Pages

Wednesday, January 14, 2009

குருவிடம் சரண்என்ன, பால் பொங்கித்தா உங்க வீட்டிலே? வாழ்த்துக்கள்!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
இப்படி வந்து விழுந்த ஆசாமியை பாத்து பெரியவருக்கு ரொம்ப கருணை பொங்கிடுது. ஒரு அம்மா குழந்தையை பாக்கிற மாதிரி வாத்ஸல்யத்தோட பாக்கிறார்.

சில சமயம் சாப்பிடறப்ப புரையேறிடும். அம்மா தலைல தட்டிக்கொடுத்து யாரோ உன்னை நினைச்சுக்கிறாங்க என்பாங்க. நாமே சில சமயம் யாரையோ சந்திக்கணும்ன்னு நினைச்சு கொண்டே இருப்போம். அப்புறம் அவரை பாக்க வெளியே கிளம்புவோம். அவரே எதிரே வருவார். என்னன்னு கேட்டா இல்லை, சும்மா. உன்னை பாக்க தோணித்து என்பார்.

சில சமயம் ஏதோ ஒரூ கூட்டத்திலே அமர்ந்து இருக்கிறோம். ஏதோ குறு குறூங்குது. யாரோ நம்மை கவனிக்கிறா மாதிரி ஒரு உணர்வு. திரும்பி பாத்தா நிஜமாவே ஒத்தர் நம்மை பாத்துகிட்டே இருப்பார். அது எப்படி தெரிஞ்சது? அது ஒரு உள்ளுணர்வு.

அதே போல தொடுதல் என்கிறதும் ஒரு சக்தி உள்ள செய்கை. ராமனை காட்டுக்கு அனுப்ப என்ன என்னவோ கூனி கைகேயிகிட்ட சொல்லி பாத்தாளாம். ¨அட! என் மகனுக்கு இல்லே பட்டம் கட்டப்போறாங்க¨ ன்னு சொல்லிட்டாள் கைகேயி. கடேசிலே அவளை தொட்டு பேசினாளாம் கூனி. கைகேயி மனசு மாறிட்டது.
மருத்துவர்கள் ¨கவலைப்படாதே உடம்பு சரியாயிடும்¨ ன்னு தட்டிக்கொடுக்கிறது, கைகுலுக்கறது எல்லாம் இந்த அடிப்படையிலே வந்தவைதான். ஓ! கட்டுப்பிடி வைத்தியம்ன்னு ஒண்ணு இருக்கு இல்லே? :-))

கடல் ஆமை முட்டையை கரையிலே போட்டுவிட்டு கடலுக்குள்ள போயிடும். அப்புறம் ஆமை முட்டையிலே இருக்கிற தன் குஞ்சையே நினைக்குமாம். இதனாலேயே அது வளர்ந்து அசைந்து முட்டையை உடைச்சுகொண்டு வெளிவருமாம். மீன் முட்டைகள் இட்டுவிட்டு அதையே பாத்துக்கொண்டு இருக்கும். பாதுகாப்பா சுத்தி சுத்திவரும். கொஞ்ச நாள்ள அது எல்லாம் பொரிஞ்சு மீன் குஞ்சுகள் வெளியே வரும். பறவைகள் எடுக்கும் நடவடிக்கை இன்னும் கொஞ்சம் அதிகம். அவை முட்டைகள் மேலேயே உக்காந்து அடை காக்கும். முட்டை உடைஞ்சு குஞ்சு வெளிவரும்.

இப்படி உயிரினங்கள் தன் அடுத்த வாரிசு வெளிவர செய்கிறது போல இந்த ஞான ஆசிரியர் வந்த சிஷ்யனை கருணையோட நினைத்து, பார்த்து, தடவிக்கொடுத்து பக்கத்திலே உக்காத்தி வெச்சுக்கிறார். ¨மீண்டும் மீண்டும் பிறப்பு என்கிற இந்த துன்பம் போக ஒரு வழி இருக்குப்பா. அதை கேட்டு வழி நடந்தா உனக்கு எப்பவும் கூடவே வர சம்சாரம் என்கிற கஷ்டம் போயிடும்¨ என்கிறார். வந்த சிஷ்யனுக்கு இதை கேட்டதுமே மான்சரோவர்ல முழுகி எழுந்தாப்பலே உடலும் உள்ளமும் குளிர்ந்து போச்சு! திருப்பியும் ஆசிரியரை வணங்கி, ¨நீங்க சொல்லபோகிறது எனக்கு புரியுமோ புரியாதோ; செய்ய முடியுமோ முடியாதோ எப்படி இருந்தாலும் என்னை நீங்கதான் கருணை வெச்சு கடைத்தேத்தணும். உபாயம் இருக்குன்னு சொன்னீங்களே அது என்ன?¨ அப்படின்னு கேக்கிறான்.

15.
அன்னைதன் சிசுவையைய னாமைமீன் பறவை போலத்
தன்னகங் கருதி நோக்கித் தடவிச்சந் நிதி யிருத்தி
உன்னது பிறவி மாற்று முபாயமொன் றுண்டு சொல்வேன்
சொன்னது கேட்பாயாகிற்றொடர் பவந்தொலையு மென்றார்.

அன்னை (யை ஒத்த) ஐயன் தன் சிசுவை (சீடனை) ஆமை போலத் தன்னகம் தன்னுள்ளத்தில்) கருதி (சிந்தித்து), மீன் போல நோக்கி, பறவை போல தடவி சந்நிதி (எதிரில்) இருத்தி, உனது பிறவி [துன்பத்தை] மாற்றும் உபாயம் ஒன்றுண்டு சொல்வேன். சொன்னது கேட்பாயாகில் தொடர் பவம் (அனாதியாக தொடர்ந்து வரும் சம்சார துன்பம்) தொலையும் என்றார்.

16.
தொடர்பவந் தொலையுமென்று சொன்னதைக் கேட்டபோதே
தடமடு மூழ்கி னான்போற் சரீரங் குளிர்ந்துள் ளாறி
அடருமன் பொழுகு மாபோ லானந்த பாஷ்பங் காட்டி
மடன்மலர்ப் பாத மீண்டும் வணங்கிநின் றீதுசொல்வான்.

தொடர் பவம் தொலையும் என்று சொன்னதைக் கேட்ட போதே, தட (விசாலமான) மடு மூழ்கினான் போல் சரீரம் குளிர்ந்து, உள்ளாறி அடரும் அன்பொழுகுமா போல் (நிறைந்த அன்பானது பொங்கி வழிவது போல) ஆனந்த பாஷ்பங் காட்டி, மடல் (இதழ்)[உள்ள தாமரை போன்ற] மலர்ப்பாதம் மீண்டும் வணங்கி நின்று ஈது (இதனை) சொல்வான்.

17.
சொன்னது கேட்கமாட்டாத் தொண்டனானாலுஞ் சுவாமி
நின்னது கருணையாலே நீரென்னை யாளலாமே
உன்னது பிறவிமாற்று முபாயமொன்றுண் டென்றீரே
இன்ன தென்றதைநீர் காட்டியீடேற்றல் வேண்டுமென்றான்.

சொன்னது கேட்க மாட்டா (உபதேசித்ததை அப்பியாசிக்காத) தொண்டன் ஆனாலுஞ் சுவாமி, நின்னது கருணையாலே நீர் என்னை (இரட்சித்து) ஆளலாமே. உன்னது பிறவி மாற்றும் உபாயம் ஒன்று உண்டு என்றீரே. இன்னது என்றதை நீர் காட்டி ஈடேற்றல் வேண்டுமென்றான்.


Post a Comment