Pages

Thursday, October 29, 2009

ஸ்ரீ காயத்ரி ஜப யக்ஞ அனுபவங்கள்-1



ஸ்ரீ காயத்ரி ஜப யக்ஞ அனுபவங்கள்.
சுமார் பத்து வருடங்களுக்கு முன் பங்களூரில் நடை பெற்ற சத கோடி காயத்ரி ஜப யக்ஞத்தில் பங்கு கொள்ளும் பாக்கியம் இறை அருளால் அமையப்பெற்றது. அந்த நேரத்தில் பங்கு கொள்ள உறுப்பினர்களை சேர்க்கும் வேலையில் ஒரு சிலர் இறங்கினோம், மிகுந்த அவநம்பிக்கையுடன்தான். ஒரு வருட காலத்துக்கு யார் இந்த காலத்தில் ஆசாரத்துடன் இருந்து இரண்டரை லட்சம் - தினம் அறு நூற்று ஐம்பது- காயத்ரி செய்வர் ? இருந்தாலும் முயற்சி செய்வது மட்டுமே நம் வேலை மற்றது இறைவன் செயல் என்று களத்தில் இறங்கினோம். ஒரு மாதம் சுற்றியதில் பதினைந்து பேர் பதிவு செய்து கொண்டனர். இதுவே எங்களுக்கு ஆச்சரியமாக இருந்தது. ஒரு வருடம் கழித்து ஐந்து பேர் பங்களூர் சென்று பங்கு கொண்டோம். மேலும் சிலர் ஜபம் செய்து இருந்தாலும் ஜனவரி குளிர், தூரம் உள்ளிட்ட பல காரணங்களால் பங்கேற்கவில்லை.
ஜபம் ஆரம்பித்த சிலர் உற்சாகத்தில் தினசரி கூட்டு ஜபம் செய்யலாம் என்று ஒரு முயற்சி ஆரம்பித்து பெரியவர்களை கேட்கலாம் என்று ஒரு வேத விற்பனரை கேட்கப்போய் அவர் ஜபம் தனியாக செய்வதே சரி என்று சொல்ல அந்த முயற்சி அத்துடன் முடிந்தது. (போன இடத்தில் வேதம் பயில ஆர்வத்தை வெளியிடப்போய் "பேஷா சொல்லித்தரேனே! வியாழக்கிழமையிலிருந்து வா" என்று அவரும் சொல்ல என் வேத பாடங்கள் ஆரம்பித்து ஏழு வருடங்களில் பூர்த்தி ஆனது தனிக்கதை. )

ஹோமம் முடிந்தபின் இன்னொரு முயற்சி ஆரம்பித்தது. இதே போல உள்ளூரில் செய்தால் என்ன? தெரிந்தவர்களையும் பங்களூர் ஹோமத்துக்கு பதிவு செய்து கொண்டவர்களையும் கூப்பிட்டு ஒரு மீட்டிங் போட்டோம். (ஆமா, நம்பிக்கை மீட்டிங் எப்பங்க ராமா?) எல்லாருடைய கருத்துக்களையும் கேட்டோம். எல்லாரும் அவசியம் செய்ய வேண்டும் என்றனர். இதோ பாருங்கள் இப்படி கொம்பு சீவி விட்டுவிட்டு போய் விடலாம் என்று நினைக்க வேண்டாம். எல்லாருக்கும் பொறுப்பு இருக்கு என்றோம். சரி என்று ஒப்புக்கொண்டனர்.

உடனடியாக ஒரு சமிதி ஆரம்பிப்பதாக அறிவிக்கப்பட்டது.
சரிதான் யார் தலைவர் என்று தேர்ந்தெடுக்கலாமா என்றார்கள்.
இங்கே தலையும் இல்லை வாலும் இல்லை என்றோம்.

அது ஏன் எப்படி?
இப்படி ஒரு கமிட்டி போட்டதும் எல்லாரும் இனி அவர்கள் பாடு என்று தங்கள் வேலையை பார்க்கப்போய் விடுவர். இப்படி வேண்டாம். அனைவருக்கும் ஒருங்கிணைப்பாளர் பொறுப்பு உள்ளது என்றோம். நீங்கள் தலைவராக இருக்கலாமே என்றார்கள். இல்லை நானும் ஒரு ஒருங்கிணைப்பாளர். ஒருங்கிணைப்பாளர்களுக்கு ஒருங்கிணைப்பாளர்.
இந்த விஷயம் அத்துடன் முடிந்தது. இன்று வரை யாருக்கும் எந்த பதவியும் இங்கு இல்லை. பொறுப்பு மட்டுமே இருக்கிறது.

ஊரை பகுதிகளாக பிரித்து ஒவ்வொரு பகுதிக்கும் இரண்டு பேர் பொறுப்பாக்கப்பட்டார்கள். ஒரு மாத காலத்தில் தம் பகுதியில் வேலையை முடிக்கவேண்டும். வீடு வீடாக போய் ஜபம் செய்ய அதிகாரம் உள்ள, இசைவு தரும் நபர்களை பட்டியல் இட்டு அவர் குறித்த விவரங்களை சேகரித்து அவரிடம் கையெழுத்தும் வாங்க வேண்டும்.
ஜபம் சங்கராந்தி அன்று துவங்கும். நான்கு மாதங்கள் ஜபகாலம். தினசரி ஆயிரம் காயத்ரி ஜபிக்க வேண்டும். இப்படி நூறு நாட்களில் ஒரு லட்சம் பூர்த்தி செய்ய வேண்டும்.
இப்படி நூறு பேரை பிடித்துவிட்டால் ஒரு கோடி பூர்த்தியாகும் என்பது ஏட்டுக்கணக்கு.

அது நடைமுறையில் சாத்தியமாகாது என்று அறிந்து இருந்தோம். முன்னே பதினைந்தில் ஐந்துதானே தேறியது? ஆகவே எவ்வளவு பேர் பதிவு செய்வது என்பதில் மட்டு இல்லை என்று முடிவு செய்தோம்.

பகுதி பகுதியாக கூடுதல்கள் நடத்தி பங்கேற்போருக்கு ஜபம் குறித்த விவரங்களும் ஏற்படக்கூடிய பிரச்சினைகள் அவற்றுக்கான தீர்வுகள் என்று செயல் பட்டோம். ஜப காலம் முடியும் போது அவர்களுடைய அனுபவங்களையும் கேட்டுக்கொண்டோம்.

அந்த அனுபவங்களைத்தான் உங்களுடன் பெயர்களை சொல்லாமல் பகிர்ந்து கொள்ள இருக்கிறேன்.


2 comments:

vijayaragavan said...

"ஸ்ரீ காயத்ரி ஜப யக்ஞ அனுபவங்கள்-1"
என்ற உடன் நான் காயத்ரி ஜபம் பண்ணியதால் வந்த அனுபவம் என்று நினைத்து விட்டேன். காயத்ரி ஸ்ரீவித்யாவுக்கு நெருங்கினது என்பதால்
மிகவும் விசேஷம். ஆனால், இவ்வளவு கஷ்டங்கள் இதில் இப்போது இருபதால் 'கலி' என்பது மிகவும்
உண்மை என்பது புரிகிறது.

இனிமேலாவது தொடர்ந்து சொல்ல ஆரம்பிக்கிறேன்
நன்றி உங்களுக்கு.

சரி, காயத்ரி உபாசனை அனுபவங்களை எழுதுங்களேன்?
பிரைவேட் ஆக கூட எழுதலாம் :)

இந்த அனுபவத்துடன் தமிழ் பாடலோ, சமஸ்கிருத ச்லோகமோ படித்தால் அதன் உண்மை அர்த்தம் புரியும் என நினைகிறேன் நான் !!

திவாண்ணா said...

வருகைக்கு நன்றி விஜய்! இந்த தொடர் கொஞ் நாள் வரும். அப்புறம் அடுத்ததை யோசிக்கலாம்.
உங்க அனுபவங்களை எழுதுங்க. ரசிக்கலாம்!