Pages

Monday, January 26, 2009

சீவர்




கொஞ்சம் ரிவிஷனும் முன் தயாரிப்பும்.
நாம இருக்கிற நிலைகள் மூணா சொல்கிறாங்க. அவஸ்தா த்ரயம் - ஏற்கெனெவே பாத்தாச்சு. சுழுத்திங்கிறது கனவு இல்லாத ஆழ்துயில்.

பஞ்ச கோசங்கள்: ஆத்மாவை சுத்தி 5 உறைகள் இருக்கு. இவை ஒண்ணுக்குள் ஒண்ணு இருக்கும். அதாவது மேலும் மேலும் சூக்குமமா இருக்கும் - ஒன்றுக்குள் ஒன்று உறைகின்றன. சரியா?
அன்னமய கோசம் - எது சாப்பாட்டால வளக்கப்பட்டதோ அந்த உடம்பு. சாப்பாடு இல்லைனா அழிஞ்சும் போயிடும். இது கண்ணுக்கு தெரியுது. இதுக்கும் உள்ளே...
பிராண மய கோசம் - ஐந்து பிராணங்கள் உலவுகிற உறை. பிராணன், அபானன், வியானன், உதானன், சமானன் ன்னு 5. இதெல்லாம் என்ன செய்யுது எல்லாம் விளக்கமா அப்புறம் பாக்கலாம். இப்ப சுருக்கமா...
இந்த வாயுக்கள்ன்னா ஏதோ கெமிஸ்ட்ரி லாபிலே இருக்கிற தயாரிக்கிற வாயுக்கள் இல்லை. சக்திகள். அவை உலாவும் என்கிறதால வாயுன்னு சொல்லி புரிய வைக்கிறோம்.
ப்ராணன் உடம்புக்குள் வெளி காத்தை இழுக்கிற சக்தி.
அபானன் உள்ளேந்து காத்து, மலம், சிறு நீர் இதையெல்லாம் வெளியே தள்ளுகிற சக்தி.
வ்யானன் - காத்தை உடம்பிலே நிறுத்தி வைச்சு பலம் தருகிற சக்தி. ஏதோ ஒரு பெரிய எடையை தூக்கறோம். அப்ப என்ன செய்யறோம்? மூச்சை பிடிச்சுக்கொண்டு தூக்கறோம். இது வ்யானனோட வேலை.
உதானன் தொண்டயிலே இருந்து கொண்டு பேசறதுக்கு உதவறது.
சமானன் வயித்தில் இருந்து கொண்டு சாப்பிட்ட சாப்பாடு ஜீரணமாக உதவுகிற சக்தி.
இதை பத்தி இன்னும் மேலே அப்புறமா பாக்க போறோம்.

மனோ மய கோசம் - மனசு என்கிற உறை.
விஞ்ஞான மய கோசம் - புத்தி - உறுதி இப்படி செய்யணும் என்கிற சங்கல்பம், இந்த மாதிரி சித்த விருத்திகள்.
ஆனந்த மய கோசம் - உலக ஆனந்தங்களோட வெவ்வேறு நிலைகள் இருக்கிற உறை.

சரீரங்கள் மூணு. ஸ்தூல சரீரம், சூக்ஷ்ம சரீரம். காரண சரீரம்.
ஸ்தூல சரீரம் என்கிற நாம் பாக்கக்கூடிய உடல்.
சூக்ஷ்ம சரீரம் பாக்க முடியாதது. Astral body. 5 கர்ம புலன்கள், 5 ஞான புலன்கள், 5 பிராணன்கள், அந்தக்கரணம். இதை எல்லாம் சேத்தது.
காரண சரீரம் எது நாம் திருப்பி பிறவி எடுக்க காரணமா இருக்கோ அதுதான் காரண சரீரம். இது - சுசுப்தியிலே - கனவில்லா ஆழ் தூக்கத்திலே- இருக்கிறது. ஆணவம் கன்மம் மாயை அப்படின்னும் சொல்லுவாங்க. இதில ஆணவம் நான் என்கிற நினைப்பு; கன்மம் நம்மோட கர்ம பலன்கள் என்கிற மூட்டை; மாயை தெரிஞ்சதுதானே?

இப்ப விஷயத்துக்கு திரும்பலாமா?
பரப்பிரம்மத்திலேந்து பிரிஞ்ச சத்துவம் ஈசன் ன்னு பாத்தோம். இந்த பிரபஞ்சம் மாயைன்னு புரிஞ்சதால இது ஈசனோட சுழுத்தி நிலை. உலகம் தோன்ற காரணமா இருக்கிறதால காரண சரீரம். வெளியே ஈசனா இருந்து கொண்டு உள்ளே தான் பிரம்மத்திலேயே லயிச்சு இருக்கிறதால ஆனந்த மய கோசம்.
அது எப்படி வெளியே ஈசன், உள்ளே பிரம்மம்ன்னா...

சினிமா பாக்கிறோம். இது உண்மையில்லை சினிமாதான் ன்னு தெரிஞ்சு கொண்டு அப்போவும் அதை ரசிச்சு பாக்கலாம். இல்லை அதோட ஒன்றிப்போய் அதிலே வர சுக துக்கங்களோட நாமும் சுகப்பட்டு துக்கப்பட்டு... புரியுது இல்லையா? ஈசனுக்கு உள்ளுக்குள்ளே - தான் பிரம்மம்ன்னு தெரியும். நமக்கு தெரியாது.

அடுத்து பரப்பிரம்மத்திலேந்து வருகிறது ராஜச குணம். இதுக்கு அவித்தை, அசுத்த மாயை, அஞ்ஞானம் அப்படி எல்லாம் பேர் உண்டு. இதுல பிரதி பலிக்கிற பிரம்மத்தின் சாயை எப்படி பரிணாமம் ஆகுதுன்னா இந்த கணக்கில்லாத சீவர்களா ஆகும். இந்த சீவர்களுக்கு பிரஞ்ஞானன் ன்னு பெயர்.

33.
ஈசனுக் கிது சுழுத்தி யிதுவே காரண சரீரம்
கோசமா னந்தமாகுங் குணமிரா சதம வித்தை
தேசறு மவித்தை தோறுஞ் சிற்சாயை சீவகோடி
நாசமா முயிர்க்கப் போது நாமமும் பிராஞ்ஞனாமே

ஈசனுக்கு இது (இந்த சுத்த மாயையே) சுழுத்தி. இதுவே காரண சரீரம்; ஆனந்த மய கோசம் ஆகும்.

இரண்டாம் குணம் இராசதம் (ராஜஸம்). [அவித்தை, அசுத்த மாயை, அஞ்ஞானம் எனவும் பெயர்கள் உண்டு]. தேசறு (விளக்கமில்லாத) அவித்தை தோறும் (பிரதிபலித்த) சிற்சாயை (சித்தின் நிழல்) சீவகோடி(சீவன்). நாசமாகும் இந்த சீவ உயிர்க்கு அப்போது நாமமும் (பெயரும்) பிராஞ்ஞனாமே. (பிரஞ்ஞானன் ஆகும்).

{பரப்பிரம்மத்தின் ராஜச பாகத்தில் இருந்து சீவர்கள் தோன்றினர்}

7 comments:

geethasmbsvm6 said...

//கொஞ்சம் ரிவிஷனும் முன் தயாரிப்பும்.//

இந்த முறை நீங்க தான் எழுதணும், நாங்க யாரும் எழுதப் போறதில்லை! :P

போன பதிவே இன்னும் படிக்கலை, படிச்சுட்டு வரேன். அதுக்குள்ளே ரிவிஷன் ஆரம்பிச்சாச்சு! :(

திவாண்ணா said...

சும்மா அப்பப்ப ரிவிஷன் பண்ணுவேன். கொஞ்சம் பழகாத வார்த்தைகள் வரதால.கண்டுக்காதீங்க. :-)

Kavinaya said...

லலிதா சகஸ்ரநாமத்தில "பஞ்சகோசாந்தரஸ்திதா" அப்படின்னு வருமே, அது இந்த பஞ்சகோசங்கள் பற்றிதானா? அதுக்கு சரியான பொருள் என்ன?

//இந்த முறை நீங்க தான் எழுதணும், நாங்க யாரும் எழுதப் போறதில்லை! :P//

பெரீஈஈஈஈய்ய்ய்ய்ய ரிப்ப்ப்பீட்டு! :D

திவாண்ணா said...

kavi akkaa
ஆமாம். பஞ்ச -5 கோசம் = உறை அந்தஹ= உள்ளே ஸ்திதா = இருப்பவள்.
ஆன்மாதானே அப்படி இருக்கிறதாக சொன்னேன்? அவளே ஆன்மா என்று பொருள்.

//பெரீஈஈஈஈய்ய்ய்ய்ய ரிப்ப்ப்பீட்டு! :D//

சரி சரி இனிமே ரிவிஷன் பண்ணலை. யாரும் கவலைப்படாதீங்க!
:-))

jeevagv said...

ஒரு சந்தேகமய்யா:
//தேசறு மவித்தை (விளக்கமில்லாத...)//
தேசு+அறும்+அவித்தை - ஒளியினைத் தடை செய்யும் அவித்தை

என எடுத்துக் கொள்ளலாமா?

jeevagv said...

ரிவிஷன் வேணும்-ங்கற கட்சிக்கு என் ஓட்டைப் போட்டு வைக்கிறேன்!

திவாண்ணா said...

ஜீவா சரிதான்.
ஒளியை தடை செய்வது என்பது இங்கே ஞானத்தை தடை செய்வது. அதாவது விளக்கம் இல்லாமல் செய்வது. (விளக்கம்- விளக்கு சம்பந்தம் இருக்கே!)
அப்பப்ப ரிவிஷன் பண்ணுவேன். ஏற்கெனெவே புரிஞ்சவங்க இது கூட நமக்கு தெரியாதுன்னு நினைக்கிறானான்னு வருத்தப்பட வேண்டாம். எல்லாருக்கும் புரியணும்னுதான்...