ப்ரயாக்ராஜ் ஸ்டேஷன் வரும் முன்னே வண்டி நின்று விட்டது. வெகுநேரம் கிளம்பவே இல்லை. அவசரம் அவசரமாக ஒரு ரயில்வே அதிகாரி போல தோற்றமளித்த ஒருவர், கையில் துப்பாக்கியுடன் ஒரு செக்யூரிட்டி போல ஒருவர், வேலையாட்கள் இரண்டுபேர் என்று நால்வர் அவசரம் அவசரமாக கடந்து போனார்கள். சரி ஏதோ பிரச்சனை என்று நினைத்துக்கொண்டேன். என்னுடைய லக்கேஜை எடுத்துக்கொண்டு குடும்பம் இருந்த இடத்துக்கு போய் சேர்ந்து விட்டேன். இன்னொரு கால் மணி நேரம் கழித்து வண்டி கிளம்பி மெதுவாக ஸ்டேஷனை அடைந்தது.
எங்களுக்கு இந்த யாத்திரையில் உதவுவதற்காக பையர் முன்னாள் சிஷ்யர்கள் இருவரை ஏற்பாடு செய்திருந்தார். அவர்கள் முன்னதாகவே ரயில் மார்க்கமாக கிளம்பி காசிக்கு போய் விட்டனர். காசியிலிருந்து பையனின் நண்பரான வாத்தியார் இவர்களை அழைத்துக்கொண்டு ஒரு வண்டியை அமர்த்திக் கொண்டு ப்ரயாக்ராஜ் வந்து சேர்ந்து விட்டார். அவருடைய சீடன் ஒருவரும் ஸ்டேஷனுக்கு வந்திருந்தார். ஆக மூவரும் எங்கள் லக்கேஜை எடுத்துக் கொள்ள பிரச்சனை இல்லாமல் வெளியே வந்து சேர்ந்தோம். இவர்கள் காசியில் இருந்து வந்திருந்த வண்டியைத்தான் இங்கேயும் கொண்டு வந்திருந்தார்கள். சரியான ஓட்டை உடைசல் வண்டி. அதை எப்படித்தான் ஓட்டினார் என்று தெரியவில்லை. வண்டியை கிளப்ப முடியவில்லை என்று எதோ ரிப்பேர் பார்த்துக்கொண்டிருந்தார். சரி செய்து முடிக்கும் வரை பொறுமையாக காத்திருந்தேன். வேற வழி?
ஒரு வழியாக வண்டியை சரிசெய்து கிளப்பி ஸ்டேஷனுக்கு வெளியே வந்து ஏதோ ஒரு திசையில் போக ஆரம்பித்தார். கொஞ்ச தூரம் போனதும் அங்கங்கே சங்கத்துக்கு எப்படி போகவேண்டும் என்று விசாரிக்க ஆரம்பித்து விட்டார். எங்களுக்கு அதிர்ச்சி! தங்க ஏற்பாடு செய்து இருந்த இடம் ஶிவமடம். அது தர்யா கஞ்ச் இல் இருக்கிறது. இந்த ஆளை நம்பி இந்த நேரத்தில் எப்படி போய் சேர்வது என்று புரியவில்லை. நான் பேசாமல் கூகுள் மேப்பை பார்க்க ஆரம்பித்துவிட்டேன். கொஞ்ச தூரத்தில் பிரதான சாலை வந்து சேர்ந்துவிட்டது. இங்கிருந்து மேலே போகும் வழியில் அங்கங்கே அறிவிப்பு பலகைகள் இருந்தன. ஆகவே மேலே போவது கொஞ்சம் சுலபமாக ஆகிவிட்டது. ஏதோ ஒரு இடம் வந்த பிறகு வழியை விட்டு அவர் பாட்டுக்கு வண்டியை திருப்பினார். இல்லை இந்த பக்கம் இல்லை என்று சொல்ல சொல்ல அவர் தலையை ஆட்டிக்கொண்டே மேலே வண்டியை ஓட்டினார். சரி என்று பேசாமல் இருந்தோம். சங்கத்துக்குத்தான் வழி கேட்டாரே தவிர கிட்டே வந்ததும் இருப்பிடத்துக்கு போகத்தெரிந்து விட்டது போலும். அங்கிருந்து 10 நிமிடம்தான் சங்கம் என்று பின்னால் தெரிந்தது. நகரத்தின் பழைய்ய்ய்ய்ய பகுதி.
ஐந்து நிமிடத்தில் நாங்கள் தங்க வேண்டிய இடத்திற்கு வந்து சேர்ந்தோம். வழியில் வெளிச்சமே இல்லை. இங்கே ஒரு பெரிய பெரிய, நிஜமாக பெரிய காராம் (கருப்பு) பசு படுத்து இருந்தது. நல்லவேளையாக யாரும் போய் மோதிக் கொள்ளவில்லை. வாசல் கதவைத் தட்டு தட்டு என்று தட்டிக்கொண்டே இருந்தோம். யாரையும் காணோம். 5 நிமிடம் கழித்து பொறுமையாக, யாரோ காவலாளி போலிருக்கிறது, அவர் வந்து கதவை திறந்து விட்டார். எங்களுக்கான அறையை காட்டினார்கள். ஒரே ஒரு கட்டில் இருந்தது. தரையில் விரிப்பு போட்டிருந்தது. வந்த களைப்பில் பேசாமல் படுத்துக் கொண்டு விட்டோம். இதற்குள் மணி ஏறத்தாழ நான்கு ஆகிவிட்டது. வழக்கமான எழுந்திருக்கும் நேரம். இனிமேல் எங்கே தூங்குவது? விடியும் வரை படுத்தபடி ஓய்வெடுத்தேன். கொஞ்சம் போல் தூங்கினேன். அடுத்த பதிவில் யாத்திரையின் முதல் நாள் விவரங்கள்.
No comments:
Post a Comment