175.
குரு கிருபையை வியந்து கூறல்:
என்னபுண் ணியமோ செய்தே னேதுபாக் கியமோ காணேன்
நன்னிலந் தனிலெ ழுந்த நாரணன் கிருபை யாலே
தன்னிய னானே னானுத் தரீயத்தை வீசு கின்றேன்
தன்னிய னின்னு நானே தாண்டவ மாடு கின்றேன்
என்ன புண்ணியமோ செய்தேன்? ஏது பாக்கியமோ காணேன் (தெரிந்திலேன்). நன்னிலந்தனில் எழுந்த நாரணன் கிருபையாலே தன்னியன் ஆனேன் நான். உத்தரீயத்தை வீசுகின்றேன். தன்னியன் இன்னும் நானே. தாண்டவம் ஆடுகின்றேன்.
--
எத்தனை புண்ணியங்களை செய்தேனோ! என்ன அதிருஷ்டமோ! நன்னிலம் என்னும் இடத்தில் அருளே திருமேனியாகக்கொண்டு எழுந்தருளிய நாராயண தேசிகருடைய கடாக்ஷத்தால் நான் கிருதார்த்தன் ஆனேன். கிடைத்த திருப்தியால் ஆனந்த தாண்டவம் ஆடுகிறேன்.
176.
தத்துவ ஞானம் வந்த சந்தோட வதிச யத்தால்
நித்தமா டுவன்கா ணென்ற நிலைமுன்ன மேய் றிந்த
சத்திய மதனா லன்றோ தாண்டவா வென்ற ழைத்தார்
அத்தனை மகிமை யுள்ளோ ரன்னையும் பிதாவுந் தாமே
தத்துவ ஞானம் வந்த சந்தோட அதிசயத்தால் நித்தம் ஆடுவன் காண் என்ற நிலை முன்னமே அறிந்த சத்தியம் அதனால் அன்றோ தாண்டவா என்றழைத்தார், அத்தனை மகிமையுள்ளோர் அன்னையும் பிதாவும் தாமே.
--
நூலாசிரியருக்கு அவரது குருவான நாராயணன் இட்ட பெயர் தாண்டவராயன். "தத்துவ ஞானத்தால் தான்டவம் ஆடுவேன் என உணர்ந்தோ இந்த பெயரை இட்டார்? அவரே எனக்கு தாயும் தந்தையும் ஆவார்" என்று வியக்கிறார். இருவர் அதிஷ்டானமும் ஒன்றாக நன்னிலம் பேருந்து நிலையத்தின் அருகில் சுமார் 100 மீ தூரத்தில் அமைந்துள்ளது.
1 comment:
ji,
thanks for samadhi information.
Post a Comment