Friday, January 9, 2009
கைவல்லிய நவநீதம்-1
ப்ரம்மம் நிர்குணமாச்சே? அது எப்படி அனுக்கிரஹம் எல்லாம் செய்யும்? தன்னோடு தானாக ஐக்கியம் ஆக்கிக்கும்? அதுதானே மோக்ஷம்?
அப்படி கேள்வி கேட்காதே என்கிறாங்க! இங்கேதான் சிரத்தை வருது. குரு இப்படித்தான் சொல்லி இருக்கார். உபநிஷத் எல்லாம் இப்படித்தான் சொல்லி இருக்கு. அதன் மேலே நம்பிக்கை வைத்து மேலே போகணும். தேவையான அனுகிரஹம் செய்யும்போது குணத்தோட இருக்கிற ஈஸ்வரனா இருந்து ஐக்கியப்படுத்தும் போது உள்ளே குணமில்லா ப்ரம்மமா இருக்குன்னு எடுத்துக்கலாம்.
எப்படி இருந்தாலும் இங்கே குணமில்லாத ப்ரம்மமாதான் பக்தி செலுத்தணும். இது வரை குணத்தோட ஈஸ்வரனை பக்தி பண்ணது மனசிலே வருமே? வரும்தான்? என் ஆனையை எல்லாம் விட முடியாதுன்னு யாரோ சொன்னாங்க இல்லையா!
¨அப்பா (அல்லது அம்மா) உன் கிருபையாலேதான் எனக்கு அத்வைதத்திலே மனசு போய் இருக்கு. உன் கிருபையாலே கொஞ்சம் கொஞ்சம் சாதனை பண்ணிக்கொண்டு இருக்கேன். முடிவா நிர்குண பக்தி வரணும்ன்னு உனக்கே தெரியுமே? குணத்தோட பக்தி செய்தா நான் பின்னேறி விடுவேன். அப்படி ஆகாம நீதான் காப்பாத்தணும்¨ ன்னு வேண்டிக்கொண்டா எல்லாம் சரி ஆகிவிடும்.
இந்த படியிலே பக்தி இல்லைனா ரொம்பவே சாரம் இல்லாம டிரையா (dry) சாதனை போய் கொண்டு இருக்கும். ஆனா அடைய வேண்டியதோ சத் சித் ஆனந்தமாச்சே! ரொம்பவே சாரம் உள்ளது. அதற்காக இப்ப கொஞ்சம் குளு குளுன்னு பக்தி தண்ணி பாய்சறோம்.
நல்லது. இப்ப இந்த விஷயங்களை கொஞ்சம் நிறுத்திக்கலாம்.
ஞான வழில சாதனை படிகள் என்னன்னு பாத்தோம். இப்போதைக்கு தியரிதான். கொஞ்சம் கொஞ்சமா அனுபவத்துக்கு வர வேண்டியது. முன்னேயே சொன்னது போல இதில ஏதாவது ஒண்ணை முழுக்க சாதிச்சாலும் மத்த எல்லாமே கூட வந்துடும்.
அடுத்து நாம கைவல்லிய நவநீதம் என்கிற எளிமையான நடையிலே எழுதப்பட்ட நூலை ஒட்டி ஞான வழியை பார்க்கலாம். இவ்வளோ நாள் இந்த வழியிலே படிகள் ன்னு நாம பாத்த விஷயங்களை இவர் மூணே மூணு செய்யுட்களிலே நகர்த்திண்டு போயிட்டார்.
(நீயும் அப்படியே செஞ்சு இருக்கக்கூடாதான்னு பல்லை கடிக்கறது தெரியுது. போனாப்போறது).
எழுதியவர் ஸ்ரீ தாண்டவராய ஸ்வாமிகள். காலம் சுமார் 700 வருஷங்களுக்கு முன். இவரது குரு ஸ்ரீ நாராயணன். நன்னிலம் என்ற ஊரை சேர்ந்தவர். இப்பவும் அங்கே பேருந்து நிலையத்துக்கு அருகே ஒரு 200 மீ தூரத்தில் இவர்களது அதிஷ்டானம் இருக்கு.
தத்துவ விளக்கப்படலம்.
1.
நித்திய வநித்தியங்க ணிண்ணயந் தெரிவிவேகம்
மத்திய விகபரங்கள் வருபோகங் களினிராசை
சத்திய முரைக்க வேண்டுஞ் சமாதியென் றாறுகூட்டம்
முத்தியை விரும்புமிச்சை மொழிவர்சா தனமிந்நான்கே
நித்திய அநித்தியங்களில் நிண்ணயம் (நிர்ணயம்) தெரி(கின்ற) விவேகம், மத்திய (இடையில் உள்ள) இக (இந்த லோக) பரங்கள் (மறு லோகங்கள்) வரும் போகங்களில் நிராசை, சமாதியென்று ஆறு கூட்டம் (சமம் முதலான ஆறு தொகுதி) முத்தியை விரும்பும் இச்சை- சத்தியம் உரைக்க வேண்டும் (உண்மையாக அதிகாரிக்கு உரிய) சாதனம் இந்நான்கே (என சத்துக்கள்) மொழிவர்.
2.சம தமாதிகளின் இலக்கணம்:
சமம்தமம் விடல் சகித்தல் சமாதானஞ் சிரத்தை யாறாம்
சமமகக் கரண தண்டந் தமம்புறக் கரண தண்டம்
அமர்தரு கருமம் பற்றா தறுத்தலே விடலென்றாகும்
மமர்செயுங் காமமாதி வரினடக் குதல் சகித்தல்
சமம், தமம், விடல்=உபரதி, சகித்தல்=திதிக்ஷா, சமாதானம், சிரத்தை ஆறாம். சமம் அகக் கரண தண்டம் (மனதை அடக்குதல்) தமம் புறக் கரண தண்டம். (வெளி விவகாரங்களை கவனிக்கும் ஐந்து இந்திரியங்களை அடக்குதல்) அமர்தரு கருமம் (பொருந்திய பாவம் கலந்த கர்மங்களையும் புண்ணிய கர்மங்களையும்) பற்றாது (பலன் விரும்பாது) அறுத்தலே (நீக்குதலே) விடல் என்றாகும். மமர் (மயக்கம்) செயும் காமம் ஆதி (காமம் குரோதம் முதலியவை) வரின் அடக்குதல் (பொறுத்தல்) சகித்தல்.
3.சிரவணப் பொருளைத்தானே சித்தஞ்சிந் திக்குமாறு
சரதமா வைக்குமித்தைச் சமாதானமென்பர் மேலோர்
பரமசற் குருநூ லன்பு பற்றுதலே சிரத்தையாகும்
வரமிகு சமாதியாறு வகையின்சொற் பொருளிதாமே
(வேதாந்த) சிரவண (கேள்வி) பொருளைத்தானே சித்தம் (உள்ளம்) சிந்திக்குமாறு சரதமாய் (சத்தியமாக) வைக்கும் இத்தை (இதை) சமாதானமென்பர் மேலோர். பரம சற்குரு (ஈஸ்வரன்) நூல் (வேத சாத்திரங்கள்) மீது அன்பு பற்றுதலே சிரத்தையாகும். வரமிகு (மேன்மை மிக்க) சம ஆதி ஆறு வகையின் சொற் பொருள் இதாமே.
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
//"கைவல்லிய நவநீதம்-1"//
ஆகா, நல்லது!
ஆகா, இப்ப படிச்சுதானே ஆகணும்.:-))
Post a Comment