Pages

Tuesday, January 20, 2009

தெரிந்த ஒன்றை தொடர்ந்து போய் தெரியாத ஒன்று.....இப்ப சீடனுக்கு கொஞ்சம் அடக்கம் வந்துடுச்சு. நனவில என்ன பாக்கிறேன் தெரியும்; தினமும் கனவு காண்கிறேன், அதுவும் தெரியும். தூக்கத்திலே கனவு கூட இல்லாம ஆனந்தமா இருந்து இருக்கேனே? அதுவும் தெரியும். அட அது ஆனந்தமா இருந்ததே அதிலேயே இருந்துட்டா என்னன்னு நினைச்சா அப்படி இருக்க முடியலியே! நனவிலே அதே ஆனந்தத்திலே இருக்கவும் முடியலியே? உடம்புதான் நாம்னா அப்படி முடியணுமே? சில சமயம் அந்த ஆனந்தம் வந்து, அப்படியே இருக்க முயற்சி பண்ணும்போதே மறைஞ்சும் போயிடுதே?

இப்படி சொல்லி மேலே நான் யார்ன்னு உபதேசம் பண்ணுங்கன்னு கேட்கிறான்.

24.
நனவுகண்டது நான்கண்ட நனவுள நினைவுநீங்கிக்
கனவுகண்டதுஞ் சுழுத்தி கண்டதும் வேறொன்றேபோல்
தினமனுபவித்த தொக்கு தெரியவுமில்லை சற்றே
மனதினி லுதிக்கும் பின்னை மறைக்கும தருளுவீரே

[சாக்கிரத்தில்] நனவு கண்டதும், நான் கண்ட நனவுள (சாக்கிரத்தின்) நினைவு நீங்கி கனவு கண்டதும், சுழுத்தி கண்டதும் வேறு ஒன்றே போல் தினம் அனுபவித்தது ஒக்கும். (தினமும் அநுபவிப்பதால் பொருந்தும்) [ஆனால் அந்த அநுபவத்தில் இரு எனில், அது நன்றாக எப்போதும்] தெரியவுமில்லை. [உபதேசத்தின் பொழுது] சற்றே மனதினில் உதிக்கும். பின்னை (அஞ்ஞானம்) மறைக்கும். அது அருளுவீரே! (தேகியின் சொரூபம் எப்போதும் விளங்கும்படி உபதேசிப்பீராக)

வெளியூர்லே வீட்டுக்கு வெளியே இருக்கோம். பக்கத்தில இருக்கிறவர் ¨ஓ, இன்னிக்கு மூணாவது திதியா? அதோ சந்திரன்!¨ அப்படிங்கிறார். சாதாரணமா இந்த மூன்றாம் பிறை நல்லா தெரியாது. அதுவும் ரெண்டாம் திதி பகல்ல முடிஞ்சு மூணாவது வந்துட்டா துர்லபம்தான். சூரியன் மறைஞ்சு அதிக நேரம் ஆகி இருக்காது; வெளிச்சம் இன்னும் இருக்கும். அதனால சந்திரன் அந்த நேரத்திலே எங்கே இருக்குன்னு தெரிஞ்சாலே ஒழிய பார்க்கிறது கஷ்டம். உள்ளூர்னா அனேகமா அது எங்கே இருக்கும்ன்னு தெரிய வாய்ப்பு இருக்கு. வெளியூர்னா யாரான காட்டினாதானே முடியும்? அப்ப ¨எங்கே இருக்கு?¨ ன்னு பக்கத்திலே இருக்கிறவரை கேக்கிறோம். மெலிசா தெரியற இதை எப்படி காட்டறது? அவர் சொல்கிறார். ¨அதோ ஆல மரம் இருக்கு இல்லே? அதன் கிளை வலதுபக்கமா பெரிசா இருக்கே; அதுல மேல் பக்கமா ஒரு கிளை போறதே; அதன் நுனில பாருங்க.¨ என்கிறார். நாமும் அப்படியே பாத்து ¨அட இதோ இருக்கு¨ ன்னு சொல்லி ஆயிரம் பிறையில ஒண்ணாவது பாத்தோம்ன்னு மகிழ்ந்து போறோம்.

திருமணம் ஆகிறது. இரவு அருந்ததி தரிசனம் செய்யணும். அதுக்கு சினிமா நக்ஷத்திரத்தை மட்டும் பாத்து பழக்கமானவங்களுக்கு எப்படி உண்மையான நக்ஷத்திரத்தை காட்டறது? காட்டுகிறவர் நல்லா தெளிவா பிரகாசத்தோட இருக்கிற ஒரு நக்ஷத்திரத்தை அடையாளம் காட்டி அப்புறமா அதிலேந்து வழி காட்டுவார். (நாலு நாள் திருமணம் இப்ப 4 மணி நேரத்திலே நடக்கிறதாலே இதை -பேருக்கு- பகலிலேயே செய்து வைக்கறதால ப்ளாக்கிலே கேலிக்கு இலக்கா போச்சு!)

இப்படி அடையாளம் காட்டுவது போல அதாவது தெரிந்த ஒன்றை தொடர்ந்து போய் தெரியாத ஒன்றை பிடித்துக்கொள்வது போல தெரிந்த விஷயங்களை சொல்லி அதன் மூலமா உபதேசம் செய்ய ஆரம்பிக்கிறார் குரு. முதல்லே கண்ணுக்கு தெரியற ஸ்தூலமான இந்த உலகத்தை காட்டறார்.

25.
தாலத்தின் மரங்கள் காட்டித் தனிப்பிறை காட்டுவார்போல்
ஆலத்தினுடுக்கள் காட்டி யருந்ததி காட்டுவார்போல்
தூலத்தை முன்புகாட்டிச் சூக்கும சொரூபமான
மூலத்தைப் பின்புகாட்ட முனிவரர் தொடங்கினாரே

தாலத்தின் (பூமியில்) மரங்கள் (மரங்களின் கிளை நுனியை) காட்டி தனி பிறை (சரியாக தெரியாத மூன்றாம் பிறை நிலவை) காட்டுவார் போல்; ஆலத்தின் (ஆகாயத்தின்) உடுக்கள் (நக்ஷத்திரங்கள்) காட்டி, [அதன் மூலமாக சரியாக தெரியாத நக்ஷத்திரமான] அருந்ததி காட்டுவார் போல்; தூலத்தை (கண்ணுக்கு தெரியும் சீவ ஈஸ்வர ஜகத்தை) முன்பு காட்டி சூக்கும சொரூபமான மூலத்தை (அனைத்துக்கும் மூலமான பிரமத்தை) பின்பு காட்ட முனிவரர் (மகா மௌனம் உடையவர்) தொடங்கினாரே.

Post a Comment