க வேண்டாம்னு.

அதே போல இறந்த 3 1/2 மணி நேரம் தாமதிச்சே தகனம் செய்யணும். அது ஜீவனை யம தூதர்கள் யமலோகம் கொண்டு போய் verification – இந்த ஆள்தானான்னு சரி பார்த்து வருகிற நேரம். அனேகமா சரியாவே இருக்கும். அரிதா சில நேரங்கள்ல தப்பாயிடும். அப்போ அந்த ஜீவனை திருப்பி கொண்டு வந்து உடலிலே வைக்க அந்த யமதூதர்களால முடியும். மயானத்துக்கு போகிற போது திடீன்னு சவம் முழிச்சு கொண்ட கதைகள் கேள்விப்பட்டு இருப்பிங்களே; காரணம் இதுதான். கேள்விப்பட்ட கதைகள்ள எங்கோ கொண்டு போனதாயும் அங்கே யாரோ கீரை சாதம் கொடுத்ததாயும் திருப்பி வந்து விட்டதாயும் சொல்ல கேள்விப்பட்டு இருக்கேன். இது போலவே near death experience ன்னு ஆங்கிலத்துல சொல்கிற படி சில நோயாளிகள் இதயம் நின்னு போய் "நாங்க" செய்கிற முயற்சில, கிட்டத்தட்ட முடியாதுன்னு விடும் நேரம் திடீர்ன்னு பிழைக்கிறதும் உண்டு! )


Thursday, August 21, 2008

அந்திம கர்மா



அந்திம கர்மா

இது வரை பார்த்த எல்லாமே ஒருவன் தானே செய்ய வேண்டியவை. தன் நலம் இல்லாமலே வாழ்ந்து கடேசில தன் உடம்பையும் அர்ப்பணம் செய்யணும். ஆனால் உசுரோட இருக்கறப்ப எப்படி செய்யமுடியும்? அதனால இறந்த பின் அவரோட மகன் செய்யணும்.

இது அவரவர் ஆசாரம், க்ருஹ்ய ஸூத்திரம் பொருத்து பல நாட்கள் செய்வது. 13 நாட்கள் கருட புராணத்துல சொல்லி இருக்கு.
இது அத்தனையும் இங்கே போடுவதா உத்தேசம் இல்லை. கருட புராண பதிவு ஒண்ணு அப்பப்ப எழுதிகொண்டு இருக்கேன். அது பூர்த்தியான பிறகு சொல்லறேன். அதில பல விஷயங்கள் வரும்.

இங்கே சாதாரணமா நடக்கிற தப்புகளை மட்டுமே சொல்லி மேலோட்டமா கர்மாவை பாத்து போக உத்தேசம். அதே சமயம் கீ அக்கா எழுப்பின "பெண்கள் அந்திம காரியம் செய்யலாமா?” என்ற விஷயத்துக்கும் பதிலை பாத்துடலாம்.

ஒருவர் இறந்த பின்னால என்ன நடக்கும் என்பது ரொம்பவே சிக்கலான புரிந்து கொள்ள முடியாத விஷயம். இதை நான் சொல்லலை. யமதர்மன் நசிகேதன்கிட்டே சொன்னார். நசிகேதனோ விடாப்பிடியா தெரிஞ்சுக்கணும்ன்னு இருந்தார். யமன் ஏதேதோ ஆசையெல்லாம் காட்டிப்பார்த்தார். நிறைய பொருள், பொன், மங்கை, பணியாளர்கள் எல்லாம் தரேன்னு லஞ்சம் கொடுக்கப்பார்த்தார். எதுக்கும் நசிகேதன் அசையலை. அதனாலதான் நமக்கு கடோபனிஷத் கிடைச்சது.

இறந்தபின் என்ன ஆகும்கிறது பிலாஸபி. அது இப்ப இங்கே வேண்டாம். கர்மாவை மட்டுமே பார்ப்போம். பின்ன ஏன் இங்கே சொன்னேன்னா, இது முழுக்க முழுக்க நம்பிக்கை அடிப்படையில  சிரத்தையோட செய்ய வேண்டிய காரியம். இதை விஞ்ஞான ரீதியிலே பாத்தா குழம்பும். அதை நினைவு படுத்தறேன்; அவ்வளோதான்.

மரண தருவாய்லே இருக்கோம் என்று தெரிந்தவன் குளித்து, நெற்றிக்கிட்டு கொண்டு, புண்யாஹம் என்கிற சுத்தி கர்மா செய்து துளசீ நீரோ, கங்கை நீரோ அருந்தி, சுத்தனாகி இறைவன் சன்னிதியிலோ நதிக்கரையிலோ பெரியோர் அனுமதி பெற்று, பிராயச்சித்தங்கள் செய்து கொள்ள வேண்டும். அட, சாக கிடக்கிறவன் எப்படி இந்த மாதிரி செய்ய முடியும்னா, சக்தி இடம் தர வரை என்று அர்த்தம். குளிக்க முடியாதா? மந்திர நீரை தலையில் தெளிச்சுக்கலாம். இப்படி முடிந்தவரை இதை செய்து கொள்ள வேணும். ஒண்ணுமே முடியாது என்றால் புத்திரன் செய்யணும்.

என்ன பிராயச்சித்தம்? காவேரி குளியல்தான். (காவேரி கரைவாசிங்க காலரை தூக்கி விட்டுக்கோங்கப்பா!) ஆனா இது வேற செய்ய சக்தி இல்லாதவங்களுக்கு. சக்தி உள்ளவர் (பணம் இருக்கிறவங்கன்னு பொருள்) சக்திக்கு ஏற்ப தச தானங்கள் செய்யணும்.
பசு, பூமி, எள், தங்கம், நெய், வஸ்திரம், தான்யம், வெல்லம், வெள்ளி, உப்பு - இவைதான் அந்த 10 பொருட்கள். பூமி கொடுக்க சக்தி இல்லைன்னா சந்தனக்கட்டை கொடுப்பது வழக்கம். வேறு ஏதாவது செய்ய தோணித்துன்னா அதையும் செய்யணும். தீட்டுன்னாக்கூட இதை செய்ய அனுமதி இருக்கு. இப்படி தானம் செய்கிறவங்க சிரமம் இல்லாம யமலோகம் போவாங்களாம். (யமலோகம்? ஆமாம். எல்லாருமே இங்க போய் அடென்டண்ஸ் கொடுத்துட்டுதான் மத்த இடத்துக்கு போகணும்.)

Tuesday, August 19, 2008

ஹவிர், ஸோம யக்ஞங்கள்



அடுத்து ஹவிர் யக்ஞங்கள்
அக்னி ஆதானம், அக்னி ஹோத்ரம், தர்ச பூர்ணமாஸம், ஆக்ரயணம், சாதுர்மாஸ்யம், நிரூட பசுபந்தம், ஸௌத்ராமணி

சாதாரணமாக ஸோம யாகம் செய்த்வர்களே இதற்கு தகுதி உடையவர்கள்.
கார்ஹபத்யம், ஆஹவனீயம், தக்ஷிணாக்னி என 3 அக்னிகளை பெறுவது அக்னி ஆதானம் என்ற கர்மாவால். 2 நாள் ஆகும்.
முன் சொன்ன கர்மாவை செய்து பெற்ற மூன்று அக்னிகளையும் தினசரி காலையும் மாலையும் ஆராதிப்பது அக்னி ஹோத்ரம். பசும் பாலை காய்ச்சியோ, அரிசியாலோ ஹோமம்.
ஒவ்வொரு பிரதமை அன்றும் அரிசி மாவை வறுத்து (உண்மையில் நெல் குத்தி அரிசி செய்து குத்தி மாவாக்கி என்று கிரமம். இப்போது வசதிக்காக முன்னேயே மாவு செய்து அதையே மந்திரம் சொல்லி கர்மா செய்து கொண்டதாக ஆக்கிவிடுகிறார்கள். இதற்கு கல்பத்தில் அனுமதியும் இருக்கு.) நீர் விட்டு கிளறி இறக்கி புரோடாஸம் என்கிறதாக உருண்டை பிடித்து அதை ஹோமம் செய்வர். அமாவாஸை அடுத்து வருவதில் தயிரும் பாலும் கூட ஹோமம் உண்டு.
இவை தர்ச பூர்ண ஸ்தாலீபாகம் போல். இவற்றை இஷ்டி என்பர். எல்லா இஷ்டிகளுக்கும் இவையே முன் மாதிரி. இஷ்டின்னு எங்கேயோ கேட்டாப்பல இருக்கு இல்லை? ஆங்! தசரதர் புத்ர காமேஷ்டி பண்ணாரே!

அதே போல் புதிய அரிசி/ச்யாமை கொண்டு சிசிர ருதுவில் ஆக்ரேயண இஷ்டி.
சாதுர்மாஸ்யம் பல இஷ்டிகள் சேர்ந்த கர்மா.
நிரூட பசுபந்தமும் ஸௌத்ராமணியும் ஆண்டுக்கு ஒரு முறை செய்வன.

ஸோம ஸம்ஸ்தைகள் ("யாகங்கள்")
அக்னிஷ்டோமம், அத்யக்னிஷ்டோமம், உக்த்யம், வாஜபேயம், அதி ராத்ரம், அப்தோர்யாமம்.
ஸோம யாகங்களையும் மிக சிலரே செய்கின்றனர். அதுவும் ஏழு ஸம்ஸ்தைகளையும் செய்பவர் அரிது.
ஸோம ரஸம் என்றால் ஏதோ மதுபானம் என்பது போல ஒரு மாயையை உண்டாக்கி இருக்கிறார்கள். ராமர் ஸோம பானம் செய்தார் என்றால் மதுபானம் செய்யவில்லை. ஸோம யாகம் செய்தார் என்றே பொருள்.
ஸோமலதை என்ற தெய்வீக மூலிகை கொடியை வாங்கி கசக்கி பிழிந்து ரஸம் எடுத்து அதை பல பாத்திரங்களில் எடுத்துக்கொண்டு விரிவாக ஹோமங்கள் செய்வர். இந்த ஸோம லதை கொடி நாளடைவில் கலிப்பிரவாகத்தில் காணாமல் போய் விட்டது. அதனால் அடுத்த திரவியமான பூந்திக்கொடிதான் இப்போது பயன்படுகிறது. (சாத்திரங்கள் வகுத்தவர்கள் மிக புத்திசாலிகள். இப்படி நடக்கலாம் என்று பல விஷயங்களை ஊகித்து எல்லாவற்றுக்கும் பிராயச்சித்தங்கள் சொல்லி இருக்கிறார்கள். இது அந்த புத்தகங்களை படிப்பவருக்குதான் விளங்கும். எல்லா ஹோமங்களுக்கும் பயன்படுத்த முக்கிய திரவியம் என்று ஒன்றும் அது கிடைக்காத பட்சத்தில் கௌண திரவியம் என்று ஒன்றும் சொல்லி இருக்கிறார்கள்.)

Monday, August 18, 2008

பாக யக்ஞங்கள்


மேலே பாக யக்ஞங்கள் 7.

அஷ்டகா, ஸ்தாலீபாகம், பார்வணம், ஆக்ரஹாயணீ, சைத்ரீ, ஆச்வயுஜீ.

சரூ சமைத்து யக்ஞங்கள் செய்கிறதாலே பாக யக்ஞங்கள். நள பாகம், பீம பாகம்... சரி.

இவை அத்தனையுமே ஒபாஸன அக்னியை பிரதானமாக உடையவை. அதாவது ஔபாஸனம் செய்கிறவர்தான் செய்ய முடியும்.

மாக மாதத்தில் அஷ்டகா முதலிய சிராத்தங்கள் செய்யணும்; அதற்கு முன் இரவு ஔபாஸனம் முடிந்த பின் ஒரு வகை அடை செய்து அஷ்டகா என்கிற தேவதைக்கு ஹோமம். மீதியை அடுத்த நாள் செய்கிற அஷ்டகா சிராத்தத்தில் வரிக்கிற 8 அந்தணருக்கும் கொடுப்பர்.நவமி சிராத்தத்தில் 5 அந்தணர்களை வரித்து சிராத்தம். அன்வஷ்டகை சிராத்தத்துக்கு பதில் ஔபாஸன அக்னியில் தயிரை கைகளால் ஹோமம் செய்வர்.

ஸ்தாலீபாகம்
ஒவ்வொரு பிரதமை அன்றும் ஔபாஸன அக்னியில் அரிசியை சமைத்து அதனால் ஹோமம். இந்த ஸ்தாலீபாகம் செய்ய தெரிந்தவர் எல்லா ஹோமங்களையும் செய்ய முடியும். ஏன் என்றால் மற்ற ஹோமங்களின் வரிசை கிரமத்துக்கு இதுவே ஆதாரம். இது தெரிந்து விசேஷ ஹோமத்தில் என்ன வேறுபாடு என்று தெரிந்தால் போதும்.

பார்வணம்:
இதை மாஸி சிராத்தம் என்றும் சொல்வர். ஸ்தாலீபாகம் எல்லா ஹோமத்துக்கும் முன் மாதிரியாக இருப்பது (ப்ரக்ருதி) போல எல்லா சிராத்தங்களுக்கும் இதுவே முன் மாதிரி. தகப்பனார் உயிரோடு (ஜீவ பித்ரு) இருப்பவர் செய்ய தேவை இல்லை. இதுதான் அமாவாஸை தர்ப்பணமாக வேற உரு எடுத்து இருக்கு.

ஸ்ராவணீ:
ஸர்ப்பபலி என்றும் சொல்வர். ஆவணி மாத பௌர்ணமியில் செய்வர். அன்று இரவு சரு, நெய் ஹோமம் செய்து, பலாஸ பூக்களை இரு கைகளாலும் ஹோமம் செய்து; புற்று இருக்குமிடத்திலோ சுத்தமான இடத்திலோ அரிசி மாவு கோலம் போட்டு ஸர்ப்ப மந்திரங்கள் சொல்லி போற்றுவது; இதை மார்கழி பௌர்ணமி வரை செய்வர். இது ஸர்ப்ப தோஷங்களுக்கும் சாந்தியாகும்.

ஆக்ரஹாயணீ:
ஸர்ப பலியை மார்கழி பௌர்ணமியில் பூர்த்தி செய்வது. அதே போன்றது.

ஆச்வயுஜீ:
புது அரிசியில் /சியாமை தான்யத்தால் பாகம் செய்து ஸ்தாலீபாக ஹோமம். சிசிர ருதுவில் செய்வர். கார்த்திகை பௌர்ணமி முக்கிய காலம்.

பாக யக்ஞங்களின் சிறப்பே ஹவிர்/ ஸோம யக்ஞங்களை போல இல்லாமல் சுலபமாக செய்யக்கூடியவை. அப்படி இருந்தும் இவை வழக்கொழிந்து போய் விட்டன.


Friday, August 15, 2008

யக்ஞங்கள்



அடுத்து அவரவர் வாழ்க்கையை ஒட்டி ஏதோ ஒரு வேலையில் ஈடுபடுவோம். அங்கேயும் கர்ம யோகம் வருகிறது. அதை அப்புறமா பாக்கலாம். இப்ப நித்திய கர்மாவைதானே பாத்துக்கொண்டு இருக்கிறோம்! அதிலேயும் 40 சம்ஸ்காரங்களை பாக்கிறோம்.
இந்த வரிசையில் அடுத்து ஒருவர் வாழ்க்கையிலே வருவது நாம் முன்னேயே பாத்த பஞ்ச மஹா யக்ஞங்கள். நினைவு இருக்கு இல்லியா? தேவ – பித்ரு- பூத- மனுஷ்ய- ப்ரும்ம யக்ஞங்கள். மொத்தம் 19 ஆயிடுத்து.

இதற்கு மேலே மற்ற யக்ஞங்கள்:

ஏன் யக்ஞங்கள் செய்யணும்?
யக்ஞங்கள் செய்யறதாலே ஏற்படுகிற பலன்களை பாத்தா விடை கிடைச்சுடும் இல்லியா?

வேதத்திலேயே என்ன கிடைக்கும்னு சொல்லி இருக்குன்னு பாக்கலாம். எங்கே யக்ஞங்கள் நடை பெறுகின்றனவோ அங்கே உண்மையான பிரார்த்தனையாலும், மந்திர சாமர்த்தியத்தாலும் பின் வருபவை ஏற்படும்.

1. ப்ராம்ஹணன் வம்சத்தில் வேத சாஸ்திரம், அதனுடைய அனுஷ்டானம் (பின் பற்றல்) இவற்றில் ஆர்வம் உள்ளவன் பிறப்பான்.
2. அரச குலத்தில் வீரனும், அம்பு விடுவதில் சாமத்தியம் உள்ளவனும், பல் சூரர்களை காப்பாற்றி தன்னையும் காப்பாற்றி கொள்ளகூடிய ராஜ குமாரன் பிறப்பான்.
3. நன்கு பால் கறக்கும் பசுக்கள்.
4. பாரம் சுமக்கும் காளை.
5. நன்கு ஓடக்கூடிய குதிரை.
6. வலிமை, அழகு மிகுந்த உடலை உடைய ஸ்த்ரீ.
7. ரதத்தில் இருந்து சத்ருக்களை ஜெயிக்ககூடிய வீரன்.
8. இளம் வயதில் நல்ல படிப்பும் புத்தியும் உடைய யுவன்.
9. எல்லா விஷயங்களிலும் வீரனான புத்திரன்.
10. விரும்பும்போது நல்ல மழை.
11. நல்ல பழங்களை உடைய பயிர்கள்.
12. கிடைக்காதவை கை கூடுவதும், கிடைத்ததை நன்றாக அனுபவிப்பதுமான யோக க்ஷேமம்.

முன் காலத்தில் ராஜாக்கள் அச்வ மேதம் செய்யும் போது சொல்லப்பட்ட மந்திரங்கள். இக்காலத்தில் சிராத்தத்தில் அந்தணர்களை இப்படி வேண்டுவதும் அவர்களும் அப்படி ஆகட்டும் என்று சொல்வதாகவும் இருக்கிறது. கேட்பவர்களுக்கும் சொல்கிறவர்களுக்கும் இதன் பொருள் தெரியுமா என்பது சந்தேகமே.

மேலே பாக யக்ஞங்கள் 7.

அஷ்டகா, ஸ்தாலீபாகம், பார்வணம், ஆக்ரஹாயணீ, சைத்ரீ, ஆச்வயுஜீ.

சரூ சமைத்து யக்ஞங்கள் செய்கிறதாலே பாக யக்ஞங்கள். நள பாகம், பீம பாகம்... சரி.
அடுத்த பதிவில் இவற்றை பார்க்கலாம்.

Thursday, August 14, 2008

விவாஹம்- குறிப்புகள் 2


இதுதான் திருமணம் ஆனதுக்கே அடையாளம் என்று சொல்லிய ஸப்தபதீ சமயத்தில் என்ன சொல்கிறார்கள்?

"ஏழு அடிகள் என்னுடன் வைத்த நீ எனக்கு நட்பில் சிறந்தவள் ஆகிவிட்டாய். இந்த உறவில் இருந்து ஒரு பொழுதும் உன்னை விலகமாட்டேன். நம்மை தெய்வம் ஒன்று கூட்டி வைத்து இருக்கிறது. நாம் எல்லா செயல்களையும் பிரியத்துடனும் நல்ல மனத்துடனும் செய்து வாழ்வோம். கருத்தில் ஒற்றுமை உடையவர்களாக இருப்போம். விரதங்களை ஒன்றாக அனுஷ்டிப்போம். நீ சாஹித்தியமானால் நான் சங்கீதம். நீ சங்கீதமானால் நான் சாகித்தியம். நான் வானுலகம்; நீ பூவுலகம். நான் உயிர்சத்து; நீ அதை தரிப்பவள். நான் மனது; நீ வாக்கு. சொல் போன்ற நீ பொருள் போன்ற என்னை அனுசரிப்பவளாக இருப்பாயாக. ஆண் மக்களை பெற்று செழிப்பான வாழ்க்கை நடத்த இன் சொல் படைத்தவளே! வருவாய்.

அம்மி மிதிக்கும்போது சொல்வது:

“ இந்தக்கல்லின் மீது ஏறி நில்; கல்லைப்போல நீ உன் விரதத்தில் திடமாக இருக்க வேண்டும். உன் விரதங்களுக்கு ஊறு செய்பவர்களை எதிர்த்து நின்று அவர்களை வெல்ல வேண்டும்.”

"இம்மைக்கும் மறுமைக்கும் ஏழேழ் பிறவிக்கும் பற்றாவான் நம்மை உடையவன் நாராயணன் நம்பி செம்மையுடைய இரு கையால் தாள் பற்றி அம்மி மிதிக்கக் கனாக்கண்டேன் தோழீ! நான்" என்கிறாள் ஆண்டாள். இந்து மக்களின் விவாகத்தில் எத்தனையோ நூற்றாண்டுகளாக வரும் பழக்கங்கள் இவை.

திருமணம் முடிந்து இருவரும் வரனின் வீட்டுக்கு போகிறார்கள். வீட்டில் பிரவேசித்த உடன் செய்வது பிரவேச ஹோமம். அதில் முதல் மந்திரம்: ”வீட்டுக்கு வந்துள்ள மகிஷீ -ராணி போன்ற இவள்- சுவர்கத்தை அனுபவிப்பதான ஸந்ததியுடன், நல்ல செல்வம் படைத்தவளாக, இந்த ஔபாஸனாக்னியை நூறு வருஷங்கள் பூஜை செய்பவளாக இருக்கட்டும்.”

பிரவேச ஹோமம் நடந்தபின் நக்ஷத்திரங்கள் உதிக்கும் வரை மௌனமாக இருந்து அவை உதித்தபின் துருவ நக்ஷத்திரத்தையும் அருந்ததீ நக்ஷத்திரத்தையும் தரிசனம் செய்வர். இந்த கன்னிகையும் அருந்ததி போல பதிவிரதையாக இருக்க வேண்டும். வது- வரனுடைய தாம்பத்ய வாழ்க்கை துருவ நக்ஷத்திரத்தை போல நிலை பிழறாமல், தர்மத்திலிருந்து வழுவாமல் இருக்க வேண்டும்.

திருமணம் வெறும் ஒப்பந்தம் இல்லை; ஆயுள் முழுதும் நீடிக்கும் உன்னதமான உறவு என்பதை காட்ட சில மந்திரங்களின் பொருளை பார்த்தோம்.

இந்த காலத்தில் உபநயனமும் திருமணமும் செய்யப்பட்ட போதிலும் அவற்றில் சிரத்தை குறைந்து கொண்டே வருகிறது. வேங்கடாத்திரி என்ற கவி 500 வருஷங்களுக்கு முன்னேயே "உபநயனமும் விவாகமும் வெறும் உத்ஸவங்களாகவே உள்ளன.” என்று சொல்லி இருக்கிறாராம். அப்படின்னா இப்ப கேட்கவே வேண்டாம்.


Wednesday, August 13, 2008

உபாகர்மா/ சந்தேகவிளக்கங்கள்



வருகிற சனிக்கிழமை யஜுர் வேத உபகர்மா வருகிறது.
அதை ஒட்டி சில வார்த்தைகள் சொல்ல தோன்றியது.

முக்கால்வாசி பேர் இந்த கர்மா எதுக்குன்னு கேட்டா "பூணூல் மாத்திக்க" என்று சொல்கிறார்கள்.
அதற்குத்தான் நிறையவே சந்தர்பங்கள் இருக்கே? பூணூல் மாத்திக்க உபாகர்மா வரை காத்திருக்க வேணாமே? எப்போ அது அழுக்கானாலும், நைந்து போனாலும், தீட்டு ஆனாலும் மாத்தத்தானே வேணும்?

அப்ப இந்த கர்மா எதுக்கு?

வேத அத்தியயனம் செய்தவர்கள் இந்த நாளில் திருப்பியும் வேத ஆரம்பம் செய்யணும். அதுதான் இதன் விசேஷம்.

திருப்பியும்?
ஆமாம். திருப்பியும்தான்.

சாதாரணமாக இந்த நாளில் வேத அத்தியயனம் ஆரம்பித்து தை மாதம் உத்சர்ஜனம் - முறைப்படி விட்டு விட வேண்டும். பிறகு காவியம், இலக்கணம் போல மற்ற பாடங்களை படிக்கணும். அடுத்த உபாகர்மா போது திருப்பி ஆரம்பிக்கணும்.

சரி, நான்தான் வேதமே கத்துக்கலையே/ முடிச்சாச்சே என்றால் -
சந்தியா உபாசனையில் வேத மந்திரங்களே வருகின்றன. அது இருந்தால் வேதம் அத்தியயனம் செய்பவனாகவே பொருள்.
வேத அத்தியயனம் வாழ்நாள் பூராவும் செய்ய வேண்டியது. பிரம்ம யக்ஞமாகவாவது சொல்ல வேண்டியது இல்லையா? அதனால் இந்த நாளில் குரு முகமாக அதை புதுப்பித்து கொள்ள வேண்டும்.

நிறைய பேர் வாத்தியாரிடம் பூணூல் வாங்கி வைத்து வீட்டிலேயே போட்டுக்கொள்கிறார்கள். அது சரி, ஆனால் வேத ஆரம்பம் விட்டு போகிறதே? வியாஸ பூஜை செய்து, காண்ட ரிஷிகளுக்கு தர்ப்பணம், ஹோமம் செய்து அதை செய்ய வேண்டுமே! அதை கவனிக்க வேண்டும். சிரத்தை உள்ளவர்கள் முன் ஏற்பாடு செய்து கொண்டு இதை சரியாக செய்வார்களாக.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

ஜீவா ஒரு கேள்வியை எழுப்பினார்கள். ஜோடி பூணூல் எப்ப மூணாகும்?
பலரும் பல விதமாக சொல்லி கேள்விப்பட்டதால் சாஸ்திரத்தை பாத்துவிட்டு பதில் எழுதலாம் என்று தாமதித்தேன்.

சாதாரணமாக ஒரு ஜோடி பூணூல்தான். பிரம்மசாரி ஒன்று, கிருஹஸ்தன் 2 (ஒரு ஜோடி) வானபிரஸ்தன் 1 என்கிறார் பிருகு.
தேவலர் பிரம்மசாரி ஒன்று, ஸ்நாதகன் 2 (ஒரு ஜோடி) என்கிறார். மேல் வஸ்திரம் இல்லாவிடில் மூன்றாவது என்கிறார்.
ஸ்ம்ருதிசாரத்தில் ஒரு வேதம் கற்றவனுக்கு ஒன்று. அதற்கு மேல் எவ்வளவு வேதம் கற்கிறானோ அவ்வளவு போட்டுக்கொள்ளலாம் என்கிறார்.

{அதாவது ஒருவனுக்கு அவனுடைய சாகை = கிளையை தவிர மற்ற கிளைகளை கற்க அதிகாரம் தன் கிளையை கற்று பூர்த்தி செய்தால்தான் கிடைக்கிறது. உதாரணமாக யஜுர் வேதி தன் வேதத்தை முற்றும் கற்றுவிட்டு அப்புறமாக ரிக் /ஸாம/ அதர்வண வேதங்களை கற்கலாம். நேரடியாக அவற்றை கற்க ஆரம்பிக்ககூடாது. ஒரு கிளை வேதம் கற்று முடிக்கவே 7 வருஷம் ஆகும். முன் காலத்தில் 2 (த்விவேதி), 3 (த்ரிவேதி), 4 (சதுர்வேதி) கற்றவர்கள் உண்டு. சதுர்வேதிமங்கலம் என்று ஒரு ஊரை கேள்வி பட்டு இருப்போமே? அந்த கிராமத்தில் நான்கும் கற்றவர் அதிகம் இருந்ததால்தான் அந்த பெயர்.}

பரத்வாஜரும் கர்மாக்களில் இரண்டு உபவீதம்; மேல் வஸ்திரம் இல்லாவிட்டால் கூடுதலாக இன்னும் ஒன்று என்கிறார்.

சாதாரணமாக உபவீதம் போலவே மேல் வஸ்திரத்தை போட்டுக்கொள்ள வேண்டும். அறியாமையில் எப்படியோ சில இடங்களில், ஆசாரங்களில் மேல் வஸ்திரத்தை இடுப்பில் கட்டுவது வந்து விட்டது. அப்படி இல்லாவிட்டால் மரியாதை குறைவு என்றே நினைக்க ஆரம்பித்துவிட்டனர்.

இதனால் சில பிரச்சினைகள் ஏற்படுகின்றன. நாங்கள் பெரிய பேர் வாங்கிய க்ஷேத்திரம் ஒன்றுக்கு போயிருந்தபோது அங்கே தன்வந்திரி ஸந்நிதியில் நான் போட்டிருந்த உத்தரீயத்தை கழட்டி இடுப்பில் சுத்திக்கொள்ள சொன்னார்கள். என்ன செய்வது? இடுப்பில் கட்டிக்கொண்டு சீக்கிரம் வெளியே வந்துவிட்டேன். இந்த மாதிரி தர்ம சங்கடம் ஏற்படாமல் இருக்க 3 வது பூணூல் போட்டுக்கொள்ளலாம். அப்போது மேல் வஸ்திரத்தை நீக்கினாலும் தோஷம் வராது.

ஆக 3 வது என்பது by choice.

Tuesday, August 12, 2008

விவாஹம் -சில குறிப்புகள்



போன பதிவுகள்ள பாத்த அத்தனை அங்கங்கள்லேயும் எது இருக்கோ இல்லையோ 5 முக்கியமானவை.
வாங்நிச்சயம், கன்யாதானம், வரன் பூஜிக்கப்பட்டு கன்னியை ஏற்றுக்கொள்ளுதல், கைப்பிடித்தல், சப்தபதீ.

அது சரி யார் இதை எல்லாம் இப்படின்னு முடிவு பண்ணாங்க?

ரிக் வேதத்தில் பத்தாவது மண்டலத்திலே 85 வது சூக்தத்தில் ஸோமன் என்கிற தேவன் விவாஹம் செய்து கொள்கிறதைப்பத்தி சொல்லி இருக்கு. ஸூர்யை என்பவளை திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்டு இரண்டு அச்வினீ தேவர்களையும் ஸவிதாவின் வீட்டுக்கு அனுப்பி வைத்தான். ஸவிதா கன்னிகாதானம் செய்ய ஒப்புக்கொண்டார். பிறகு சூரியனுடைய வீட்டுக்கு ஸோமன் சென்றான். அங்கு மிக மதிப்புடன் வரவேற்றனர். பிறகு அக்னி சாட்சியாக ஸூர்யையை கைப்பிடித்தான்.

இதையேதான் நாம் பின் பற்றி வருகிறோம்.

கன்யாதானம் செய்பவர் சங்கல்பம் செய்யும்போது "முன் 10 தலைமுறைகளிலும் பின் 10 தலைமுறைகளிலும் இந்த தலைமுறையிலும் ஆக 21 தலைமுறைக்கு இக்குலத்தினரின் ஆனந்தம் நிலையாக இருக்க வேண்டும்" என மஹாவிஷ்ணுவை பிரார்த்திக்கிறார். அதனால் மஹாவிஷ்ணுவே மாப்பிள்ளை வடிவில் வந்து கன்னிகையை ஏற்பதாக எண்ணி அவருடைய பாதங்களை பூஜிக்கிறார்.
“பொன் ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்ட இந்த கன்னிகையை மகாவிஷ்ணு சொரூபமாகிய உமக்கு தானம் செய்கிறேன். பித்ருக்கள் கரையேறவும் பிரம்மலோகத்தை அடையவும் விரும்பி இந்த தானத்தை செய்கிறேன். இதற்கு இந்த உலகை தாங்கும் தேவதைகள் சாட்சி என்று கன்னிகாதானம் செய்பவர் கூறுகிறார்.

கன்னிகையை சுத்தி செய்யும் கர்மாவான நுகத்தடி ஓட்டை வழியாக நீர் வார்த்தல் குறித்து ஒரு கதை உள்ளது.

அத்ரி மகரிஷியின் பெண்ணான அபலா பிரம்மஞானி. தன் உடலில் இருந்த தோல் வியாதியின் காரணமாக திருமணம் ஆகாமல் இருந்தாள். அவள் இந்திரனை குறித்து தவம் இருந்தாள். சந்தோஷமடைந்த இந்திரன் தன் தேரின் நுகத்தடி துவாரத்தின் வழியாக நீர் விட்டு அவளுடைய ரோகத்தை சரி செய்தான். அவளும் சூரியனுக்கு ஒப்பான காந்தி உடையவளாகவும், தோஷம் இல்லாதவளாகவும் ஆனாள். (ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்படும் போது மிதந்து வந்த ஸோம லதையை கடித்து இந்திரனுக்கு சேரட்டும் என்று நினைத்து அதன் ரசத்தை துப்பினாள் என்று கதை உண்டு.) ரிக் வேதத்தில் கூறப்பட்ட இந்த கதையில் அபலா செய்த ஸ்தோத்திரத்தில் இருந்து இந்த இடத்தில் கூறும் மந்திரங்கள் எடுக்கப்பட்டு உள்ளன.

கைப்பிடிக்கும்போது "நான் உன்னை கைப்பிடிப்பது நல்ல மக்களை பெற்று, வெகுகாலம் வாழ்ந்து, கிழத்தனம் வந்த போதும் அன்பு குறையாமல் மங்களமான கிருஹதாஸ்ரம தர்மத்தை கடை பிடிப்பதற்காக" என்று வரன் சொல்லுகிறார்.


சீதா கல்யாணத்திலும் ஜனகர் ராமனிடம் " இந்த சீதா என்ற என் பெண் உன் "ஸஹதர்மசாரீ" என்கிறார்.

Monday, August 11, 2008

விவாஹம் பூர்த்தி



அடுத்து வரன் வீட்டுக்கு வந்து பிரவேச ஹோமம்.

விவாஹ அக்னில 13 ஹோமங்கள்.

முடியும் போது வதுவுக்கு நீண்ட ஆயுளுடன் கூடிய குழந்தை பிறக்க வேண்டி மந்திரம் சொல்லி ஒரு ஆண் குழந்தையை அவள் மடியில் விடுவர். வரனிடம் மந்திரம் சொல்லி பழங்களை கொடுப்பர்.

நக்ஷத்திரங்கள் உதிக்கும் வரை மௌனமாக இருந்து உதித்த பின் கிழக்கு நோக்கியோ அல்லது வடக்கு நோக்கியோ வெளியே போய் மந்திரம் சொல்லி த்ருவ நக்ஷத்திரத்தையும் அருந்ததியையும் பார்க்க வேண்டும்.

அப்பாடா அம்மி (அம்பி இல்லை) மிதிச்சு அருந்ததி பாத்தாச்சு!

அடுத்து ஆக்னேய ஸ்தாலீபாகம் செய்து ஔபாஸனம் என்கிற அக்னி கார்யம் துவங்கணும். இதை நித்திய கர்மாக்கள்ள ஏற்கெனவே பாத்து இருக்கோம்.

இப்படி 3 நாள் போகணும். இந்த நாட்கள்லே தரையில்தான் படுக்கை; பிரம்மசர்யம்; உப்பு புளி இல்லாத ஆகாரம். இருவர் படுக்கைக்கும் நடுவே சந்தனம் பூசிய தண்டத்தை துணியோ நூலோ சுத்தி வைக்கணும். இதில கந்தர்வ ராஜனான விச்வாவசு ஆவாஹணம் செய்து இருப்பர். இதை பத்திரமா வைத்து பூசிக்கணும்.

நாலாம் நாள் விடியற்காலையில் இந்த கந்தர்வ ராஜனை எழுப்பி மந்திரம் சொல்லி அனுப்பிவிட்டு தண்டத்தை அலம்பி வேற இடத்திலே வைக்கணும். பிறகு அக்னியில் ஹோமம். இதுதான் சேஷ ஹோமம். முடிந்த பிறகு மந்திரங்கள் சொல்லி வதுவும் வரனும் ஒத்தரை ஒத்தர் பார்பாங்க. பிறகு வதுவை மடியில் உட்கார்த்தி வைத்துக்கொண்டு மந்திரம் சொல்லி ஹோமம் செய்து மீதியா இருக்கிற நெய்யால வதுவோட மார்பில் வரன் தடவி விடுவார். பின் கட்டை விரலாலே தன் மார்பிலேயும் தடவிப்பார். மோதிர விரலாலே வதுவின் மார்லேயும் திருப்பி தடவுவார்.

பிறகு நாந்தீ சிராத்தம், புண்யாஹம். நாந்தீ சிராத்தத்தை பாணிக்ரஹணத்துக்கு முன்னே அப்பாவும், பின்னே வரனும் செய்யணும்.

இது முடிந்து பலதானம். லக்ஷ்மீ நாராயணனையும் உமாமஹேசனையும் நினைத்துக்கொண்டு அந்தணர்களை வரித்து வெற்றிலை பாக்கோட பழங்கள் தானம் செய்வர்.
பின் தாம்பூலம் தரித்து (இப்பதான் ரைட்ஸ் கிடைக்குது) ஆசீர்வாதங்கள் நடந்து ,

கௌரீ கல்யாணம் பூர்த்தி!

இதற்குப்பின் செய்கிற அத்தனை கர்மாக்களையும் இருவரும் சேர்ந்துதான் செய்ய வேண்டும். பதி பத்தினீக்கள் இடையே பிரிவுகள் இல்லை.

ஒரு தடவை இந்த காலத்திலே செய்ய வேண்டிய விவாஹத்தில் வரிசையை பட்டியலா பாத்துடலாமா?

1. (பொண்ணு பாக்கச்சொல்லி) வரன் செய்கிற வேண்டுதல் - வர ப்ரேக்ஷணை
2. நிச்சயதார்த்தம் - வாங் நிச்சயம்
3. காசி யாத்திரை- விரத பூர்த்தி (ஆமாம், முன்னேயே செய்து இருக்க வேண்டியது இப்போவாவது செய்யணும். அதனால பட்டியல்லே வந்தாச்சு)
4. வர பூஜை; கன்யாதானம்.
5. அக்னி பிரதிஷ்ட்டை
6. மது பர்க்கதானம்
7. தேவதா பிரார்த்தனை
8. திருமண சங்கல்பம்
9. கன்யா சம்ஸ்காரம்
10. கூரை புடவை அணிதல்; அலங்காரம்
11. தாலி கட்டுதல்- மாங்கல்ய தாரணம்
12. அக்னி வளர்த்தல்
13. கைத்தலம் பற்றுதல் -பாணி க்ரஹணம்
14. சப்த பதீ
15. அக்னி வலம் வருதல்
16. கல் மேலே ஏறுதல்; பொரி ஹோமம் (ஶ்மாரோஹணம், லாஜ ஹோமம்)
17. ஜய என்கிற இந்திரன் முதலான தேவர்களுக்கு ஹோமம் செய்து பூர்த்தி செய்தல் (ஜயாதி ஹோமம்)
18. பிரவேச ஹோமம்; துருவ அருந்ததீ நக்ஷத்திரங்களை காணல்
19. ஆக்னேய ஸ்தாலீபாகம்
20. ஔபாஸனம்
21. சேஷ ஹோமம்
22. நீத்தார் அருள் கோரி நாந்தீ சிராத்தம்
23. பலதானம்
24. தாம்பூலம் தரித்தல்
25. ஆசீர்வாதம்.

இதுதான் சாத்திரப்படி கிரமம். இதிலே பல விஷயங்கள் விட்டு போச்சு - ஊஞ்சல் எங்கே, நலங்கு எங்கேன்னு பலதை நினைச்சீங்கன்னா அதெல்லாம் லௌகீகமா பின்னாலே வந்தவை. அப்ப அதெல்லாம் பண்ணனுமா வேண்டாமான்னா..

சூத்திரக்காரர் ஒரே போடா போட்டு தங்கமணிகள் கிட்டேந்து தப்பிச்சுகிட்டார். “பெண்கள் கூறியதையும் செய்க" ன்னு ஒரு வாக்கியத்தை போட்டுட்டார். அப்ப செய்யத்தானே வேணும்?


Friday, August 8, 2008

விவாஹம் - 2



இதோ பொண்ணு திரும்ப வந்தாச்சு. அந்த புதுப்புடவை கட்டிக்க மந்திரம் உண்டு. அதை சொல்லி வெச்சுதான் உள்ளே அனுப்பினாங்க.

அடுத்து மாங்கல்ய தாரணம். முன் காலத்துல எல்லா சினிமாலேயும் இடம் பெற்ற "மாங்கல்யம் தந்துனானேன" என்ற இது வேத மந்திரம் இல்லை. ஸ்லோகம்தான். அதே போல மாங்கல்ய தாரணம் முக்கிய கர்மா இல்லே. அதுவும் எப்படியோ முக்கியத்துவம் வாங்கிடுத்து.

அப்புறம் பெண் இடுப்பிலே மந்திரம் சொல்லி தர்ப்பையால் ஆன கயிற்றை மூன்று முறை சுத்திவிடறாங்க. வரன் பெண்ணோட கையை பிடிச்சு அக்னிகிட்டே அழைச்சு வரார். புதுப்பாயில் வடக்கிலே வரனும் அவனுக்கு வலது புறமா பெண்ணும் உட்காரனும். அக்னி காரியம் ஆரம்பித்துவிட்டு ஹோமம் செய்ய போற பொரியை சுத்தி செய்து, பெண்ணை மந்திரிக்கிறார்கள். இங்கேதான் நாத்திகர் பலராலும் பலவிதமா விமர்சனம் செய்ய படுகிற ஸோம பிரதம: என்ற மந்திரம். (அதைப்பத்தி எழுத இது சரியான இடமில்லை. தேவையானால் வேறு இடம்/ நேரத்துல எழுதலாம்.)

வரன் கவிழ்த்த தன் வலது கையால் நிமிர்ந்துள்ள கன்னிகையின் வலது கரத்தை முழுதும் கட்டை விரலையும் சேர்த்து பிடிக்க வேண்டும். இதுக்கு 4 மந்திரங்கள். இப்படி கையை பிடிச்ச பிறகு அக்னிக்கு வடக்கிலே வரன் கன்னிகையின் வலது காலை தன் இடது கையால் தொட்டு கிழக்கே பார்த்தோ இல்லை வடக்கே பார்த்தோ 7 அடிகள் எடுத்து வைக்க வேண்டும். ஒவ்வொரு அடிக்கும் ஒரு மந்திரம். 7 அடிகள் ஒருத்தருடன் நடந்தால் அவர் நண்பன் ஆகிவிடுகிறார் என்பது சாஸ்திரம். (சாவித்திரி கதை தெரியும் இல்லையா?) இத்தனையும் செய்யும் போது வலது கையை விடவே கூடாது. இந்த சப்தபதீதான் திருமணத்தோட முக்கிய கர்மா. சட்டப்படிகூட.

அடுத்து அக்னியை வலம் வந்து அமர்ந்து ஹோமம் செய்ய வேண்டும். அதை முடித்துக்கொண்டு அக்னிக்கு வடக்கே வைத்து இருக்கிற அம்மி மேலே வரன் கன்னிகையோட வலது கையை பிடிச்சுக்கொண்டு; இடது கையால் பெண்ணோட வலது பாதத்தை, கால் கட்டை விரலை பிடித்து ஏற்றி வைக்கணும். அப்புறம் அக்னி முன் உட்கார்ந்து பெண்ணோட இரண்டு கரங்களையும் அஞ்சலியா பிடிச்சு வலது கையில கொஞ்சம் நெய் தடவி அதன் மேலே பொரி 2 முறை வைத்து மேலே கொஞ்சம் நெய் ஊற்றி அக்னியில் அவள் கையால் ஹோமத்தை வரன் செய்விக்க வேண்டும். இது சில விதங்கள்லே மாறானது. முதல்ல ஔபாஸனம் தவிர வேறு ஹோமங்கள் பெண்கள் நேரடியாக செய்வதில்லை. அதே போல கையாலும் செய்வதில்லை. பெண்ணோட தம்பிதான் பொரி எடுத்து போடணும் என்பதெல்லாம் பிற்சேற்கை. சாத்திரம் சொன்னதில்லை. அப்புறம் மந்திரம் சொல்லி அக்னியை மூணு முறை வலம் வந்து திருப்பி அம்மி மிதித்தல். இதே போல 3 முறை.

அடுத்து ஹோமத்தை பூர்த்தி செய்து தக்ஷிணை எல்லாம் கொடுத்து, ஆசீர்வாதம் எல்லாம் முடிஞ்சா கல்யாணம் முடிந்தது. எல்லாரும் சாப்பிட போகலாம் (மொய் எழுதிட்டு!).

Thursday, August 7, 2008

விவாஹம்



விவாஹம் என்கிற கர்மா அடுத்தது.
இது வர ப்ரேக்ஷணை என்பதுடன் ஆரம்பிக்கிறது. அதாவது வேத பாடம் முடித்து வீடு திரும்பிய மாணவர் இரட்டைப்படை அந்தணர்களை தக்ஷிணை தாம்பூலம் எல்லாம் கொடுத்து மகிழ வைத்து "எனக்கு தகுந்த கன்னிகையை பெண் பார்த்து வாங்க" ன்னு வேண்டிக்கிறார். அவங்களும் சரின்னு போய் பெண்ணை தேடி கண்டு பிடித்து சம்பந்தம் பேசி "இன்ன இன்ன குலத்தில் வந்த இன்ன வரனுக்கு உங்க இன்ன இன்ன பெண்ணை".. "தர்ம பிரஜையின் பொருட்டு" கொடுக்கும்படி கோருவார்கள்.

கன்னிகையின் அப்பா "சோபனம்" ன்னு சொல்லி சம்மதிப்பார். அந்தணர்கள் திரும்பி வந்து தாங்கள் போன காரியம் நல்லபடி முடிந்ததை தெரிவிப்பாங்க. பிறகு கல்யாண ஏற்பாடுகள் நடந்து கன்யாதானம் நடக்கும்.

கன்யாதானம்

விக்னேஸ்வர பூஜை முடித்து பெண்ணின் தந்தை மஹாவிஷ்ணுவை திருப்தி படுத்த கன்யாதானம் செய்வதாக சங்கல்பம் செய்கிறார்.

விஷ்ணுவுக்கு பூஜை நடக்கிறது. விஷ்ணு எங்கே வந்தார்? மாப்பிள்ளைதான் விஷ்ணு. அப்படி பாவித்துதான் கன்யாதானம். அவருக்கு, ஆசனம் கொடுத்து, நல்வரவு சொல்லி, கையில் ஜலம் கொடுத்து, அவரோட பாதங்களை அலம்பி "இன்ன இன்ன குலத்தில் பிறந்த இந்த பெண்ணை இன்ன இன்ன குலத்தில் பிறந்து விஷ்ணு சொரூபமாக விளங்கும் 
உங்களுக்கு கன்னிகாதானம் செய்து கொடுக்கிறேன்"ன்னு 3 தரம் சொல்லுவார்.

கிழக்கே பாத்து பெண்ணோட அப்பா நிற்க வரன் மேற்கு நோக்கி நிற்க பெண்ணோட தாய் வடக்க பார்த்து நிப்பாங்க. பெண்ணை தகப்பனார் தாரை வார்த்து கொடுக்கிறார். வரனும் வாங்கிக்கிறார்.

பிறகு வரனும் பெண்ணும் புதுப்பாயில் உட்கார்ந்து அக்னி வளர்க்கிறார்கள்.

கன்னிகையின் அப்பா மதுபர்க்கதானம் செய்கிறேன் ன்னு சங்கல்பம் செய்கிறார். பாத பூஜை செய்து கையில் நீர் வார்த்து அதை அவர் கீழே விட்ட பின் மதுபர்க்கம் தானம் செய்கிறார். மதுபர்க்கம் ன்னா என்ன?

தயிரில் தேன் கலந்து ஒரு பழைய பித்தளை தட்டால மூடி எடுத்து வருவாங்க. அதுதான் மதுபர்க்கம். சிலர் நெய்யும் சேர்பதுண்டு. இன்னும் சிலர் பொரியும் சத்துமாவும் கூட கலப்பாங்க. மாப்பிள்ளை இன்னும் கொஞ்சம் தெம்பா கர்மா செய்யட்டுமே என்கிற நல்ல எண்ணமா இருக்கலாம்!

மாப்பிள்ளை அதை வாங்கி மந்திரம் சொல்லி சாப்பிடறார். 3 முறை. (இதுக்குத்தான் இடுப்பில கர்சீப் வெச்சுக்கன்னு சொல்லிகிட்டே இருப்பாங்க. மாப்பிள்ளைகள் எங்கே கேக்கிராங்க! அந்த நேரத்தில தேடரதுதான் வழக்கம்.) அப்படியே கொஞ்சம் தண்ணியும் கைல வாங்கி குடித்த பின் வரனுக்கு ஒரு பசு மாட்டை கொடுக்கிறாங்க. அதை அவர் ரொம்ப பெருந்தன்மையோட ப்ரீயா விட்டுடறார்.

வரனுக்கு இப்ப சாப்பாடு போடறாங்க. (இல்லை சமயத்துல அல்வா கொடுத்தாலும் கொடுத்துடுவாங்க. எல்லாம் நேரம்!)

அப்புறம் மேற்கொண்டு கர்மா. இப்பதான் வரன் முதல் முதலா பொண்ண பாக்கறார். தானே பாத்து மந்திரங்கள் சொல்கிறார்.
ரெண்டு பேரும் உக்காந்து விவாஹ சங்கல்பம் செய்யறாங்க.

கன்னிகைக்கு சில சுத்தி சம்ஸ்காரங்கள் நடக்குது. மாப்பிள்ளை மந்திரம் சொல்லி தர்ப்பை புல்லால புருவ மத்தியை தடவி மேற்கே போடுவார். இந்த நேரத்துல கன்னிகை "அப்பா அம்மாவை பிரியறோமே" ன்னு நினைச்சு கண்ணீர் விட்டா கூட பிராயச்சித்தத்துக்கு மந்திரம் உண்டு! அந்தணர்கள் கன்னிகைக்கு மந்திர "குளியல்" செய்து வைப்பர். தர்ப்பை புல்லால ஒரு பிரிமணை மாதிரி செய்து தலையில் வெச்சு மந்திரம் சொல்லி ஒரு சின்ன நுகத்தடியின் வலது ஓட்டைய பிரிமணை மேலே வைப்பாங்க. இன்னும் ஒரு மந்திரம் சொல்லி கொஞ்சம் தங்கமும் அந்த ஒட்டைல வைப்பாங்க. (சாதாரணமா தாலியையே வைக்கிறாங்க. அப்படிதான் செய்யணும்னு ஒண்ணும் இல்லை. மேலும் இப்ப சொல்கிறது எல்லாம் க்ருஷ்ண யஜுர் வேத ஆபஸ்தம்ப சூத்திரப்படி. சூத்திரங்களை பொருத்து நடைமுறை மாறும்.)

ஐந்து மந்திரங்கள் சொல்லி துளித்துளியா நுகத்தடி ஓட்டை வழியா மந்திர நீர் விடறாங்க. பிறகு புதுசா புடவை கொடுத்து உள்ளே போய் ஈரத்தை துடைச்சு கொண்டு புது புடவை அணிந்து வர அனுப்பறாங்க.

எல்லாரும் பொண்ணு திரும்பி வர வரை பொறுத்துக்கொண்டு இருக்கணும்.

Wednesday, August 6, 2008

ஸமாவர்த்தனம்.



இப்படியாக வேத அத்தியயனம் பூர்த்தி ஆன பின் திருமணத்துக்கு ரெடிதான் ஆனாலும் இப்ப (தியரில) குருகுலத்திலதானே இருக்கிறார்? (ஆமாங்க, வேதம் படித்தவருக்கு மரியாதை கொடுக்கணும் இல்லையா? அதான் "ர்".)
வேத பாடம் பூர்த்தி செய்து ஸமாவர்த்தனம் செய்து கொள்கிறார்.

உடம்பு முழுவதும் சவரம் செய்துகிட்டு குளிச்சு, இடுப்பில இருக்கிற மேகலையை ஒரு பிரம்ஹசாரிகிட்டே கொடுப்பார். அவர் அதை தர்ப்பை புதரிலோ, அத்தி மரத்து கீழேயோ மறைச்சு வெச்சுடுவார். தண்டம், மான் தோல் எல்லாம் விட்டு விட வேண்டியது. வாசனை பொடி போட்டுகிட்டு ஜம்முனு குளியல். இது வரை இடுப்பில ஒரே ஒரு துண்டுதான் ; இப்ப ரெண்டு துணி உடுத்திக்கிறார். பூணூல் ஒரு ஜோடியா போட்டுக்கிறார். சந்தனம் பூசிகிட்டு, பூ வைச்சுகிட்டு, (ஆமாம், பூவேதான்) கண்ணுக்கு மையிட்டு கண்ணாடில முகம் பார்க்கணும்.

சுத்தமான இடத்திலேந்து அக்னி கொண்டு வந்து பிரஜாபதிக்கு சின்ன ஹோமம்.

ஆசார்யன் மங்கல சிராத்தமான புண்யாஹம் செய்துவித்து ஆசீர்வாதம் செய்து "போய் வாப்பா" ன்னு விடை கொடுத்துடுவார். மாணவர் பாதரக்ஷை (செருப்பு) போட்டுகிட்டு, குடை, தடி எல்லாம் எடுத்துக்கிட்டு கிழக்கு நோக்கியோ வடக்கு நோக்கியோ போய், அப்புறமா வீட்டுக்கு போவார்.

இதான் ஸமாவர்த்தனம்.

இது இப்ப நடக்கிற விதத்தை கேட்டா அட, இதுதானான்னு ஆச்சரியப்படுவீங்க.

இப்பதான் வேதம் படிக்கவே போகலையே. அதுக்கு பதிலா திருமணத்துக்கு முந்தின நாள் குறைந்த பட்ச வேத அத்தியயனம் செய்கிறதுன்னு பார்த்து இருக்கோம். அதெல்லாம் என்ன, எப்படி செய்யறாங்களோ, இப்ப திருமணத்து அன்னைக்கு காலை குளிச்சு புதுசா வேட்டி கட்டி, (இப்பதான் பஞ்சகச்சம்ன்னா என்னன்னு புரியும்) பூஜை முடிச்சு, "மாப்பிள்ளை" புது செருப்பு போட்டுகிட்டு, குடை, வாக்கிங் ஸ்டிக், பகவத்கீதை புத்தகம் எல்லாம் எடுத்துண்டு கிளம்பிடுவார். ம்ம்ம்ம்...... அதேதான் -காசி யாத்திரை. போகிற ஆசாமியோட நண்பர்கள் " இதாண்டா கடேசி சான்ஸ். தப்பிக்கனும்னா இப்பவே எங்களோட வந்துடு. தெரு முனைல கார் இருக்கு" ன்னு கலாட்டா பண்ணுவாங்க. நல்ல புத்திமதி சொன்னா இந்த காலத்துல யார் ஏத்துக்கிறாங்க? "மாப்பிள்ளை" இதை கேக்காம அசட்டு சிரிப்பு சிரிச்சுகிட்டே மாட்டிப்பார்! “மாமனார்" வழி மறிச்சு "பாத்தா நல்ல பிள்ளையா இருக்கேயே. என் பொண்ண கல்யாணம் பண்ணி தரேன். சமத்தா குடித்தனம் நடத்து" ன்னு சொல்லுவார். விதி யாரை விட்டது? மாப்பிள்ளையும் சரின்னு திரும்பிடுவார்.

இதான் இப்ப நடக்கிற ஸமாவர்த்தனம்.


Tuesday, August 5, 2008

வேத விரதம்



நாற்பது சம்ஸ்காரங்கள்ல அடுத்தது வேத விரதம். எங்கேயோ கேள்வி பட்டா மாதிரி இருக்கு இல்ல? சாதாரணமா வேத படிப்புக்கு போகாதவங்க திருமணத்துக்கு முன்னால இதை செய்து கொள்ளறாங்க. ஆங்... விரதம்ன்னு சொல்வாங்களே..அதேதான். ஏன், எதுக்கு செய்கிறோம்னே தெரியாம போய்கிட்டு இருக்கிற கர்மாக்கள்ல இதுவும் ஒண்ணு. போகட்டும்.

உபநயனமான மாணவன் தினசரி சந்தியா உபாசனை, காயத்ரீ ஜபம், ஸமிதாதானம் என்கிற அக்னி கார்யம் செய்து வரணும். முதல் வருட உபாகர்மா என்கிற "ஆவணி அவிட்டம்" போன பிறகு வேதவிரதம் செய்து வேத அத்தியயனம் ஆரம்பிக்க வேண்டும்.

தேர்ந்தெடுத்த நாள்ல மாணவன் ஸமிதாதானம் முடித்து பெரியவங்க அனுமதி வாங்கிகிட்டு செய்யணும்.

இந்த வேத விரதங்கள் நான்கு. ப்ராஜாபத்யம், ஸௌம்யம், ஆக்னேயம், வைச்வதேவம். அதாவது வேதத்தில் 4 பாகங்கள். ஒவ்வொன்றும் ஒரு தேவதையை ஒட்டி; ப்ரஜாபதி, சோமன், அக்னி, விச்வேதேவர்கள்.

இவற்றை ஒவ்வொண்ணா ஆரம்பிச்சு முடிக்கிறதும் உண்டு; ஆனால் வழக்கில் இல்லை. எல்லாத்தையும் சேர்த்து செய்வதுவும் உண்டு.

சங்கல்பம் செய்து, பிள்ளையாரை பூசித்து, செய்திருக்கக்கூடிய பாபங்களை தொலைக்க ஹிரண்ய தானம் (தக்ஷிணை) கொடுத்து; ஷவரம் செய்து கொண்டு குளித்து காண்டரிஷி தர்ப்பணம். (பிரம்ம யக்ஞம் முடித்து செய்கிறோமே அதேதான்).
மாணவன் இன்னும் வேதம் கற்கவில்லை, இல்லையா. அதனால ஹோமம் செய்ய இன்னும் அருகதை ஏற்படலை. அதனால் ஆசார்யன்தான் ஹோமம் செய்யப்போகிறார். மாணவன் அவரை தொட்டுக்கொண்டு இருப்பான். வேத மந்திரங்களை கண்டு கொடுத்த ரிஷிகளை குறித்து முதலில் தர்ப்பணம் ஆயிற்று. இப்போது ஹோமம் அவர்களை குறித்தே.

ஆரம்பித்த ஹோமத்தை ஆசாரியனே முடித்து வைப்பார். மாணவன் மந்திரங்கள் சொல்லி பின் துணியால் போர்த்துக்கொண்டு இருந்து சூரிய அஸ்தமனம் போதுதான் வீட்டில் பிரவேசிக்கணும். கண்ணை மூடிக்கொண்டு சிறிது நேரம் இருக்க வேண்டும்.
அன்று இரவு உறங்கி காலை எழுந்து வீட்டுக்கு வெளியே அக்னி, சூர்யன், பூர்ணகும்பம், ஆகாசம். மலை, கன்றுக்குட்டி எல்லாத்தையும் பார்த்து மந்திரங்கள் ஜபிக்க வேண்டும். பிறகு வேத பாடங்கள் தொடர்ந்து நடந்து முடிந்தபின் உத்சர்ஜனம் என்கிற கர்மா. இது முந்தைய கர்மா போலவே ஆனாலும் மந்திரங்கள் மாறும்.
( ஒரு ரிஷிகள் குழுவுக்கு ஹோமம் செய்து அவர்கள் கண்டு கொடுத்த மந்திரங்களை பயிற்சி செய்து, உத்சர்ஜனம் செய்து பின் அடுத்த ரிஷிகள் குழு குறித்து ஹோமம். இப்படியே நான்கும்.)

அதாவது காப்பி ரைட்ஸ் அக்னாலெட்ஜ் செய்கிறது போல அந்த அந்த வேத பாகத்தை பாடம் கேட்குமுன் அந்த மந்திரங்களை பிரபஞ்சத்திலேந்து கிரகித்து நமக்கு கொடுத்த ரிஷிகளுக்கு தர்ப்பணம், ஹோமம் செய்து திருப்தி செய்து பிறகு வேதம் கற்க வேண்டும். அந்த பாட பகுதி முடிந்த பின்னே அவருக்கு ஒரு நன்றி சொல்வது போல மீண்டும் தர்ப்பணம், ஹோமம்; அப்புறம் அடுத்த ரிஷிக்கு இதேபோல. இப்படியாக 4 பாகங்களையும் முடிக்க வேண்டும். இப்போதெல்லாம் வேத பாட சாலைகளில் கூட இந்த கிரமத்தில் பாடங்கள் நடக்கலை.
--
இப்போது நடப்பது: திருமணத்துக்கு முன்னே நமக்கு என்ன நடக்கிறது என்றே தெரியாமல் வாத்தியார் எதோ செய்து வைக்க; வேத பாடம் சொல்ல வேண்டிய இடம் வரும் போது சொல்லி வைக்காமல்; "அப்பா! நாங்க வேதம் சொல்கிறோம். நீ கேட்டுக்கொண்டு இரு. அல்லது காயத்ரீ ஜபம் பண்ணிக்கொண்டு இரு"ன்னு சொல்லிட்டு அவங்க ஜபம் செய்ய அப்போதான் வருகிற ஒவ்வொரு உறவினரும் "அலோ" சொல்லி திருமணம் செய்து கொள்ள போகிறவரோட கை குலுக்கி சிரித்து பேச; இதெல்லாம் பாத்து நொந்துபோய் வாத்தியார்கள் வேத ஜபத்தை முடித்துக்கொள்ள, "ஒண்ணரை மணியாவது ஆகணுமே! எப்படி அதுக்குள்ள" ன்னு சிலர் முறைக்க; பெரும்பாலானவர்கள் அப்பாடா முடிஞ்சதுன்னு சந்தோஷப்பட ...போதும், வேணாம். சூரி சாருக்கு பிபி எகிறிடும். :-(

சிரத்தை இருப்பவர் வேத அத்தியயனம் செய்தவரானால், குறைந்தது வேத அத்தியயனம் பூர்த்தி ஆனபின் இந்த நான்கையும் செய்ய வேண்டும். இதைப்பத்தி முக்காலே மூணு வீசம் பேருக்கு தெரியலை என்பதால்தான் இப்படி விவரம் எழுதுகிறேன்.

வேத அத்தியயனம் செய்யாதவர் இப்போதாவது முன்திட்டமிட்டு ஒரு முழு நாளை ஒதுக்கி முழு கர்மாவையும் செய்ய வேண்டும்.

அதாவது ஒவ்வொரு காண்ட ரிஷிக்கும் ஹோமம் செய்து அந்த வேத பாகம் (குறைந்த பட்சம் எவ்வளவுன்னு கணக்கு இருக்கு) சொல்லச்சொல்ல திருப்பி சொல்லி, -அதாவது வேத அத்தியயனம் செய்கிறோம்- பின் பூர்த்தி ஆனதும் அடுத்த ரிஷிக்கு- இப்படி 4 கும் செய்து பிறகு வ்ரத உத்சர்ஜனம் செய்ய வேண்டும். காலை 6 மணிக்கு ஆரம்பித்தால் மதியம் 3 மணிக்கு முடிக்கலாம். அல்லது நிதானமா 2,3,4 நாட்கள்ள செய்யலாம்.
--
இப்படியாக வேத அத்தியயனம் பூர்த்தி ஆன பின் திருமணத்துக்கு ரெடி!


Monday, August 4, 2008

உபநயனம்-4



நான்காம் நாள் பலாச கர்மா

மாணவன் மூன்று நாட்கள் அரிசியே பிக்ஷை எடுக்க வேன்டும். 4 ஆம் நாள் முதல் அன்ன பிக்ஷை. இதுவரை ஆபஸ்தம்பர் கூறியபடி கர்மாவுடைய வரிசையை பாத்தோம். இனி சொல்கிறது மற்றவர் எழுதியபடி.

கர்மா எது, எப்போ, எப்படி செய்யணும்னு கொஞ்சம்தான் வேதத்திலோ சாஸ்திரத்திலோ இருக்கும். முழு விவரங்கள் பாக்க கிருஹ்ய ஸூத்திரங்களைதான் பாக்கணும். அவரவர் ஸூத்திரப்படி கர்மாக்களை செய்யணும்.
அப்படி பார்க்கும்போது பலாச கர்மா சிலருக்கு இருக்கும்; சிலருக்கு இருக்காது.

4 ஆம் நாள் ஆசார்யனுடன் கிழக்கு அல்லது வடக்கு திசை சென்று ஒரு புரச மரத்தின் அடியில் 3 மண் திட்டுகள் செய்ய வேண்டும். முறையே பிரணவம், ஷ்ரத்தா தேவி, மேதா தேவி ஆகிய தேவதைகளை ஆவாஹனம் செய்து மந்திரங்களால் போற்றி முன் எடுத்துக்கிட்ட பலாச தண்டத்தை அங்கேயே விட்டுவிட்டு வேறு தண்டம் எடுத்துக் கொண்டு ஆசாரியனுடன் திரும்பணும்.

உபதேசம் செய்யப்போறவர் விசேஷமாக அதிக ஜபம் செய்து உபதேசம் செய்தால் நல்ல பலன் இருக்கும். அதுக்கு தனியா சங்கல்பமே இருக்கு.
இல்லாட்டா இருட்டுலேந்து இருட்டுக்கு போகிற மாதிரி ஆகிடும். அதனால் உபதேசம் செய்ய நல்ல குலத்திலே பிறந்து நல்ல அனுஷ்டானம் உள்ளவரை பார்த்து தேர்ந்து எடுக்கணும்.
சுமங்கலி பிரார்த்தனை முன் கூட்டியே தவறாமல் செய்யணும். சமாராதனையும் அவரவர் குல வழக்கப்படி செய்யணும். (சாதாரணமா அந்தணர்களுக்கு உணவளிக்கிறதுதான் சமாராதனை.)

அங்குரார்ப்பணம் என்பது புண்யாஹம் செய்து 5 பாலிகை கிண்ணங்களில் நெல், உளுந்து, எள்ளு, பச்சை பயறு, கடுகு ஆகியவற்றை மந்திர பூர்வமாக இட்டு பூஜை செய்தல். ஓஷதி ஸூக்தமும் சொல்லுவர். 5-7 சுமங்கலிகளும் ஜலம் தெளிப்பர். பின் தினசரி காலையும் மாலையும் ஜலம் தெளித்து பூஜை செய்து 5 ஆம் நாள் தேவதைகளை அனுப்பி வைத்து, நதியிலோ குளத்திலோ கரைத்துவிடுவர்.
பிரதிசர பந்தம் என்பது ரக்ஷை கட்டிக்கொள்ளல்.



Friday, August 1, 2008

உபநயனம் -3


முஞ்சம் புல் என்கிற புல்லை முப்புரியாக முறுக்கி அதை இடுப்பில் 3 முறை சுற்றி நாபிக்கு நேராக முடியிட வேண்டும். அதர்வண வேதத்தில் இதற்கு மூத்திர கோளாறுகளை தடுக்கும் சக்தி இருப்பதாக சொல்லப்பட்டு இருக்கிறது.

மான் தோல்: இதை முழுதாக தோளில் போட்டுக்கொள்ள வேண்டும். இந்த காலத்தில் எங்கே! மான்களும் அரிதாகி விட்டன. பயன்படுத்தினால் சட்டமும் பாயும்! போட்டுக்கொள்ளலாமே தவிர அதில் படுக்கவோ, உட்காரவோ கூடாது. ஆயுர்வேதத்தில் இதற்கு க்ஷய ரோகத்தை நீக்கும் குணம் சொல்லப்படுகிறது.

தண்டம்: தன் நெற்றி உயரம் அளவுள்ள பலாச (முறுக்கன், புரசு- பூவரசு அல்ல) தண்டத்தை கையில் வைத்துக்கொள்ள வேண்டும். தேவர்கள் காயத்ரீயின் பொருளை விசாரம் செய்த போது இந்த மரம் அதை கவனமாக கேட்டுக்கொண்டு இருந்ததாம். அதனால் காயத்ரீயின் 3 பாதங்களையும் அறிந்து கொண்டு மும்மூன்று இலைகள் உள்ள காம்புகளாக தளிர் விட்டதாம். இதன் தண்டத்தை கைக்கொண்டவன் பொய் வார்த்தைகளை கேட்க மாட்டான்; ஞாபக சக்தி பெருகும் என சொல்லப்படுகிறது.

பின் ஆசாரியன் அனுமதி பெற்று பிக்ஷை எடுக்க வேண்டும். முதல் பிக்ஷை அன்னையிடமும் பின் பிக்ஷை மறுக்காத தன் பெரிய தாயார் அக்கா இவர்களிடமும் பெறலாம். இது தவிர அப்பா முதலானவர்களிடமும் வாங்கலாம். மூன்றோ தேவையானால் அதிகமான பேர்களிடம் பிக்ஷை பெறலாம். முடிந்த பிறகு ஆசாரியனிடம் அதை கொண்டு காட்டி அவர் அனுமதித்தபின் சாப்பிடலாம்.

உபநயன தினத்திலிருந்து 3 நாட்கள் உப்பு, உரப்பு இவற்றை விலக்க வேண்டும். 3 நாட்கள் அரிசியாகவும் பின் அன்னமாகவும் பிக்ஷை பெற வேண்டும். சந்தியா உபாசனையை தொடர்ந்து செய்ய வேண்டும்.

சுருக்கமாக கர்மா வழிமுறை பின்வருமாறு:

பூர்வ அங்கமாக உதகசாந்தி என்கிற வேத மந்திரங்களின் தொகுப்பை பாராயணம் செய்தல்; மந்திர ஜபம்; அங்குரார்ப்பணம்; ப்ரதிசரபந்தம்; அப்ப்யுதயம்; புண்யாஹம் என்கிற சுத்தி கர்மா.

விக்னேஸ்வரபூஜை;  புண்யாஹம்: முப்புரி நூல் தரித்தல்; (இதுவல்ல முக்கிய கர்மா); உப்பு காரம் இல்லாத நெய்யும் பாலும் சேர்த்த அன்னத்தால் குமார போஜனம் - பையனுடன் சில பிரம்மசாரிகளுக்கு உணவிடல்; சௌளத்தில் சொன்னபடி மீண்டும் திக் வபனம் (முடி திருத்தம்); குளியல்; கோமணம் கட்டுதல். பக்கத்தில் பையனை இருத்திக்கொண்டு ஆசாரியன் லௌகீக அக்னியை இட்டு ஹோமம். முன் சொல்லிய பலாச தண்டம் முதலானதை அளித்தல்; முன் சொன்னது போல அம்மியில் நிற்கவைத்து ஆசீர்வாதம்; ஆசார்யனுக்கும் மாணவனுக்கும் இடையில் ஒரு உரையாடல்; பின் மாணவன் கையை பிடித்துக்கொண்டு ஆசார்யன் ஹோமம் செய்வித்தல்; மீதி ஹோமத்தை ஆசார்யன் முடித்தல்;

ப்ரம்ஹோபதேசம் - இதுதான் இந்த கர்மாவில் முக்கிய பாகம்.
கூடியிருக்கும் பெரியோரிடம் அனுமதி வாங்கிக்கொண்டு நவக்ரஹங்களுக்கு திருப்தி செய்து ஆசார்யனின் பாதங்களை கழுவி பூசித்து "ஸாவித்ரீயை உபதேசம் செய்யுங்கள்" என வேண்டுதல். அவரும் உபதேசிப்பார். பட்டால் தங்களை மூடிக்கொண்டு அது நடக்கும். முடிந்து பலாச தண்டம் எடுத்துக்கொள்ளுதல்; மாணவனே குருவுக்கு தக்ஷிணை தருதல்; குரு மேற்கொண்டு பல மந்திர உபதேசங்கள், சூரிய வழி பாடு துவக்கம். பிறகு ப்ரம்மசர்யம் எப்படி  அனுஷ்டிக்க வேண்டும் என சில கட்டளைகள் இடுகிறார்.

நீ ப்ரம்மசர்யத்தை அனுஷ்டிப்பவனாக இருக்கிறாய்
அப்படியே செய்கிறேன்.
என்னால் அனுமதிக்கப்பட்டவனாக நீர் அருந்து
அப்படியே செய்கிறேன்.
கர்மாவை செய் (சமித்துக்கள் சேகரித்து கொண்டு வருவது, சமிதாதானம் செய்தல் போன்றவை)
அப்படியே செய்கிறேன்.
பகலில் தூங்காதே
அப்படியே இருக்கிறேன்.
தினந்தோறும் உணவுக்காக பிக்ஷை எடு
அப்படியே செய்கிறேன்.
எனக்கு கட்டு பட்டவனாக, என் உத்திரவு இல்லாமல் பிறருக்கு ஹோமம் செய்வித்தல், வேதம் சொல்லிக்கொடுத்தல் ஆகியவற்றை செய்யாதிரு.
இதற்குப்பின் பிக்ஷை எடுத்தல்.
நான்கு நாட்கள் அதே துணியை உடுத்தி இருக்க வேண்டும். 4 வது நாள் ஆசாரியன் வேறு துணியை கொடுத்து அதை வாங்கிக்கொள்வார்.

நான்காம் நாள் பலாச கர்மா ....