01- 01-1999 அன்று துவக்க நிகழ்ச்சி நடந்தது. பங்களூரில் ஒரு ஹோமம் நடந்து அதனால் உற்சாகம் பெற்றதாக சொன்னேன் அல்லவா?அதை ஏற்பாடு செய்தவர் சிருங்கேரி மடத்தை சேர்ந்த ஒரு சன்னியாசி. அவர் சென்னையில் அந்த சமயம் இருந்தபடியால் அவரை அழைத்து துவக்க நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டோம்.
பதிவு செய்து கொண்டவர்களில் வெகு சிலரே நிகழ்ச்சிக்கு வந்து இருந்தனர். இருந்தாலும் பலருக்கும் இருந்த சந்தேகங்களுக்கு ஸ்வாமிகள் தீர்வுகள் சொன்னது மிகவும் பயனுள்ளதாக இருந்தது. ஜப காலத்தில் வெளியே ஓட்டலில் சாப்பிடக்கூடாது என்றால் ஊர் ஊராக சுற்றி வேலை செய்பவர்கள் என்ன செய்வது போன்ற பலவித கேள்விகள் எழுந்தன, எல்லாவற்றுக்கும் பொறுமையாக பதில் சொன்னார்.
ஆரம்ப காலத்திலேயே ஒருங்கிணைப்பாளராக சேர்ந்தவர் ஸ்ரீ ர. வெகு உற்சாகமாக செயல்பட்டார். மருத்துவ பிரதிநிதி வேலை. ஊர் ஊராக சுற்றும் வேலை. உணவு கட்டுப்பாடை கடைபிடிப்பது எப்படி? நாங்களோ ஹோட்டலில் சாப்பிடக்கூடாது என்று நியமம் விதித்து இருந்தோம். அப்படியும் அதை சாதித்து காட்டினார். கையோடு ஏதேனும் உணவு கொண்டு போய்விடுவார். பயண திட்டத்தை யோசித்து அமைத்துக்கொள்வார்.
இல்லை பட்டினி இருந்துவிடுவார். இது முடியவில்லையானால் தெரிந்தவர்கள் வீட்டுக்கு முன்னேயே சொல்லை வைத்துப்போய் நெய், துளசி, வில்வம் இப்படி எதையாவது கூட சேர்த்து சாப்பிடுவார். எப்படியோ நியமங்களுக்கு குறை வராமல் பார்த்துக்கொண்டார்.
இவர் மனைவி பிஎஸ்என்எல் இல் வேலை பார்த்து வந்தார். திருமணமாகி ஒரு பெண் குழந்தை இருந்த நிலையில் அவருக்கு புது தில்லிக்கு மாற்றலாகி விட்டது. எப்படியாவது தமிழ்நாட்டுக்கு திரும்ப படாத பாடு பட்டு, பலரையும் பார்த்து, விண்ணப்பங்கள் போட்டு ஒன்றும் நடக்கவில்லை. அலுத்துப்போய் முயற்சிகளை கைவிட்டு இறுதியாக ராஜினாமா செய்துவிடலாம் என்று யோசித்துக்கொண்டு இருந்தனர்.
நான்கு மாத கால ஜபம் முடிந்தது. அனைவரும் சேர்ந்து காயத்ரி ஹோமம் டவுண்
ஹாலில் செய்தோம். 16- 05-1999 அன்று ஹோமம் நடந்தது.
மொத்தம் 82 பேர் ஹோமத்தில் நேரடியாக கலந்து கொண்டனர். அதில் 32 பேர்
இலக்கான இலட்சத்தை பூர்த்தி செய்து இருந்தனர்.
அடுத்த வாரம் ஸ்ரீ ர. அவரது மனைவி இருவரும் ஒரு நடவடிக்கையும் எடுக்காத நிலையில்
எங்கள் ஊருக்கே பணி மாற்றம் வந்து விட்டது.
No comments:
Post a Comment