Pages

Tuesday, June 7, 2022

காஶி யாத்திரை - 9




அடுத்த நாள் காலை சங்ரமணம். அதாவது தமிழ் புத்தாண்டு பிறப்பு. நண்பர் கங்கைக்கு போய் குளித்து கர்மாக்களை பண்ணலாம் என்று சொன்னார். சரி என்று கிளம்பினோம்தன்னுடைய காரில் அழைத்துப்போனார். ஏறத்தாழ ஒரு மணி நேரம் பயணம்

பழைய சென்னை கல்கத்தாவுக்கும்  அதிக வித்தியாசத்தை பார்க்க முடியவில்லை. அதே மாதிரி பழைய கட்டிடங்கள் சென்னைத்தான் நினைவு படுத்தின. ஜிம்மி பில்டிங்க்ஸ் மாதிரியே அங்கே ஒன்றை பார்த்தேன்தெருவுக்கு ஒரு குளமாவது இருக்கிறது. சிரித்துக்கொண்டே “மீன் வளர்க்கிறார்கள். அதுதானே இங்கே முக்கியமான உணவு?” என்றார் நண்பர்.






 

போகும்  வழியில் கல்கத்தாவின் இரண்டாவது பெரிய பாலமான ‘வித்யசாகர் சேது’ பாலத்தை கடந்து சென்றோம்.

 இந்த மாதிரி தீர்த்த ஸ்நானம் செய்யும்போது நாம் எப்போதும் மன தயாரிப்புடன் இருக்கவேண்டும். தீர்த்தத்தின் பௌதிக ரீதியாக சுத்தம் என்பது ஒரு பக்கம். அதன் புனிதத்துவம் என்பதை வேறு விஷயம். பார்ப்பதற்கு தண்ணீர் அழுக்காக இருந்தாலும் அதில் சங்கல்பம் செய்து நீராடினால் அதன் பலன் இருக்கவே இருக்கும். நண்பர் வைதீகர் என்பதால் சங்கல்பம் செய்து வைத்தார். கங்கையின் ஓரத்தில் படிக்கட்டுகளும் அதன் பக்கவாட்டில் கான்கிரீட் சாய்தளமும் கட்டியிருக்கிறார்கள். நண்பர் பழக்கமில்லாதவர்கள் பேசாமல் படிக்கட்டில் உட்கார்ந்தபடி அடுத்தடுத்த படிக்கட்டுகள் இறங்கி போவது நல்லது என்று சொன்னார். அப்படியே செய்தோம். ஆனால் ஆழம் அதிகமாக இல்லை. இரண்டு படி இறங்கியதுமே தரை தட்டி விட்டது. இப்போது தைரியமாக குளித்தோம். நாங்கள் குளித்து முடிப்பதற்குள் அவர் குளித்து அவருடைய தர்ப்பணத்தையும் செய்துவிட்டார்.  8:00 போலத்தான் நேரம் என்றாலும் இது சங்ரமண தர்ப்பணம் என்பதால் அது சரியான நேரமே. நானும் நீராடிவிட்டு துணியை பிழிந்து உதறிக்கொண்டு கட்டிக்கொண்டு தர்ப்பணத்துக்கு தயாரானேன். ஆசமனம் செய்த இடம் ஒரு நிமிஷத்தில் கங்கைக்குள் இருந்தது! ‘ஓதம் ஆரம்பித்துவிட்டது இனிமேல் கடகட என்று நீர்மட்டம் உயரும். மேலே போய்விடலாம்’ என்று சொல்ல சுமார் பதினைந்து இருபது அடிகள் பின்னால் போய் விட்டோம். அப்போதுகூட தர்ப்பணம் முடிக்கும் முன் தண்ணீர் எங்களைத் தொடர ஆரம்பித்துவிட்டது. நண்பர் சிரித்துக்கொண்டே ‘இப்படி தான் ஆகும். பேசாமல் தர்ப்பைகளை கையிலேயே வைத்துக் கொள்ளுங்கள்’ என்று சொன்னார். கையில் வைத்துக்கொண்டு அவர் அவ்வப்போது எள்ளை இட அந்த தர்ப்பணத்தை செய்து முடித்தேன். இங்கே இருந்த பூசாரிகள் சிலருக்கு தட்சிணை கொடுத்து விட்டு வெளியே வந்தோம். சாலையின் மறுபக்கத்தில் வாலிபால் அளவில் கருப்பாக உருண்டை உருண்டையாக வைத்திருந்தார்கள். விற்பனைக்கு வைத்திருக்கிறார்கள் என்று தெளிவாக தெரிந்தது. அது என்ன என்று கேட்டேன். நண்பர் இது கங்கை மண் வீட்டில் பாத்திரங்களை தேய்ப்பதற்கு பயன்படுத்துவார்கள் என்று சொன்னார்.


 

No comments: