Pages

Tuesday, January 13, 2009

குருவை சரணடைதல்



13.தீவிரமுற்ற பக்குவன் என் செய்தான்?

ஆனவிம் மனைவி மக்க ளர்த்தவே டணைகண் மூன்றில்
கானவர் வலையிற் பட்டுக் கைதப்பி யோடு மான்போற்
போனவன் வெறுங் கையோடே போகாத வண்ணஞ் சென்று
ஞானசற் குருவைக் கண்டு நன்றாக வணங்கி னானே.

இம் மனைவி, மக்கள், அர்த்தம் (செல்வம்) ஆன [ஆகிய] ஏடணைகள் (ஆசைகள்) மூன்றில் (ஈஷணாத் திரயம்) கானவர் (வேடர்) வலையில் பட்டு (சிக்கி) கைதப்பி (பின் கைவசமாகாமல்) ஓடும் மான் போல் போனவன் வெறும் கையோடே போகாத வண்ணஞ் சென்று ஞான சற்குருவைக் கண்டு நன்றாக வணங்கினானே.
--
ஞான வழிலே குரு முக்கியம். நாமா என்னதான் யோசனை செய்தாலும் ஓரளவுக்கு மேலே சிந்திக்க முடியாது. நாம யோசிச்சு யோசிச்சு ¨கண்டு பிடிச்சதெல்லாம்¨ சரிதானா இல்லையா ன்னு சொல்லக்கூடியவர் அவர்தான். மேலே சரியான வழியை காட்டக்கூடியவரும் அவர்தான். (குருன்னு இல்லாம சரியான நேரத்துக்கு ¨மார்கதர்சி - வழிகாட்டி¨ கூட பகவான் அனுப்பி வைக்கலாம். நல்ல குருன்னு எல்லாம் ஒண்ணும் இல்லை. சரியான குருவான்னு தான் பாக்கணும். ஒவ்வொத்தருக்கு குரு ஒவ்வொத்தர் இருப்பார். ஒத்தருக்கு குருவா இருக்கிறவரே இன்னொருத்தருக்கும் இருக்கணும்ன்னு அவசியம் இல்லே.

தெய்வம், ராஜா, குரு, குழந்தை தினசரி ஹோமம் செய்கிறவர்கள் முதலானோரை வெறும் கையோடு பார்க்க போகக்கூடாது என்பது சாத்திரம்.. அவர்களுக்கு பயன் படுவதாக ஏதேனும் கொண்டு செல்ல வேண்டும். கோவில்னா பூ, ராஜான்னா பழங்கள்; குழந்தைக்கு சாப்பிடக்கூடியது ஏதேனும், ஹோமம் செய்கிறவருக்கு சமித்து இப்படி....

ஈஷணா - ஆசைகள் மூணு- முன்னேயே பாத்து இருக்கோம், இல்லையா?
வேடன் வலையிலேந்து தப்பி ஓடற மானைப்போலன்னு உவமை சொல்கிறார்!
உலக வாழ்க்கை மேலே இப்படி வெறுப்பு வரணும். அப்ப தேடல் தீவிரமா இருக்கும்!

14.

வணங்கிநின் றழுதுசொல்வான் மாயவாழ் வெனுஞ்சோகத்தால்
உணங்கினே னையனேயென் னுள்ளமே குளிரும் வண்ணம்
பிணங்கிய கோசபாசப் பின்னலைச் சின்னமாக்கி
இணங்கிய குருவே யென்னை யிரட்சித்தல் வேண்டு மென்றான்.

வணங்கி நின்று அழுது சொல்வான்: மாய வாழ்வெனும் சோகத்தால் உணங்கினேன் (வாடினேன்) ஐயனே, என் உள்ளமே குளிரும் வண்ணம் பிணங்கிய (ஒன்றினில் ஒன்றாய் நெருங்கிய) [பஞ்ச]கோச பாசப் பின்னலை சின்னமாக்கி (சிதைத்து) இணங்கிய குருவே என்னை இரட்சித்தல் வேண்டும் என்றான்.
--
ஆசாமி நிறையவே படிச்சு இருக்காரு இல்லே? பஞ்சகோசம் எல்லாம் படிச்சு கொண்டு அலசி, ஆராய்ஞ்சு, ஒண்ணும் உதவாதுன்னு இப்ப குருவை தேடி வந்து கால்ல விழுந்துட்டார்! இந்ந்த பஞ்ச கோசம்ன்னா என்னன்னு கேட்டா -கொஞ்சம் பொறுங்க. பின் பதிவு ஒண்ணுல இதெல்லாம் வரும். வணங்கினவருக்கு உணர்ச்சி பெருக்கு. ஒரு வழியா சரியான குருவை பிடிச்சுட்டோம் போல இருக்கேன்னு பெரிய ஆறுதல். அழுகை தானா வருது.
(கலைச்சொல்) பஞ்சகோசம்: ஐந்து உறைகள். அன்னமய, பிராணமய, மனோமய, விஞ்ஞானமய, ஆநந்தமய கோசங்கள். மனிதன் இவ்வைந்து கோசங்கள் உள்ளவனாக சொல்லப்படுகிறான்.



6 comments:

Geetha Sambasivam said...

கண்ணாடி போட்டும் பாடலைத் தேடிக் கண்டு பிடிக்க வேண்டி இருக்கு! :((((((((((((((( கொஞ்சம் பெரிய எழுத்தாய் இருக்கலாமோ??????

திவாண்ணா said...

இந்த ப்ளாகர் இப்ப எல்லாம் நிறைய பிரச்சினைகள் தருது. ஏதோ புதுசா முயற்சி செய்யறாங்க போல இருக்கு. தானா படத்துக்கு உசரம்ன்னு ஒண்ணு போடுது. ப்ளாக் கோட் பண்ணா எழுத்து அளவை மாத்துது. ப்ரிவ்யூல சரியா இருக்கு. வலைல பாத்தா வித்தியாசமா இருக்கு!
sigh!

Geetha Sambasivam said...

ஹாஹாஹா! என்னைக் கிண்டல் செய்தால் இப்படித் தான். ரொம்ப வருஷமா சொல்லிண்டே இருக்கேனே, ப்ளாகர் ஒரு வேதாளம்னு, யாருமே நம்பறதில்லை!

donkeys!!!!!!!!!!!மாத்தினதுக்கு! :P

Kavinaya said...

//உலக வாழ்க்கை மேலே இப்படி வெறுப்பு வரணும். அப்ப தேடல் தீவிரமா இருக்கும்!//

அப்ப நான் ரெடி :)

திவாண்ணா said...

//ஹாஹாஹா! என்னைக் கிண்டல் செய்தால் இப்படித் தான்.//

இனிமே சாக்கிரதையா இருக்கேன்!

திவாண்ணா said...

//அப்ப நான் ரெடி :)//

ரீட்ஸ்ஸ்!