Pages

Wednesday, October 21, 2009

மீதி 2 உபாயங்கள்



170.
மீதி 2 உபாயங்கள்:
விருத்திக ளடக்க வின்னம் விநோதமாம் யோகத் தாலே
துருத்திபோ லூது மூச்சை சுகமுட னடக்கி னிற்கும்
கருத்ததற் கில்லை யென்னிற் காரண சரீர மாகிப்
பெருத்ததோ ரவித்தை தன்னைப் பிடுங்கிடி லடங்குந்தானே

விருத்திகள் அடக்க இன்னம் விநோதமாம் யோகத்தாலே துருத்தி போல் ஊது மூச்சை சுகமுடன் அடக்கின் நிற்கும். கருத்து (மனம்) அதற்கு இல்லை என்னில் காரண சரீரமாகிப் பெருத்தது (தடித்தது) ஓர் அவித்தை தன்னைப் பிடுங்கிடில் [விருத்திகள்] அடங்குந்தானே.
--
அந்த வாசனைகளை ஜெயிக்க இந்திரியங்களை கட்டுப்படுத்தறது எனக்கு முடியலை வேற வழி இருக்கான்னா...
 துருத்தி போல வீசிக்கொண்டு இருக்கும் பிராண வாயுவை ரேசக பூரக கும்பங்களால் அடக்கினால் மனோ விருத்திகள் எல்லாம் தானே அடங்கும். இது ஒரு யோக மார்கம்.

இது இயலாது எனில் காரண சரீரமாகிய அவித்தையை நாசம் செய்தால் அடங்கும்.

171.
காரண சரீரத்தை களையும் உபாயம்.
காரண சரீரந் தன்னை களைவதெவ் வாறென் றேதில்
ஆரணம் பொய் சொல்லாதே யதன்பொரு ளகத்தி லுன்னிப்
பூரண மாகு மென்மேற் புவனங்க டோற்ற மென்று
தாரணை வந்த தாகிற் றரித்திடு மவித்தை யெங்கே

காரண சரீரம் தன்னை களைவது எவ்வாறு என்று ஏதில் (கேட்கில்) ஆரணம் (வேதம்) பொய் சொல்லாதே. ஆதலால், அதன் பொருளை அகத்தில் உன்னி, (சிந்தித்து) பூரணமாகும் என் மேல் புவனங்கள் தோற்றம் என்று தாரணை (உறுதி) வந்ததாகில் எங்கே தரித்திடும் (இருக்கும்) அவித்தை?

சுத்தம்! அதென்ன காரண சரீரத்தை களையறது?

வேத நிச்சயப்படி குரு வாக்கியத்தால் "சர்வம் பிரம்ம மயம்" என்றும் "சர்வம் மித்தை" என்றும் "பரிபூரணமான என்னிடத்தில் இந்த பிரபஞ்சங்கள் ஆரோபமாக குடி கொண்டு உள்ளன" என்றும் உறுதி வந்தா அவித்தை காணாமல் போகும். அப்படி ஒரு உறுதி எப்படி வரும்? அநுபவம் வந்தாதான் அப்படி ஒரு உறுதி வரும்.


2 comments:

Geetha Sambasivam said...

//துருத்தி போல வீசிக்கொண்டு இருக்கும் பிராண வாயுவை ரேசக பூரக கும்பங்களால் அடக்கினால் மனோ விருத்திகள் எல்லாம் தானே அடங்கும். இது ஒரு யோக மார்கம்.//

அப்பாடா! புரிஞ்ச ஒரு விஷயம் இது மட்டுமே! :(((

திவாண்ணா said...

புரிஞ்சாச்சுன்னா சந்தோஷம். ஏன் வருத்தப்படணும்?