மாலையில் திடுதிப்பென ஒரு திருப்பம்!
திருப்பம்தான் ஆனா ஒன்னும் கெட்டதாக நடக்கவில்லை. சும்மா ஒரு சுவையை கூட்ட அப்படி எழுதினேன்! ஹிஹிஹி!
கங்கா ஆரத்தி இன்னும் இரண்டு நாள் கழித்து தான் திட்டமிடப்பட்டிருந்தது. திடுதிப்பென்று யார் என்ன முடிவு எடுத்தார்கள் என்று தெரியவில்லை என்னிடம் வந்து ஏழு மணிக்கு கங்கா ஆரத்தி பர்க்கப் போகிறோம், முடிந்தால் வாருங்கள். இல்லையானால் ரூமிலேயே படுத்துக் கொள்ளுங்கள் என்று சொன்னார்கள். போனமுறை அப்பா அம்மாவுடன் வந்தபோது சப்தரிஷி பூஜை பார்த்தேன். ஆனால் இந்த கங்கா ஆரத்தியை பார்க்கவில்லை. இனிமேல் எங்கே திருப்பியும் வரப் போகிறோம், அதனால் உடம்பு முடியவில்லை என்றாலும் போய்விட்டு வந்து விடலாம் என்று முடிவு எடுத்து போனேன். இது வேறு யாருடையதோ படகு. அந்த வாட்ச்மேன் பையனுடையது இல்லை. நான் முதலில் கங்கா ஆரத்தி கரையிலிருந்து பார்ப்போம் என்று நினைத்தேன். கற்பனையே இல்லை. கடைசியில் பார்த்தால் நிறைய பேர் கங்கையிலிருந்து தான் பார்க்கிறார்கள். அதுதான் நன்றாகவும் இருக்கும் போலிருக்கிறது. தூரத்திலிருந்து ட்மர் டமர டம் சத்தம் கேட்க ஆரம்பித்துவிட்டது. முன்னேயே கங்கையில் குளிக்க போகும் போதெல்லாம் ஏதோ ஒரு படகு தாண்டிப் போகும். அதில் மிகவும் சத்தமாக ஏதோ பாட்டு ஒலித்துக்கொண்டிருக்கும். ஏழு எட்டு பேர் நடனமாடிக் கொண்டே செல்வார்கள். இப்போது பார்த்தால் அதே தான் இங்கே நடந்து கொண்டிருக்கிறது. நாங்கள் 100 மீட்டர் தள்ளி படகில் உட்கார்ந்து கொண்டிருக்கிறோம். ஆனால் இங்கேயே சத்தமாக கேட்கிறது என்றால் அங்கே பக்கத்தில் எப்படி இருந்திருக்கும் என்று தெரியவில்லை. உயரமாக கட்டின மேடையில் பண்டாக்கள் நின்றுகொண்டு கங்கைக்கு கற்பூர ஹாரத்தி காட்டுகிறார்கள். எல்லா பக்கமும் திரும்பி திரும்பி காட்டிக் கொண்டிருக்கிறார்கள். சுமார் அரை மணி நேரம் அது நடந்துகொண்டே இருந்தது. ஏதோ பாட்டு தொடர்ந்து ஒலித்துக் கொண்டே இருந்தது. ஐந்து நிமிடம் பார்த்துவிட்டால் அதற்குமேல் ஒன்றும் புதிதாக இருக்காது.
இங்கே இந்த படகுகள் பற்றி சொல்லவேண்டும். போனமுறை வந்தபோது பார்த்து ரசித்து வியந்த ஒரு விஷயம் சைக்கிள் ரிக்ஷாக்கள். என்னதான் மோசமான போக்குவரத்து ஆக இருந்தாலும் குறுக்க நெடுக்க என்ன வந்தாலும் கொண்டாலும் அமைதியை இழக்காமல் ஒரு இன்ச் வித்தியாசத்தில் வண்டியை கடத்திக் கொண்டு போவார்கள். ஒருவேளை இடித்தால் கூட ஒன்னும் சச்சரவு இராது. அதேபோல இந்த படகுகளும். எல்லாமே கரையில் கரையை ஒட்டி தான் நிற்க வேண்டும். அப்போதுதான் ஜனங்கள் தண்ணீரில் இறங்காமல் கரையில் இறங்க முடியும். ஆகவே ஏற்கனவே இங்கே இருக்கிற படகை விலக்கிவிட்டு தம் படகை நெருங்கி கரையில் நிற்க வைப்பதை சர்வசாதாரணமாக செய்கிறார்கள். விதி மிகவும் எளிதாக இருக்கிறது. நீ இறக்கிவிட்டு விட்டாயா, உன் வேலை முடிந்ததா நகரு. அவ்வளவுதான். அதற்கு நீயே செய்யாவிட்டால் நான் செய்வேன். சர்வ சாதாரணமாக மற்ற படகில் ஏறி அதை தள்ளி கொள்ளுவது இடித்து நகர்த்துவது எல்லாம் செய்கிறார்கள். யாரும் எங்கும் ஆட்சேபனை தெரிவிக்கவில்லை. யார் கண்டார்கள் படகுகளின் சொந்தக்காரர் ஒருவராகவே இருக்கலாம். எப்படி இருந்தாலும் நமக்கு பிரச்சினை இல்லாமல் நடக்கிறது. அவரவர் படகை நிறுத்தும் துறை இல்லாமல் மற்ற துறைகளில் நிறுத்தினால் அங்கே ஒரு கட்டணம் செலுத்த வேண்டியிருக்கிறது. அது 30 ரூபாயோ என்னவோ. நினைவில்லை.
அதேபோல இந்த பிராமணர்களும் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ளுகிறார்கள். பஞ்சகட்ட சிரார்த்தம் செய்வதற்கு வரும் பிராமணர்கள் ஐந்து கட்டமும் முடிந்து விட்டதென்றால் சர்வ சாதாரணமாக மற்ற படகில் இருக்கும் பிராமணர்களை கூப்பிட்டு ஆசீர்வாதம் செய்ய சொல்கிறார்கள். அவர்களுக்கு தட்சணையும் கொடுக்கிறார்கள். அதே போல தானும் மற்ற படகுகளுக்கு போகிறார்கள். கடைசியில் பார்த்தால் அங்கே யாராக இருப்பார்கள் கூப்பிட்டு கொள்ளலாம் என்று கணக்குப் போடுகிறார்கள் என்று தெரிந்தது.
நல்லது கங்கா ஆரத்தி முடிந்தது படகுக்காரன் மீண்டும் சிவாலயா கட்டத்துக்கு கொண்டு வந்துவிட்டார். ரூமுக்கு திரும்பி ஏதோ சாப்பிட்டுவிட்டு தூங்கினோம்.