ஹௌரா ஸ்டேஷனில் உட்கார முடியவில்லை. இட வசதி போதாது. ம்ம்ம் இடம் இருக்கத்தான் இருந்தது, ஆனால் இருக்கைகள் இல்லை. என்ன பஞ்சமோ!
ரயில் பயணத்தில் சில விஷயங்கள் பொதுவாக பார்க்கிறேன். ஏறக்குறைய எல்லோரும் எதையாவது மொசுகிக் கொண்டிருக்கிறார்கள். கொண்டு வந்திருப்பார்கள் அல்லது விலைக்கு வாங்குவார்கள். வாய் சும்மாவே இருக்காது போலிருக்கிறது. ஒன்று பேச வேண்டும் அல்லது எதையாவது சாப்பிட வேண்டும். இரண்டிலுமே நாம் பொது இடத்தில் இருக்கிறோம் என்ற கவனம் கொஞ்சம் கூட கிடையாது. ராமேஸ்வரம் போகும்போதே ஏதோ சீட்டாடிக் கொண்டு, பேசிக் கொண்டு சத்தம் போட்டுக் கொண்டே இருந்த கோஷ்டியிடம் ‘மணி ஒன்பதரை ஆகிவிட்டது. தூங்க வேண்டும் கொஞ்சம் சத்தம் போடாமல் இருங்கள்’ என்று சொல்ல வேண்டி இருந்தது. நல்ல காலமாக சச்சரவு எதுவும் எழவில்லை. சரி என்று சொல்லிவிட்டு கொஞ்சமாவது அமைதியானார்கள். அதேபோல விளக்கை அணைக்காமல் செல்போனில் ஏதோ நோண்டி கொண்டிருக்கிறார்கள். செல்போனை பார்ப்பதற்கு விளக்கு வெளிச்சம் எதற்கு? அதேபோல உணவு ஆர்டர் செய்யும்போது நான் வெஜிடேரியன் என்றால் கொஞ்சம் கூட தயங்காமல் ஆர்டர் செய்கிறார்கள். என்னதான் ‘என் உணவு என்னுடைய ஆர்டர் என் சுதந்திரம்’ என்று சொன்னாலும் அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடைய நிலைமையை சற்று கருத்தில் கொள்ள வேண்டாமா? அப்படி எதுவும் இருப்பதில்லை. எல்லாம் காலம் மாறிவிட்டது. கல்கத்தாவில் இருந்து கிளம்பியபோது இப்படித்தான் பலரும் இருந்தார்கள். ஹும்! இதை எல்லாம் பொறுத்துத்துக்கொண்டுதான் போக வேண்டும் போலிருக்கிறது. இளைய சமுதாயத்தை உருப்படியாக வளர்க்கத் தவறிவிட்டோம்.
எதிரில் ஒரு பெண்மணி கும்பகர்ண சேவை செய்து கொண்டிருந்தார். என் பக்கத்தில் முதலில் காலியாக இருந்தது. கிளம்பும்போது ஒரு நடுத்தர வயதுப் பெண்மணி வந்து அமர்ந்துகொண்டார். பின்னால் இந்த இரண்டு பேரும் பேசிக் கொண்டிருந்தார்கள். புதிதாக வந்த பெண் தன் மகன் கணவன் மருமகள் என்று பேசிக்கொண்டு போனார். எல்லோருக்கும் தான்தான் வேலை செய்ய வேண்டி இருக்கிறது என்று அங்கலாய்த்துக் கொண்டார். (ஏனோ அது அங்கலாய்ப்பு இல்லை, பெருமை என்று தோன்றியது! நான் இல்லாமல் யாருக்கும் வேலை ஓடாது.) எதிரே இருந்த பெண்மணி ‘ வீட்டு வேலை பார்க்கும் ஒரு பெண்ணுக்கு இருபத்தி ஆறு மணி நேரம் இருந்தால் கூட போதுமானதாக இல்லை!’ என்று அங்கலாய்த்தார். சிரித்து விட்டேன்.
எதிர்சாரியில் நடு பெர்த் ஆசாமி சைட் மேல் பெர்த் ஆசாமியுடன் பேசிக்கொண்டு இருந்தார். அவர் எப்படி மந்திரிக்கு கூட வளைந்து கொடுக்காமல் ரயில்வேயில் பணியாற்றினார் என்று சுய புராணம். அப்புறம் ரயில்வே பர்சேஸ் பற்றி பேச்சு திரும்பியது. இவர் வியாபாரி போலிருக்கிறது. போய் அவர் பக்கத்திலேயே உட்கார்ந்து கொண்டு நெடு நேரம் பேசிக்கொண்டு இருந்தார்கள். கடைசியில் அவ்வளவு நேரம் தன்னை ‘மென்டார்’ செய்ததுக்கு நன்றி சொல்லி தன் இடத்தில் போய் படுத்துக்கொண்டார்.
மணி ஏறத்தாழ 9 ஆகிவிட்டது. பெர்த்தை அமர்த்தி விடலாமா என்று கேட்டேன். அந்த பெண்மணி ‘தாத்தா, நான் இன்னும் சாப்பிடவில்லை. சாப்பிட்ட பிறகு செய்துவிடலாம்’ என்றார். கடவுளே! என் பேரன் பேத்தி உட்பட நிறைய சிறுவர்கள் தாத்தா என்று கூப்பிடுகிறார்கள். அது எனக்கு பிரச்சனை இல்லை. ஆனால் ஒரு நடுத்தர வயது பெண் என்னை பார்த்து அப்படி கூப்பிட்டது வினோதமாக இருந்தது!. இன்னும் ஈகோ போகவில்லை. சிரித்துக்கொண்டேன்.
ஒரு வழியாக ஏறிப் படுத்து தூங்கினேன். அலாரம் வைத்து இருந்தேன். அடிக்கடி விழிப்பு தட்டுவதும் நேரம் பார்த்துவிட்டு தூங்குவதுமக இருந்தேன். ஏசி செம குளிர். இப்படி குளிரூட்டிவிட்டு கம்பளி கொடுக்கும் லாஜிக் புரியவில்லை. நான் அவர்கள் கொடுத்த எதையும் பயன்படுத்தவில்லை. இதனால் 2-3 தரம் டாய்லெட் போக எழுந்திருக்க வேண்டி இருந்தது.
இரண்டு மணி இருபது நிமிடத்துக்கு எழுந்தேன். ப்ரயாக்ராஜ் ரயில் நிலையம் அடைய வேண்டிய நேரம் விடிகாலை/ நள்ளிரவு இரண்டு நாற்பது மணி. பத்து பதினைந்து நிமிடங்கள் தாமதமாகத்தான் வண்டி போய்க் கொண்டிருந்தது. வெஸ்டிப்யூலை மூடி இருப்பார்களோ என்று பார்த்தேன். நல்ல வேளை இல்லை. படுக்கப்போகும் முன்னால் பார்த்த போது பெட்டிக்கு தலா 4 பேர் என ஏகே 47 வைத்துக்கொண்டு இருந்தார்கள். என்னடாதுன்னு என்று யோசித்துக்கொண்டு இருந்தேன். ஆனால் நடுவில் எழுந்தபோது ஒத்தரையும் காணோம்! இறங்கிவிட்டார்கள் போலும். பிஹாருக்கு மட்டும்தான் இந்த காவலா என்று நினைத்துக்கொண்டேன்.
No comments:
Post a Comment