Pages

Monday, January 12, 2009

யாருக்கு ஞான வழி?ஒத்தர் ஒரு வேலையை சரியா செய்யணும்னா அதுக்கான தகுதி இருக்கணும் இல்லையா? ஞான வழியிலே போக என்ன தேவைன்னு இதுவரை படிகளை பாத்தோம். இது நமக்கு இப்ப இருக்கோ இல்லையோன்னு சந்தேகம் வேண்டாம். இந்த பதிவுகளை எழுதற எனக்கு இன்னும் ஞானம் வரலை. படித்து முடித்த பின்னும் எல்லாருக்கும் வந்துவிடாது. ஆனா இது இவ்வளவு வேகத்திலே- கால கட்டத்திலே வரும் வாராதுன்னு ஒரு நியதியும் கிடையாது. எப்ப வேணா வரலாம். அதனால தியரிடிகலா இது என்னன்னு தெரிந்துகொண்டா பின்னால சிலது சௌகரியமா இருக்கலாம். அதுக்காக இப்ப படிப்போம்.

விட்டதை பிடிக்க - ஞான வழிக்கு தேவை சித்த சுத்தி. இந்த சித்த சுத்தி சுலபமா கிடைக்கிறது கர்ம வழியை பின்பற்றுவதாலே. பக்தி ஒத்தருக்கு முதல்லேயும் சரி கடைசியிலேயும் சரி கட்டாயமா வேணும் என்கிறதையும் பாத்து இருக்கோம். ஈஸ்வரன் மேலே அன்பை திடமா வைத்து கொண்டு மனசை அடக்குகிறதுன்னு ஒவ்வொண்ணா செய்து கொண்டு போகணும். ¨ஞான வழி ஆராய்ச்சிதான் நம்ம முதல் கட்டாய தொழில். மத்தது எல்லாம் உலக விஷயங்கள்: இந்த சரீரத்தை காப்பாத்த ஜீவனத்துக்கு செய்கிறது¨ என்கிற உறுதி இருக்கணும். எவ்வளவுக்கு எவ்வளவு தீவிரமா இதை செய்கிறோமோ அவ்வளவுக்கு அவ்வளவு முக்தி கிட்டே இருக்கு. (அவரவரை பொருத்து). இந்த விஷயங்கள் எல்லார் புத்தியிலேயும் நுழையாது. யார் பல ஜென்மங்களா பலன் கருதா காரியங்களை செய்து சித்தம் சுத்தியாகி இருக்காங்களோ அவங்களுக்கு சட்டுன்னு பிடிபடும். மத்தவங்களுக்கு தாமதமா புரியலாம்.

இந்த சித்த சுத்தி இருக்கிறவன் மத்தபடி பணக்காரனோ ஏழையோ; இந்த ஜாதியோ, அந்த ஜாதியோ; ப்ரம்மச்சாரியோ, குடும்பஸ்தனோ - இதெல்லாம் ஒரு பொருட்டு இல்லை. மனப்பக்குவம் ஒண்ணுதான் விஷயம்.

இப்படி சித்த சுத்தி அடைஞ்ச ஒத்தன் மூணு துன்பங்களாலும் கஷ்டப்பட்டு ஓடி வந்து குருவை தேடி சரணாகதி செய்து உபதேசம் கேட்பதாக நூல் ஆரம்பிக்கிறது.

அதென்ன 3 துன்பம்?

1.பசி, தாகம், நம்ம புலன்களுக்கு கேடு - கண் சரியா தெரியலை, காது சரியா கேக்கலை, உடலுக்கு உள்ள நோய்கள் இப்டி இருக்கிறது சில துன்பங்கள். இதுக்கெல்லாம் பெயர் ஆதியாத்மிகம்.
2.மழை பெய்யறது, சுனாமி, இடி விழுகிறது, வெள்ளம்,விபத்துக்கள் இப்படி சிலது எல்லாம் இருக்கே. இதை ஆங்கிலத்துல act of god அப்படிம்பாங்க. தெய்வச்செயல்கள். இதெல்லாம் நம்ம கையிலே இல்லை. (ஆனா பெய்கிற மழையை இன்னும் பிரச்சினை ஆக்கிக்கொள்ள நமக்கு சாய்ஸ் இருக்கு!) இப்படி நிகழ்கிறதால வர துன்பங்கள் ஆதி தெய்விகம்.
3.திருடர்கள், கொலைகாரர்கள், மிருகங்கள், பாம்பு இது போல மத்த பிராணிகள் மூலமா நமக்கு துன்பங்கள் ஏற்படலாம். இது ஆதி பௌதிகம்.

இப்படி வருகிற சொற்களை எல்லாம் ஒரு பக்கத்திலே போட்டு ஒரு கலைச்சொல் அகராதி செய்யப்போகிறேன். தொடுப்பை பக்கத்திலே பாருங்க.

இந்த மூணு வகை துன்பங்கள் எல்லாருக்கும்தான் இருக்கும் இல்லையா? இதிலேந்து விடுபட நாம் எடுக்கிற முயற்சிதான் வேற வேற. பொதுவா நாம் செய்கிறதால கிடைப்பது தற்காலிக தீர்வுகள்தான்.

11.
சாதன மின்றி யொன்றைச் சாதிப்பா ருலகி லில்லை
ஆதலா லிந்த நான்கு மடைந்தவர்க் கறிவுண் டாகும்
நூதன விவேகி யுள்ளி னுழையாது நுழையுமாகில்
பூதசென் மங்கள் கோடி புனிதனாம் புருட னாமே

சாதனமின்றி ஒன்றைச் (ஒரு தொழிலை) சாதிப்பார் உலகில் இல்லை. ஆதலால் இந்த [சாதனங்கள்] நான்கும் அடைந்தவர்க்கு அறிவு (சொரூப ஞானம்) உண்டாகும். நூதன விவேகி உள்ளின் (மனதில்) [ஞானம்] நுழையாது. நுழையுமாகில் பூத சென்மங்கள் கோடி [-இல் சித்த சுத்தி அடைந்த] புனிதனாம் புருடனாமே.

12.
முன் கூறிய சாதனங்கள் நிறைந்த ஒருவன் அதிதீவிர பக்குவத்தை கூறல்
{இனி ஆசிரியர் ஒரு சீடனுக்கு உபதேசம் செய்வது போன்ற நடையில் நூல் செல்கிறது}

இவனதி காரி யானோ னிந்திரி யங்க ளாலும்
புவனதெய் வங்க ளாலும் பூதபௌ திகங்களாலும்
தவனமூன் றடைந்து வெய்யிற் சகித்திடாப் புழுப்போல் வெம்பிப்
பவமறு ஞானதீர்த்தம் படிந்திடப் பதறி னானே

இவன் [இந்த சாதனம் நான்கும் உடையவன்] அதிகாரியானோன். (இந்த நூலுக்கு அதிகாரியாவான்) இந்திரியங்களாலும், (உடல் சம்பந்தப்பட்ட வயிற்று வலி, சிரங்கு, கண்வலி போன்ற துன்பங்கள் -ஆதியாத்மிகம்) புவன தெய்வங்களாலும் (பனி, மழை, காற்று முதலியவை, சுவர் இடிந்து விழுதல், மரம் முறிந்து விழுதல் போன்ற தெய்வச்செயல்களாலும் -ஆதி தெய்விகம்), பூத பௌதிகங்களாலும் (மற்ற மனிதர், விலங்குகள் போன்றவற்றாலும் -ஆதிபௌதிகம்) தவன (தாபம்) மூன்று அடைந்து, வெய்யில் சகித்திடா புழு போல் வெம்பி பவம்அறு (பிறவி நீக்கும்) ஞான தீர்த்தம் படிந்திட (மூழ்க) பதறினானே (விரைந்தானே).


Post a Comment