Pages

Thursday, January 22, 2009

மூல ப்ரக்ருதி
எனக்கு எட்டு கழுதை வயசுக்கு ரெண்டு வயசு கம்மி. நினைவு தெரிஞ்சது ஒரு 3-5 வயசுன்னு பாத்தா ஒரு 50 வருஷ உலக வாழ்க்கை நினைவு இருக்கு. யோசிச்சு பாத்தா இந்த 50 வருஷ காலம் ஒண்ணுமே இல்லைன்னு தோணுது. ஆனா இதுக்குள்ளேயே எவ்வளோ விஷயம் மாறிப்போச்சு!

கலி யுகம் தோன்றி 5000 சொச்சம் வருஷம்ன்னா அது ரொம்பவும் ஒண்ணும் இல்லை. என் வாழ்க்கையின் ஒரு 100 மடங்கு. அவ்வ்ளோதான்.

மாறிப்போன உலகத்தை பாக்கலாம். ஒரு வருஷம் முன்னேன்னா நமக்கு நல்லாவே தெரியுது. பத்து வருஷம் முன்னே கூட பரவாயில்லே. நூறு வருஷங்கள் முன்னேன்னா கொஞ்சம் கற்பனை பண்ணிடலாம். ஆயிரம்னா ஹேஷ்யம் இன்னும் அதிகமாகும். பத்தாயிரம்? யார் கண்டா? லக்ஷம்? கற்பனையே முடியாது, இல்லையா? அதுக்கு முன்னாலே இருந்தா என்ன அதுக்கும் முன்னாலே பல ஆயிரம் வருஷங்கள் முன்னாலே இருந்தா என்ன? கற்பனை வர முடியாது. ஒரு அளவு தாண்டினதும் சிலது அர்த்தமில்லாமே போயிடும்.

(கிடைக்கிற சில குறிப்புகளை வெச்சுகிட்டு மனுஷன் இப்படி பண்ணான் அப்படி பண்ணான்னு சொல்லிகிட்டு இதுக்கு அடிதடி சண்டை வேற... பாக்கிறப்ப சிரிப்பா வருது. ஒண்ணு புராணங்களை நம்பலாம். இல்லைனா நமக்கு தெரியாதுன்னு ஒத்துக்கலாம். இப்படி இருக்க சாத்தியக்கூறு அதிகம்ன்னுதான் ஒரு ஆராய்ச்சியாளரால சொல்ல முடியும். கொஞ்ச நாள்ளே அதுவே உண்மைன்னு ஆயிடுது. :-) பொன்னியின் செல்வன் கதையை வெச்சுகிட்டு அது உண்மைன்னே நினைச்சு சண்டை போடறவங்களை பாத்து இருக்கேன். கிடக்கட்டும்!)

சீவர்கள் எல்லாமே எப்போ ஆரம்பிச்சதுன்னு தெரியாத அளவு காலத்திலே நமக்கு முன்னாலே உதிச்சவங்க.

நடுவிலே ஒரு நிலையை எடுத்துப்போம்.

எல்லாமே ஒரே குழம்பு போல – மேட்டர் எனர்ஜி காம்ப்லெக்ஸ் (matter energy complex)- லயமாகி இருந்தது. இதுக்கு மூல ப்ரக்ருதி ன்னு பேர். சீவர்கள் எல்லாம் இதிலே அடங்கி இருக்கும். சீவர்கள் ன்னு எப்படி தனியா சொல்ல முடியுது? அந்த சீவர்களோட கர்மா அவற்றோட ஒட்டி இருக்கும். அதனால தனியா தெரியுது. இந்த கர்மா ஒட்டி இருக்கிறதாலேதான் பிறவின்னு ஒண்ணு வருது.
கார்மாவால பிறவி எடுத்து அப்புறம் கர்மா தீராம, புதுசா கர்மா சேத்துகிட்டு, திருப்பி திருப்பி பிறவி எடுத்து.... பல ஆயிர வருஷங்கள் போய் எல்லா சீவர்களும் திருப்பியும் மூலப்ப்ரக்ருதியிலே லயமாகும். திருப்பி உதிக்கும். இன்னொரு கால கட்டத்திலே சீவர்கள் எல்லாமே தனியாக இல்லாமலே லயமாயிடும். இதோட விவரணம் அப்புறமா பாக்கலாம்.
இது ஒரு பக்கம் இருக்கட்டும்.

மூல ப்ரக்ருதியிலேந்து ஒரு கால கட்டத்திலே ஈஸ்வரனோட உள் நோக்கிய பார்வையாலே இவை மூன்று குணங்களா தனியா வெளிப்படும்.

இந்த 3 குணங்களைப்பத்தி முன்னேயே பாத்து இருக்கிறோம். சத்வம் , ரஜஸ், தமஸ். இதை வெளுப்பு, சிவப்பு, கருப்புன்னு உருவகப்படுத்தி இருக்காங்க. சும்மா பாகுபடுத்தத்தான்! வேற விதமா சுத்தம், அழுக்கு, இருட்டு என்கிறார்கள்.

எல்லாருக்கும் இந்த 3 குணங்களும் உண்டு. என்ன, ஒவ்வொத்தருக்கு ஒவ்வொண்ணு அதிகமா இருக்கும்; குறைவா இருக்கும். அவ்வளவுதான்.

29.
அதுதானெப்படி என்றக்கா லநாதியாஞ் சீவரெல்லாம்
பொதுவான சுழுத்திபோல பொருந்து மவ்வியந்தன்னில்
இதுகால தத்துவப் பேரீசனுட் பார்வையாலே
முதுமூல சுபாவம்விட்டு முக்குணம் வியத்தமாமே

அதுதான் (அக்கற்பனை) எப்படி [உண்டாயிற்று] என்றக்கால் (என கேட்பாயானால்) அநாதியாஞ் (ஆதியில்லாத)  சீவர் எல்லாம் பொதுவான  சுழுத்தி [அவஸ்தை] போல அவ்வியந்தன்னில்  (மூலப்பிரகிருதியில்) பொருந்தும் (கருமவாசனையுடன்அடங்கியிருக்கும்).  இது காலதத்துவப் பேர் [அடைந்து] ஈசன் உட்பார்வையாலே முது மூல (முன்னுள்ள பிரகிருதி) சுபாவம் விட்டு (தன்மை
விட்டு) முக்குணம் வியத்தமாமே. (முக்குணங்களாய் வெளிப்படும்)

30.
அந்த முக்குணங்களின் பெயர் முதலியன:
உத்தம வெளுப்புச் செம்மை  யுரைத்திடு கறுப்பு மாகும்
சத்துவ குணத்தி னோடு ரசோகுணந் தமோகு ணந்தான்
சுத்தமோ  டழுக் கிருட்டாச் சொல்லுமுக் குணமு மூன்றாய்
ஒத்துள வேனுந் தம்மு ளொருகுண மதிகமாமே

உத்தம (முதலாவதாக) வெளுப்பு, செம்மை,  [அதமமாக] உரைத்திடும் கறுப்பும் ஆகும். [முறையே] சத்துவ குணத்தினோடு, ரசோகுணம், தமோ குணந்தான் [அவற்றின் பெயர்]. சுத்தமோடும், அழுக்கு (உடனும்), இருட்டாக[வும்] சொல்லும் [இந்த] முக் குணமும் மூன்றாகி ஒத்துளவேனும் (ஒத்து இருப்பினும்) தம்முள் (அவற்றுள்) ஒரு குணம் அதிகமாமே. (மேலானது)


Post a Comment