Pages

Friday, January 30, 2009

அந்தக்கரணம், ஞான இந்திரியங்கள்.



தன் மாத்திரைகளுக்கு காரணமான சத் ரஜஸ் தமஸ் முதலான 3 குணங்களும் இத் தன்மாத்திரைகள் ஐந்திலும் தொடர்ந்து கூடி நிற்கும்.
அதாவது சத்வம் ரஜஸ் தமஸ் சேர்ந்து இருந்து வித்தியாசப்படுத்தும். அதோட இல்லாம 5 தன் மாத்திரைகளும் தனியாகவும் கூட்டாகவும் இருந்து வெவ்வேறு விதமா வெளிப்படும்.
தனியா நிக்கிறதை வியக்தி ன்னும் கூட்டு போட்டு இருக்கிறதை சமஷ்டி ன்னும் சொல்வாங்க.
அதாவது வியக்தி தனி மரம் போல; சமஷ்டி தோப்பு போல.

சரியா?
சத்வ குணத்திலே 5 தன்மாத்திரைகளும் கூடி இருந்து அந்தக்கரணம் உருவாகும்.
சத்வ குணத்திலே 5 தன்மாத்திரைகளும் பிரிந்து இருந்து ஞான இந்திரியங்கள் - புலன்கள் உருவாகும்.

அந்தக்கரணம் பத்தி http://anmikam4dumbme.blogspot.com/2008/12/blog-post_14.html இலே பாத்தோம். இது ஒண்ணே ஆனாலும் செய்கிற வேலையின் தன்மை படி ஐந்தா இருக்குன்னு பாத்தோம். அதான் சமஷ்டி சமாசாரம்!

ஞான இந்திரியங்கள் அஞ்சு.
காதின் கேட்டல் ஆகாய சத்வ குணம்.
தோலின் தொடுணர்ச்சி வாயுவின் சத்வ குணம்.
கண்களோட பார்த்தல் அக்னியின் சத்வ குணம்.
நாக்கோட ருசித்தல் நீரோட சத்வ குணம்.
மூக்கின் நுகர்தல் மண்ணின் சத்வ குணம்.

இந்த அந்தக்கரணங்களும் ஞான இந்திரியங்களும் சத்வ குணத்திலேந்து வந்ததாலே ஞானத்துக்கு சாதனமா - ஞானம் அடைய உதவுகிற கருவிகளா- ஆகும்.

37.
தன் மாத்திரையின் சத்துவ குணத்தில் அந்தக்கரண ஞானேந்திரிய உற்பத்தி:
ஆதிமுக் குணமிப் பூத மடங்கலுந் தொடர்ந்து நிற்கும்
கோதில்வெண் குணத்தி லைந்து கூறுணர் கருவியாகும்
ஓதிய பின்னை யைந்து முளம்புத்தி யிரண்டா ஞான
சாதன மாமிவ் வேழுஞ் சற்குணப் பிரிவி னாலே

ஆதிமுக்குணம் (தன் மாத்திரைகளுக்கு காரணமான சத் ரஜஸ் தமஸ் முதலான 3 குணங்களும்) இப்பூத மடங்கலும் (இத் தன்மாத்திரைகள் ஐந்திலும்) தொடர்ந்து (கூடி) நிற்கும். கோதில் (குற்றமில்லாத) வெண் குணத்தில் (சத்துவத்தில்) ஐந்து கூறு உணர் கருவியாகும். (ஞானேந்திரியங்கள்). ஓதிய (சொல்லப்பட்ட) பின்னை ஐந்தும் உளம் புத்தி இரண்டாம் (மனம் புத்தி எனும் இரு பரிணாமம் உடைய அந்தக்கரணமாம்). இவ்வேழும் சற்குணப் பிரிவினாலே (சத்துவ குண அம்சமானதால்) ஞான சாதனமாம் (ஞானேந்திரியங்கள், அறி கருவிகள்).



Thursday, January 29, 2009

தன் மாத்திரைகள்




இந்த விட்சேப சக்தியால சீவர்கள் அஞ்ஞானம் ஒழிஞ்சு மோக்ஷம் அடைய எது தேவையோ அதை எல்லாம் பகவான் படைச்சு இருக்கான். இதனால்தான் ஆவரணம் மோசம் விட்சேபம் நல்லதுன்னு சொல்கிறது.

அப்படி என்ன படைச்சு இருக்கு? நம்மோட உடம்பு (சுவரை வெச்சுதானே சித்திரம் எழுத?) அந்தக்கரணங்கள் (இது வழியாதான் மோட்சத்துக்கு வழியை தேடணும்) புவனங்கள் - அதாங்க உலகங்கள் (இல்லாட்டா எங்கே வாழறது?) போகங்கள் (உடல்லே உயிர் தங்கணுமே?)

சரி. இப்ப இதெல்லாம் எப்படி தோன்றியது? இதுக்கு சிலர் வெவ்வேறு விதமா பதில் சொன்னாலும் இப்ப பாக்கிறது பரவலா ஒத்துகிட்டது.

முதல்லே பகவான் விட்சேப சக்தி மூலமா ஆகாயத்தை படைத்தான். அதிலேந்து வாயு. வாயுலேந்து அக்னி. அக்னிலேந்து நீர். நீரிலேந்து மண்.
இதெல்லாம் நாம இப்ப பாக்கிற மாதிரி இல்லை. அதெல்லாம் அப்புறமா வரும். இப்ப இதெல்லாம் சூக்ஷுமமா இருக்கு. பாக்க முடியாம... அதாவது பருப்பொருள் (solid) உருவாகாம அதுக்கான சக்தி தன்மை உருவாயிட்டது.
இதுக்கெல்லாம் இப்ப பேர் சூக்கும பஞ்ச பூதங்கள் அல்லது தன் மாத்திரைகள்.
ஒண்ணுக்குள்ள ஒண்ணா இவை இருக்கும்.
ஆகாசத்திலே வாயு முதலான மத்தது இருக்கும். வாயுவிலே அக்னி முதலா மத்தது ..இப்படியே...
இப்படி ஒண்ணுலேந்து ஒண்ணு வந்ததாலே ஒவ்வொன்னும் அதன் வந்து இருக்கிற கிரமப்படி மத்த தன் மாத்திரையோட (18 பிப்ரவரி அன்று திருத்தம்)
அது வந்து இருக்கிற கிரமப்படி மத்த தன்மாத்திரைகளோட குணங்களும் கொண்டு இருக்கும்.
குழப்பிட்டேனா?

ஆகாசத்தின் குணம் எல்லாத்துக்கும் இடம் தருவது.
வாயுவுக்கு இந்த குணமும் உண்டு. மேலும் அதோட இயற்கையான சலன குணமும் உண்டு.
அக்னிக்கு மேலே கண்ட இடம் தருதல், சலித்தல் கூட அதோட குணமான உருவமும் உண்டு.
நீருக்கு மேலே கண்ட இடம் தருதல், சலித்தல், உருவம் கூட அதோட குணமான ருசியும் உண்டு.
மண்ணுக்கு மேலே கண்ட இடம் தருதல், சலித்தல், உருவம், ருசி, கூட அதோட குணமான மணம் உண்டு.

இவற்றினால அனுபவிக்கிற சாதனமான தநு - சூட்சும உடல்கள் உண்டாகும்.

36.
விட்சேப சக்தியில் தன் மாத்திரையான சூட்சும பூத உற்பத்தி கூறல்.

தோற்றமாஞ் சத்திதன்னிற் சொல்லிய விண்ணாம் விண்ணிற்
காற்றதாங் காற்றிற்றீயாங் கனலினீர் நீரின்மண்ணாம்
போற்றுமிவ் வைந்துநொய்ய பூதங்களென்று பேராம்
சாற்றுமற் றிவற்றிற்போக சாதனதநு வுண்டாகும்

[முன்] சொல்லிய தோற்றமாம் சத்திதன்னில் (விட்சேபசக்தியில்) (சத்தத்தின் மாத்திரையான) விண்ணாம்; விண்ணிற் (ஸ்பரிசத்தின் மாத்திரையான) காற்றதாம்; காற்றின் (ரூபத்தின் மாத்திரையான) தீயாம்; கனலின் (ரஸத்தின் மாத்திரையான) நீர்; நீரின் (வாசனையின் மாத்திரையான) மண்ணாம். போற்றும் இவ்வைந்தும் (இந்த 5 தன் மாத்திரைகளும்) நொய்ய (சூட்சுமமான) பூதங்கள் என்று பேராம். சாற்றும் இவற்றில் போக சாதன[மான] தநு (சூட்சும தேகங்கள்) உண்டாகும்.

[விட்சேப சக்தியில் இருந்து பஞ்ச பூதங்களின் தன்மைகள் உண்டாகும்]


Wednesday, January 28, 2009

பட்டாம்பூச்சி






நேத்து ஒரு சின்ன இன்ப அதிர்ச்சி!
கிருத்திகா அக்கா பட்டாம்பூச்சி விருது அனுப்பி இருந்தாங்க. அவங்களே ¨இது தொந்தரவோ சந்தோஷமோ தெரியாது ஆனாலும் என் பங்களிப்பு. இங்கு சென்று காணவும்.¨ அப்படின்னு எழுதினாங்க.

அவங்க வலைப்பதிவிலே ¨திவா -எந்த திரட்டியிலும் தன்னை இணைத்துக்கொள்ளாமல், பின்னூட்டங்களுக்கான உழைப்பின்றி கடமையைச்செய் பலனை எதிர்பாராதே எனும் கீதா வாக்கியத்திற்கிணங்க பல சத்தியங்களை தெளிவுபடுத்தும் பதிவுகள்.¨
அப்படின்னு எழுதி இருக்காங்க.  இதுக்கு நான் அர்ஹனா என்கிறது கொஞ்சம் சந்தேகம்.

சாதாரணமா இந்த டேக் (tag) விளையாட்டு கொஞ்சம் பிரச்சினையானது. சிலருக்கு நாமும் அனுப்பினா மத்தவங்க என்ன நினைப்பாங்களோன்னு மனசிலே தோணித்து.
இருந்தாலும் கிருத்திகா அக்கா சொன்ன ¨விருதென்று சொல்லுவதை விட நட்புக்கான அங்கீகாரம் என்று கருதுவதே எனக்கு மிகவும் உவப்பானதாக இருக்கிறது.¨ என்கிற வரிகள் மனசை நெகிழ வைத்து விட்டது.

என் வழிகாட்டி வலையில நான் செலவழிக்கிற நேரத்தை மட்டுப்படுத்தின பின்னே  நான் படிக்கிற வலைப்பூக்களை ஏற்கெனெவே குறைச்சாச்சு. சரி ரேண்டமா சிலருக்கு அனுப்பலாம்ன்னு முடிவு பண்ணிட்டேன். இதனால மத்தவங்களை நான் மதிக்கலைன்னோ இல்லை அவங்க வலைப்பூ coolest one அப்படின்னு நினைக்கலைனோ இல்லை. அவங்க ¨அப்பாடா நமக்கு வேலை மிச்சம்¨ ன்னு பெருமூச்சு விட்டுக்கலாம்.
யார் யார்ன்னு சொல்லும் முன்னே...

அட, இந்த இழை எங்க ஆரம்பிச்சதுன்னு ஒரு க்யூரியாசிடி. அதுக்கு கூகுளாரை கூப்பிட்டா 14 பக்கத்துக்கு ¨பட்டாம்பூச்சி விருது¨ விடைகள் கிடைச்சது. அதிலேந்து என்னத்தை கண்டுபிடிக்க?
வேற வழி இல்லை. பதிவுகளை பின் பக்கமா தொடர்ந்து போகணும். ஏற்கெனெவே இணையம் நல்லா இல்லையேன்னு நினைச்சா...

இணையத்துக்கு திடீர்ன்னு உடம்பு சரி இல்லாம போயிடுத்து. சும்மா பற பறன்னு உந்தீ பறக்க ஆரம்பிச்சது. சரி, நாராயணான்னு கொஞ்சம் க்ளிக்கினேன். (அம்பி இப்படி க்ளிக் குன்னு எழுத கூடாதா? கிளிக்குக்கு ன்னு எழுத போய் எவ்வளோ பேர் ஏமாந்து போயிட்டாங்க? ;-)

கண்டு பிடிச்சது கீழே:
கிருத்திகா அவங்களுக்கு அனுப்பினது
பாசமலர் -->
திவ்யா  -->
வித்யா சங்கருக்கும்[Gils], மற்றும் *பிரபுவிற்கும், இரவீ
கில்ஸ் பதிவுல விவரம் இல்லை. சரின்னு பிரபு பக்கம் போய் அப்புறம்..
1. *குந்தவை  2.தமிழ் தோழி 3.தாரணிபிரியா
மோகனுக்கு
நைஜீரியா நாயகன் அண்ணன் அணிமா
அப்பாடா இங்க கொஞ்சம் உதவி கிடைச்சது. அவரும் என்னை மாதிரியே தேடி ஒரு பட்டியல் போட்டு இருந்தார். அப்படியே G3...

அணிமா <----

ராகவன் <----

ரம்யா <----

பூர்ணிமா <----

விஜய் <-----

திவ்ய பிரியா <------

G3(பிரவாகம் )--->

கார்த்தி/mgnithi--->

Gils/Shanki---->

பிரியா -->

Kartz---->

Tusharmargal--->

Akansha---->

Infinity---->

Simple Elegant Girl ---- >

Chronic Chick Talk ----->

Empty Streets----->

The Blog Reviewer--->

biotecK---->

KisAhberuang---->


blogscope >
இவர்தான் ஆரம்பிச்சதோன்னு ஒரு சந்தேகத்தோட முடிச்சு இருந்தார்!
இந்த பட்டியல் எவ்வளொ சரின்னு தெரியலை.
சரி பட்டாம்பூச்சி மேலே பறக்க என்னால ஆனது!

ரேண்டம் தேர்விலே முதல்ல கீதா அக்கா
அட, என்ன பண்ணறது? முடிவை மாத்திக்க முடியாதே? இவங்க பதிவுகள் நான் வலைப்பூவுக்கு புதுசா இருந்தப்ப படிச்ச பதிவுகள்ள ஒண்ணு. அபி அப்பா ¨பொங்கள்¨ பதிவு போடப்போய் படிச்ச இவங்க கண்ணாடி உடஞ்சுபோனது பத்தி எழுதி - சிரிப்பா வந்தது. அப்பலேந்து படிக்க ஆரம்பிச்சது.

வடுவூர் குமார். இவரோடதுதான் முதல் முதல் படிச்ச பதிவு. உபுண்டு வழியா போய் இவர் அது பத்தி பதிவு போட்டதை பாத்து, இவர் கட்டட விஷயங்கள் எழுத அதுல எனக்கு ஒரு ஆர்வம் இருந்ததால.... இப்ப துபாய் போய் அங்கேந்து பதியறார்.

கடைசியா கோமா அக்கா. படம் எடுக்க ஒரு ஆர்வம் வந்து பிட் போட்டோ போட்டிகளில கலந்து கொள்ளப்போய் அங்கே அறிமுகம் ஆகி இவங்க ஹா ஹா ஹாஸ்யம் எழுத- நான்  படிக்க ஆரம்பிச்சுட்டேன். என் பெரியப்பா சொல்லுவார் யார் நகைச்சுவையை ரசிக்கலையோ அவங்களுக்கு ஏற்கெனெவே நல்ல தண்டனை கிடைச்சாச்சு!

3 பேரும் கீழே இருக்கிற விதிகளை கடைபிடிக்க பாருங்க. இல்லைனாலும் நான் தப்பா நினைக்க மாட்டேன். :-)
நல்லது, கடைசியா
இந்த விருது பெற்ற பின் பின்பற்ற வேண்டிய சில விதிமுறைகள்:

1. இந்த பட்டாம்பூச்சி இலச்சினை உங்கள் பதிவு பக்கத்தில் இருக்க வேண்டும் (Put the logo on your blog)

2. உங்களுக்கு விருது கொடுத்த நபரின் இணையதள முகவரிக்கு ஒரு இணைப்பு கொடுக்க வேண்டும் (Add a link to the person who awarded you)

3. 3 அல்லது அதற்கு மேலான பதிவர்களைத் தேர்வு செய்ய வேண்டும் (Nominate at least 3 other blogs)

4. தேர்வுசெய்யப்பட்ட பதிவுகளிற்கு உங்கள் பதிவில் இருந்து இணைப்பு தர வேண்டும் (Add links to those blogs on yours)

5. நீங்கள் தேர்ந்தெடுத்த பதிவுகளில் அவர்களுக்கு இச்செய்தியை தெரிவிக்க வேண்டும் (Leave a message for your nominees on their blogs)






தமஸ் என்ன ஆச்சு?



சரி அடுத்து தாமசம் என்கிற தமஸ்.
[மூல புத்தகத்திலே கொஞ்ச தூய தமிழா இருக்கு. ராசதம் ன்னு சொன்னா ராஜசம். மூலத்தை மாத்துக்கூடாது என்கிற கொள்கையாலே அப்படியே போடறேன். குழம்ப வேண்டாம்.]
ஆமாம் தமஸோமா ஜ்யோதிர் கமய ´தமஸ்´ தான்.

இந்த தமோ குணத்திலே பிரதி பலிக்கிற பிரம்மத்தின் சாயை இரண்டா பிரியும். ஒண்ணு ஆவரணம். இரண்டாவது விட்சேபம். (விக்ஷேபம்)
ஆவரணம் என்கிறது மறைப்பு. விட்சேபம் என்கிறது பல வகையா தோன்றுகிற விஷயம்.
எந்த சக்தி நாம நம்மை சரியா, உண்மையா பாக்க முடியாம தடுக்கிறதோ அதுதான் ஆவரண சக்தி. இதோட சேட்டையாலதான் நாம ப்ரம்மம்ன்னு தோணாம வேற மாதிரி தோணுது. என்னதான் முயற்சி பண்ணாலும் அந்த நினைப்பை நீக்க முடியலியே! அது அவ்வளோ பவர்புல்!
இரண்டாவதான விட்சேபம் சுவாரசியமானது!
இந்த உலகம் மாறிட்டே இருக்கு. ஒரு கணத்திலே இருந்தது அடுத்த கணம் இல்லை. மாலை சூரியன் அஸ்தமிக்கிறப்ப பாருங்க. வண்ணக்கோலங்களை மாறிட்டே இருக்கிறதை!
இன்னிக்கி பாத்த வானம் நாளை அதே போல இல்லை. தாவரம் அதே போல இல்லை.
நாமும் ஒரு செகண்ட் இருக்கிறாப்பல அடுத்த செகண்ட் இல்லை. உடம்பில பல செல்கள் செத்து பலது புதுசா உருவாகிகிட்டு இருக்கு!


இப்படி எல்லாமே புதுசு புதுசா விதவிதமா மாறிகிட்டே இருக்கிறது விட்சேப சக்தியாலதான்.
ரெண்டுமே தாமசத்திலேந்து வந்தாலும் ஆவரணம் பொல்லாது விட்சேபம் நல்லது. ஏன்னு அப்புறம் பாக்கலாம்.


35.
சீவ ஈஸ்வரர்களுக்கு சூட்சும சரீராதி உண்டான முறைமை கூறத்துவங்கி முதலில் சக்திகளின் தோற்றம் சொல்லல்:

ஏமமா யாவினோ தவீசனா ரருளி னாலே
பூமலி யுயிர்கட் கெல்லாம் போகசா தனமுண் டாகத்
தாமத குணமி ரண்டு சத்தியாய்ப் பிரிந்து தோன்றும்
வீமமா மூட லென்றும் விவிதமாந் தோற்ற மென்றும்.

PG

ஏம மாயா வினோத ஈசனார் அருளினாலே, பூமலி (பொலிவு மிகுந்த) உயிர்கட்கு எல்லாம் போக சாதனம் (ஆன சூக்கும தேகம்) உண்டாக தாமத குணம் இரண்டு சக்தியாய் பிரிந்து தோன்றும். வீமமா (பயங்கரமான) மூடல் (ஆவரணம்) என்றும் விவிதமாம் தோற்றம் (விட்சேபம்) என்றும்.
தாத்பர்யம்: சித்தின் நிழல்தங்கிய தமோ குணமானது அறிவு விளங்காததாகிய ஆவரண சக்தியாகவும் அறிவு விளங்குவதாகிய விட்சேப சக்தியாகவும் தோன்றியது.



Tuesday, January 27, 2009

ஈசர்கள், சீவர்கள்.




இப்படி உண்டாகிற சீவர்களுக்கு அந்த ராஜஸ குணமே ஆநந்த கோசம்; சுழுத்தி; காரண சரீரம். வித் என்பது ஞானம். அவித்தை ஞானமல்லாதது, அதாவது அஞ்ஞானம். இந்த அஞ்ஞானத்திலேயே இருக்கிறதுதானே சீவர்களாகிய நம்மோட இயல்பு? அவித்தை கணக்கில்லாம இருக்கிறது. உண்மை ஒண்ணுதான். பொய் பலவாகவும் இருக்குமில்லையா? அது போல. இப்படி கணக்கில்லாம இருக்கறதால கணக்கில்லாத வகை சீவர்களையும் நாம் பாக்கலாம்.

அடுத்து தாமசம்.
அதுக்கு போகும் முன்னே இந்த ஈஸ்வரனும் சீவர்களும் என்ன ஆகிறார்கள்ன்னு பாக்கலாம்.

இனிப்பிலேயே சர்க்கரை இனிப்பு, மாம்பழத்தின் இனிப்பு, மாவு பண்டங்களோட அசட்டு இனிப்பு ன்னு பலவிதமா இருக்கே! முதலாவது திகட்டிடும். இரண்டாவது நிறையவே சாப்பிடலாம். திகட்டாது. மூணாவது இனிப்பிலே சேத்தியாங்கிற அளவு கம்மியாவே இனிப்பு.

அது போல இந்த சத்துவத்திலேயே இன்னும் அதிக பிரிவா சத்துவம் ராஜசம் தாமசம் ன்னு பிரியும்.
முன்னேயே ஒரு வாக்கியம் பாத்தோம். முக்குணங்கள் இருந்தாலும் ஒவ்வொரு சமயம் ஒவ்வொண்ணு தலைதூக்கும்.
ஈஸ்வரனா இருக்கிற பிரம்மம் ஒண்ணேதான். இருந்தாலும் ஈஸ்வரன் நேரம் செயல்களுக்கு தகுந்தாப்போலே பலதா இருப்பான்.

ராஜசம் அதிகமாகும் போது பிரம்மனா இருந்து படைக்கிறான்.
சத்துவம் அதிகமாகும் போது விஷ்ணுவா இருந்து காக்கும் தொழில் செய்யறான்.
தாமசம் அதிகமாகும் போது ருத்திரனா இருந்து அழிக்கும் தொழில் செய்கிறான்.
[சைவர்கள் சிவனுக்கே 5 தொழில்ன்னு சொல்லி இதை எல்லாமே சேத்துடுவாங்க. அவங்க சிவன் என்கிற பேரிலே பரம்பொருளைத்தான் சொல்கிறாங்க.]

சீவர்களிலேயும் இதே போல பிரிவுகளை பாக்கலாம்.

ராஜசம் அதிகமாகும் போது சீவர்கள் எப்பவும் வேலை செய்கிறவங்களா இருப்பாங்க. உலகமே இவங்களாலதான் இயங்குது!
சத்துவம் அதிகமாகும் போது ஞானத்திலே நாட்டம் இருக்கிறவங்களா இருப்பாங்க. ஆன்மீக பதிவுகள் எழுதுவாங்க; ஆன்மீகம் பார் டம்மீஸ் படிப்பாங்க. :-)
தாமசம் அதிகமாகும் போது சோம்பி திரிஞ்சு மயக்கத்தோட காலம் போக்கறவங்களா இருப்பாங்க.
முன்னம் சொன்னது போல எல்லாருக்குமே ஒரு குணம் அதிகமானாலும் மற்ற 2 குணங்களும் கொஞ்சம் கொஞ்சமாவது இருக்கத்தான் செய்யும்.

{ஈச்வரன் செய்யும் காரியங்களை ஒட்டி பிரம்மா, விஷ்ணு, சிவன் என்று மூன்றாக பிரிந்து தகுந்த காரியங்களை செய்கிறான். சீவர்கள் செய்யும் காரியங்களை ஒட்டி வேலை செய்கிறவர்கள், ஞான நாட்டம் உள்ளவர்கள், சோம்பேறிகள் என்று 3 ஆக உள்ளார்கள்.}

34
அழுக்கொடு பற்றுஞ்சீவர்க் கதுவேயா நந்தகோசம்
சுழுத்திகா  ரணசரீரஞ் சொன்னதிம் மட்டுமோக
முழுக்குணத் திரண்டால் வந்த மூலவாரோபஞ் சொன்னோம்
வழுத்துசூக் குமவாரோப வழியுநீ  மொழியக்கேளாய்

அழுக்கொடு (அவித்தையுடன்) பற்றும் (அவித்தையில் பொருந்தும்) சீவர்க்கு அதுவே (அந்த அவித்தையே) ஆநந்த கோசம்; சுழுத்தி; காரண சரீரம்.  சொன்னது இம் மட்டும் (இவ்வளவும்) மோக (மயக்கமாக தோன்றிய பிரக்கிருதியின்) முழுக்குணத்து இரண்டால் (சத்துவ, ரஜோ குணங்கள்) வந்த மூல ஆரோபம் (காரண அத்தியாசம்) சொன்னோம். வழுத்து (கூறாத) சூக்கும ஆரோப வழியும் மொழிய நீ கேளாய்.

PG:


{ஸ்படிகம் அடுத்த வண்ணம் ஆவது போல அவித்தை. அவித்யா காரியங்களில் பொருந்துதலால் அது சீவனின் இயல்பும் ஆனதால் "அழுக்கொடுபற்றும்”. சுழுத்தி சுகத்தையும் ஜாக்ரத் ஸ்வப்ன அவஸ்தைகளில் பிரியம், மோதம், பிரமோதம் முதலான சகத்தை  அனுபவிப்பதால் "ஆனந்த மய கோசம்”. ஜக்ரத் ஸ்வப்ன அவத்தை  அடங்கியிருத்தலால் "சுழுத்தி". சீவன் தோன்றினதற்கும் ஸ்தூல சூட்சும சரீரம் உண்டாவதற்கும் மூலம் ஆகையால் "காரண சரீரம்".}

தாத்பர்யம்: சித்தின் நிழல்பொருந்திய சத்துவ ராசத குணம் மாயை, அவித்தை  எனப்படும். அந்த பிரதி பிம்பங்களின் பெயர்கள் முறையே  ஈசன், சீவன். அவர்களுக்கு அந்த மாயை, அவித்தையே காரண சரீரம்; சுழுத்தி அவத்தை; ஆநந்த மய கோசம். அந்த காரண சரீரங்களை  அபிமானித்ததால் அவற்றின் பெயர் அந்தர்யாமி, பிராஞ்ஞன். இவர்களுக்கு முறையே சிருட்டி முதலான, ஜாக்ரத் முதலான தொழில்களில் பற்று அற்று இருப்பதும், வைப்பதும் இயல்பு. இவை  அனைத்தும் காரண அத்தியாசம் எனப்படும்.


Monday, January 26, 2009

சீவர்




கொஞ்சம் ரிவிஷனும் முன் தயாரிப்பும்.
நாம இருக்கிற நிலைகள் மூணா சொல்கிறாங்க. அவஸ்தா த்ரயம் - ஏற்கெனெவே பாத்தாச்சு. சுழுத்திங்கிறது கனவு இல்லாத ஆழ்துயில்.

பஞ்ச கோசங்கள்: ஆத்மாவை சுத்தி 5 உறைகள் இருக்கு. இவை ஒண்ணுக்குள் ஒண்ணு இருக்கும். அதாவது மேலும் மேலும் சூக்குமமா இருக்கும் - ஒன்றுக்குள் ஒன்று உறைகின்றன. சரியா?
அன்னமய கோசம் - எது சாப்பாட்டால வளக்கப்பட்டதோ அந்த உடம்பு. சாப்பாடு இல்லைனா அழிஞ்சும் போயிடும். இது கண்ணுக்கு தெரியுது. இதுக்கும் உள்ளே...
பிராண மய கோசம் - ஐந்து பிராணங்கள் உலவுகிற உறை. பிராணன், அபானன், வியானன், உதானன், சமானன் ன்னு 5. இதெல்லாம் என்ன செய்யுது எல்லாம் விளக்கமா அப்புறம் பாக்கலாம். இப்ப சுருக்கமா...
இந்த வாயுக்கள்ன்னா ஏதோ கெமிஸ்ட்ரி லாபிலே இருக்கிற தயாரிக்கிற வாயுக்கள் இல்லை. சக்திகள். அவை உலாவும் என்கிறதால வாயுன்னு சொல்லி புரிய வைக்கிறோம்.
ப்ராணன் உடம்புக்குள் வெளி காத்தை இழுக்கிற சக்தி.
அபானன் உள்ளேந்து காத்து, மலம், சிறு நீர் இதையெல்லாம் வெளியே தள்ளுகிற சக்தி.
வ்யானன் - காத்தை உடம்பிலே நிறுத்தி வைச்சு பலம் தருகிற சக்தி. ஏதோ ஒரு பெரிய எடையை தூக்கறோம். அப்ப என்ன செய்யறோம்? மூச்சை பிடிச்சுக்கொண்டு தூக்கறோம். இது வ்யானனோட வேலை.
உதானன் தொண்டயிலே இருந்து கொண்டு பேசறதுக்கு உதவறது.
சமானன் வயித்தில் இருந்து கொண்டு சாப்பிட்ட சாப்பாடு ஜீரணமாக உதவுகிற சக்தி.
இதை பத்தி இன்னும் மேலே அப்புறமா பாக்க போறோம்.

மனோ மய கோசம் - மனசு என்கிற உறை.
விஞ்ஞான மய கோசம் - புத்தி - உறுதி இப்படி செய்யணும் என்கிற சங்கல்பம், இந்த மாதிரி சித்த விருத்திகள்.
ஆனந்த மய கோசம் - உலக ஆனந்தங்களோட வெவ்வேறு நிலைகள் இருக்கிற உறை.

சரீரங்கள் மூணு. ஸ்தூல சரீரம், சூக்ஷ்ம சரீரம். காரண சரீரம்.
ஸ்தூல சரீரம் என்கிற நாம் பாக்கக்கூடிய உடல்.
சூக்ஷ்ம சரீரம் பாக்க முடியாதது. Astral body. 5 கர்ம புலன்கள், 5 ஞான புலன்கள், 5 பிராணன்கள், அந்தக்கரணம். இதை எல்லாம் சேத்தது.
காரண சரீரம் எது நாம் திருப்பி பிறவி எடுக்க காரணமா இருக்கோ அதுதான் காரண சரீரம். இது - சுசுப்தியிலே - கனவில்லா ஆழ் தூக்கத்திலே- இருக்கிறது. ஆணவம் கன்மம் மாயை அப்படின்னும் சொல்லுவாங்க. இதில ஆணவம் நான் என்கிற நினைப்பு; கன்மம் நம்மோட கர்ம பலன்கள் என்கிற மூட்டை; மாயை தெரிஞ்சதுதானே?

இப்ப விஷயத்துக்கு திரும்பலாமா?
பரப்பிரம்மத்திலேந்து பிரிஞ்ச சத்துவம் ஈசன் ன்னு பாத்தோம். இந்த பிரபஞ்சம் மாயைன்னு புரிஞ்சதால இது ஈசனோட சுழுத்தி நிலை. உலகம் தோன்ற காரணமா இருக்கிறதால காரண சரீரம். வெளியே ஈசனா இருந்து கொண்டு உள்ளே தான் பிரம்மத்திலேயே லயிச்சு இருக்கிறதால ஆனந்த மய கோசம்.
அது எப்படி வெளியே ஈசன், உள்ளே பிரம்மம்ன்னா...

சினிமா பாக்கிறோம். இது உண்மையில்லை சினிமாதான் ன்னு தெரிஞ்சு கொண்டு அப்போவும் அதை ரசிச்சு பாக்கலாம். இல்லை அதோட ஒன்றிப்போய் அதிலே வர சுக துக்கங்களோட நாமும் சுகப்பட்டு துக்கப்பட்டு... புரியுது இல்லையா? ஈசனுக்கு உள்ளுக்குள்ளே - தான் பிரம்மம்ன்னு தெரியும். நமக்கு தெரியாது.

அடுத்து பரப்பிரம்மத்திலேந்து வருகிறது ராஜச குணம். இதுக்கு அவித்தை, அசுத்த மாயை, அஞ்ஞானம் அப்படி எல்லாம் பேர் உண்டு. இதுல பிரதி பலிக்கிற பிரம்மத்தின் சாயை எப்படி பரிணாமம் ஆகுதுன்னா இந்த கணக்கில்லாத சீவர்களா ஆகும். இந்த சீவர்களுக்கு பிரஞ்ஞானன் ன்னு பெயர்.

33.
ஈசனுக் கிது சுழுத்தி யிதுவே காரண சரீரம்
கோசமா னந்தமாகுங் குணமிரா சதம வித்தை
தேசறு மவித்தை தோறுஞ் சிற்சாயை சீவகோடி
நாசமா முயிர்க்கப் போது நாமமும் பிராஞ்ஞனாமே

ஈசனுக்கு இது (இந்த சுத்த மாயையே) சுழுத்தி. இதுவே காரண சரீரம்; ஆனந்த மய கோசம் ஆகும்.

இரண்டாம் குணம் இராசதம் (ராஜஸம்). [அவித்தை, அசுத்த மாயை, அஞ்ஞானம் எனவும் பெயர்கள் உண்டு]. தேசறு (விளக்கமில்லாத) அவித்தை தோறும் (பிரதிபலித்த) சிற்சாயை (சித்தின் நிழல்) சீவகோடி(சீவன்). நாசமாகும் இந்த சீவ உயிர்க்கு அப்போது நாமமும் (பெயரும்) பிராஞ்ஞனாமே. (பிரஞ்ஞானன் ஆகும்).

{பரப்பிரம்மத்தின் ராஜச பாகத்தில் இருந்து சீவர்கள் தோன்றினர்}

Friday, January 23, 2009

ஈசன்



சில நூல்களிலே இதே உற்பத்தி வேற விதமாயும் சொல்லப்படுது. சீவர்கள்கிட்டே இருக்கிற பிரிக்கமுடியாதது எதுவோ அதை மக தத்துவம் (மஹத்) என்கிறாங்க. இதேதான் அகங்காரம் ஆகும். இந்த உலகம் தோன்ற காரணமா இருக்கிறதை அகங்காரத்தில் இருந்து வருகிற வைகரி, தைசதன், பூதாதி தத்துவங்களாக சொல்கிறங்க. இதை மேலே விசாரிக்க வேண்டுமானால் இங்கே போய் பாத்து படிச்சு மெய்கண்ட சித்தியார் சுபக்கத்திலே என்ன சொல்கிறார்ன்னு புரிஞ்சதை இங்கே சொல்லலாம்.


ஜகத் உற்பத்தி வேறு வழியாக சொல்லப்படுவது:

31. ஒருவழி யிதுவா மித்தை யொருவழி வேறாச் சொல்வர்
மருவுமவ் வியத்தந் தானே மகதத்துவ மாகு மந்த
அருண்மக தத்துவந்தா னகங்கார மாகு மென்றும்
கருவகங் காரமூன்றாக் காட்டிய குணமா மென்றும்

(சிருஷ்டி கிரமங்களில்) ஒரு வழி இதுவாம். இத்தை ஒரு வழி வேறாய் [உம் பெரியோர்] சொல்வர். [சீவர்களிடம்] மருவும் (அடங்கியுள்ள) அவ்வியத்தந்தானே மக தத்துவமாகும் [என்றும்] அந்த அருண் மக தத்துவந்தான் அகங்காரமாகும் என்றும், கருவ (செகத்துக்கு காரணமான அகங்கார தத்துவம்) அகங்கார மூன்றாக காட்டிய குணமாம் (வைகரி, தைசத, பூதாதி என மூன்று அகங்காரங்களாகும்) என்றும் [சொல்வர்]

{பிரபஞ்சம் உருவானதற்கு வேறு வழிகளும் சொல்லப்படுகின்றன}

முதலிலே இருக்கிறது சத் சித் ஆனந்தமான பரம்பொருள் மட்டுமே. சத் ன்னா இருப்பு. existance. சித் அறிவு- knowledge. ஆனந்தம் எல்லாருக்கும் தெரிஞ்சதுதான்.

இந்த பரம் பொருளிலேந்து மூன்று குணங்கள் வரும்ன்னு பாத்தோம். இந்த குணங்களில சித் - இருப்போட நிழல் - சாயல் படியும். இந்த சாயலை குணத்திலேந்து நம்மால தனியா பிரிக்க முடியாது; குணத்திலே முழுமையா பரவி இருக்கும்; பாக்க முடியாதபடி சூக்குமமா இருக்கும்.

முதல்லே பாக்கபோறது சத்துவத்திலே படிகிற சாயை என்ன ஆகிறதுன்னு.
இதுக்கு அந்தர்யாமி ன்னு பெயர். சத்துவ குணத்தோடே விரவி இருந்தாலும் குணங்களோடேயும் மாயையுடனும் ஒட்டாது. இது எல்லா சரீரங்கள் உள்ளேயும் இருக்கும். அதனாலதான் அந்தர்யாமின்னு பேர். ஜடமா இருக்கிற உடம்புக்கு உயிரோட்டம் கொடுத்து ஆட்டுகிறவன் இவனே. இவனை முன்னிட்டுதான் எல்லா செயல்களும் நடக்குது. இவனுக்கு பெயர் ஈசன் (ஈஸ்வரன்.)

இந்த ஈஸ்வரன் சிவன் இல்லை. அப்படி இங்கே தமிழ் நாட்டிலேதான் ஒரு மாயை இருக்கு. மத்த எல்லா இடத்திலேயும் இப்படி சொன்னா கடவுள் அப்படின்னுதான் புரிஞ்சுப்பாங்க.

32. முக்குணங்களால் ஜகஜீவ பரன் உற்பத்தி. முதலில் பரன் உற்பத்தி:

இக்குணங்களிலே விண்போன் றிருக்குஞ் சிற்சாயை தோன்றும்
முக்குணங்களி னுந்தூயதா முதற்குண மாயையாகும்
அக்குணப் பிரமச் சாயை யந்தரி யாமி மாயை
எக்குணங்களும்பற் றாதோ னிமித்தகா ரணனா மீசன்.

இக்குணங்களிலே (இந்த சத்துவம் முதலான குணங்களிலே) விண் போன்று (ஆகாயம் போல நிரவயவமாயும், வியாபகமாயும், அதிசூக்குமமாயும், அசங்கமாயும்) இருக்கும் சிற்சாயை (சித்தின் பிம்பம்) தோன்றும். முக்குணங்களினும் தூயதான முதற் குணம் மாயையாகும் [சத்துவம் மாயை எனப்படும்]. அக்குண (அந்த சத்துவத்தில்) பிரமச்சாயை (பிரதிபலிக்கும் பிரம சைதன்யத்தின் சொரூபம்) அந்தரியாமி [எனப்படும்]. {இந்த அந்தரியாமி காரண சரீரத்தை அபிமானித்துக் கொண்டு சகல சரீர உள்ளீடாக இருந்துகொண்டு ஆட்டுகிறவன்.} மாயை(யிலும்) எக்குணங்களும் (களிலும்) பற்றாதோன் (சம்பந்தப்படாதவன்) நிமித்த காரணனாம்; இவன் பெயர் ஈசன்.

{பரப்பிரம்மத்தின் சத்துவ பாகத்தில் இருந்து ஈஸ்வரன் என்கிற கடவுள் தோன்றினார்}

Thursday, January 22, 2009

மூல ப்ரக்ருதி




எனக்கு எட்டு கழுதை வயசுக்கு ரெண்டு வயசு கம்மி. நினைவு தெரிஞ்சது ஒரு 3-5 வயசுன்னு பாத்தா ஒரு 50 வருஷ உலக வாழ்க்கை நினைவு இருக்கு. யோசிச்சு பாத்தா இந்த 50 வருஷ காலம் ஒண்ணுமே இல்லைன்னு தோணுது. ஆனா இதுக்குள்ளேயே எவ்வளோ விஷயம் மாறிப்போச்சு!

கலி யுகம் தோன்றி 5000 சொச்சம் வருஷம்ன்னா அது ரொம்பவும் ஒண்ணும் இல்லை. என் வாழ்க்கையின் ஒரு 100 மடங்கு. அவ்வ்ளோதான்.

மாறிப்போன உலகத்தை பாக்கலாம். ஒரு வருஷம் முன்னேன்னா நமக்கு நல்லாவே தெரியுது. பத்து வருஷம் முன்னே கூட பரவாயில்லே. நூறு வருஷங்கள் முன்னேன்னா கொஞ்சம் கற்பனை பண்ணிடலாம். ஆயிரம்னா ஹேஷ்யம் இன்னும் அதிகமாகும். பத்தாயிரம்? யார் கண்டா? லக்ஷம்? கற்பனையே முடியாது, இல்லையா? அதுக்கு முன்னாலே இருந்தா என்ன அதுக்கும் முன்னாலே பல ஆயிரம் வருஷங்கள் முன்னாலே இருந்தா என்ன? கற்பனை வர முடியாது. ஒரு அளவு தாண்டினதும் சிலது அர்த்தமில்லாமே போயிடும்.

(கிடைக்கிற சில குறிப்புகளை வெச்சுகிட்டு மனுஷன் இப்படி பண்ணான் அப்படி பண்ணான்னு சொல்லிகிட்டு இதுக்கு அடிதடி சண்டை வேற... பாக்கிறப்ப சிரிப்பா வருது. ஒண்ணு புராணங்களை நம்பலாம். இல்லைனா நமக்கு தெரியாதுன்னு ஒத்துக்கலாம். இப்படி இருக்க சாத்தியக்கூறு அதிகம்ன்னுதான் ஒரு ஆராய்ச்சியாளரால சொல்ல முடியும். கொஞ்ச நாள்ளே அதுவே உண்மைன்னு ஆயிடுது. :-) பொன்னியின் செல்வன் கதையை வெச்சுகிட்டு அது உண்மைன்னே நினைச்சு சண்டை போடறவங்களை பாத்து இருக்கேன். கிடக்கட்டும்!)

சீவர்கள் எல்லாமே எப்போ ஆரம்பிச்சதுன்னு தெரியாத அளவு காலத்திலே நமக்கு முன்னாலே உதிச்சவங்க.

நடுவிலே ஒரு நிலையை எடுத்துப்போம்.

எல்லாமே ஒரே குழம்பு போல – மேட்டர் எனர்ஜி காம்ப்லெக்ஸ் (matter energy complex)- லயமாகி இருந்தது. இதுக்கு மூல ப்ரக்ருதி ன்னு பேர். சீவர்கள் எல்லாம் இதிலே அடங்கி இருக்கும். சீவர்கள் ன்னு எப்படி தனியா சொல்ல முடியுது? அந்த சீவர்களோட கர்மா அவற்றோட ஒட்டி இருக்கும். அதனால தனியா தெரியுது. இந்த கர்மா ஒட்டி இருக்கிறதாலேதான் பிறவின்னு ஒண்ணு வருது.
கார்மாவால பிறவி எடுத்து அப்புறம் கர்மா தீராம, புதுசா கர்மா சேத்துகிட்டு, திருப்பி திருப்பி பிறவி எடுத்து.... பல ஆயிர வருஷங்கள் போய் எல்லா சீவர்களும் திருப்பியும் மூலப்ப்ரக்ருதியிலே லயமாகும். திருப்பி உதிக்கும். இன்னொரு கால கட்டத்திலே சீவர்கள் எல்லாமே தனியாக இல்லாமலே லயமாயிடும். இதோட விவரணம் அப்புறமா பாக்கலாம்.
இது ஒரு பக்கம் இருக்கட்டும்.

மூல ப்ரக்ருதியிலேந்து ஒரு கால கட்டத்திலே ஈஸ்வரனோட உள் நோக்கிய பார்வையாலே இவை மூன்று குணங்களா தனியா வெளிப்படும்.

இந்த 3 குணங்களைப்பத்தி முன்னேயே பாத்து இருக்கிறோம். சத்வம் , ரஜஸ், தமஸ். இதை வெளுப்பு, சிவப்பு, கருப்புன்னு உருவகப்படுத்தி இருக்காங்க. சும்மா பாகுபடுத்தத்தான்! வேற விதமா சுத்தம், அழுக்கு, இருட்டு என்கிறார்கள்.

எல்லாருக்கும் இந்த 3 குணங்களும் உண்டு. என்ன, ஒவ்வொத்தருக்கு ஒவ்வொண்ணு அதிகமா இருக்கும்; குறைவா இருக்கும். அவ்வளவுதான்.

29.
அதுதானெப்படி என்றக்கா லநாதியாஞ் சீவரெல்லாம்
பொதுவான சுழுத்திபோல பொருந்து மவ்வியந்தன்னில்
இதுகால தத்துவப் பேரீசனுட் பார்வையாலே
முதுமூல சுபாவம்விட்டு முக்குணம் வியத்தமாமே

அதுதான் (அக்கற்பனை) எப்படி [உண்டாயிற்று] என்றக்கால் (என கேட்பாயானால்) அநாதியாஞ் (ஆதியில்லாத)  சீவர் எல்லாம் பொதுவான  சுழுத்தி [அவஸ்தை] போல அவ்வியந்தன்னில்  (மூலப்பிரகிருதியில்) பொருந்தும் (கருமவாசனையுடன்அடங்கியிருக்கும்).  இது காலதத்துவப் பேர் [அடைந்து] ஈசன் உட்பார்வையாலே முது மூல (முன்னுள்ள பிரகிருதி) சுபாவம் விட்டு (தன்மை
விட்டு) முக்குணம் வியத்தமாமே. (முக்குணங்களாய் வெளிப்படும்)

30.
அந்த முக்குணங்களின் பெயர் முதலியன:
உத்தம வெளுப்புச் செம்மை  யுரைத்திடு கறுப்பு மாகும்
சத்துவ குணத்தி னோடு ரசோகுணந் தமோகு ணந்தான்
சுத்தமோ  டழுக் கிருட்டாச் சொல்லுமுக் குணமு மூன்றாய்
ஒத்துள வேனுந் தம்மு ளொருகுண மதிகமாமே

உத்தம (முதலாவதாக) வெளுப்பு, செம்மை,  [அதமமாக] உரைத்திடும் கறுப்பும் ஆகும். [முறையே] சத்துவ குணத்தினோடு, ரசோகுணம், தமோ குணந்தான் [அவற்றின் பெயர்]. சுத்தமோடும், அழுக்கு (உடனும்), இருட்டாக[வும்] சொல்லும் [இந்த] முக் குணமும் மூன்றாகி ஒத்துளவேனும் (ஒத்து இருப்பினும்) தம்முள் (அவற்றுள்) ஒரு குணம் அதிகமாமே. (மேலானது)


Wednesday, January 21, 2009

அத்தியாரோபம், அபவாதம்



இனி கொஞ்சம் கவனமா படிக்கணும். சாதாரணமா புழங்காத வார்த்தைகள் எல்லாம் வரப்போகுது.

அத்தியாரோபம் = ஆரோபம். இது என்ன? இது இல்லூஷன் (illusion).

ஒரு பொருள் இருக்கு. ஆனா அதை நாம் வேறன்னு நினைக்கிறோம். இதான் ஆரோபம். இசை புரிஞ்சவங்களுக்கு புரியும்- மேலே ஏற்றுவது, இறக்குவது. ஒரு பொருளின் மேலே இன்னும் ஒண்ணை ஏற்றிப்பார்க்கிறது ஆரோபம். இருட்டிலே வழி நடக்கிறோம். வழில ஏதோ உருண்டையா திரட்சியா இருக்கு. நகர்ராப்பல கூட தோணித்தே? இது பாம்பா இருக்கும்ன்னு நினைக்கிறோம். டார்ச் விளக்கை உபயோகித்து அட இது வெறும் கயிறுதான் ன்னு தெரிஞ்சுக்கிறோம். அதே போல தூரத்திலே ஏதோ மங்கலா ஆள் இருக்கப்பல தோணுது. அட இதோ யாரோ இருக்காங்க. கேட்டு வழி தெரிஞ்சுப்போம் ன்னு நினைக்கறோம். கிட்டே போய் பாத்தா அது மனுஷன் இல்லை அது மாதிரி உருவம் இருக்கிற மரக்கட்டைதான் ன்னு தெரியுது. கார்லே நல்ல வெய்யில்ல ஏசி போட்டுகிட்டு தார் ரோடிலே போகிறோம். ரோட்டிலே கொஞ்ச தூரத்திலே தண்ணி இருக்கிற மாதிரி தோணும். இதை இப்ப எல்லாம் எல்லாருக்கும் தெரிஞ்சு இருக்கு. இதான் கானல் நீர். இது போல பாலைவனத்திலே தெரியறதை பாத்து தண்ணின்னு ஏமாறறது முன்னே எல்லாம் சகஜம்.

முன்னதை இப்ப எல்லாருக்கும் தெரிஞ்சு இருக்குன்னா தினமும் பார்த்தும் இன்னும் சரியா புரிஞ்சுக்காத ஒண்ணு இருக்கு! மேலே வானத்தை பாருங்க. நீலமா இருக்கு இல்லே? அதை பாக்கிறதாலே நமக்கு வானம் அதுக்கு கீழே நாம்ன்னு ஒரு உணர்வு இருக்கு. உண்மையிலே அங்கே எதுவுமே இல்லையே!

இதெல்லாம்தான் ஆரோபம்.

இதை புரிஞ்சு கொண்டு இது எல்லாம் உண்மை இல்லைன்னு உறுதியா தெரிகிறது அபவாதம்.
நமக்கு இங்கே முக்கியமானது ஆரோபத்தால நாம் கட்டுப்படுகிறோம். அபவாதத்தால நாம் விடுலை அடையறோம் என்கிறதுதான்.

26.
அத்தியாரோபமென்று மபவாதமென்றுஞ் சொல்லும்
உத்தியாற்பந்தம் வீடென்றுரைக்கும் வேதாந்தமெல்லாம்
மித்தையாமா ரோபத்தாற் பந்தமாம பவாதத்தான்
முத்தியா மிவ்விரண்டின் முந்தியா ரோபங்கேளாய்

அத்தியாரோபம் என்றும் அபவாதம் என்றும் சொல்லும் உத்தியால் பந்தம், வீடு என்று உரைக்கும் வேதாந்தமெல்லாம். மித்தையாம் (இல்லாத) ஆரோபத்தால் பந்தமாம். அபவாதத்தால் முத்தியாம். இவ்விரண்டில் முந்தி ஆரோபம் கேளாய்.

27.
ஆரோப மத்தியாசங் கற்பனையாவ வெல்லாம்
ஓரோர்வத்துவினில் வேறேயோர் வத்துவினை யோர்தல்
நாரூடுபணியாத் தோன்ற னரனாகிக்தறியிற் றோன்றல்
நீரூடுகானற் றோன்ற னிறந்தலம் வெளியிற் றோன்றல்

ஆரோபம் அத்தியாசம் கற்பனை ஆவவெல்லாம் (ஆகியவை எல்லாம்), ஓரோர் வத்துவினில் வேறே ஒர் வத்துவினை ஓர்தல் (உணர்தல்). நார் ஊடு (கயிறில்) பணியாய் (பாம்பாய்) தோன்றல். நரனாகி (மனிதனாக) தறியில் (கட்டையில்) தோன்றல். கானல் ஊடு நீர் தோன்றல், வெளியில் (ஆகாயத்தில்) நிறம் தலம் கரு/நீலநிறம், கூடாரம் போன்ற இடம்) தோன்றல்.

Tuesday, January 20, 2009

தெரிந்த ஒன்றை தொடர்ந்து போய் தெரியாத ஒன்று.....



இப்ப சீடனுக்கு கொஞ்சம் அடக்கம் வந்துடுச்சு. நனவில என்ன பாக்கிறேன் தெரியும்; தினமும் கனவு காண்கிறேன், அதுவும் தெரியும். தூக்கத்திலே கனவு கூட இல்லாம ஆனந்தமா இருந்து இருக்கேனே? அதுவும் தெரியும். அட அது ஆனந்தமா இருந்ததே அதிலேயே இருந்துட்டா என்னன்னு நினைச்சா அப்படி இருக்க முடியலியே! நனவிலே அதே ஆனந்தத்திலே இருக்கவும் முடியலியே? உடம்புதான் நாம்னா அப்படி முடியணுமே? சில சமயம் அந்த ஆனந்தம் வந்து, அப்படியே இருக்க முயற்சி பண்ணும்போதே மறைஞ்சும் போயிடுதே?

இப்படி சொல்லி மேலே நான் யார்ன்னு உபதேசம் பண்ணுங்கன்னு கேட்கிறான்.

24.
நனவுகண்டது நான்கண்ட நனவுள நினைவுநீங்கிக்
கனவுகண்டதுஞ் சுழுத்தி கண்டதும் வேறொன்றேபோல்
தினமனுபவித்த தொக்கு தெரியவுமில்லை சற்றே
மனதினி லுதிக்கும் பின்னை மறைக்கும தருளுவீரே

[சாக்கிரத்தில்] நனவு கண்டதும், நான் கண்ட நனவுள (சாக்கிரத்தின்) நினைவு நீங்கி கனவு கண்டதும், சுழுத்தி கண்டதும் வேறு ஒன்றே போல் தினம் அனுபவித்தது ஒக்கும். (தினமும் அநுபவிப்பதால் பொருந்தும்) [ஆனால் அந்த அநுபவத்தில் இரு எனில், அது நன்றாக எப்போதும்] தெரியவுமில்லை. [உபதேசத்தின் பொழுது] சற்றே மனதினில் உதிக்கும். பின்னை (அஞ்ஞானம்) மறைக்கும். அது அருளுவீரே! (தேகியின் சொரூபம் எப்போதும் விளங்கும்படி உபதேசிப்பீராக)

வெளியூர்லே வீட்டுக்கு வெளியே இருக்கோம். பக்கத்தில இருக்கிறவர் ¨ஓ, இன்னிக்கு மூணாவது திதியா? அதோ சந்திரன்!¨ அப்படிங்கிறார். சாதாரணமா இந்த மூன்றாம் பிறை நல்லா தெரியாது. அதுவும் ரெண்டாம் திதி பகல்ல முடிஞ்சு மூணாவது வந்துட்டா துர்லபம்தான். சூரியன் மறைஞ்சு அதிக நேரம் ஆகி இருக்காது; வெளிச்சம் இன்னும் இருக்கும். அதனால சந்திரன் அந்த நேரத்திலே எங்கே இருக்குன்னு தெரிஞ்சாலே ஒழிய பார்க்கிறது கஷ்டம். உள்ளூர்னா அனேகமா அது எங்கே இருக்கும்ன்னு தெரிய வாய்ப்பு இருக்கு. வெளியூர்னா யாரான காட்டினாதானே முடியும்? அப்ப ¨எங்கே இருக்கு?¨ ன்னு பக்கத்திலே இருக்கிறவரை கேக்கிறோம். மெலிசா தெரியற இதை எப்படி காட்டறது? அவர் சொல்கிறார். ¨அதோ ஆல மரம் இருக்கு இல்லே? அதன் கிளை வலதுபக்கமா பெரிசா இருக்கே; அதுல மேல் பக்கமா ஒரு கிளை போறதே; அதன் நுனில பாருங்க.¨ என்கிறார். நாமும் அப்படியே பாத்து ¨அட இதோ இருக்கு¨ ன்னு சொல்லி ஆயிரம் பிறையில ஒண்ணாவது பாத்தோம்ன்னு மகிழ்ந்து போறோம்.

திருமணம் ஆகிறது. இரவு அருந்ததி தரிசனம் செய்யணும். அதுக்கு சினிமா நக்ஷத்திரத்தை மட்டும் பாத்து பழக்கமானவங்களுக்கு எப்படி உண்மையான நக்ஷத்திரத்தை காட்டறது? காட்டுகிறவர் நல்லா தெளிவா பிரகாசத்தோட இருக்கிற ஒரு நக்ஷத்திரத்தை அடையாளம் காட்டி அப்புறமா அதிலேந்து வழி காட்டுவார். (நாலு நாள் திருமணம் இப்ப 4 மணி நேரத்திலே நடக்கிறதாலே இதை -பேருக்கு- பகலிலேயே செய்து வைக்கறதால ப்ளாக்கிலே கேலிக்கு இலக்கா போச்சு!)

இப்படி அடையாளம் காட்டுவது போல அதாவது தெரிந்த ஒன்றை தொடர்ந்து போய் தெரியாத ஒன்றை பிடித்துக்கொள்வது போல தெரிந்த விஷயங்களை சொல்லி அதன் மூலமா உபதேசம் செய்ய ஆரம்பிக்கிறார் குரு. முதல்லே கண்ணுக்கு தெரியற ஸ்தூலமான இந்த உலகத்தை காட்டறார்.

25.
தாலத்தின் மரங்கள் காட்டித் தனிப்பிறை காட்டுவார்போல்
ஆலத்தினுடுக்கள் காட்டி யருந்ததி காட்டுவார்போல்
தூலத்தை முன்புகாட்டிச் சூக்கும சொரூபமான
மூலத்தைப் பின்புகாட்ட முனிவரர் தொடங்கினாரே

தாலத்தின் (பூமியில்) மரங்கள் (மரங்களின் கிளை நுனியை) காட்டி தனி பிறை (சரியாக தெரியாத மூன்றாம் பிறை நிலவை) காட்டுவார் போல்; ஆலத்தின் (ஆகாயத்தின்) உடுக்கள் (நக்ஷத்திரங்கள்) காட்டி, [அதன் மூலமாக சரியாக தெரியாத நக்ஷத்திரமான] அருந்ததி காட்டுவார் போல்; தூலத்தை (கண்ணுக்கு தெரியும் சீவ ஈஸ்வர ஜகத்தை) முன்பு காட்டி சூக்கும சொரூபமான மூலத்தை (அனைத்துக்கும் மூலமான பிரமத்தை) பின்பு காட்ட முனிவரர் (மகா மௌனம் உடையவர்) தொடங்கினாரே.

Monday, January 19, 2009

தூக்கத்தில் நாம் யார்?



22.
¨அப்படி இல்லைப்பா. இதுதான் உடம்பு. இவன் உடம்புக்குள்ளே இருக்கிறவன் அப்படின்னு யார் தெளிவா தெரிஞ்சு கொண்டு இருக்காங்களோ அவங்கதான் தன்னை உண்மையா அறிஞ்சவங்க¨ ன்னு சொல்கிறார் குரு.
அதுக்கு சீடன். ¨அட என்னங்க இப்படி சொல்கிறீங்க? இந்த உடம்புதானே இருக்கு? உடம்புக்குள்ளே இருக்கிறவன்னு ஒத்தன் யார் இருக்கான்? ¨ என்கிறான். இதை கேட்டு குரு வருத்தத்தோட சிரிக்கிறார்.


இன்னது தேகந்தேகி யிவனெனவுணர்வன் யாவன்
அன்னவன் றன்னைத்தா னென்றறிந்தவனாகு மென்றார்
சொன்னபின் றேகியாரித் தூலமல்லாம லென்றான்
பின்னது கேட்டவையர் பீடையும் நகையுங்கொண்டார்.

இன்னது (ஸ்தூலமான= பருப்பொருளான) தேகம், [இவற்றுக்கு விலட்சணமாக இவற்றை அறியும்] தேகி இவன் என உணர்வன் யாவன்? அன்னவன் (அப்படிப்பட்டவனே) தன்னை தானென்று அறிந்தவன் ஆகும் என்றார். சொன்ன பின் இத் தூலமல்லாமல் தேகி [வேறு] யார் என்றான். பின்னது கேட்ட ஐயர் (ஆசிரியர்) பீடையும் (வருத்தமும்) நகையும் கொண்டார்.

தூங்கப்போயிடறோம். உடம்பு கட்டையாட்டம் படுக்கையிலே இருக்கு. அப்ப கனவு காண்கிறோம். அதிலே நாம் இருக்கிறோம். இன்னும் பல பேர் இருக்காங்க. ஏதேதோ நடக்குது. அப்புறம் நாம் முழிச்சிக்கிறோம். இப்படி இப்படி எல்லாம் பாத்தேன் அப்படின்னு சொல்கிறோம். அட உடம்புதானே நாம்ன்னு நினைச்சோம். அது செயலத்து கிடக்க இப்ப இதெல்லாம் பாத்தது யார்?

எல்லாருமே கனவு காண்கிறோம். ஜீவா மாதிரி சிலர்தான் அதை ஞாபகம் வெச்சுக்கிறாங்க. பெரும்பாலும் தூக்கம் கலையும்போதே அதையும் மறந்துடுவோம். கனவு காணும்போதே முழிப்பு வந்தா அதைதான் ஞாபகம் வைக்க முடியும். அதையும் உடனே செய்யலைனா அதுவும் கூட மறந்துடும். சரி, அது கிடக்கட்டும். கனவு காணலைன்னே வெச்சுப்போம். அப்பா, சொகமா நல்ல தூக்கம் தூங்கினேன்; ஒரு கனவு கூட கிடையாதுன்னு சொல்கிறோம்.

விஞ்ஞானமும் இப்படி தூங்கறோம்ன்னு ஒத்துக்கொள்ளுது. சாதாரணமா ஒத்தர் தூங்கும்போது கனவு காணறார்ன்னா அவர் கண்களை பாத்தே சொல்லிடலாம். கண்கள் இப்படியும் அப்படியும் நகரும். இமை வழியா கண் அசைவு தெரியும். இதை rem தூக்கம் என்கிறாங்க. இப்படி இல்லாம தூங்குகிறது non -rem தூக்கம். இதிலே நாம் சொல்லக்கூடிய எதையும் பாக்கிறதில்லே.

இப்படி சொல்லக்கூடியது ஒண்ணும் பாக்கலைனாலும் சுகமா கனவு கூட இல்லாம தூங்கினேன் ன்னு சொல்கிறோமே? அப்படி தூங்கினதை அறிஞ்சு கொண்டது யார்?

இப்படி உடல் தான் இல்லைனா முழிப்பு இருக்கிறப்ப நான் ன்னு நினைக்கிறது யாரை?

¨ஓஹோ, உடம்புதான் இருக்கா? அதுக்கு வேறா ஒண்ணுமே இல்லையா? ¨
23.
தேகமல் லாமல் வேறே தேகியார் காணே னென்றாய்
மோகமாங் கனவில் வந்து முளைத்திடு மவனார் சொல்வாய்
சோகமாங் கனவு தோன்றாச் சுழுத்தி கண்டவனார் சொல்வாய்
ஆகநீ நனவி லெண்ணு மறிவுதா னேது சொல்வாய்.

தேகமல்லாமல் (அனுபவத்தில் தேகமே தான் என்பதற்கு பொருள் அல்லாமல்) வேறே (அன்னியமாக) தேகி யார் காணேன் என்றாய். [அப்படியானால் சரீரம் சேட்டை அற்று கிடக்க] மோகமாம் (நித்திரா மயக்க அறிவினால்) கனவில் (மாறுபட்டு) வந்து முளைத்திடும் (இருப்பு முதலியவற்றை அறியும்) அவன் யார் சொல்வாய். [இந்த] சோகமாம் கனவு தோன்றாச் சுழுத்தி (கனவில்லா ஆழ் துயில்) [சூன்யமாக] கண்டவன் யார் சொல்வாய். [ஸ்வப்ன, சுசுப்தியில் பிரேதம் போல கிடந்த இந்த உடலை] நீ ஆக நனவில் (ஜாக்ரத்தில்) எண்ணும் அறிவுதான் (பிரக்ஞைதான்) ஏது சொல்வாய்.

இந்த கனவு, கனவில்லா ஆழ் துயில், நனவு (ஸ்வப்னம், சுசுப்தி, ஜாக்ரத்) ஆகியன அவஸ்தா த்ரயம் எனப்படும்.

Friday, January 16, 2009

ரொம்ப சுலபம்....




மேலும் உபதேசம் தொடருது.
¨ ரொம்ப சுலபம் அப்பா! தன்னையும் தனக்கு யார் தலைவன் அப்படின்னும் உண்மையா பாத்துட்டா, அட! நானேதான்டா அந்த தலைவனும் ன்னு புரிஞ்சு கொண்டு பிரமமா ஆகிடுவான். அவ்ளோதான். நீ யார்ன்னு உண்மையா நீ புரிஞ்சுகொண்டால் உனக்கு ஒரு கேடும் கிடையாது. உபதேசம் பண்ணுன்னு கேட்டுக்கொண்டதாலே செய்துட்டேன்.¨ என்கிறார்.

20.
தன்னையுந் தனக்காதாரத் தலைவனையுங் கண்டானேல்
பின்னையத் தலைவன்றானாய்ப் பிரமமாய் பிறப்புதீர்வன்
உன்னைநீ யறிவாயாகில் லுனக்கொரு கேடுமில்லை
என்னைநீ கேட்கையாலே யீதுபதேசித்தேனே.

தன்னையும் (சீவனையும்) தனக்காதார தலைவனையும் (கூடஸ்தனையும்) கண்டானேல் (தரிசிக்கில்), பின்னை அத் தலைவன் தானாய் பிரமமாய் [உணர்ந்து] பிறப்பு தீர்வன். உன்னை நீ அறிவாயாகில் உனக்கொரு கேடுமில்லை. என்னை நீ கேட்கையாலே ஈது உபதேசித்தேனே.

உபதேசம் கேட்டு சீடனுக்கு கொஞ்சம் நம்பிக்கை போயிடுது. ¨ஞானம் கிடைக்கும்ன்னு உங்களையே நம்பி இல்லே வந்தேன்? நான் முட்டாள்ன்னு நினைச்சா இப்படி சொல்லறீங்க? தான் யார்ன்னு தெரியாத ஆசாமி இந்த உலகத்திலே இருக்காங்களான்ன? அவங்க திருப்பி திருப்பி பிறந்து கஷ்டப்படலையா? முடிவா சொல்லுங்க¨ ன்னு கேட்கிறான்.

21.
என்னைத்தான் சடனாவுள்ளத் தெண்ணியோ சொன்னீரையா
தன்னைத் தானறியா மாந்தர் தரணியி லொருவருண்டோ
பின்னைத் தானவர்களெல்லாம் பிறந்திறந் துழலுவானேன்
நின்னைத் தானம்பினோற்கு நிண்ணய மருளுவீரே

என்னைத்தான் சடனாய் (மூடனாக) உள்ளத்து எண்ணியோ சொன்னீரையா? தன்னை தான் அறியா மாந்தர் தரணியில் (பூமியில்) ஒருவர் உண்டோ? பின்னை அவர்களெல்லாம் பிறந்து இறந்து உழலுவானேன்? நின்னை நம்பினோற்கு நிண்ணயம் அருளுவீரே.



Thursday, January 15, 2009

உபதேசம் ஆரம்பம்



சீடர்களுக்கு இருக்கிற மட்டத்துக்கு தகுந்த உபதேசம்தானே செய்யணும்? எடுத்த எடுப்பிலே ஞான மார்க்கத்தை காட்ட முடியுமா? அதுக்கு தேவையான வளர்ச்சி இல்லைனா குழம்பி இல்லே போயிடுவாங்க? அதனாலே அவங்களை ஸ்டடி செய்ய கொஞ்ச நாள் ஏதாவது வேலை செய்து கொண்டு தன்னோட இருக்க வைத்து அப்புறம்தான் உபதேசம் நடக்கும்.

வந்து சேர்ந்த சிஷ்யனை முதலில் எந்த மட்டத்திலே இருக்கான்னு சோதித்து பார்க்கிறார். ¨பரவாயில்லை. வைராக்கியம் வந்துவிட்டது. ஆசை முதல் எல்லாத்தையும் கண்ட்ரோல்ல வெச்சு இருக்கான். ஞானத்துக்கு தீவிர நாட்டம் வந்துவிட்டது.¨ இப்படி கண்டுகொள்கிறார்.

முன்னே மீன், ஆமை, பறவை பற்றி சொன்னது போல இன்னும் ஒண்ணு குளவி. அதோட கூட்டுக்குள்ளே இருக்கிற அதன் லார்வா குளவியாக அது அடிக்கடி கூட்டின் பக்கத்திலே வந்து ஹெலிகாப்டர் போல் பறக்கும். அதன் அதிர்வு குளவிக்குஞ்சை முதிர்ச்சியாக்கும். அதுபோல குருவும் சிஷ்யனை இனம் பார்த்துக்கொண்டு உபதேசம் செய்கிறார். உடம்புதான் கூடு. உபதேசம் உள்ளே இருக்கிற ஜீவாத்மாவுக்குத்தான். குருவின் ரீங்காரத்தை கேட்டு கேட்டு அது முதிரணும்.

¨வா குழந்த. யார் தன்னோட உண்மையான சொரூபம் எதுன்னு மறந்ந்து போயிட்டாங்களோ அவங்கதான் திருப்பி திருப்பி பிறந்து கஷ்டப்படுவாங்க. எப்போ தான் யார்ன்னு ஞானத்தால புரிஞ்சுக்கிறாங்களோ அதுவரைக்கும்தான் இந்த கஷ்டம்.¨ அப்படிங்கிறார்.
18.
அடங்கிய விருத்தியானென் றறிந்தபின் செறிந்த மண்ணின்
குடம்பையுட் புழுமுன்னூங் குளவியின் கொள்கை போலத்
தொடங்கிய குருவுமான்ம சொரூபமே மருவவேண்டி
உடம்பினுட் சீவனைப்பார்த் துபதேச மோதுவாரே

அடங்கிய விருத்தியான் (இராகம் முதலான விருத்திகள் ஒடுங்கியவன்) என்று [சோதித்து] அறிந்த பின் செறிந்த (நெருங்கிய) மண்ணின் குடம்பையுள் (கூட்டுள்) புழு முன் ஊதும் (சப்திக்கும்) குளவியின் கொள்கை (தன்மை) போலத் தொடங்கிய குருவும் ஆன்ம சொரூபமே மருவவேண்டி (அடையும் படி) உடம்பினுள் சீவனைப் பார்த்து உபதேசம் ஓதுவாரே.

19.
வாராயென்மகனே தன்னை மறந்தவன் பிறந்திறந்து
தீராதசுழற்காற் றுற்றசெத்தை போற்சுற்றிச் சுற்றி
பேராத காலநேமிப் பிரமையிற் றிவன்போதம்
ஆராயுந் தன்னைத்தா னென்றறியுமவ் வளவுதானே

வாராய் என் மகனே! தன்னை [உண்மைசொரூபத்தை] மறந்தவன் பிறந்து இறந்து, தீராத சுழற் காற்று உற்ற (அகப்பட்ட) செத்தை போல் சுற்றிச்சுற்றி பேராத (பெயராத) காலநேமி (காலச்சக்கரம்) பிரமையில் திரிவன். போதம் ஆராயும் (ஞானத்தால் அறியும்) தன்னை, தான் என்று அறியுமவ்வளவுதானே (அறியும் வரைக்கும்தானே).


Wednesday, January 14, 2009

குருவிடம் சரண்



என்ன, பால் பொங்கித்தா உங்க வீட்டிலே? வாழ்த்துக்கள்!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
இப்படி வந்து விழுந்த ஆசாமியை பாத்து பெரியவருக்கு ரொம்ப கருணை பொங்கிடுது. ஒரு அம்மா குழந்தையை பாக்கிற மாதிரி வாத்ஸல்யத்தோட பாக்கிறார்.

சில சமயம் சாப்பிடறப்ப புரையேறிடும். அம்மா தலைல தட்டிக்கொடுத்து யாரோ உன்னை நினைச்சுக்கிறாங்க என்பாங்க. நாமே சில சமயம் யாரையோ சந்திக்கணும்ன்னு நினைச்சு கொண்டே இருப்போம். அப்புறம் அவரை பாக்க வெளியே கிளம்புவோம். அவரே எதிரே வருவார். என்னன்னு கேட்டா இல்லை, சும்மா. உன்னை பாக்க தோணித்து என்பார்.

சில சமயம் ஏதோ ஒரூ கூட்டத்திலே அமர்ந்து இருக்கிறோம். ஏதோ குறு குறூங்குது. யாரோ நம்மை கவனிக்கிறா மாதிரி ஒரு உணர்வு. திரும்பி பாத்தா நிஜமாவே ஒத்தர் நம்மை பாத்துகிட்டே இருப்பார். அது எப்படி தெரிஞ்சது? அது ஒரு உள்ளுணர்வு.

அதே போல தொடுதல் என்கிறதும் ஒரு சக்தி உள்ள செய்கை. ராமனை காட்டுக்கு அனுப்ப என்ன என்னவோ கூனி கைகேயிகிட்ட சொல்லி பாத்தாளாம். ¨அட! என் மகனுக்கு இல்லே பட்டம் கட்டப்போறாங்க¨ ன்னு சொல்லிட்டாள் கைகேயி. கடேசிலே அவளை தொட்டு பேசினாளாம் கூனி. கைகேயி மனசு மாறிட்டது.
மருத்துவர்கள் ¨கவலைப்படாதே உடம்பு சரியாயிடும்¨ ன்னு தட்டிக்கொடுக்கிறது, கைகுலுக்கறது எல்லாம் இந்த அடிப்படையிலே வந்தவைதான். ஓ! கட்டுப்பிடி வைத்தியம்ன்னு ஒண்ணு இருக்கு இல்லே? :-))

கடல் ஆமை முட்டையை கரையிலே போட்டுவிட்டு கடலுக்குள்ள போயிடும். அப்புறம் ஆமை முட்டையிலே இருக்கிற தன் குஞ்சையே நினைக்குமாம். இதனாலேயே அது வளர்ந்து அசைந்து முட்டையை உடைச்சுகொண்டு வெளிவருமாம். மீன் முட்டைகள் இட்டுவிட்டு அதையே பாத்துக்கொண்டு இருக்கும். பாதுகாப்பா சுத்தி சுத்திவரும். கொஞ்ச நாள்ள அது எல்லாம் பொரிஞ்சு மீன் குஞ்சுகள் வெளியே வரும். பறவைகள் எடுக்கும் நடவடிக்கை இன்னும் கொஞ்சம் அதிகம். அவை முட்டைகள் மேலேயே உக்காந்து அடை காக்கும். முட்டை உடைஞ்சு குஞ்சு வெளிவரும்.

இப்படி உயிரினங்கள் தன் அடுத்த வாரிசு வெளிவர செய்கிறது போல இந்த ஞான ஆசிரியர் வந்த சிஷ்யனை கருணையோட நினைத்து, பார்த்து, தடவிக்கொடுத்து பக்கத்திலே உக்காத்தி வெச்சுக்கிறார். ¨மீண்டும் மீண்டும் பிறப்பு என்கிற இந்த துன்பம் போக ஒரு வழி இருக்குப்பா. அதை கேட்டு வழி நடந்தா உனக்கு எப்பவும் கூடவே வர சம்சாரம் என்கிற கஷ்டம் போயிடும்¨ என்கிறார். வந்த சிஷ்யனுக்கு இதை கேட்டதுமே மான்சரோவர்ல முழுகி எழுந்தாப்பலே உடலும் உள்ளமும் குளிர்ந்து போச்சு! திருப்பியும் ஆசிரியரை வணங்கி, ¨நீங்க சொல்லபோகிறது எனக்கு புரியுமோ புரியாதோ; செய்ய முடியுமோ முடியாதோ எப்படி இருந்தாலும் என்னை நீங்கதான் கருணை வெச்சு கடைத்தேத்தணும். உபாயம் இருக்குன்னு சொன்னீங்களே அது என்ன?¨ அப்படின்னு கேக்கிறான்.

15.
அன்னைதன் சிசுவையைய னாமைமீன் பறவை போலத்
தன்னகங் கருதி நோக்கித் தடவிச்சந் நிதி யிருத்தி
உன்னது பிறவி மாற்று முபாயமொன் றுண்டு சொல்வேன்
சொன்னது கேட்பாயாகிற்றொடர் பவந்தொலையு மென்றார்.

அன்னை (யை ஒத்த) ஐயன் தன் சிசுவை (சீடனை) ஆமை போலத் தன்னகம் தன்னுள்ளத்தில்) கருதி (சிந்தித்து), மீன் போல நோக்கி, பறவை போல தடவி சந்நிதி (எதிரில்) இருத்தி, உனது பிறவி [துன்பத்தை] மாற்றும் உபாயம் ஒன்றுண்டு சொல்வேன். சொன்னது கேட்பாயாகில் தொடர் பவம் (அனாதியாக தொடர்ந்து வரும் சம்சார துன்பம்) தொலையும் என்றார்.

16.
தொடர்பவந் தொலையுமென்று சொன்னதைக் கேட்டபோதே
தடமடு மூழ்கி னான்போற் சரீரங் குளிர்ந்துள் ளாறி
அடருமன் பொழுகு மாபோ லானந்த பாஷ்பங் காட்டி
மடன்மலர்ப் பாத மீண்டும் வணங்கிநின் றீதுசொல்வான்.

தொடர் பவம் தொலையும் என்று சொன்னதைக் கேட்ட போதே, தட (விசாலமான) மடு மூழ்கினான் போல் சரீரம் குளிர்ந்து, உள்ளாறி அடரும் அன்பொழுகுமா போல் (நிறைந்த அன்பானது பொங்கி வழிவது போல) ஆனந்த பாஷ்பங் காட்டி, மடல் (இதழ்)[உள்ள தாமரை போன்ற] மலர்ப்பாதம் மீண்டும் வணங்கி நின்று ஈது (இதனை) சொல்வான்.

17.
சொன்னது கேட்கமாட்டாத் தொண்டனானாலுஞ் சுவாமி
நின்னது கருணையாலே நீரென்னை யாளலாமே
உன்னது பிறவிமாற்று முபாயமொன்றுண் டென்றீரே
இன்ன தென்றதைநீர் காட்டியீடேற்றல் வேண்டுமென்றான்.

சொன்னது கேட்க மாட்டா (உபதேசித்ததை அப்பியாசிக்காத) தொண்டன் ஆனாலுஞ் சுவாமி, நின்னது கருணையாலே நீர் என்னை (இரட்சித்து) ஆளலாமே. உன்னது பிறவி மாற்றும் உபாயம் ஒன்று உண்டு என்றீரே. இன்னது என்றதை நீர் காட்டி ஈடேற்றல் வேண்டுமென்றான்.


Tuesday, January 13, 2009

குருவை சரணடைதல்



13.தீவிரமுற்ற பக்குவன் என் செய்தான்?

ஆனவிம் மனைவி மக்க ளர்த்தவே டணைகண் மூன்றில்
கானவர் வலையிற் பட்டுக் கைதப்பி யோடு மான்போற்
போனவன் வெறுங் கையோடே போகாத வண்ணஞ் சென்று
ஞானசற் குருவைக் கண்டு நன்றாக வணங்கி னானே.

இம் மனைவி, மக்கள், அர்த்தம் (செல்வம்) ஆன [ஆகிய] ஏடணைகள் (ஆசைகள்) மூன்றில் (ஈஷணாத் திரயம்) கானவர் (வேடர்) வலையில் பட்டு (சிக்கி) கைதப்பி (பின் கைவசமாகாமல்) ஓடும் மான் போல் போனவன் வெறும் கையோடே போகாத வண்ணஞ் சென்று ஞான சற்குருவைக் கண்டு நன்றாக வணங்கினானே.
--
ஞான வழிலே குரு முக்கியம். நாமா என்னதான் யோசனை செய்தாலும் ஓரளவுக்கு மேலே சிந்திக்க முடியாது. நாம யோசிச்சு யோசிச்சு ¨கண்டு பிடிச்சதெல்லாம்¨ சரிதானா இல்லையா ன்னு சொல்லக்கூடியவர் அவர்தான். மேலே சரியான வழியை காட்டக்கூடியவரும் அவர்தான். (குருன்னு இல்லாம சரியான நேரத்துக்கு ¨மார்கதர்சி - வழிகாட்டி¨ கூட பகவான் அனுப்பி வைக்கலாம். நல்ல குருன்னு எல்லாம் ஒண்ணும் இல்லை. சரியான குருவான்னு தான் பாக்கணும். ஒவ்வொத்தருக்கு குரு ஒவ்வொத்தர் இருப்பார். ஒத்தருக்கு குருவா இருக்கிறவரே இன்னொருத்தருக்கும் இருக்கணும்ன்னு அவசியம் இல்லே.

தெய்வம், ராஜா, குரு, குழந்தை தினசரி ஹோமம் செய்கிறவர்கள் முதலானோரை வெறும் கையோடு பார்க்க போகக்கூடாது என்பது சாத்திரம்.. அவர்களுக்கு பயன் படுவதாக ஏதேனும் கொண்டு செல்ல வேண்டும். கோவில்னா பூ, ராஜான்னா பழங்கள்; குழந்தைக்கு சாப்பிடக்கூடியது ஏதேனும், ஹோமம் செய்கிறவருக்கு சமித்து இப்படி....

ஈஷணா - ஆசைகள் மூணு- முன்னேயே பாத்து இருக்கோம், இல்லையா?
வேடன் வலையிலேந்து தப்பி ஓடற மானைப்போலன்னு உவமை சொல்கிறார்!
உலக வாழ்க்கை மேலே இப்படி வெறுப்பு வரணும். அப்ப தேடல் தீவிரமா இருக்கும்!

14.

வணங்கிநின் றழுதுசொல்வான் மாயவாழ் வெனுஞ்சோகத்தால்
உணங்கினே னையனேயென் னுள்ளமே குளிரும் வண்ணம்
பிணங்கிய கோசபாசப் பின்னலைச் சின்னமாக்கி
இணங்கிய குருவே யென்னை யிரட்சித்தல் வேண்டு மென்றான்.

வணங்கி நின்று அழுது சொல்வான்: மாய வாழ்வெனும் சோகத்தால் உணங்கினேன் (வாடினேன்) ஐயனே, என் உள்ளமே குளிரும் வண்ணம் பிணங்கிய (ஒன்றினில் ஒன்றாய் நெருங்கிய) [பஞ்ச]கோச பாசப் பின்னலை சின்னமாக்கி (சிதைத்து) இணங்கிய குருவே என்னை இரட்சித்தல் வேண்டும் என்றான்.
--
ஆசாமி நிறையவே படிச்சு இருக்காரு இல்லே? பஞ்சகோசம் எல்லாம் படிச்சு கொண்டு அலசி, ஆராய்ஞ்சு, ஒண்ணும் உதவாதுன்னு இப்ப குருவை தேடி வந்து கால்ல விழுந்துட்டார்! இந்ந்த பஞ்ச கோசம்ன்னா என்னன்னு கேட்டா -கொஞ்சம் பொறுங்க. பின் பதிவு ஒண்ணுல இதெல்லாம் வரும். வணங்கினவருக்கு உணர்ச்சி பெருக்கு. ஒரு வழியா சரியான குருவை பிடிச்சுட்டோம் போல இருக்கேன்னு பெரிய ஆறுதல். அழுகை தானா வருது.
(கலைச்சொல்) பஞ்சகோசம்: ஐந்து உறைகள். அன்னமய, பிராணமய, மனோமய, விஞ்ஞானமய, ஆநந்தமய கோசங்கள். மனிதன் இவ்வைந்து கோசங்கள் உள்ளவனாக சொல்லப்படுகிறான்.



Monday, January 12, 2009

கலைச்சொற்கள்



தாப த்ரயம் = தவனம் -துன்பங்கள்- மூன்று- -1. ஆதியாத்மிகம்: இந்திரியங்களாலும், (உடல் சம்பந்தப்பட்ட வயிற்று வலி, சிரங்கு, கண்வலி போன்ற துன்பங்கள் )
2.ஆதி தெய்விகம்: புவன தெய்வங்களாலும் (பனி, மழை, காற்று முதலியவை, சுவர் இடிந்து விழுதல், மரம் முறிந்து விழுதல் போன்ற தெய்வச்செயல்களாலும்),
3.-ஆதிபௌதிகம்: பூத பௌதிகங்களாலும் (மற்ற மனிதர், விலங்குகள் போன்றவற்றாலும்) விளையும் துன்பங்கள்.

ஈஷணாத் திரயம்: ஆசைகள் மூன்று. மனைவி,மக்கள், பொருள்.

பஞ்சகோசம்: ஐந்து உறைகள். அன்னமய, பிராணமய, மனோமய, விஞ்ஞானமய, ஆநந்தமய கோசங்கள். மனிதன் இவ்வைந்து கோசங்கள் உள்ளவனாக சொல்லப்படுகிறான்.

அவஸ்தா த்ரயம்
கனவு, கனவில்லா ஆழ் துயில், நனவு (ஸ்வப்ன, சுசுப்தி, ஜாக்ரத்) ஆகியன அவஸ்தா த்ரயம் எனப்படும்.

ஞான இந்திரியங்கள் ஐந்து:

காதின் கேட்டல்
தோலின் தொடுணர்ச்சி
கண்களோட பார்த்தல்
நாக்கோட ருசித்தல்
மூக்கின் நுகர்தல்


கர்ம இந்திரியங்கள் ஐந்து:
1.வாக்
2.கை
3.கால்
4.பாயுரு
5.உபஸ்தம் - ஆண் குறி/ பெண் குறி

பஞ்ச ப்ராணன்கள்.
பிராணன் முதலான வாயுக்கள் 5.
1.வியானன்
2.பிராணன்
3.அபானன்
4.சமானன்
5.உதானன்



யாருக்கு ஞான வழி?



ஒத்தர் ஒரு வேலையை சரியா செய்யணும்னா அதுக்கான தகுதி இருக்கணும் இல்லையா? ஞான வழியிலே போக என்ன தேவைன்னு இதுவரை படிகளை பாத்தோம். இது நமக்கு இப்ப இருக்கோ இல்லையோன்னு சந்தேகம் வேண்டாம். இந்த பதிவுகளை எழுதற எனக்கு இன்னும் ஞானம் வரலை. படித்து முடித்த பின்னும் எல்லாருக்கும் வந்துவிடாது. ஆனா இது இவ்வளவு வேகத்திலே- கால கட்டத்திலே வரும் வாராதுன்னு ஒரு நியதியும் கிடையாது. எப்ப வேணா வரலாம். அதனால தியரிடிகலா இது என்னன்னு தெரிந்துகொண்டா பின்னால சிலது சௌகரியமா இருக்கலாம். அதுக்காக இப்ப படிப்போம்.

விட்டதை பிடிக்க - ஞான வழிக்கு தேவை சித்த சுத்தி. இந்த சித்த சுத்தி சுலபமா கிடைக்கிறது கர்ம வழியை பின்பற்றுவதாலே. பக்தி ஒத்தருக்கு முதல்லேயும் சரி கடைசியிலேயும் சரி கட்டாயமா வேணும் என்கிறதையும் பாத்து இருக்கோம். ஈஸ்வரன் மேலே அன்பை திடமா வைத்து கொண்டு மனசை அடக்குகிறதுன்னு ஒவ்வொண்ணா செய்து கொண்டு போகணும். ¨ஞான வழி ஆராய்ச்சிதான் நம்ம முதல் கட்டாய தொழில். மத்தது எல்லாம் உலக விஷயங்கள்: இந்த சரீரத்தை காப்பாத்த ஜீவனத்துக்கு செய்கிறது¨ என்கிற உறுதி இருக்கணும். எவ்வளவுக்கு எவ்வளவு தீவிரமா இதை செய்கிறோமோ அவ்வளவுக்கு அவ்வளவு முக்தி கிட்டே இருக்கு. (அவரவரை பொருத்து). இந்த விஷயங்கள் எல்லார் புத்தியிலேயும் நுழையாது. யார் பல ஜென்மங்களா பலன் கருதா காரியங்களை செய்து சித்தம் சுத்தியாகி இருக்காங்களோ அவங்களுக்கு சட்டுன்னு பிடிபடும். மத்தவங்களுக்கு தாமதமா புரியலாம்.

இந்த சித்த சுத்தி இருக்கிறவன் மத்தபடி பணக்காரனோ ஏழையோ; இந்த ஜாதியோ, அந்த ஜாதியோ; ப்ரம்மச்சாரியோ, குடும்பஸ்தனோ - இதெல்லாம் ஒரு பொருட்டு இல்லை. மனப்பக்குவம் ஒண்ணுதான் விஷயம்.

இப்படி சித்த சுத்தி அடைஞ்ச ஒத்தன் மூணு துன்பங்களாலும் கஷ்டப்பட்டு ஓடி வந்து குருவை தேடி சரணாகதி செய்து உபதேசம் கேட்பதாக நூல் ஆரம்பிக்கிறது.

அதென்ன 3 துன்பம்?

1.பசி, தாகம், நம்ம புலன்களுக்கு கேடு - கண் சரியா தெரியலை, காது சரியா கேக்கலை, உடலுக்கு உள்ள நோய்கள் இப்டி இருக்கிறது சில துன்பங்கள். இதுக்கெல்லாம் பெயர் ஆதியாத்மிகம்.
2.மழை பெய்யறது, சுனாமி, இடி விழுகிறது, வெள்ளம்,விபத்துக்கள் இப்படி சிலது எல்லாம் இருக்கே. இதை ஆங்கிலத்துல act of god அப்படிம்பாங்க. தெய்வச்செயல்கள். இதெல்லாம் நம்ம கையிலே இல்லை. (ஆனா பெய்கிற மழையை இன்னும் பிரச்சினை ஆக்கிக்கொள்ள நமக்கு சாய்ஸ் இருக்கு!) இப்படி நிகழ்கிறதால வர துன்பங்கள் ஆதி தெய்விகம்.
3.திருடர்கள், கொலைகாரர்கள், மிருகங்கள், பாம்பு இது போல மத்த பிராணிகள் மூலமா நமக்கு துன்பங்கள் ஏற்படலாம். இது ஆதி பௌதிகம்.

இப்படி வருகிற சொற்களை எல்லாம் ஒரு பக்கத்திலே போட்டு ஒரு கலைச்சொல் அகராதி செய்யப்போகிறேன். தொடுப்பை பக்கத்திலே பாருங்க.

இந்த மூணு வகை துன்பங்கள் எல்லாருக்கும்தான் இருக்கும் இல்லையா? இதிலேந்து விடுபட நாம் எடுக்கிற முயற்சிதான் வேற வேற. பொதுவா நாம் செய்கிறதால கிடைப்பது தற்காலிக தீர்வுகள்தான்.

11.
சாதன மின்றி யொன்றைச் சாதிப்பா ருலகி லில்லை
ஆதலா லிந்த நான்கு மடைந்தவர்க் கறிவுண் டாகும்
நூதன விவேகி யுள்ளி னுழையாது நுழையுமாகில்
பூதசென் மங்கள் கோடி புனிதனாம் புருட னாமே

சாதனமின்றி ஒன்றைச் (ஒரு தொழிலை) சாதிப்பார் உலகில் இல்லை. ஆதலால் இந்த [சாதனங்கள்] நான்கும் அடைந்தவர்க்கு அறிவு (சொரூப ஞானம்) உண்டாகும். நூதன விவேகி உள்ளின் (மனதில்) [ஞானம்] நுழையாது. நுழையுமாகில் பூத சென்மங்கள் கோடி [-இல் சித்த சுத்தி அடைந்த] புனிதனாம் புருடனாமே.

12.
முன் கூறிய சாதனங்கள் நிறைந்த ஒருவன் அதிதீவிர பக்குவத்தை கூறல்
{இனி ஆசிரியர் ஒரு சீடனுக்கு உபதேசம் செய்வது போன்ற நடையில் நூல் செல்கிறது}

இவனதி காரி யானோ னிந்திரி யங்க ளாலும்
புவனதெய் வங்க ளாலும் பூதபௌ திகங்களாலும்
தவனமூன் றடைந்து வெய்யிற் சகித்திடாப் புழுப்போல் வெம்பிப்
பவமறு ஞானதீர்த்தம் படிந்திடப் பதறி னானே

இவன் [இந்த சாதனம் நான்கும் உடையவன்] அதிகாரியானோன். (இந்த நூலுக்கு அதிகாரியாவான்) இந்திரியங்களாலும், (உடல் சம்பந்தப்பட்ட வயிற்று வலி, சிரங்கு, கண்வலி போன்ற துன்பங்கள் -ஆதியாத்மிகம்) புவன தெய்வங்களாலும் (பனி, மழை, காற்று முதலியவை, சுவர் இடிந்து விழுதல், மரம் முறிந்து விழுதல் போன்ற தெய்வச்செயல்களாலும் -ஆதி தெய்விகம்), பூத பௌதிகங்களாலும் (மற்ற மனிதர், விலங்குகள் போன்றவற்றாலும் -ஆதிபௌதிகம்) தவன (தாபம்) மூன்று அடைந்து, வெய்யில் சகித்திடா புழு போல் வெம்பி பவம்அறு (பிறவி நீக்கும்) ஞான தீர்த்தம் படிந்திட (மூழ்க) பதறினானே (விரைந்தானே).


Friday, January 9, 2009

கைவல்லிய நவநீதம்-1



ப்ரம்மம் நிர்குணமாச்சே? அது எப்படி அனுக்கிரஹம் எல்லாம் செய்யும்? தன்னோடு தானாக ஐக்கியம் ஆக்கிக்கும்? அதுதானே மோக்ஷம்?

அப்படி கேள்வி கேட்காதே என்கிறாங்க! இங்கேதான் சிரத்தை வருது. குரு இப்படித்தான் சொல்லி இருக்கார். உபநிஷத் எல்லாம் இப்படித்தான் சொல்லி இருக்கு. அதன் மேலே நம்பிக்கை வைத்து மேலே போகணும். தேவையான அனுகிரஹம் செய்யும்போது குணத்தோட இருக்கிற ஈஸ்வரனா இருந்து ஐக்கியப்படுத்தும் போது உள்ளே குணமில்லா ப்ரம்மமா இருக்குன்னு எடுத்துக்கலாம்.

எப்படி இருந்தாலும் இங்கே குணமில்லாத ப்ரம்மமாதான் பக்தி செலுத்தணும். இது வரை குணத்தோட ஈஸ்வரனை பக்தி பண்ணது மனசிலே வருமே? வரும்தான்? என் ஆனையை எல்லாம் விட முடியாதுன்னு யாரோ சொன்னாங்க இல்லையா!

¨அப்பா (அல்லது அம்மா) உன் கிருபையாலேதான் எனக்கு அத்வைதத்திலே மனசு போய் இருக்கு. உன் கிருபையாலே கொஞ்சம் கொஞ்சம் சாதனை பண்ணிக்கொண்டு இருக்கேன். முடிவா நிர்குண பக்தி வரணும்ன்னு உனக்கே தெரியுமே? குணத்தோட பக்தி செய்தா நான் பின்னேறி விடுவேன். அப்படி ஆகாம நீதான் காப்பாத்தணும்¨ ன்னு வேண்டிக்கொண்டா எல்லாம் சரி ஆகிவிடும்.

இந்த படியிலே பக்தி இல்லைனா ரொம்பவே சாரம் இல்லாம டிரையா (dry) சாதனை போய் கொண்டு இருக்கும். ஆனா அடைய வேண்டியதோ சத் சித் ஆனந்தமாச்சே! ரொம்பவே சாரம் உள்ளது. அதற்காக இப்ப கொஞ்சம் குளு குளுன்னு பக்தி தண்ணி பாய்சறோம்.

நல்லது. இப்ப இந்த விஷயங்களை கொஞ்சம் நிறுத்திக்கலாம்.

ஞான வழில சாதனை படிகள் என்னன்னு பாத்தோம். இப்போதைக்கு தியரிதான். கொஞ்சம் கொஞ்சமா அனுபவத்துக்கு வர வேண்டியது. முன்னேயே சொன்னது போல இதில ஏதாவது ஒண்ணை முழுக்க சாதிச்சாலும் மத்த எல்லாமே கூட வந்துடும்.

அடுத்து நாம கைவல்லிய நவநீதம் என்கிற எளிமையான நடையிலே எழுதப்பட்ட நூலை ஒட்டி ஞான வழியை பார்க்கலாம். இவ்வளோ நாள் இந்த வழியிலே படிகள் ன்னு நாம பாத்த விஷயங்களை இவர் மூணே மூணு செய்யுட்களிலே நகர்த்திண்டு போயிட்டார்.
(நீயும் அப்படியே செஞ்சு இருக்கக்கூடாதான்னு பல்லை கடிக்கறது தெரியுது. போனாப்போறது).

எழுதியவர் ஸ்ரீ தாண்டவராய ஸ்வாமிகள். காலம் சுமார் 700 வருஷங்களுக்கு முன். இவரது குரு ஸ்ரீ நாராயணன். நன்னிலம் என்ற ஊரை சேர்ந்தவர். இப்பவும் அங்கே பேருந்து நிலையத்துக்கு அருகே ஒரு 200 மீ தூரத்தில் இவர்களது அதிஷ்டானம் இருக்கு.

தத்துவ விளக்கப்படலம்.
1.
நித்திய வநித்தியங்க ணிண்ணயந் தெரிவிவேகம்
மத்திய விகபரங்கள் வருபோகங் களினிராசை
சத்திய முரைக்க வேண்டுஞ் சமாதியென் றாறுகூட்டம்
முத்தியை  விரும்புமிச்சை மொழிவர்சா தனமிந்நான்கே

நித்திய அநித்தியங்களில் நிண்ணயம் (நிர்ணயம்) தெரி(கின்ற) விவேகம், மத்திய (இடையில் உள்ள) இக (இந்த லோக) பரங்கள் (மறு லோகங்கள்) வரும் போகங்களில் நிராசை,  சமாதியென்று ஆறு கூட்டம் (சமம் முதலான ஆறு தொகுதி) முத்தியை விரும்பும் இச்சை- சத்தியம் உரைக்க வேண்டும் (உண்மையாக அதிகாரிக்கு உரிய) சாதனம் இந்நான்கே (என சத்துக்கள்) மொழிவர்.

2.சம தமாதிகளின் இலக்கணம்:

சமம்தமம் விடல் சகித்தல் சமாதானஞ் சிரத்தை யாறாம்
சமமகக் கரண தண்டந் தமம்புறக் கரண தண்டம்
அமர்தரு கருமம் பற்றா தறுத்தலே விடலென்றாகும்
மமர்செயுங் காமமாதி வரினடக் குதல் சகித்தல்

சமம், தமம், விடல்=உபரதி, சகித்தல்=திதிக்ஷா, சமாதானம், சிரத்தை ஆறாம். சமம் அகக் கரண தண்டம் (மனதை அடக்குதல்) தமம் புறக் கரண தண்டம். (வெளி விவகாரங்களை கவனிக்கும் ஐந்து இந்திரியங்களை அடக்குதல்) அமர்தரு கருமம் (பொருந்திய பாவம் கலந்த கர்மங்களையும் புண்ணிய கர்மங்களையும்) பற்றாது (பலன் விரும்பாது) அறுத்தலே (நீக்குதலே) விடல் என்றாகும். மமர் (மயக்கம்) செயும் காமம் ஆதி (காமம் குரோதம் முதலியவை) வரின் அடக்குதல் (பொறுத்தல்) சகித்தல்.

3.சிரவணப் பொருளைத்தானே  சித்தஞ்சிந் திக்குமாறு
சரதமா வைக்குமித்தைச் சமாதானமென்பர் மேலோர்
பரமசற் குருநூ லன்பு பற்றுதலே சிரத்தையாகும்
வரமிகு சமாதியாறு வகையின்சொற் பொருளிதாமே

(வேதாந்த) சிரவண (கேள்வி) பொருளைத்தானே சித்தம் (உள்ளம்) சிந்திக்குமாறு சரதமாய் (சத்தியமாக) வைக்கும் இத்தை (இதை) சமாதானமென்பர் மேலோர். பரம சற்குரு (ஈஸ்வரன்) நூல் (வேத சாத்திரங்கள்) மீது அன்பு பற்றுதலே சிரத்தையாகும். வரமிகு  (மேன்மை  மிக்க) சம ஆதி ஆறு வகையின் சொற் பொருள் இதாமே.


Thursday, January 8, 2009

பக்தி-3



சில பேர் இப்படி நினைக்கலாம். பிரமத்தை நினைச்சு அது மேல பக்தி செலுத்த கஷ்டமா இருக்குமே அதனால இப்படி செய்யலாமோ? இந்த பிரபஞ்சமே ப்ரமத்தோட மாயா சொரூபம்தானே? அதனால இந்த உலகத்து மேலேயும் அதில் இருக்கிற மக்கள் மேலேயும் அன்பு வைத்து அவங்களுக்கு தொண்டு செய்தா அது ப்ரம்மத்துக்கு செய்ததாதானே ஆகும்?

அது சரிதான், ஆனால் இந்த படியிலே அப்படி செய்யக்கூடாது. இப்படி செய்கிறது கர்ம வழில இருக்கிறப்ப செய்யலாம். பரோபகாரம் இதம் சரீரம் (மற்றவர்களுக்கு உதவி செய்வதற்கே இந்த உடல் இருக்கு) என்ற படி ஊருக்கு தொண்டு, தேச சேவை, உலகத்தொண்டு அப்படின்னு அந்த வழில பலன் எதிர்பாராம செய்வது சித்த சுத்தியை கொடுக்கும்.

இப்ப வழியே வேற. இந்த உலகம் நிலையானது இல்லை; நிலையான வஸ்துவை தேடிப்போகணும் ன்னு முடிவு செய்து ஞானத்தை தேடுகிறபோது உலகத்தோட சம்பந்தத்தை அதிகப்படுத்திக்கொள்வது ஆபத்து இருக்கு! சன்னியாசி பூனை வளத்த கதையும் ஜட பரதர் கதையும் தெரிஞ்சதுதானே! எதை விட்டு விட்டு போக நினைக்கிறோமோ அதையே வலுக்கட்டாயமா பிடிச்சுகிறதுல என்ன பிரயோஜனம்?

இதுக்கு சிலர் ஆட்சேபிக்கலாம். ஞானியான பிறகு எத்தனை பேர் தொண்டு செய்து இருக்காங்க? நீங்க அடிக்கடி மேற்கோள் காட்டுகிற சங்கரரே அப்படி தேசம் முழுக்க சுத்தி ஆன்மீக தொண்டு செய்தவர்தானே?

உண்மைதான். அப்படி செய்வது மாயையை சரியான படி புரிஞ்சு கொண்டு அதால பாதிக்காதபடி ஆகிவிட்டவர்கள் மாயா லோக அதிபதியான ஈஸ்வரன் கொடுத்த கட்டளைப்படி செய்வது. தனக்குன்னு உத்தேசம் ஏதும் இல்லாம பகவான் கட்டளைப்படி செய்வதில தப்பு இருக்காது. ¨நீ ப்ரம்மத்தை உணர்ந்துட்டேப்பா; ஆனா உன்னால இந்த மாய லோகத்துக்கு சில காரியங்கள் உன்னால நடக்க வேண்டி இருக்கு; அதை நீதான் செய்ய முடியும்¨ ன்னு கட்டளை இடும்போது செய்வது. (அந்த நிலையிலே தானே தனக்கு இட்டுக் கொள்கிற கட்டளைதானே அது!)

பார்க்கப்போனால் மற்றவர்களுக்கு சாதனா மார்கத்திலே இருக்கிறவங்க செய்வது இல்லாம, மத்தவங்கதான் ¨அட, கோடியிலே ஒத்தர் இப்படி சாதனைல ஈடுபட்டு இவ்வளோ முன்னேறி இருக்காங்களே, இவங்களுக்கு சரீர பயணம் நடக்க நாமா உதவணும்¨ ன்னு உதவி செய்யணும்.

ஆதனால தனி மனிதர்கள்கிட்டே அன்பு செய்வதற்கு இந்த நிலையிலே ஒண்ணுமில்லை. அப்படியானா வெறுப்பு இருக்கா என்றால் சன்னியாசம் வாங்கிக்கொள்ளும்போதே ¨எந்த உயிருக்கும் என்னிடம் பயம் வரக்கூடாது¨ ன்னு அவன் சபதம் எடுத்துக்கிறதால அவன் யாரையும் விரோதித்துக் கொள்ளுவதில்லை. அன்பும் காட்டுவதில்லை. ரெண்டுமே கிடையாது.

இந்த நிலையிலே அன்பு வைக்க வேண்டியது ஆத்மாவிடம்தான்.


Tuesday, January 6, 2009

மேலும் பக்தி 2



இப்படி பரம கருணையோட ப்ரம்மத்தில் ஃபோகஸ் (focus) செய்ய ஒரு புள்ளியை கொடுத்து வெச்சு இருக்கிறது அந்த பகவான்தான். தான் ஜீவன் என்கிற நினைப்பு உண்டாகி வெளிவந்து விரிவடைகிறது இந்த புள்ளியிலே இருந்துதான். இதே புள்ளியிலேதான் ¨தான்¨ போய் ப்ரம்மத்தில் லயமடைகிறதும் (involution). நாராயண சூக்தத்திலே இதைப்பத்தி சொல்லி இருக்கு. இது நீவாரம் என்கிற செந்நெல்லுடைய கூரான நுனி போல மிகவும் நுட்பமானதாம். தலைகீழா இருக்கிற தாமரைமொக்கு மாதிரியாம் ஹ்ருதயம். அதன் கூம்பின நுனியில் சூக்குமமான துவாரம். அதிலிருந்து உடம்பு முழுக்க பரவுகிற ஒரு உயிர் சக்தியான அக்னி. அதன் நடுவிலே அணு அளவான ஜ்வாலை -தீக்கொழுந்து. இது மின்னல் கொடி போல நுண்ணியது. இது செந்நெல் போல முடியும் இடத்திலே பரமாத்மா உறைகிறது.

இந்த இடத்துக்கு தஹ்ரம் என்றும் அம்பலம் என்றும் சொல்கிறார்கள். அதெப்படி இத்தனை சின்ன இடத்தில் பரமாத்மா இருக்கு என்றால், அப்படித்தான்! அது பரப்ரம்மம். என்ன வேணுமானாலும் செய்ய முடியும்.

தனி மரம் போல இருக்கிறது வியக்தி. காடு போல இருக்கிறது சமஷ்டி.

மனிதன் தனி- வியக்தின்னா சமஷ்டியாக இருக்கிற பரந்து விரிந்த உலகத்துக்கு அப்படிப்பட்ட இடமாதான் சிதம்பரம் இருக்கு. அது ரகசியமாக இருக்கு. அதனால் அது ஆகாச தத்துவம் என்கிறார்கள். ஞான ஆகாசம். இதுதான் சித் அம்பரம். (அம்பரம் என்பது சம்ஸ்கிருத சொல். ஆகாசம் என்றும் வஸ்திரம் என்றும் பொருள். அம்பலம் என்கிற தமிழ் சொல்லுக்குத்தான் ஆகாசம், சபை என்று பொருள். தமிழ்ல சிற்றம்பலம்- அம்பரம் என்பது அம்பலம் என்று ஆகி இருக்கலாம். அம்பலத்துக்கு சபை என்ற பொருள் இருக்கிறதால சித் சபை ன்னு வந்து இருக்கலாம்.) இது போலதான் மனிதன் உள்ளே ஒரு சின்ன இடம் அத்தனையும் உள்ளாடக்கி இருக்கு.

சயன்ஸ் துணை கொண்டு பாக்கிறவங்க இதை ஒரு portel ன்னு நினைச்சு பாருங்க. இது வழியா ஜீவனும் பரம்பொருளும் ஒண்ணுக்கொண்ணு தொடர்பு வெச்சு இருக்கு. ஜீவன் ப்ரம்மத்தோட லயமாக இது வழியா உள்ளே போகும். பரப்ரம்மம் ஜீவனா உருவெடுக்க இதுவழியா வெளி வரும்.

அப்படி வெளிவர அஹங்காரம் முதல்ல தோன்றும். அப்பதானே தான் ன்னு ஒண்ணு வந்து வேறுபாடு பிறக்கும்?

அதே போல உள்ளே லயமாகி போகவும் இந்த ¨நான்¨ மெலிந்து அழிந்து போகணும். அப்பதானே உள்ளே போய் லயமாகலாம்? ஆனா இப்படி உள்ளே போக முடியாம வெளி விஷயங்கள்ல ஈடுபட்டு இந்த தான் ரொம்பவும் தடிச்சு போயிருக்கு! சின்ன வாசல் வழியா உள்ளே போக முடியாது. அந்த வாசலை இடிச்சு பெரிசா கட்டவும் முடியாது. :-))

எல்லாத்தையும் வேறா - த்வைதமா- பாத்து பாத்துதானே இப்படி குண்டா போச்சு? குண்டா இருப்பதை கரைத்து இன்னும் ஒல்லியாக்க தனக்கு என்பதை விட்டுவிட்டு தன்னை அன்பிலே ப்ரம்மத்துக்கு கொடுத்துக் கொள்ள கொள்ள முன்னேற்றம் இருக்கும். இது ஒண்ணே வழி.
சமம் தமம் எல்லாம் இதை கரைக்கலையா என்றால் அதெல்லாம் கரைச்சது புத்தியையும் மனசையும். அதை எல்லாம் விட இன்னும் சூக்குமமா இருக்கிறது அந்தக்கரணம். முன்னேயே பாத்து இருக்கோம் இல்லையா?- நானாக்கும் சமம் தமம் எல்லாத்தையும் சாதிச்சேன்? நானாக்கும் வைராக்கியத்தை சம்பாதிச்சேன்? இப்படி நமக்கே தெரியாம இது கொழுத்து கொண்டு இருக்கும். இது கரைய ப்ரம்மத்துகிட்டே பக்தி செலுத்தற இதுவே வழி.


Monday, January 5, 2009

மேலும் பக்தி



பக்தி என்பது என்ன? அன்புதான். அம்மாவுக்கு குழந்தையிடம் இருப்பது வாத்ஸல்யம். புருஷனிடம் இருப்பது காதல். இப்படி பலவிதமா இருக்கிற அன்பிலே பகவானிடம் உள்ள அன்பே பக்தி. கண்ணுக்கு அழகாக இருக்கிற கடவுள் விக்கிரஹம் அதன் மேல அன்பை காட்ட உதவுது. அரங்கன் கண்ணை கண்டு மயங்கினவர் உண்டல்லவா? (பூரி ஜகன்நாத் போய் அங்கே தரிசனம் செய்த பிறகு இந்த வடக்கத்தியர்களுக்குத்தான் உண்மையிலேயே நல்ல பக்தி என்று நினைத்துக்கொண்டேன். பொதுவா வட இந்திய மூர்த்திகளுக்கு அழகான உருவம் அமைவது துர்லபமே. அந்த சிற்பக்கலை எல்லாம் தென் இந்தியாவில்தான். அல்லது முகலாய படையெடுப்பில் எல்லாம் போய்விட்டதோ என்னவோ? இப்போது இல்லை. ஆனால் அவர்களுக்கு பக்தியில் ஒண்ணும் குறைச்சலில்லை.)

அதே போல அவனுக்கு சாத்துகிற சந்தனத்தின் வாசனை - இப்படி புலன்களுக்கு எல்லாம் இடம் கொடுத்து அவற்றை பகவான் பால் திருப்பி விடுகிறதே இந்த பக்திதான். இது கொஞ்சம் சுலபமா முடிவதில ஆச்சரியம் இல்லை.

ஆனா இன்னும் பண்பட்ட பிறகு ஒரு குணமும் இல்லாத வஸ்து மேலே அன்பு வைன்னா... எதுகிட்டே நல்ல வடிவம், அழகு, குணம், லீலை எல்லாம் இருக்கோ அந்த அதுகிட்டே சுபாவமா ஒரு அன்பு உருவாக முடியும். இதை சாதிக்க முடியலைன்னா எல்லா சாதனையும் அகங்காரத்திலே போய் முட்டி நின்னு போயிடும். நான் அல்லவோ புலன்களை கட்டிப்போட்டேன்; மனசை கட்டிப்போட்டேன்; சமநிலை பெற்றேன்! இதனால மோக்ஷ நிலை தள்ளிப்போகும்.

ஒரே பரமாத்மாதான் இத்தனை உருவங்களோட வந்திருக்கு. பலதா காட்டறதாலதான் இந்த உலகம் யூனிவெர்ஸ்- பிரபஞ்சம்- எல்லாம் மாய வினோதமா காட்சி கொடுக்குது. இந்த விஷயங்கள் அத்தனைகிட்டேயும் காட்டுகிற அன்பு பகவான்கிட்ட காட்டுகிற அன்புதான். பொதுவா ஆசைபட்டு மத்ததுகிட்டே இருந்து ஒண்ணை வாங்கிக்கொண்டு லாபம் அடைவோம். இங்கேயோ நம்மை மத்ததுகிட்டே கொடுத்து லாபம் அடைகிறோம். அது அன்பு. இதுவே அன்புக்கும் ஆசைக்கும் வேறுபாடு. ஆசையால வாங்கி லாபம். அன்பால கொடுத்து லாபம். மத்ததுகிட்டே நமக்கு கொடுக்க ஒண்ணும் இல்லைன்னா அது மேலே பற்று உண்டாகாது. தண்ணி கொடுக்காத கிணறு மேலே பற்று இல்லை. தூர்த்துடுவோம். பழமோ நிழலோ தராத மரம் மேலே பற்று இல்லை. வெட்டிவிடுவோம். இதெல்லாம் இருக்கும்போது அவற்றின் மேலே பற்று இருக்கும். அது ஆசை; அன்புன்னு நாம தப்பா நினைத்து கொண்டு இருக்கலாம்.

 அன்பு உண்மையா இருந்தா ஒரு பிரதிபலனும் இல்லாம அதன் மேலே பற்று இருக்கணும். அதுக்கு கொடுக்கணும். எல்லாம் இருக்கிற பகவானுக்கு நாம் என்னதான் கொடுக்கமுடியும்? நம்மையேதான் கொடுக்கணும். இப்படி இருக்கிற நிலையிலே அந்தகரணம் உசந்த நிலையிலே இருக்கும். மனசாவோ புத்தியாவோ இருக்காது. இப்படி அன்பு சுரக்கிற அந்தக்கரணத்தை ஹ்ருதயம் ன்னு சொல்கிறதும் உண்டு.

சாதனையால மனசும் புத்தியும் இயங்காம போயாச்சுன்னா இந்த ஹ்ருதயமே அந்தக்கரணத்தோட நிரந்தர நிலையா போயிடும்.

இந்த ஹ்ருதயம் மனிதனோட உடல்ல இருக்கறது இல்லை. ஸுஷும்னா நாடில இருக்கிற அநாஹத சக்கரமும் இல்லை. இது உண்மையாவே ஆத்மாவுடைய இடம்.

என்ன குழப்பம்? ஆத்மா எல்லா இடத்திலேயும் பரவி இருக்கிறது இல்லையோ?

ஆமாம். அத்வைத பாவனை வந்தாச்சுன்னா அப்படித்தான். ஆனா நாம் இருக்கிறதோ த்வைத பாவனைதான். அதாவது நாம் வேற: இந்த உலகம் வெவ்வேற; கடவுள் வேற; இப்படித்தான் சாதாரணமா இருக்கோம். எல்லாத்தையும் ஒண்ணா பாக்க இன்னும் தெரிஞ்சு கொள்ளலே! இந்த நிலையில இருந்துகிட்டுதான் அத்வைத பாவனையை கொண்டு வர முயற்சி பண்ணுவோம். அப்போ வெளியே இருந்து உள்ளே பார்வையை இழுத்து நிலை நாட்ட ஏதோ ஒரு புள்ளி வேணுமே? அதனால்தான் உருவம், குணம்ன்னு கற்பனை இல்லாவிட்டாலும் பரமாத்மாவுக்கு ஒரு இடத்தை மனிதனோட உடம்பிலே கொடுத்து இருக்கு!


Friday, January 2, 2009

அடுத்த படி?



இதுவரை விவேக சூடாமணியை ஒட்டி சங்கரர் கொடுத்த கிரமத்திலே விஷயங்களை தெய்வத்தின் குரல் சொல்லிக்கொண்டு போனதை நம்ம நடையிலே பாத்துகொண்டு இருக்கிறோம். இங்கே  முதல் படியா சங்கரர் சொல்வது பக்தி/ கர்மா செய்து நம்மோட மனசிலேந்து அழுக்கையும் தடுமாட்டத்தையும் போக்கி கொள்வது; இரண்டாவதா சாதனா சதுஷ்டயம் என்கிறது. சாதனா சதுஷ்டயத்திலே ஆத்ம நாட்டமா முமுக்ஷுவா கொண்டுவிடப்படுவாங்க. அடுத்து மூணாவது படிக்கு சன்னியாசம் வாங்கிக்கொண்டு மகா வாக்கிய உபதேசம் வாங்கிக்கொண்டு பரீட்சைக்கு போகணும்! [சன்னியாசம் முக்கியமா மனசிலே இருக்குன்னு முன்னேயே பாத்து இருக்கோம்] நாம இந்த இடத்தை இப்ப பாத்துகிட்டு இருக்கோம்.

குருவோட பங்கைப்பத்தி இப்ப இங்கே மேலும் எழுதப்போறதில்லை. ஆரம்பிச்சா அதுவே பல பதிவுகள் இழுத்துக்கொண்டு போயிடும்.
அதனால குரு இல்லாம இந்த படிகள் ஒண்ணு கூட சாத்தியமாகாதுன்னு திருப்பியும் சொல்லி அதோட குறிப்பா குருவைப்பத்தி சொல்லுவதை இப்போதைக்கு நிறுத்திக்கறோம்.

சன்னியாசம் வாங்கிண்ட முமுக்ஷுவான சாதகன் அடுத்து என்ன செய்யணும்?
சிரவணம், மனனம், நிதித்யாசனம் அப்படின்னு சொல்லுவாங்க. இதை எதிர்பாத்தா சங்கரர் பக்தின்னு சொல்லி திடீர்ன்னு ஒரே போடா போட்டு ஒரு திருப்பத்தை கொண்டுவரார்! மேலே ஆச்சரியமா இதுதான் முக்கியமான உபகரணம்ன்னு வேற சொல்கிறார். (1)

சாதாரணமா கொஞ்சம் ஆன்மீகத்திலே முன்னாலே போனவங்களுக்கு பக்தி மேலே ஒரு சின்ன இளப்பம் மனசுக்குள்ள ஒளிஞ்சுண்டு இருக்கும்! அதெல்லாம் ஏதோ மந்த சாதகர்களுக்குன்னு நினைப்பு! அவங்களுக்கு புத்தி புகட்டுறாப்பலே இங்கே ரொம்ப மேலே போன சாதகனுக்கு இதை பரிந்துரைக்கிறார்!

ஆனா இது முன்னே பாத்த பக்தின்னு சொல்ல முடியாது. இது கொஞ்சம் மேல் மட்டம். இதுக்கும் மேலே இருக்கிற மட்டத்தில அத்வைத சித்தியே அடைஞ்ச ஞானி செய்கிற பக்தி. அது ஏன், எப்படி என்கிறதெல்லாம் அவனுக்கும் பகவானுக்கும் இடையிலே இருக்கிற ரகசியம். நமக்கு தெரியாது! இப்ப பாக்கிற மேல் மட்டத்திலே .....

உருவமில்லா பரமாத்மாவை ஒரு உருவம் கொடுத்து நாம அன்பு செய்வது என்பதே பொதுவா நாம பக்தி பத்தி தெரிஞ்சு வெச்சு இருக்கிறது.
இந்த மட்டத்தில அப்படி ஒரு குணத்தோட நினைக்காம அருவமாவே கருதி அப்பவும் அன்பு செய்ய பழகணும்.  அதில தேறணும்.
நமக்கு இது முடியவே முடியாதுன்னு தோணும். ஆனா முமுக்ஷுவுக்கு இது முடியும் ன்னு சொல்கிறாங்க.
நாம பாக்கிற சாமிக்கு ஏதோ நம்மை கவர்ந்த குணம் ஒண்ணு இருக்கும். ஆனையாட்டம் ரூபம், இல்லை சிவன் போல சுலபமா சந்தோஷப்பட்டு வரம் தர குணம், கண்ணனோட லீலைகள் மாதிரி - இப்படி ஏதோ ஒண்ணு இருந்தாதான் நாம அதில லயிச்சு உருகி பக்தி செய்ய முடியுது. இப்படி காரணம் எதுவும் இல்லாம தானாவே சுபாவமா அன்பு செய்யவும் முடியுமே! இதைத்தான் சொல்கிறாங்க.

1. மோக்ஷ காரண ஸாமக்ரீயாம் பக்திரேவ கரீயஸீ|
ஸவஸ்வரூபாநுஸந்தாநம் பக்திரித்யபிதீயதே||



Thursday, January 1, 2009

குரு


ஞானிகள் தங்கள் அனுபவத்தை எப்படி சொல்கிறார்கள்ன்னு பாத்தா ஆத்ம விசாரம் பண்ணி கொண்டே போனதாயும் பட்ன்னு ஆத்மா பிரகாசித்து விட்டதாயும் இருக்கும்.
எப்படியானாலும் சாதகனோட ஒரே லட்சியம் ஆத்ம சாக்ஷாத்காரம்தான். அதுக்காக அவன் சதா ஆனந்தத்துல இருந்துண்டு மஹா வாக்கியங்களை எப்பவும் தியானம் செய்து கொண்டே இருப்பான். அப்படி இருப்பதாலேயே அந்த வாக்கியங்கள் சொல்ற நிலையை அனுபவிச்சுடுவான். அதுதான் ¨ஸ்வ ஸ்வரூப அவபோதேந மோக்தும்¨ (அவபோதம் =விழிப்பு)

இதெல்லாம் படிச்சுட்டு ¨அடடா, நமக்கு இவ்வளோ தீவிரமெல்லாம் வராதே¨ ன்னு நாம நினைக்கலாம்.

கவலையே வேண்டாம். அவ்வளோ தீவிரம் இல்லாதவங்களையும் உற்சாகப்படுத்தற மாதிரி மந்த மத்திய நிலை முமுக்ஷுக்கள் ன்னு பிரிச்சு சொல்கிறாங்க.

உத்தம அதிகாரிங்கிற தீவிர முமுக்ஷுதான் சிறந்தவன்; அவன் எல்லாவத்தையும் தள்ளி ஆத்ம நாட்டத்திலேயே இருப்பான் - அப்படின்னாலும், அடிநிலையிலே இருக்கிறவன் கூட ஒரு நாட்டம் வெச்சுதானே இதுல இறங்கி இருக்கான்? அதனால அவனைப்பத்தியும் சங்கரர் அக்கறைப்படுறார். கொஞ்சம் சாதனை அவன் செய்ததுமே இன்னும் கொஞ்சம் பக்குவம் வந்து இந்த வாழ்க்கை மாயைன்னு தெரிஞ்சு கொஞ்சம் தீவிரம் வரும். இப்பவும் இதிலேயே நிலையா இல்லாம சித்தம் அலை பாஞ்சாலும் ஆரம்பத்தில இருந்ததை விட இப்ப கொஞ்சம் அதிக நேரம் சித்தம் பிரம்மத்தில நிக்கும். ஆனா மாயை விடுமா? ச்சே, நமக்காவது மகா பெரிசான மோக்ஷம் கிடைக்கிறதாவதுன்னு நம்பிக்கை போயிடறதும் உண்டு.

இப்படி பட்டவங்களைப்பாத்து சங்கரர் கருணையோட சொல்கிறார் ¨அப்பா அழாதே! குரு பிரசாதம் இருந்தா எதுவும் நடக்கும். ஆனா நீயும் அதுக்கு தகுந்தவனா ஆக முடிஞ்சவரை வைராக்கியத்தை கடை பிடி. சமம் முதலான ஆறையும் பயிற்சி பண்ணு. அப்படி செஞ்சா உன் முமுக்ஷுத்வம் முன்னே பின்னே இருந்தாலும் குருவோட அனுகிரஹத்துல அது நல்லா வளந்துடும்.¨ (1)

குரு கிருபை இங்கே மட்டும்ன்னு இல்லே. ஒவ்வொரு படியிலேயும் அவரோட கிருபை இருந்தா எல்லா சுலபமா முன்னேறும். தானா முன்னேறினாலும் அவரோட ஆசீர்வாத பலத்திலேதான் அது முழுமை ஆகணும். பாவம் இந்த பயல் ரொம்பதான் சிரத்தையா முயற்சி செய்யறான்; ஆனா தடை இருக்கேன்னு கருணையோட அந்த தடைகளை அவர் நீக்கிதான் ஒருத்தன் அடுத்த படிக்கு போவது.

முன்னேயே பாத்த மாதிரி மூணாவது படியிலேதான் குருகிட்ட முழு சரணாகதியும் அவரோட முழு அனுகிரஹமும் அவசியம்.

முன் படிகள்ள நாமே சரி பண்ணிக்கலாம் என்கிற ரீதியிலே சில தப்புகள் இந்திரிய விஷயங்களிலே இருக்கலாம். அங்க கொஞ்சம் நீக்கு போக்கு இருக்கு. ஆனா முமுக்ஷுதவம் வந்த பின் சன்னியாசம் வாங்கிக்கொண்டு மகா வாக்கிய உபதேசம் வாங்கிக்கொண்ட பின்னே அப்படி இருக்க முடியாது. கொஞ்சம் தவறினாலும் ரொம்ப பெரிய குற்றம் ஆகிடும். சாதனா வழியிலேயே ரயில் சக்கரம் கொஞ்சம் கூட இப்படி அப்படி போகாம இருக்கிறது போல சீரா முன்னே போகணும். அதுக்கு குரு கிருபை ரொம்பவே அவசியம்.

1. மந்த-மத்யம ரூபாபி வைராக்யேண சமாதிநா|
ப்ரஸாதேன குரோ; ஸேயம் ப்ரவ்ருத்தா ஸூயதே பலம்||

"புலியின் வாய்ப்பட்ட மான் மீள முடியாதது போல், சற்குருவின் அருள் ஞானப் பார்வையில் அகப்பட்டோர் அற்பத் தன்மையான அகந்தை இயல்பு அழிக்கப்பட்டுக் கைவல்ய நிலை பெறுவரேயன்றி, ஒருக்காலும் கைவிடப்படவே மாட்டார் என்று உறுதியாய் உணர்க." - குருவாசகக் கோவை, 284