கொல்கொத்தாவுக்கு புத்தாண்டு அன்று கிளம்புவதாக இருந்தாலும் ரயில் மாலையில் நாலரை மணிக்கு என்பதை கவனித்து முந்தின நாளே கிளம்புவதாக டிக்கெட் வாங்கப்பட்டது. கடலூரிலிருந்து மதிய உணவு முடித்து குரோம்பேட்டையில் மனைவியின் சகோதரி வீட்டுக்கு போய் சேர்ந்து காப்பி குடித்து விமான நிலையம் போய்விட்டோம். முனையம் எந்த இடம் என்று பார்க்கப் போனால் டெர்மினல் 2 என்று காட்டியது. ஆனால் பையர் கல்கத்தா சில முறைகள் போய் பழகி இருந்ததால் இல்லை எப்போதும் அது 16 இல் தான் வருமென்று அங்கு அழைத்துப் போய்விட்டார். ஆனால் அறிவிப்புப் பலகை இரண்டு என்றுதான் நெடுநேரம் காட்டிக்கொண்டிருந்தது. ஒருவழியாக அரை மணி நேரம் முன் பதினாறு என்று காட்டி வயிற்றில் பால் வார்த்தார்கள். டேப் இல் விளையாடின நேரம் போய் மீதி நேரம் மக்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். சாதாரணமாக அப்படிப் பார்ப்பது எனக்கு துக்கத்தை தான் உண்டு பண்ணும். தலைமுறை இடைவெளியே காரணம். இரண்டு மாணவியர் வழியில் நின்று கொண்டு ஏதோ பேசிக் கொண்டிருந்தார்கள். ஒருவர் கையில் இருந்த திராட்சைப் பழங்கள் நழுவி கீழே விழுந்தன. அதை எடுப்பதற்கு கூட அவர்களுக்கு தோன்றவில்லை. என் மனைவி அவரிடம் இதெல்லாம் கீழே வழியில் விழுந்து விட்டனவே என்று சொன்னார். வெகு அலட்சியமாக யாரேனும் வந்து பெருக்கி போடுவார்கள் என்று பதில் வந்தது. இவர்களுடன் வாக்குவாதம் பண்ண மனமில்லாமல் பேசாம இருக்க வேண்டியிருந்தது. அப்புறம் பெரிய மனது பண்ணி ஷூ காலால் அவற்றை சுவரோரம் தள்ளிவிட்டார்.
சுமார் 50 வயதான ஒரு பிராமணர் வந்து பேச்சுக் கொடுத்த கொடுத்தார். கல்கத்தாவில் எங்கே போகிறீர்கள் என்று கேட்டார். நான் சிரித்துக்கொண்டே நாங்கள் கொல்கத்தா வழியாக திரிவேணி போகிறோம் என்று சொன்னேன்.
ஒரு வழியாக அரை மணி நேரம் தாமதமாக விமானம் கிளம்பியது. ஜன்னல் ஓரம் அல்லது பாதை ஓரம் என்று என்று இருக்கும் இருக்கைகளை கூடுதல் கட்டணத்திற்கு கொடுக்கிறார்கள். நாங்கள் அதை கேட்கவில்லை என்பதால் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வரிசையில் நடு இருக்கை கொடுக்கப்பட்டது.
கொல்கத்தா போய் சேர்ந்தோம். இரவு பத்து மணி போல ஆகிவிட்டது. ரயில்வே பிளாட்பாரம்கள் போலவே விமான நிலையத்தில் நடை நடை என்று நடக்க வேண்டி இருக்கிறது. நல்ல காலமாக அங்கே அங்கே கிடை மட்டத்தில் எஸ்கலேட்டர் போல ஒன்று போட்டிருக்கிறார்கள். (அவற்றுக்கு வேறு என்ன பெயர் என்று தெரியவில்லை!) இருந்தாலும் வயதான காலத்தில் இப்படி ஒரு உதவி கிடைத்ததை மிகவும் பாராட்டினேன். எங்களை வரவேற்க பிள்ளையின் நண்பர் மனைவியுடன் வந்து விட்டார். டொயாட்டோ போல ஒரு பெரிய வண்டியை எடுத்து வந்திருந்தார். இருந்தாலும் இருந்த லக்கேஜுக்கும் எங்களுக்கும் போரவில்லை. பரவாயில்லை என்று இன்னொரு டாக்ஸி பிடித்து நாங்கள் வந்து விடுகிறோம் என்றார். இதன் நடுவில் சென்னை விமான நிலையத்தில் எங்களுடன் பேசிய நபர் இங்கே வந்து ‘ஓஹோ உங்கள் விருந்தாளிதானா?’ என்றார். இருவருக்கும் ஏற்கனவே நல்ல பரிச்சயம் இருந்தது போயிருக்கிறது. ‘இவர் வீட்டுக்குப் போகிறேன் என்று சொல்லக்கூடாது?’ என்று கேட்டார்.
விமான நிலையத்திலிருந்து நண்பர் வீட்டுக்கு நெடுந்தூரம். விமான நிலையம் கொல்கத்தா மாநகருக்கு மேற்கில் இருந்தால் அவருடைய இருப்பிடம் கொல்கத்தா கிழக்குப் பகுதியில் இருந்தது. ஆகவே நீண்ட பயணம். வழியில் க்ரிகெட் ஸ்டேடியம் தாண்டினோம். ஆர்வத்துடன் பார்த்தேன். ஏக உயரத்துக்கு ஒரு கட்டிடம் பார்த்தேன்.
அதைப்பற்றி அடுத்த நாள் விசாரிக்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டேன். வண்டி ஓட்டி மிகவும் அனுபவம் பெற்றவர் போலிருக்கிறது. ஏதோ ஒரு இடத்தில் பிரதான சாலையை விட்டு வலது பக்கம் உள்ளே புகுந்து சிறு சிறு சந்துகள் வழியாக ஆரம்பித்து விட்டார். ஆனால் வேகம் ரொம்ப ஒன்றும் குறையவில்லை. நேராக போயிருந்தால் நிறைய சிக்னல் தடைகள் வந்திருக்கும் என்று தெரிந்தது. ஒருவழியாக தங்குமிடத்துக்கு இரவு பதினோரு மணி போல் போய் சேர்ந்தோம்.
No comments:
Post a Comment