166.
ஞானமே பிரமம் எனல்:
நிறைந்தவா றென்றவாறு நிலைதெறிந் திலனென் றாயேல்
அறிந்ததாஞ் சுழுத்தி தன்னி லாநந்த மதுவே யாகும்
குறைந்ததற் காநந்தந் தான் குவலயந் தன்னி லில்லை
நிறைந்ததே யிந்த வான்மா நிதானமிவ் வறிவு தானே
நிறைந்தவாறு (பரிபூரணனாயிருத்தல்) என்றவாறு (எப்படி என்ற) நிலை தெரிந்திலன் என்றாயேல், (அஞ்ஞானத்தை) சுழுத்திதன்னில் அறிந்ததாம் (அஞ்ஞானத்தை அறிந்து இருந்த) ஆநந்தம் அதுவே ஆகும். குறைந்ததற்கு ஆநந்தந்தான் குவலயம் (உலகம்) தன்னில் (எங்கும்) இல்லை. நிறைந்ததே இந்த ஆன்மா. இவ்வறிவு தானே நிதானம்.
[இவ்வறிவென்பது 5 இந்திரியங்களால் பஞ்ச விடயத்தை அறியும் பிரஞ்ஞானமே, நிதானம் என்பது சீவ ஈஸ்வர சகத்துக்கு ஆதி காரணமாயும் அவற்றுக்கு தற் சாட்சியாயும் வியாபகமாயும் உள்ள பிரமம். பிரக்ஞானம் ப்ரம்ஹா- ரிக் வேத மஹா வாக்கியம்]
--
பரிபூரணனாயிருத்தல் எப்படி என்று தெரியாது என்றால், தன்னை சுழுத்தியில் அறிந்த ஆனந்தம் எதுவோ அதுவே ஆகும். இதை குறைந்தது என்று சொல்லக்கூடிய அளவு வேறு ஆனந்தம் உலகில் இல்லை. அப்படி நிறைவானது இது. இந்த அறிவைதான் சீவ ஈஸ்வர சகத்துக்கு ஆதி காரணமான நிதானம் என்பர்.
167.
ஆத்மாவே பிரமம்.
மனத்தினா லெண்ணித் தானே வந்ததிவ் வுலக மாகும்
நினைத்திடி லனேக லோக நிற்பதவ் வறிவி லன்றோ
வனைத்தையுங் கடந்தப் பாலு மந்தமற் றறிவி தாமென்
றெனைத்தனி விசாரத் திட்டாலேகமாய் நிறைந்தோ னானே
மனத்தினால் எண்ணித்தானே வந்தது இவ்வுலகம் ஆகும். நினைத்திடில் அனேக லோகம் நிற்பது அவ்வறிவில் அன்றோ? (ஆரோபமான மனதுக்கு அதிஷ்டானமான அந்த பிரம சைதன்யத்தில் அன்றோ) அனைத்தையும் கடந்து, அப்பாலும் அந்தம் அற்று, 'அறிவு (பிரம சைதன்யம்) இதாம்' என்று என்னை தனி (தனிமையாக) விசாரித்திட்டால் ஏகமாய் நிறைந்தோன் நானே. [அயமாத்மா ப்ரம்ஹா -அதர்வண வேத மஹா வாக்யம்]
[இப்படி மேல் கண்ட 4 வேத மஹா வாக்கியங்களை வாக்கியார்த்த சொரூபம் தானே என சிந்திக்கும் போது உண்டாகும் சுகம் வித்தையாநந்தம்]
No comments:
Post a Comment