Pages

Monday, October 12, 2009

பற்றின்மைதான் முக்கியம் வெளியே தெரிகிற தோற்றம் இல்லை...



158.
சிட்டர்புகழ் மகனேநீ சங்கித்த சங்கைநன்று தெரியக் கேளாய்
கட்டழியுந் துறவுநால் வகையாகு மவைகளுக்கங் காகும் பேர்கள்
பட்டதுயர் கெடுங்குடீசகம்வெகூ தகமஞ்சம் பரவஞ்சம்
விட்டகலுந் துறவுக்கு விராகங்கா ரணமன்றி வேட மன்றே

சிட்டர் புகழ் மகனே நீ சங்கித்த சங்கை நன்று தெரியக் கேளாய், கட்டு அழியும் துறவு நால் வகையாகும். அவைகளுக்கு அங்கு ஆகும் பேர்கள்: பட்ட துயர் கெடும் குடீசகம், வெகூதகம், அஞ்சம், பரம் அஞ்சம். விட்டு அகலும் துறவுக்கு விராகம் காரணம் அன்றி வேடம் அன்றே.
--
"சிட்டனே நீ கேட்ட சந்தேகம் நல்லதே.
சன்னியாசம் 4 வகையாகும்.
குடீசகம், வெகூதகம், ஹம்ஸம், பரம ஹம்ஸம்.
குடும்பத்தை விட்டு நீங்கும் சன்னியாசத்துக்கு மனதில் உண்டாகும் ஆசை இன்மை காரணமின்றி காஷாய வஸ்திரம் போன்ற வேடம் முக்கியமல்ல."

ஹும்! எல்லாத்தையுமே இவர் க்ளாஸிபை பண்ணிகிட்டே போறார். சன்னியாகளிலேயும் வித்தியாசம் இருக்காம். யார் என்னன்னு அப்புறம் பாக்கலாம். இப்ப பாக்கிற முக்கியமான பாய்ண்ட் பற்றின்மைதான் முக்கியம் வெளியே தெரிகிற தோற்றம் இல்லை என்கிறது.

159.
மந்தமுந்தீ விரமுந்தீ விரதரமு மெனமூன்று வகைவி ராகம்
வெந்துயரம் வரும்பொழுது குடும்பத்தை வெறுத் துவரும் விராக மந்த
மிந்தவுட லளவுமனை தனம்வேண்டா மெனவிடறீ விரமென் பார்க
ளந்தணர்நூன் மித்தையென விடலதுதீ விரதரமா மறிந்திடாயே

மந்தமும் தீவிரமும் தீவிரதரமும் என மூன்று வகை விராகம் (வைராக்யம்). வெந்துயரம் வரும்பொழுது குடும்பத்தை வெறுத்து வரும் விராகம் மந்தம். இந்த உடலளவு மனை, தனம் வேண்டாம் என விடல் தீவிரம் என்பார்கள். அந்தணர், நூல், மித்தை என விடல் அது தீவிரதரதமாம் அறிந்திடாயே.
--
பற்றின்மையை மூணா பிரிக்கிறார். மந்தம், தீவிரம், ரொம்ப தீவிரம்ன்னு.

ஒத்தரோட மனவி மக்கள் இறந்து போகிறார்கள். வாழ்க்கை கசந்து போகுது. சன்னியாசியா போயிடலாம்ன்னு சன்னியாசம் வாங்கிக்கிறார். இல்லை, எப்ப பாத்தாலும் குடும்பத்தில ஒரே சச்சரவு. தொல்லை தாங்கலை. "போதும்பா ஒங்க சகவாசம்"ன்னு தொல்லை பொறுக்காமல் சன்னியாசம் வாங்கிக்கிறார். இப்படி வரும் வெறுப்பு மந்த வைராக்கியம். இப்படி இருக்கிறவர் நிலைமை அனுகூலமா போச்சுன்னா சன்னியாசத்தை விட்டாலும் விட்டுடுவார். உண்மையான சன்னியாசம் இவருக்கு சித்திக்காது.

இப்படிப்பட்டவங்கதான் சன்னியாசிகளுக்கு கெட்டப்பெயர் வாங்கி தரவங்க. அதுவும் இந்த காலத்தில தராதரம் பாக்காம சன்னியாசம் கொடுக்கிறாங்க அல்லது சும்மா காவி உடை போட்டுக்கிட்டு நான் சன்னியாசின்னு கிளம்பிடறாங்க....
கிடக்கட்டும். நாம நல்ல விஷயங்களை பாத்துகிட்டு போகலாம்.

இந்த உடல் உள்ள வரை நமக்கு மனைவி மக்கள் தேவையில்லை என விடல் தீவிர வைராக்கியம்.
இந்த உலக போகங்களும், தேவ லோகம் முதலான போகங்களும் அநித்தியம்; துக்கம்; மித்தை. ஆகையால் நமக்கு அவை வேண்டாம் என விடுதல் தீவிரதர வைராக்கியம். 



2 comments:

R.DEVARAJAN said...

ஹம்ஸம் , பரம ஹம்ஸம் என்றிருப்பதுபோல் வெகூதகம் என்பதை
பஹூதக ஸன்யாஸம் என எழுதுவது முறை.

தேவ்

திவாண்ணா said...

ஹிஹி, அது தாண்டவராயரின் தமிழ் படுத்தல்.