Pages

Monday, June 13, 2022

காஶி யாத்திரை - 15 - ப்ரயாக்ராஜ் -3




காஶி யாத்திரை - 15 - ப்ரயாக்ராஜ் -3
இவர்கள் வர நேரமாகிறதே என்று மாத்யான்ஹிகம் அங்கேயே முடித்தேன். ஒருவழியாக திரும்ப ஆரம்பித்தோம். அதற்குள் படகுகள் எண்ணிக்கை அதிகமாகிவிட்டது. தண்ணீரில் பறவைகள் உட்கார்ந்திருந்தது அழகாக இருந்தது. படகோட்டிகள் இடம் பேச்சுக் கொடுத்தேன். முன்னேயெல்லாம் அதிகமாக சம்பாதிக்க முடியாது. சம்பாதிப்பதெல்லாம் ரவுடிகள் பிடுங்கிக் கொள்வார்கள். இப்போது ‘புல்டோசர் பாபா’ வந்த பிறகு அதெல்லாம் காணாமல் போய்விட்டது. சந்தோஷமாக இருக்கிறோம் என்று சொன்னார்கள். நானாக அரசியலில் இறங்கா விட்டாலும் பேச்சுவாக்கில் அவர்கள் இப்படி சொன்னது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது.
இறங்கும்போது ‘எங்களுக்கு ஏதேனும் கொடுங்கள் நீங்கள் கொடுத்ததெல்லாம் படகின் சொந்தக்காரர் தான் எடுத்துக் கொள்வார்’ என்று கேட்டார்கள். இந்த மாதிரி யாத்திரை போகும் போது எதையோ கொடுக்க வேண்டும். இல்லை இல்லை என்று சொல்லவே கூடாது என்பார்கள். இல்லாவிட்டால் கொடுப்பதற்கு பாக்கியம் இல்லை என்று சொல்ல வேண்டும். நாங்கள் எந்த இடத்திலும் மேலும் யாத்திரை முடியும் வரையும் ஏதோ ஒரு தொகையை கொடுத்துக்கொண்டு தான் இருந்தோம்.
 
கோட்டையில் அக்‌ஷயவடம்.
 
இப்போது வெயில் மேலும் ஏறிவிட்டது. நாங்கள் திரும்பும் போது பாதி வழியில் வண்டிக்காரருக்கு போன் செய்து ‘திரும்பி வந்து கொண்டிருக்கிறோம் பத்து நிமிடத்தில் வந்து விடுவோம், தயாராக கரையருகே நிறுத்துங்கள்’ என்று சொன்னாலும் ஆளைக் காணோம். எங்கள் சிஷ்யர் முதலில் இறங்கி தேடி வண்டி எங்கே இருக்கிறது என்பதையும் காட்டினார். படகில் இருந்து அங்கே பொடிமணலில் அங்கே போவதற்குள் கால் வெந்துவிட்டது. இத்தனைக்கும் காலை நன்றாக நனைத்துக்கொண்டுதான் வண்டியை நோக்கி கிளம்பினேன்.
சிவமடத்தில் இருந்து கிளம்பும்போதே எதிரில் இருந்த ஒரு கடையில் தாமிர சொம்புகளை வாங்கிக் கொண்டிருந்தார்கள். அதேபோல 5 லிட்டர் கேன் பிளாஸ்டிக் வாங்கி வைத்திருந்தார்கள். இவை எல்லாவற்றையும் சங்கமத்தில் கங்கை நீரை நிரப்பிக் கொண்டோம். இவற்றையும் தூக்கிக்கொண்டு வண்டிக்கு போவது சிரமமாக இருந்தது. எதற்கு இவ்வளவு என்று கேட்டால் அவர்களுக்கு இவர்களுக்கு என்று ஏதோ கணக்கு சொன்னார்கள். அது சரி யார் சுமப்பது? கூட வந்த இளைஞர்கள் இல்லாமல் ஒன்றுமே செய்திருக்க முடியாது.
வண்டியில் சிவமடத்திற்கு திரும்பினோம். ஶ்ரார்த்தத்துக்கு தயாரானோம். மடத்தின் எதிரே ஒரு நடுத்தர அளவு ஹால் இருக்கிறது. கூடவே சமையலறை கழிவறை ஆகியன. ஶ்ராத்தத்துக்கு அங்கே தான் ஏற்பாடு இருந்தது. இதன் வாசலில்தான் அந்த பெரிய்ய்ய்ய்ய பசு இருந்தது.
விட்டுப் போயிருந்த ஔபாசனத்தை இப்போது புதுப்பித்துக் கொண்டு காலை ஔபாசனத்தை செய்துவிட்டு ஶ்ராத்தத்துக்கான ஹவிஸை வைத்தேன். வாத்தியாரின் சிஷ்யர் இதற்கு உதவினார். ஶ்ரார்த்தத்துக்கு உள்ளூரில் இருந்து ஆறு பிராமணர்களை சொல்லியிருந்தார். ஓரிருவர் வேத அத்யயனம் செய்தவர்களாக இருக்கலாம். ஶ்ராத்தத்தை ஆரம்பிக்கலாமே என்று கேட்டேன். இன்னும் ஹவிஸ் தயாராகவில்லையே என்று சொன்னார். நாம் ஆரம்பிக்கலாம், இது ஏறக்குறைய கொதி வந்து விட்டது. சரியாக இருக்கும் என்று சொன்னேன்.
ஸங்கல்பம் செய்யும் போதே மணி இரண்டோ என்னவோ.
தீர்த்த ஶ்ராத்தம் குறித்து வேறு இழையில் எழுதி இருக்கிறேன். இங்கே விவரம் எழுதவில்லை. ராமேஸ்வரம் போல் இல்லாமல் இங்கே
அருமையான
எரிபொருள் கிடைத்தது. இடப்பிரச்சினையால் ப்ராம்ஹணர் கால்களை அலம்பிய நீர் ஒன்று சேருவதை தடுக்க முடியவில்லை. அது ஒன்றே குறை.
ஶ்ராத்தம் முடிய மணி நாலு நாலரை ஆகிவிட்டது.
பலத்த களைப்பில் படுத்துக்கொண்டேன்.
மாலை ஔபாசனத்துக்கு எதிரே இருந்த சித்தேஶ்வரர் கோவிலுக்குப்போனோம். இங்கே மஹா பெரியா சாதுர்மாஸ்யம் இருந்திருக்கிறார்கள். அங்கே இருந்த பண்டா எதையோ பாராயணம் செய்து கொண்டு இருந்தார். சற்று நேரத்தில் திருப்பித்திருப்பி எதையோ சொல்லி பாடம் செய்கிறார் என்று தோன்றியது. கொஞ்சம் உன்னிப்பாக கவனித்தேன். அட! இது ருத்ரம். மாத்யந்தின சாகை போலும். வேறு விதமான உச்சரிப்புகள்.
 
 

 
 

No comments: