22.
¨அப்படி இல்லைப்பா. இதுதான் உடம்பு. இவன் உடம்புக்குள்ளே இருக்கிறவன் அப்படின்னு யார் தெளிவா தெரிஞ்சு கொண்டு இருக்காங்களோ அவங்கதான் தன்னை உண்மையா அறிஞ்சவங்க¨ ன்னு சொல்கிறார் குரு.
அதுக்கு சீடன். ¨அட என்னங்க இப்படி சொல்கிறீங்க? இந்த உடம்புதானே இருக்கு? உடம்புக்குள்ளே இருக்கிறவன்னு ஒத்தன் யார் இருக்கான்? ¨ என்கிறான். இதை கேட்டு குரு வருத்தத்தோட சிரிக்கிறார்.
இன்னது தேகந்தேகி யிவனெனவுணர்வன் யாவன்
அன்னவன் றன்னைத்தா னென்றறிந்தவனாகு மென்றார்
சொன்னபின் றேகியாரித் தூலமல்லாம லென்றான்
பின்னது கேட்டவையர் பீடையும் நகையுங்கொண்டார்.
இன்னது (ஸ்தூலமான= பருப்பொருளான) தேகம், [இவற்றுக்கு விலட்சணமாக இவற்றை அறியும்] தேகி இவன் என உணர்வன் யாவன்? அன்னவன் (அப்படிப்பட்டவனே) தன்னை தானென்று அறிந்தவன் ஆகும் என்றார். சொன்ன பின் இத் தூலமல்லாமல் தேகி [வேறு] யார் என்றான். பின்னது கேட்ட ஐயர் (ஆசிரியர்) பீடையும் (வருத்தமும்) நகையும் கொண்டார்.
தூங்கப்போயிடறோம். உடம்பு கட்டையாட்டம் படுக்கையிலே இருக்கு. அப்ப கனவு காண்கிறோம். அதிலே நாம் இருக்கிறோம். இன்னும் பல பேர் இருக்காங்க. ஏதேதோ நடக்குது. அப்புறம் நாம் முழிச்சிக்கிறோம். இப்படி இப்படி எல்லாம் பாத்தேன் அப்படின்னு சொல்கிறோம். அட உடம்புதானே நாம்ன்னு நினைச்சோம். அது செயலத்து கிடக்க இப்ப இதெல்லாம் பாத்தது யார்?
எல்லாருமே கனவு காண்கிறோம். ஜீவா மாதிரி சிலர்தான் அதை ஞாபகம் வெச்சுக்கிறாங்க. பெரும்பாலும் தூக்கம் கலையும்போதே அதையும் மறந்துடுவோம். கனவு காணும்போதே முழிப்பு வந்தா அதைதான் ஞாபகம் வைக்க முடியும். அதையும் உடனே செய்யலைனா அதுவும் கூட மறந்துடும். சரி, அது கிடக்கட்டும். கனவு காணலைன்னே வெச்சுப்போம். அப்பா, சொகமா நல்ல தூக்கம் தூங்கினேன்; ஒரு கனவு கூட கிடையாதுன்னு சொல்கிறோம்.
விஞ்ஞானமும் இப்படி தூங்கறோம்ன்னு ஒத்துக்கொள்ளுது. சாதாரணமா ஒத்தர் தூங்கும்போது கனவு காணறார்ன்னா அவர் கண்களை பாத்தே சொல்லிடலாம். கண்கள் இப்படியும் அப்படியும் நகரும். இமை வழியா கண் அசைவு தெரியும். இதை rem தூக்கம் என்கிறாங்க. இப்படி இல்லாம தூங்குகிறது non -rem தூக்கம். இதிலே நாம் சொல்லக்கூடிய எதையும் பாக்கிறதில்லே.
இப்படி சொல்லக்கூடியது ஒண்ணும் பாக்கலைனாலும் சுகமா கனவு கூட இல்லாம தூங்கினேன் ன்னு சொல்கிறோமே? அப்படி தூங்கினதை அறிஞ்சு கொண்டது யார்?
இப்படி உடல் தான் இல்லைனா முழிப்பு இருக்கிறப்ப நான் ன்னு நினைக்கிறது யாரை?
¨ஓஹோ, உடம்புதான் இருக்கா? அதுக்கு வேறா ஒண்ணுமே இல்லையா? ¨
23.
தேகமல் லாமல் வேறே தேகியார் காணே னென்றாய்
மோகமாங் கனவில் வந்து முளைத்திடு மவனார் சொல்வாய்
சோகமாங் கனவு தோன்றாச் சுழுத்தி கண்டவனார் சொல்வாய்
ஆகநீ நனவி லெண்ணு மறிவுதா னேது சொல்வாய்.
தேகமல்லாமல் (அனுபவத்தில் தேகமே தான் என்பதற்கு பொருள் அல்லாமல்) வேறே (அன்னியமாக) தேகி யார் காணேன் என்றாய். [அப்படியானால் சரீரம் சேட்டை அற்று கிடக்க] மோகமாம் (நித்திரா மயக்க அறிவினால்) கனவில் (மாறுபட்டு) வந்து முளைத்திடும் (இருப்பு முதலியவற்றை அறியும்) அவன் யார் சொல்வாய். [இந்த] சோகமாம் கனவு தோன்றாச் சுழுத்தி (கனவில்லா ஆழ் துயில்) [சூன்யமாக] கண்டவன் யார் சொல்வாய். [ஸ்வப்ன, சுசுப்தியில் பிரேதம் போல கிடந்த இந்த உடலை] நீ ஆக நனவில் (ஜாக்ரத்தில்) எண்ணும் அறிவுதான் (பிரக்ஞைதான்) ஏது சொல்வாய்.
இந்த கனவு, கனவில்லா ஆழ் துயில், நனவு (ஸ்வப்னம், சுசுப்தி, ஜாக்ரத்) ஆகியன அவஸ்தா த்ரயம் எனப்படும்.
2 comments:
கொஞ்சம் அவஸ்தை தான்! புரியற வரைக்கும்!
அவஸ்தை புரிஞ்சா அவஸ்தை இல்லை!
Post a Comment