Pages

Friday, August 1, 2008

உபநயனம் -3


முஞ்சம் புல் என்கிற புல்லை முப்புரியாக முறுக்கி அதை இடுப்பில் 3 முறை சுற்றி நாபிக்கு நேராக முடியிட வேண்டும். அதர்வண வேதத்தில் இதற்கு மூத்திர கோளாறுகளை தடுக்கும் சக்தி இருப்பதாக சொல்லப்பட்டு இருக்கிறது.

மான் தோல்: இதை முழுதாக தோளில் போட்டுக்கொள்ள வேண்டும். இந்த காலத்தில் எங்கே! மான்களும் அரிதாகி விட்டன. பயன்படுத்தினால் சட்டமும் பாயும்! போட்டுக்கொள்ளலாமே தவிர அதில் படுக்கவோ, உட்காரவோ கூடாது. ஆயுர்வேதத்தில் இதற்கு க்ஷய ரோகத்தை நீக்கும் குணம் சொல்லப்படுகிறது.

தண்டம்: தன் நெற்றி உயரம் அளவுள்ள பலாச (முறுக்கன், புரசு- பூவரசு அல்ல) தண்டத்தை கையில் வைத்துக்கொள்ள வேண்டும். தேவர்கள் காயத்ரீயின் பொருளை விசாரம் செய்த போது இந்த மரம் அதை கவனமாக கேட்டுக்கொண்டு இருந்ததாம். அதனால் காயத்ரீயின் 3 பாதங்களையும் அறிந்து கொண்டு மும்மூன்று இலைகள் உள்ள காம்புகளாக தளிர் விட்டதாம். இதன் தண்டத்தை கைக்கொண்டவன் பொய் வார்த்தைகளை கேட்க மாட்டான்; ஞாபக சக்தி பெருகும் என சொல்லப்படுகிறது.

பின் ஆசாரியன் அனுமதி பெற்று பிட்சை எடுக்க வேண்டும். முதல் பிட்சை அன்னையிடமும் பின் பிட்சை மறுக்காத தன் பெரிய தாயார் அக்கா இவர்களிடமும் பெறலாம். இது தவிர அப்பா முதலானவர்களிடமும் வாங்கலாம். மூன்றோ தேவையானால் அதிகமான பேர்களிடம் பிட்சை பெறலாம். முடிந்த பிறகு ஆசாரியனிடம் அதை கொண்டு காட்டி அவர் அனுமதித்தபின் சாப்பிடலாம்.

உபநயன தினத்திலிருந்து 3 நாட்கள் உப்பு, உரப்பு இவற்றை விலக்க வேண்டும். 3 நாட்கள் அரிசியாகவும் பின் அன்னமாகவும் பிசை பெற வேண்டும். சந்தியா உபாசனையை தொடர்ந்து செய்ய வேண்டும்.

சுருக்கமாக கர்மா வழிமுறை பின்வருமாறு:

பூர்வ அங்கமாக உதகசாந்தி என்கிற வேத மந்திரங்களின் தொகுப்பை பாராயணம் செய்தல்; மந்திர ஜபம்; அங்குரார்ப்பணம்; ப்ரதிசரபந்தம்; அப்ப்யுதயம்; புண்யாஹம் என்கிற சுத்தி கர்மா.

விக்னேஸ்வரபூஜை;  புண்யாஹம்: முப்புரி நூல் தரித்தல்; (இதுவல்ல முக்கிய கர்மா); உப்பு காரம் இல்லாத நெய்யும் பாலும் சேர்த்த அன்னத்தால் குமார போஜனம் - பையனுடன் சில பிரம்மசாரிகளுக்கு உணவிடல்; சௌளத்தில் சொன்னபடி மீண்டும் திக் வபனம் (முடி திருத்தம்); குளியல்; கோமணம் கட்டுதல். பக்கதில் பையனை இருத்திக்கொண்டு ஆசாரியன் லௌகீக அக்னியை இட்டு ஹோமம். முன் சொல்லிய பலாச தண்டம் முதலானதை அளித்தல்; முன் சொன்னது போல அம்மியில் நிற்கவைத்து ஆசீர்வாதம்; ஆசார்யனுக்கும் மாணவனுக்கும் இடையில் ஒரு உரையாடல்; பின் மாணவன் கையை பிடித்துக்கொண்டு ஆசார்யன் ஹோமம் செய்வித்தல்; மீதி ஹோமத்தை ஆசார்யன் முடித்தல்;

ப்ரம்ஹோபதேசம் - இதுதான் இந்த கர்மாவில் முக்கிய பாகம்.
கூடியிருக்கும் பெரியோரிடம் அனுமதி வாங்கிக்கொண்டு நவக்ரஹங்களுக்கு திருப்தி செய்து ஆசார்யனின் பாதங்களை கழுவி பூசித்து "ஸாவித்ரீயை உபதேசம் செய்யுங்கள்" என வேண்டுதல். அவரும் உபதேசிப்பார். பட்டால் தங்களை மூடிக்கொண்டு அது நடக்கும். முடிந்து பலாச தண்டம் எடுத்துக்கொள்ளுதல்; மாணவனே குருவுக்கு தக்ஷிணை தருதல்; குரு மேற்கொண்டு பல மந்திர உபதேசங்கள், சூரிய வழி பாடு துவக்கம். பிறகு ப்ரம்மசர்யம் எப்படி  அனுஷ்டிக்க வேண்டும் என சில கட்டளைகள் இடுகிறார்.

நீ ப்ரம்மசர்யத்தை அனுஷ்டிப்பவனாக இருக்கிறாய்
அப்படியே செய்கிறேன்.
என்னால் அனுமதிக்கப்பட்டவனாக நீர் அருந்து
அப்படியே செய்கிறேன்.
கர்மாவை செய் (சமித்துக்கள் சேகரித்து கொண்டு வருவது, சமிதாதானம் செய்தல் போன்றவை)
அப்படியே செய்கிறேன்.
பகலில் தூங்காதே
அப்படியே இருக்கிறேன்.
தினந்தோறும் உணவுக்காக பிக்ஷை எடு
அப்படியே செய்கிறேன்.
எனக்கு கட்டு பட்டவனாக, என் உத்திரவு இல்லாமல் பிறருக்கு ஹோமம் செய்வித்தல், வேதம் சொல்லிக்கொடுத்தல் ஆகியவற்றை செய்யாதிரு.
இதற்குப்பின் பிக்ஷை எடுத்தல்.
நான்கு நாட்கள் அதே துணியை உடுத்தி இருக்க வேண்டும். 4 வது நாள் ஆசாரியன் வேறு துணியை கொடுத்து அதை வாங்கிக்கொள்வார்.

நான்காம் நாள் பலாச கர்மா ....


Post a Comment