Pages

Tuesday, October 27, 2009

நூற்பயன்



177.
வந்தோ ரிவ்வா நந்தமகிழ்சியா ருடன்சொல் வேன்யான்
சிந்தையி லெழுந்துபொங்கிச் செகமெலா நிறைந்து தேங்கி
அந்தமில் லாத தாயிற் றாப்படி குருவே தாந்த
மந்திர மருளுமீசன் மலரடி வணங்கி னேனே.

வந்தது ஓர் இவ்வாநந்த மகிழ்சி. யாருடன் சொல்வேன் யான்? சிந்தையில் எழுந்து பொங்கிச் செகமெலாம் நிறைந்து தேங்கி, அந்தம் (முடிவு) இல்லாதது ஆயிற்று. அப்படி குரு வேதாந்த மந்திரம் அருளும் ஈசன் மலரடி வணங்கினேனே.
--
இந்த பிரமானந்தத்தை யாருடன் பகிந்து கொள்வேன்? அது என் உள்ளத்துள் உதயமாகி கங்கு கரையற்று விளங்குகிறது. அத்தகைய ஒப்பு உயர்வற்ற ஆனந்த பேற்றை அருளவல்ல ஞானதேசிகரையும் வேதாந்த வாக்கியங்களை அருளிய பரமேஸ்வரனையும் பணிகிறேன்.

178.
வித்தியா னந்த மிந்த விதமென விளம்பி னோமே
பத்தியா லிந்த நூலை பார்தநு பவித்த பேர்கள்
நித்திய தரும நிட்டை நிலைதனை யறிந்து சீவன்
முத்தியை யடைந்தி ருந்த முனிவர ராகுவாரே

வித்தியானந்தம் இந்த விதம் என விளம்பினோமே. பத்தியால் (அன்பினால்) இந்த நூலை பார்த்து (சற்குரு முன்னிலையில் இந்த ஞான சாஸ்த்ரார்தத்தை கேட்டு உணர்ந்து) அநுபவித்த பேர்கள், நித்திய தரும நிட்டை நிலைதனை அறிந்து சீவன் முத்தியை அடைந்திருந்த முனிவரர் ஆகுவாரே.


No comments: