Pages

Monday, August 11, 2008

விவாஹம் பூர்த்திஅடுத்து வரன் வீட்டுக்கு வந்து பிரவேச ஹோமம்.

விவாஹ அக்னில 13 ஹோமங்கள்.

முடியும் போது வதுவுக்கு நீண்ட ஆயுளுடன் கூடிய குழந்தை பிறக்க வேண்டி மந்திரம் சொல்லி ஒரு ஆண் குழந்தையை அவள் மடியில் விடுவர். வரனிடம் மந்திரம் சொல்லி பழங்களை கொடுப்பர்.

நக்ஷத்திரங்கள் உதிக்கும் வரை மௌனமாக இருந்து உதித்த பின் கிழக்கு நோக்கியோ அல்லது வடக்கு நோக்கியோ வெளியே போய் மந்திரம் சொல்லி த்ருவ நக்ஷத்திரத்தையும் அருந்ததியையும் பார்க்க வேண்டும்.

அப்பாடா அம்மி (அம்பி இல்லை) மிதிச்சு அருந்ததி பாத்தாச்சு!

அடுத்து ஆக்னேய ஸ்தாலீபாகம் செய்து ஔபாஸனம் என்கிற அக்னி கார்யம் துவங்கணும். இதை நித்திய கர்மாக்கள்ள ஏற்கெனவே பாத்து இருக்கோம்.

இப்படி 3 நாள் போகணும். இந்த நாட்கள்லே தரையில்தான் படுக்கை; பிரம்மசர்யம்; உப்பு புளி இல்லாத ஆகாரம். இருவர் படுக்கைக்கும் நடுவே சந்தனம் பூசிய தண்டத்தை துணியோ நூலோ சுத்தி வைக்கணும். இதில கந்தர்வ ராஜனான விச்வாவசு ஆவாஹனம் செய்து இருப்பர். இதை பத்திரமா வைத்து பூசிக்கணும்.

நாலாம் நாள் விடியற்காலையில் இந்த கந்தர்வ ராஜனை எழுப்பி மந்திரம் சொல்லி அனுப்பிவிட்டு தண்டத்தை அலம்பி வேற இடத்திலே வைக்கணும். பிறகு அக்னியில் ஹோமம். இதுதான் சேஷ ஹோமம். முடிந்த பிறகு மந்திரங்கள் சொல்லி வதுவும் வரனும் ஒத்தரை ஒத்தர் பார்பாங்க. பிறகு வதுவை மடியில் உட்கார்த்தி வைத்துக்கொண்டு மந்திரம் சொல்லி ஹோமம் செய்து மீதியா இருக்கிற நெய்யால வதுவோட மார்பில் வரன் தடவி விடுவார். பின் கட்டை விரலாலே தன் மார்பிலேயும் தடவிப்பார். மோதிர விரலாலே வதுவின் மார்லேயும் திருப்பி தடவுவார்.

பிறகு நாந்தீ சிராத்தம், புண்யாஹம். நாந்தீ சிராத்தத்தை பாணிக்ரஹனத்துகு முன்னே அப்பாவும், பின்னே வரனும் செய்யணும்.

இது முடிந்து பலதானம். லக்ஷ்மீ நாராயணனையும் உமாமஹேசனையும் நினைத்துக்கோண்டு அந்தணர்களை வரித்து வெற்றிலை பாக்கோட பழங்கள் தானம் செய்வர்.
பின் தாம்பூலம் தரித்து (இப்பதான் ரைட்ஸ் கிடைக்குது) ஆசீர்வாதங்கள் நடந்து ,

கௌரீ கல்யாணம் பூர்த்தி!

இதற்குப்பின் செய்கிற அத்தனை கர்மாக்களையும் இருவரும் சேர்ந்துதான் செய்ய வேண்டும். பதி பத்தினீகள் இடையே பிரிவுகள் இல்லை.

ஒரு தடவை இந்த காலத்திலே செய்ய வேண்டிய விவாஹத்தில் வரிசையை பட்டியலா பாத்துடலாமா?

1. (பொண்ணு பாக்கச்சொல்லி) வரன் செய்கிற வேண்டுதல் - வர ப்ரேக்ஷணை
2. நிச்சயதார்த்தம் - வாங் நிச்சயம்
3. காசி யாத்திரை- விரத பூர்த்தி (ஆமாம், முன்னேயே செய்து இருக்க வேண்டியது இப்போவாவது செய்யணும். அதனால பட்டியல்லே வந்தாச்சு)
4. வர பூஜை; கன்யாதானம்.
5. அக்னி பிரதிஷ்ட்டை
6. மது பர்க்கதானம்
7. தேவதா பிரார்த்தனை
8. திருமண சங்கல்பம்
9. கன்யா சம்ஸ்காரம்
10. கூரை புடவை அணிதல்; அலங்காரம்
11. தாலி கட்டுதல்- மாங்கல்ய தாரணம்
12. அக்னி வளர்த்தல்
13. கைத்தலம் பற்றுதல் -பாணி க்ரஹணம்
14. சப்த பதீ
15. அக்னி வலம் வருதல்
16. கல் மேலே ஏறுதல்; பொரி ஹோமம் (அச்மாரோஹணம், லாஜ ஹோமம்)
17. ஜய என்கிற இந்திரன் முதலான தேவர்களுக்கு ஹோமம் செய்து பூர்த்தி செய்தல் (ஜயாதி ஹோமம்)
18. பிரவேச ஹோமம்; துருவ அருந்ததீ நக்ஷத்திரங்களை காணல்
19. ஆக்னேய ஸ்தாலீபாகம்
20. ஔபாஸனம்
21. சேஷ ஹோமம்
22. நீத்தார் அருள் கோரி நாந்தீ சிராத்தம்
23. பலதானம்
24. தாம்பூலம் தரித்தல்
25. ஆசீர்வாதம்.

இதுதான் சாத்திரப்படி கிரமம். இதிலே பல விஷயங்கள் விட்டு போச்சு - ஊஞ்சல் எங்கே, நலங்கு எங்கேன்னு பலதை நினைச்சீங்கன்னா அதெல்லாம் லௌகீகமா பின்னாலே வந்தவை. அப்ப அதெல்லாம் பண்ணனுமா வேண்டாமான்னா..

சூத்திரக்காரர் ஒரே போடா போட்டு தங்கமணிகள் கிட்டேந்து தப்பிச்சுகிட்டார். “பெண்கள் கூறியதையும் செய்க" ன்னு ஒரு வாக்கியத்தை போட்டுட்டார். அப்ப செய்யத்தானே வேணும்?


Post a Comment