Pages

Friday, August 22, 2008

அந்திம கர்மா-2


பிராணன் போகும் போது மூத்த மகன் அருகில் இருந்தா வலது காதில மந்திரம் சொல்ல வேண்டும். இந்த மந்திரம் உடம்பில இருக்கிற ஐந்து பிராணன்களையும் ஒன்றில் ஒன்றாக ஐக்கியம் செய்யும். அப்புறம் பஞ்சாக்ஷரீ, அஷ்டாக்ஷரீ மந்திரங்களை ஜபம் செய்யலாம். இறை நாம ஜபங்கள், கீர்த்தனைகள் செய்யலாம். இறக்கிறவர் எதை நினைத்து கொண்டு இறக்கிறாரோ அதுவாகவே மீண்டும் பிறப்பதாக ஐதீகம். அதனால இறை நினைவை அவருக்கு கொடுக்கணும். யாருக்கு இறக்கிற தருவாய்ல இறை நினைவோ ஓங்கார த்யானமோ இருக்கோ அவங்களுக்கு அடுத்த பிறவி இருக்காது. பிராணன் போன பின்னே தர்பை புல்லை பரப்பி தெற்கு தலையா படுக்க வைக்கணும். (இதை நினைத்து கொண்டு தெற்கே தலை வைத்து படுக்கக்கூடாது என்று நினைக்கலாகாது) எல்லாரும் தெற்கு நோக்கி வணங்கணும்.

யார் இறுதி சடங்கை செய்யணும்ன்னு வரிசை பட்டியலே உண்டு. சாதாரணமா அவருடைய தாயாதிகளே அருகதை உள்ளவங்க. குழப்பம் இருந்தா பெரியவங்களை கேட்டு செய்யணும். ஸ்த்ரீக்கள் விஷயத்தில அவரோட கணவன் வழியாதான் கிரமம்.

எந்த அக்னிலே செய்கிறது?
அவரவர் ஔபாஸன அக்னிலேதான். இறந்தவர் அப்போது ஔபாஸனம் செய்யாமல் இருந்தாலும் அப்போதைக்கு சூத்திரப்படி அக்னி உண்டாக்கிகிட்டு ஔபாஸனம் செய்து ஆரம்பிக்கணும். இறந்தவருக்கான அக்னி காரியம் வரும்போது எல்லாமே சாதாரண அக்னி காரியத்துக்கு நேர் மாறா சிராத்தத்திலே செய்கிற மாதிரி போகும். இந்த வகை காரியம் பித்ரு மேதம் என்பர்.
வேத பாடம் முடித்தவர்களுக்கு பிரம்ம மேதம் என வேறு வழி உண்டு. அனேகமா மந்திரங்கள் தான் வேறே. கர்மா ஒண்ணுதான்.
அக்னிஹோத்திரம் செய்து 3 அக்னிகளை ஆரதிப்பவங்களுக்கு 3 அக்னிகளினாலும் சம்ஸ்காரம்.
ஔபாஸன அக்னி இல்லாதவர்களுக்கும் மத்தவங்களுக்கு சாதாரண (லௌகீக) அக்னியாலே காரியம்.

மேதம் ன்னு சொல்கிறதாலே அச்வமேதம் மாதிரி இதுவும் ஒரு உயர்ந்த கர்மான்னு தெரிஞ்சு கொள்ளலாம். இறந்தவர் உடலே ஹவிஸ். உண்மையிலே அனாதை பிரேதத்தை சம்ஸ்காரம் செய்வது அச்வமேதத்துக்கு ஈடு என்கிறார்கள்.

இந்த இடத்திலே இன்னும் ஒண்ணை பார்க்கணும். கர்மா ஆரம்பிக்கும் முன்னாலே சந்தியா உபாசனை நேரம் வந்தால் அதை முடித்துவிட்டே கர்மாவை துவங்கணும். ஆமாம், பிரேதம் இருக்கும் வீட்டிலேயேதான். இதிலிருந்து அது எவ்வளவு முக்கியம்ன்னு தெரிந்து கொள்ளலாம்.

இறந்த 10 மணி நேரத்தில் கர்மா -தகனம்- செய்யணும். இல்லாட்டா அது பழைய சோறு போல ஆகும். அப்படி இருக்கிறதை நாம் ஹோமம் செய்ய மாட்டோம் இல்லியா? இப்பல்லாம் இது கொஞ்சம் பிரச்சினை ஆகிகொண்டு இருக்கு. பலர் வெளி ஊர் அல்லது வெளி நாட்டிலே இருந்து கொண்டு "இதோ வரேன், அப்படியே ஐஸ்ல வையுங்க" ன்னு சொல்லறாங்க. புதுசா குளிரூட்டும் சவப்பெட்டிகள் எல்லாம் கூட வந்தாச்சு.

இரவு 9 ¾ மணிக்குள்ள தகனம் செய்யலாம். அப்படி முடியாட்டா அடுத்த நாள் காலைதான். நேரம் ஆயிடுத்து வேற வழி இல்லாமன்னா சவத்தை பஞ்சகவ்யத்தால் குளிப்பாட்டி, மந்திர நீரல் தெளித்து பின் தகனம் செய்யணும். இல்லாவிட்டால் காரியம் பயனில்லாது போகும். இந்த விஷயம் இப்ப நடை முறையில் இல்லாம போய் கொண்டு இருக்கு. சிரத்தை உள்ளவங்க இப்பவே சொல்லி வைங்க - தாமதிக்க வேண்டாம்னு.

அதே போல இறந்த 3 1/2 மணி நேரம் தாமதிச்சே தகனம் செய்யணும். அது ஜீவனை யம தூதர்கள் யமலோகம் கொண்டு போய் verification – இந்த ஆள்தானான்னு சரி பார்த்து வருகிற நேரம். அனேகமா சரியாவே இருக்கும். அரிதா சில நேரங்கள்ல தப்பாயிடும். அப்போ அந்த ஜீவனை திருப்பி கொண்டு வந்து உடலிலே வைக்க அந்த யமதூதர்களால முடியும். மயானத்துக்கு போகிற போது திடீன்னு சவம் முழிச்சு கொண்ட கதைகள் கேள்வி பாடு இருப்பிங்களே; காரணம் இதுதான். கேள்விப்பட்ட கதைகள்ள எங்கோ கொண்டு போனதாயும் அங்கே யாரோ கீரை சாதம் கொடுத்ததாயும் திருப்பி வந்து விட்டதாயும் சொல்ல கேள்விப்பட்டு இருக்கேன். இது போலவே near death experience ன்னு ஆங்கிலத்துல சொல்கிற படி சில நோயாளிகள் இதயம் நின்னு போய் "நாங்க" செய்கிற முயற்சில, கிட்டத்தட்ட முடியாதுன்னு விடும் நேரம் திடீர்ன்னு பிழைக்கிறதும் உண்டு! )


Post a Comment