Pages

Saturday, June 11, 2022

காஶி யாத்திரை - 13 - ப்ரயாக்ராஜ்



ப்ரயாக்ராஜ்ல காலை குளித்து முடித்து ஏழுமணிபோல தயாராகிவிட்டேன். ஒரு இளைஞர் வந்து நீங்கள் ராத்திரி வந்தீர்களா என்று கேட்டார். ஆமாம் என்றேன். அவர்தான் சமையல்காரர். காபி வேண்டுமா என்று கேட்டார். இவர்கள் என்ன ஏற்பாடு செய்து இருக்கிறார்கள் என்று தெரியவில்லை என்பதால் சொல்லுகிறேன் என்று சொல்லிவிட்டேன். நான் ப்ராணக்ரியா செய்யாமல் காபி குடிப்பதில்லை. ஆனால் அதற்கு உட்கார்ந்த பிறகு ஐந்து நிமிடத்திலேயே காப்பி வந்துவிட்டது. இப்போது வேண்டாம் என்று சொன்னால் போட்டுவிட்டேன் என்ன செய்வது என்று சொல்லிவிட்டு போய்விட்டார். ப்ராணக்ரியா முடித்தேன். ஆறின காபியை குடித்தேன்.
காசியிலிருந்து வந்த வாத்தியார் இங்கே எங்களை லோக்கல் வாத்தியாருக்கு கைமாற்றி விட்டு விட்டு ஏதோ வேலையை பார்க்க போய் விட்டார். என் தர்மபத்னி சமையலுக்கு மாமி கேட்டிருந்தார். கிடைக்காததால் இவரே காய்கறிகளை கவனிக்கப்போய்விட்டார் என்று பின்னால் தெரிந்தது. எல்லாம் புரோட்டோகால் புரிதல் சமாசாரம் போலிருக்கு. அதனால நாங்க ஒன்றும் சொல்லவில்லை.
லோகல் வாத்தியார் கட்டிடத்தின் மாடியில் இருந்து கொண்டு கீழ் தளத்தை இந்த காரியங்களை எல்லாம் செய்வதற்கு வைத்திருக்கிறார். அப்படித்தான் இங்கேயும் காசியிலும் பலர் வைத்திருக்கிறார்கள். வரிசையாக யாரேனும் வந்து கொண்டே இருக்கிறார்கள். முதலில் யார் அனுப்பினார் என்று கேட்டுக்கொள்கிறார். அது எதற்கு, அனுப்பியவருக்கும் இவர்களுக்கும் ஒரு புரிதல் இருக்கிறதா என்று தெரியவில்லை. அது நல்லதே. பொதுவாக யாத்ரா சர்வீஸ் நபரிடம் என் பட்ஜெட் இவ்வளவு என்று சொல்லிவிட்டால் அதற்குத்தகுந்த படி ஏற்பாடு செய்து விடுகிறார்கள். அந்த மாதிரி சமயங்களில் உங்களுக்கு இவ்வளவு கொடுப்பார்கள் என்று கடிதம் எழுதிக்கொடுப்பார்கள். இது போன தரம் போனபோது பார்த்தது. இப்போது எஸ்எம்எஸ் வழியாகவோ போனில் பேசியோ தெரிவித்துவிடுகிறார்கள் போலும்.

வத்தியாரும் அவரது பிள்ளையும் மாற்றி மாற்றி பேட்ச் பேட்ச்சாக காரியத்தை நகர்த்திக் கொண்டே போகிறார்கள். போன பதிவில் படத்தில் பார்த்தீர்களே அந்த அலங்கார கதவின் முன் இருக்கிற வராண்டாவில்தான் இந்த சங்கல்பம் போன்றவற்றை செய்து வைக்கிறார். யார் திரிவேணியில் வேணி தானம் செய்ய வேண்டுமோ அவர்களுக்கு தனியாக சங்கல்பம் செய்து வைக்கிறார். பெண்கள் தன் வாழ்நாளில் ஒரே ஒரு முறைதான் இதுபோல வேணி தானம் செய்யலாம். அதுவும் இந்த இடத்தில் மட்டும் தான். சாதாரணமாக பெண்களுக்கு கணவனுடைய சங்கல்பம்தான் அப்ளை ஆகும். இந்த ஒரு இடத்தில் மட்டும்தான் தான் தனியாக சங்கல்பம் செய்யலாம். அதேபோல கோ தானம் செய்யலாம். (மட்டைத்தேங்காய்தான் கோ) ஜீவன் தன்னை சுத்தி செய்துகொள்ள இது என்றார். 
 
மற்றபடி அவர்களுக்கு சாத்திரப்படி தனியாக செய்ய அனுமதி இல்லை. சாஸ்த்திரம் பல விஷயங்களில் தம்பதிகளாகவே பார்க்கிறது. பிரித்துப் பார்ப்பதில்லை.
என் மனைவி முன்னே என் அப்பா அம்மாவை அழைத்து வந்தபோது வேணி தானம் செய்து விட்டார் ஆகவே இந்த தரம் செய்யவில்லை. என் மருமகள் வேணி தானம் செய்ததற்கு சங்கல்பம் செய்துகொண்டார். சும்மா சொல்லப்படாது. லோக்கல் வாத்தியார் மிகவும் விஸ்தாரமாக பதம் பதமாக மெதுவாக எல்லாவற்றையும் சொல்லி வைத்து கூடவே நிறைய விளக்கங்களும் சொல்லிக்கொண்டு போனார். ஆனால் கொஞ்சம் பொறுமை சோதிக்கப் பட்டுவிட்டது. எனக்கு சங்கல்பம் போன்ற சமாசாரங்களில் வாத்தியார் சொல்ல சொல்ல கிடுகிடுவென்று கூடவே சொல்லிக் கொண்டு போய் விடுவதே பழக்கம். சமஸ்கிருதத்தில் புரியாமல் எங்காவது தொடங்கினால் உடனே என்னவென்று மீண்டும் சொல்ல கேட்டுக்கொள்கிறேன். அதை திருப்பி சொல்லுவேன். இவர் மெதுவாக சொன்னதால் கொஞ்சம் பொறுமையை சோதிப்பதாக இருந்தது. இவ்வளவு மெதுவாக எல்லாம் சொல்லி எனக்கு பழக்கம் இல்லை. ஆனால் பேட்சாக செய்வதால் அவர் செய்ததே சரி. மற்றவர்களை அனுசரித்து பொறுத்துக் கொண்டேன்.
 
வேணி மாதவருக்கு இங்கே பூஜை செய்து வைத்தார். பிறகு இதை பத்திரமாக கொண்டு போங்கள். சங்கமத்தில் பண்டா இருப்பார். அவருக்கு சேர வேண்டியதை கொடுத்துவிட்டு வேணிமாதவரை நீரில் கரைத்து விட்டு நமசிவாய நமசிவாய என்று 12 தரம் சொல்லி முழுகிக்கொள்ளுங்கள் என்று சொன்னார். எல்லோருக்கும் மிகவும் தெளிவாக யார் யாருக்கு எவ்வளவு கொடுக்க வேண்டும் என்பதையெல்லாம் விவரமாக சொல்லி மேலே கொடுக்க வேண்டாம் என்று சொல்லிவிட்டார். அதேபோல அவர் சொன்ன தொகையை எல்லா இடத்திலும் ஒத்துக்கொண்டார்கள். பிரச்சனை இல்லை.


 


No comments: