Pages

Tuesday, June 14, 2022

காஶி யாத்திரை - 16 - ப்ரயாக்ராஜ் -4


அடுத்த நாள் காலை ஔபாசனத்தை முடித்தேன். கோவில்களில் தரிசனம் முடித்து 12 - 20 க்கு வந்தே பாரத் ரயிலை பிடிக்க வேண்டும். சீக்கிரமாக சிற்றுண்டி முடித்து இரண்டு ‘டக் டக்’ பிடித்துக்கொண்டு கிளம்பினோம். டக்டக் என்பது 6 பேர் கொஞ்சம் நெருக்கி உட்காரக்கூடிய டெம்போ மாதிரி ஏதோ ஒன்று. தொத்தல் வண்டியில் வாத்தியார் முந்தின மாலையே காசிக்கு கிளம்பிவிட்டார். பையர் எந்த வரிசையில் கோவில்கள் என்று ஏதோ மனதில் வைத்திருந்தார். முதலில் வேணி மாதவர் கோவில். 
 


அடுத்து நாக வாசுகி கோவில். ப்ரயாக் கோவில்களில் ‘ப்ராசீன’ என்று ஒரு அடைமொழியை சேர்த்தே பெயர் பலகைகள் உள்ளன. ஏனோ! வாசுகி நாகம் ப்ரயாகின் காவல்தெய்வம். கோவிலில் இருந்து கங்கையை பார்க்க….. அடடா! எவ்வளவு விஸ்தீர்ணம்! 
 

அடுத்து முள் படுக்கையில் படுத்திருக்கும் பீஷ்மரை பார்த்தோம்.
 

ஸத்ய மஹரிஷி ஆஸ்ரமம், 
 

 பரத்வாஜர் ஆஸ்ரமம் பார்த்துவிட்டு வேறு திசையில் பயணம். 
 

ஶ்ரீ ஆதி ஶங்கரர் விமான மண்டபம். மூன்று அடுக்காக உள்ளது. ஏறத்தாழ தமிழ் நாட்டு கோவில்களில் இருக்கும் அனைத்து தெய்வங்களும் இங்கே உள்ளன என்றே நினைக்கிறேன். சுற்றிப்பார்க்க வெகு நேரம் ஆகியது. 
 
 
கோட்டையில் ஒரு அக்‌ஷய்ய வடம் இருக்கிறது. கோட்டை இப்போது இந்திய ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. இந்த இடத்தை மட்டும் சுற்றுலா பயணிகளுக்கு திறந்து விட்டு இருக்கிறார்கள். செக்யூரிடி செக் உண்டு. ரேம்பில் ஏஏஏஏறி போனால் அக்‌ஷய வடத்தை கிட்டே பார்க்கலாம். மேலே போக ஹனுமத் சமேத சீதாராமர், க்ருஷ்ணன் என்று சிறு சந்நிதிகள். இன்னும் சற்று தள்ளி சிவப்பு கம்பளம் விரித்து ஏதோ ஒரு சமயத்தில் பெரிய கியூ வரிசை நீண்டுகொண்டே இருந்தது. ஆனால் ஒருவழியாக ஆகிவிட்டேன். பையர் பார்த்துக் கொண்டு வருகிறேன் என்று முன்னே போனார். போய் விட்டு திரும்பலாம். பார்க்க ஒன்றும் பெரியதாக இல்லை என்றார். நேரம் ஆகிக்கொண்டே இருந்தது. 
 
 

திரும்பும் போது கடைசியாக அனுமார் கோவிலை பார்க்க வேண்டும். இங்கே படுத்து படுத்துக் கொண்டு இருக்கிறார். ஆனால் ஏதோ விசேஷமான நாள் என்பதால் கூட்டமோ கூட்டம் பயங்கர கூட்டம். ஆகவே மனதில் அவரை நினைத்துக்கொண்டே வெளியிலிருந்தே ஒரு கும்பிடு போட்டுவிட்டு இருப்பிடத்துக்கு திரும்பினோம். அடுத்து சாப்பிட்டுவிட்டு ஸ்டேஷனுக்கு போக வேண்டியதுதான். கொஞ்சம் அவசரப் படுத்தினேன். ஆனால் நேரமிருக்கிறது போய்விடலாம் என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள். இந்த செல் மொபைல் சிக்னல் சரியாக இல்லை. அதான் எந்த விபரமும் சரியாக பார்க்க முடியவில்லை. கட்டிடங்கள் எல்லாம் இரண்டு மாடி. மிகவும்  குறுகலான தெருக்கள். இப்படி இருக்கையில் சிக்னல் கிடைக்காததே ஆச்சரியம் இல்லைதான். ஆனால் மொட்டை மாடிக்கு போனாலும் சிக்னல் விட்டுவிட்டுத்தான் இருந்தது.

அவசரமாக சாப்பிட்டுவிட்டு இரண்டு டக்டக் பிடித்துக் கொண்டு கிளம்பினோம். எல்லாம் நன்றாகத்தான் போய்க்கொண்டிருந்தது. ஆனால் பத்து நிமிடங்கள் கழித்து பெரும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. அதனால் சரியான நேரத்துக்கு போவோமா என்று திக் திக்கென்று இருந்தது. கிளம்பும் முன்னரே பையன் மொபைல் சிக்னல் இல்லாததால் அந்த உள்ளூர் வாத்தியாரை வந்தேபாரத் இங்கே எங்கு வந்து நிற்கும் என்று கேட்டார். அவரது எப்போதுமே முதலாம் ப்ளாட்பாரத்தில்தான் வரும் என்று செம கான்பிடன்ஸோடு சொன்னார். பிறகு உங்களுக்கு டிக்கெட் கிடைத்ததா என்ன என்று ஆச்சரியமாக கேட்டார்.
ஸ்டேஷன் அருகில் வந்துவிட்டாலும் நெருக்கடியில் அதன் முகப்பிற்கு போக 10 நிமிடம் பிடித்தது. ஒரு வழியாக வந்து சேர்ந்தோம். ட்ரெய்ன் வர இன்னும் ஐந்து நிமிடம் தான் இருந்தது. அரவிந்தன் - அதாவது ஒரு சிஷ்யர் - மொபைலில் பார்த்துவிட்டு அதை அரை மணி நேரம் லேட்டாக வருகிறது என்று சொன்னார். அப்பாடா என்று ஒரு பெருமூச்சு விட்டோம். உள்ளே போனால் வந்தே பாரத் ஆறாவது பிளாட்பார்ம் என்று தெரிந்தது. அதாவது அடுத்த கோடி. எஸ்கலேட்டர் எதுவுமில்லை. நீண்ட நெடிய ராம் இருந்தது. அது நடந்து நடந்து நடந்து ஒரு வழியாக ஆறாவது பிளாட்பாரத்திற்கு போய் சேர்ந்தோம். இப்படி ஒரு பிரீமியர் ரயில் வந்து நிற்கும் பிளாட்பார்மில்  சரியான கூரைநிழல் கூட இல்லை.பையர் போய் அங்கிருந்த ஆபீஸில் விசாரித்ததில் 'ஆமாம் இங்கேதான் வரும். எப்போதுமே வந்தே பாரத் இங்கே தான் வரும்' என்று சொன்னார். மிகவும் என்ன இன்னொருவரோடு அழகா இன்னொ அந்த இருக்க இருக்கிறது. தெரிந்திருந்தால் இந்த கூட்ட நெரிசலில் மாற்றிக் கொள்ளாமல் அந்தப் பக்கமே வந்து சேர்ந்திருக்கலாம். எல்லாம் அவனுடைய திருவிளையாடல் .
 
 

ஒருவழியாக ரயில் வந்து சேர்ந்தது. எதிர்பார்த்த திசைக்கு எதிர் திசையில் வந்தது கொஞ்சம் தமாஷாக இருந்தது. சும்மா சொல்லப்படாது. அருமையான ரயில். இருக்கைகள் அருமை. இதமான ஏசி. என்ன ஒன்று, முந்தைய ஆசாமி சாப்பிட்டு விட்டு இறங்கி போயிருக்கிறார். அதை இன்னும் சரியாக சுத்தம் செய்யாமல் வைத்திருந்தார்கள். ரயில் சர்வ சாதாரணமாக 120 கிலோமீட்டர் வேகத்தை பிடிக்கிறது. அப்படி இருந்தாலும் உள்ளே கொஞ்சமே கொஞ்சம்தான் பக்கவாட்டு ஆட்டம் மட்டும் இருக்கிறது. சத்தம் இல்லை. வேறு என்ன வேண்டும்? இரண்டு மணி நேரத்தில் வாரணாசி வந்துசேர்ந்தோம். வெளியே வந்தால் மொட்டை வெயில். வாத்தியார் ஒரு வண்டியை ஏற்பாடு செய்து இருந்தார். அந்த ட்ரைவர் நம்பருக்கு போன் பண்ணினால் எடுக்கவே இல்லை. பையர் வாத்தியார் நம்பருக்கு போன் செய்தார். அவரும் பேசுகிறேன் என்று டிரைவரிடம் பேசி இருப்பார் போலிருக்கிறது. கொஞ்ச நேரத்தில் மீண்டும் பையர் டிரைவரிடம் பேச அவர் இதோ வந்து கொண்டிருக்கிறேன் என்றார். என்ன ஆயிற்று என்றால் எங்களுக்கு பிரயாகையில் நடந்தது போலவே இங்கும் நடந்திருக்கிறது. நாங்கள் எட்டில் இருந்து ஒன்னாம் நம்பர் பிளாட்பார்முக்கு ரேம்ப்பில் வந்து இறங்கினால் அவரோ எட்டாம் நம்பர் பிளாட்பாரத்தில் காத்து இருக்கிறார்! அவர் வரும் வரை காத்திருக்க வேண்டியதாயிற்று. வேறு வழி? அவர் ஏதோ ஒரு இடத்தை குறிப்பாக சொல்லி அங்கே வந்து நில்லுங்கள் நான் இதோ வந்து விடுகிறேன் என்றார். அங்கே பெரிசாக நிழலும் இல்லை ஒன்றும் இல்லை. செம வெய்யில் காய்ந்து கொண்டிருக்கிறது. நாம் பாட்டுக்கு வந்து இறங்கினோமா, ஒரு டாக்சியை பிடித்தோமா, அட்ரஸ் சொல்லி போய் சேர்ந்தோமா என்று இருந்திருக்கலாம். வண்டி சமாசாரத்தில் எனக்கு ஒரு சந்தேகம் இருந்தாலும் உறுதிப்படுத்திக் கொள்ள முடியாததால் வெளியே சொல்ல முடியவில்லை. உங்கள் ஊகத்துக்கு விட்டுவிடுகிறேன். ஒருவழியாக வந்து சேர்ந்த ஒரு இன்னோவா காரில் நாங்கள் 6 பேரும் ஏறிக்கொண்டு சங்கர மடத்திற்கு வந்து சேர்ந்தோம். சங்கரமடம் இருக்கும் வீதி குறுகலானது. அதைப்போலத்தான் காசியிலேயே பல வீதிகள் குறுகலானவை. வண்டி வாசலுக்கே வரமுடியாது. ஒரு 50 மீட்டர் தள்ளியே பிரதான சாலையில் நிறுத்திவிட்டார்கள். நாங்கள் இறங்கி உள்ளே போனோம். பையர் மடத்தின் அலுவலகத்துக்குப் போய் பேசிவிட்டு எங்களுக்கு ஒதுக்கப்பட்ட அறையின் சாவியை வாங்கிக்கொண்டு வந்தார். அறையில் போய் விழுந்தோம். 
 

No comments: