Pages

Tuesday, October 20, 2009

எல்லாம் சரி! எப்படி இந்த ஆனந்தத்தை அடைகிறது????



168.
அந்தவா றிருந்து கொண்டே யாநந்த மநுப விக்க
வெந்தவா றிருந்துகொண்டா லெனக்கிது தெரியுமென்னில்
இந்தமூன் றவத்தை தம்மு ளெழுந்திடும் விருத்தி நீக்கில்
அந்தவா றிருந்து நீயு மாநந்த மடைய லாமே

அந்தவாறு [பூரணமாக] இருந்து கொண்டே [வித்தை] ஆநந்தம் அநுபவிக்க எந்தவாறு இருந்து கொண்டால் எனக்கு இது தெரியும்? என்னில், இந்த மூன்று (ஜாக்ரத், சுசுப்தி, ஸ்வப்னம் என்ற) அவத்தை தம்முள் எழுந்திடும் [கோர மூட] விருத்தி நீக்கில், அந்தவாறு இருந்து நீயும் ஆநந்தம் அடையலாமே.
--
எல்லாம் சரி! எப்படி இந்த ஆனந்தத்தை அடைகிறதுன்னா ஜாக்ரத், சுசுப்தி, ஸ்வப்னம் என்கிற மூன்று அவஸ்தைகளால் எழும் மூட அந்தக்கரண விருத்தியை நீக்கி, அறிவு சொரூபமாக இருந்தால் ஆனந்தம் அடையலாம்.

அந்த விருத்தியை நீக்குகிறது எப்படி?
மூணு வழிகள் சொல்கிறாங்க.

169.
விருத்தியை நீக்கும் உபாயம் மூன்றில் முதலாவது:

வாதனா வசத்தினாலே வருகின்ற விருத்தி யெல்லா
மேதினா லடக்க லாகு மென்றுதான் விசாரஞ் செய்யில்
போதமா மிராசன் றானாய்ப் புந்தியைம் புலன்க ளெல்லாந்
தாதரா யிருக்கப் பெற்றாற் சகலமு மடங்குந் தானே

வாதனா (வாசனா) வசத்தினாலே வருகின்ற விருத்தி எல்லாம் எதினால் அடக்கலாகும் என்று தான் விசாரம் செய்யில், போதமாம் இராசன் தானாய் (ஆத்மா ராஜன் தானாகி) புந்தி ஐம் புலன்கள் எல்லாம் தாதராய் (தாசராக) இருக்கப் பெற்றால் சகலமும் அடங்குந்தானே.
--
"ரொம்ப சுலபமா சொல்லிட்டீங்க! அந்தக்கரண விருத்தி எல்லாம் எப்படி அடக்கறது?" அப்படின்னு கேட்டா.... (அந்தக்கரணம் ன்னா புரியலைன்னா மனசுன்னு வெச்சுக்கலாம். மனம்தானே உலகத்தை வேற விதமா பாக்குது? பல விஷயங்களை யோசிக்குது. மேலே மேலே மனக்கோட்டை கட்டுது?)

இதை தெரிஞ்சுக்க ஏன் இப்படி விருத்தி வருதுன்னு தெரியணும்.
"நான்", "எனது" போன்ற நினைப்புக்களும்,  காமக் குரோதங்களும் ஆகிய விருத்திகள் வருவது பூர்வ ஜன்ம வாசனைகளாலே. அவை எப்போது அடங்கும்? ஞானேந்திரிய கர்மேந்திரியங்களை அடக்கி, நீ அரசனாக இருக்க, அவை ஆட்களாக இருக்கப்பெற்றால் எல்லா வாசனைகளும் தானே அடங்கும்.
முன்னே எங்கயோ கேள்விப்பட்டாப்பல இருக்கு இல்லே? ஆமாம்! கர்ம வழியை பாக்கிறப்ப பாத்தோம். கண்ணபிரான் கதை சொன்னான்!

இந்திரியங்கள் இழுக்கிற இழுப்புக்கு நாம் போகிற வரை அவை நமக்கு எஜமானன். அப்படி இழு படாம இருக்க நாம் பழகிட்டா அவை நமக்கு வேலைக்காரன்.
வாசனைகள் ரொம்பவே வலிமையானவைதான். ஆனாலும் தைரியமா இவைகளோட சண்டை போட்டு ஜெயிக்கிற ப்ராஸஸ்தான் சாதனா.


6 comments:

Kavinaya said...

//ஆனாலும் தைரியமா இவைகளோட சண்டை போட்டு ஜெயிக்கிற ப்ராஸஸ்தான் சாதனா.//

ஹை! இது நல்லாருக்கே :)

திவாண்ணா said...

அதானே? சண்டைன்னா நல்லா இருக்கா?
:-))

yrskbalu said...

ஞானேந்திரிய கர்மேந்திரியங்களை அடக்கி, நீ அரசனாக இருக்க, அவை ஆட்களாக இருக்கப்பெற்றால் எல்லா வாசனைகளும் தானே அடங்கும்.


what a golden word.

what a powerfull mantra.

but without controlled or conditioned mind it is not possible. that is the twist.

Geetha Sambasivam said...

//ஞானேந்திரிய கர்மேந்திரியங்களை அடக்கி, நீ அரசனாக இருக்க, அவை ஆட்களாக இருக்கப்பெற்றால் எல்லா வாசனைகளும் தானே அடங்கும்.//

இப்படி ஒரு அரசனாக ஆசைதான்! :(((((

திவாண்ணா said...

அப்புறமென்ன? அடக்குங்க!

Geetha Sambasivam said...

ஆசையை அடக்கணும் இல்லை?? ஞாநேந்திரிய கர்மேந்திரியங்களை அடக்கி அரசன் ஆகணும்கறதே ஒரு ஆசை இல்லை??? அதான் அந்த ஆசையையும் விட்டுடலாம்னு! :)))))))