Pages

Sunday, June 12, 2022

காஶி யாத்திரை - 14 - ப்ரயாக்ராஜ் -2



வேணி மாதவர் தவிர பார்வதி பரமேஸ்வரருக்கும் பூஜை செய்தோம். பழங்களும் தக்‌ஷிணையும் வாத்தியாருக்கு கொடுத்து ஆசீர்வாதங்களை பெற்றோம். பெண்கள் வேணி தானத்துக்கு சங்கல்பம் செய்து கணவனை வணங்கி இது வரை செய்த தவறுகளுக்கு மன்னிப்பு கேட்டுக்கொண்டு ப்ராஜாபத்ய க்ருச்சரமாக கோ தானம் செய்து மாடிக்குப்போய் புடவை உள்பட சௌபாக்கிய த்ரவ்யங்களை வாத்தியார் மனைவிக்கும் மருமகளுக்கும் சமர்ப்பித்துவிட்டு ஒரு முறத்தில் சௌபாக்கிய த்ரவ்யங்களை இன்னொரு முறத்தால் மூடி எடுத்துக்கொண்டு கிளம்பினார்கள்.
வெளியே வந்து சங்கம் போவதற்கு அதே தொத்தல் வண்டியில் ஏறிக் கொண்டோம். அவரும் சரியாக கொண்டு போய் சேர்த்து விட்டார். ஐந்து நிமிடத்தில் குடியிருப்பு பகுதியை விட்டு வெளியே வந்து விட்டோம். சங்கத்தில் நீண்ட நெடிய காலி இடம் இருக்கிறது. இங்கேதான் கும்பமேளா சமயத்தில் டெண்ட் போடுவார்கள் போலிருக்கிறது. லட்சக்கணக்கில் குவிபவர்களுக்கு இந்த இடம் வேண்டியதுதான்.
ஒரு பக்கம் கோட்டை இருக்கிறது. அது அக்பர் கட்டியது என்கிறார்கள். உள்ளே ஒரு தூண் இருக்கிறது. அதில் அசோகரின் அரசாணைகளும் சமுத்திரகுப்தர் காலத்திய ‘ப்ரஷஸ்தி’ யும் இருக்கிறன. பின்னால் ஜகாங்கீர் தன் முன்னோர்களின் பட்டியல் போட அசோகரின் 3, 4 ஆணைகளை வெட்டிவிட்டு அங்கே பொறித்திருக்கிறான். வெள்ளைக்காரர்கள் தன் பங்குக்கு நாசம் செய்திருக்கிறார்கள். இதை குறிப்பிட்ட நாள் குறித்த நேரத்தில் மட்டும் தரிசனம் செய்யலாம். https://en.wikipedia.org/wiki/Allahabad_Pillar
 

 
யமுனை கரையில் போய் நிறுத்தியதும் கீழே இறங்கி மணலில் வெறுங் காலை வைக்க முடியவில்லை. எட்டரை மணிக்குள் மணல் கொதித்துக் கொண்டிருக்கிறது. முன்னாலேயே கல்கத்தா நண்பர் எங்கே போனாலும் செருப்பு போட்டுக்கொண்டு போங்கள்; மணலில் சூடு தாங்க முடியாது என்று சொல்லி என் அளவுக்கு செருப்பையும் கொடுத்திருந்தார். நான்தான் தவிர்த்து விட்டேன்.
எங்களைப் பார்த்துவிட்டு ஒரு ஆசாமி வந்து படகு வேண்டுமா என்று கேட்டார். தனித்தனியாக போய்வந்தால் தலைக்கு 200 ரூபாய். குழுவாக கொண்டு போய் கர்மாக்களை முடித்து திரும்பி வருவதாக இருந்தால் மொத்தமாக ஆயிரத்து 600 ரூபாய் என்று சொன்னார்கள். அது வாத்தியார் சொன்ன தொகையாகவே இருந்ததால் ஒப்புக்கொண்டோம்.
முதலில் வபனம் (முடி மழிப்பு) செய்துகொண்டேன். காசி வாத்தியார் வேண்டாம் என்று சொல்லியிருந்தார். இருந்தாலும் லோக்கல் வாத்தியார் இங்கே வந்தால் அவசியமாக முண்டனம் செய்து கொள்ள வேண்டும் ப்ரயாகே முண்டம், காசியில் தண்டம், கயையில் பிண்டம் என்பார்கள். ஆகவே அவசியமாக செய்து கொள்ள வேண்டும் என்று சொன்னார். மேலும் உபநயனத்தின் போதும் திருமணத்தின் போதும் மந்திர மந்திர வத்தாக வபனம் உண்டு; அதே தான் இங்கேயும். ஒரு தர்ப்பையை கொடுத்து (கத்திக்கு பதில்) அதை வைத்துக் கொண்டு மந்திரம் சொல்லி செய்துகொள்ளச் சொன்னார். மேலே கச்சிதமாக அங்கேயே நாவிதன் செய்து விடுவான் என்றார்.
படகை அமர்த்திய ஆசாமியே ஆளை கூப்பிட்டு முண்டனம் செய்யச் சொன்னார். செய்துவிட்டு தலைக்கு 100 ரூபாய் வாங்கிக் கொண்டார். 500 ரூபாய் கேட்ட ராமேஸ்வரத்தை நினைத்து பார்த்தேன். என் பிள்ளையும் செய்து கொண்டார். சாதாரணமாக ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் ஒரே நேரத்தில் இப்படி செய்துகொள்ளவதில்லை. அபரத்தில் மட்டும்தான் அப்படி இருக்கிறது. ஆனால் இந்த இடம் விதிவிலக்கு. தாராளமாக செய்து கொள்ளலாம், செய்து கொள்ள வேண்டும் என்று லோக்கல் வாத்தியார் சொன்னார். அதே போல திதி வாரம் என்று எதையும் பார்க்க வேண்டியதில்லை. த்ரிவேணி வந்தோம், முண்டனம் செய்துக்கொண்டோம். அவ்வளவுதான்.
 

 
பிறகு சங்கம இடத்துக்கு படகு செல்ல ஆரம்பித்தது. நாங்கள் கிளம்பிய இடம் யமுனையின் கரை. இங்கே தண்ணீர் கொஞ்சம் கருப்பாக இருக்கும். குடிப்பதற்கு கொஞ்சம் இனிப்பாக கூட இருக்கும். கங்கையின் வண்ணம் வெளிர் பச்சையாக இருக்கும். இனிப்பான சுவை கிடையாது. ஆகவே இரண்டும் சேரும் இடம் நான் தெளிவாக பார்க்க முடியும். இந்த இடம் என்பது தான் என்று எப்போதுமே சரியாக இருக்குமா என்று தெரியவில்லை. அனேகமாக மாறிக்கொண்டே இருக்கும் போலிருக்கிறது. ஆகவே சங்கமத்தில் மூங்கில்களில் கொடி நட்டு வைத்திருக்கிறார்கள். 7, 8 படகுகள் பக்கத்து பக்கத்தில் வைத்து பிணைத்து ஒவ்வொன்றிலும் ஒரு பண்டா உட்கார்ந்துகொண்டு தன் வேலையை பார்க்கிறார்.
 

 
மணல் சேர்த்துக்கொண்டே இருக்குமோ என்னவோ. மணலை அகழ்ந்து அள்ளும் படகு ஒன்றை பார்த்தேன். எதிர்ப்புறத்தில் தூரத்தில் ஒரு கோவில் கூட இருந்தது. அதையெல்லாம் பார்க்க ஏது நேரம்? வலித்துக் கொண்டு படகை கொண்டுபோய் அந்த இடத்தில் சேர்த்தார்கள். அங்கே இருந்த பண்டா வை எனக்கு மிகவும் பிடித்துவிட்டது. எங்க போல் இல்லாமல் ஜிப்பா எல்லாம் போட்டுக்கொண்டு இருந்தாலும் ஆசாமி வரவேற்று உட்கார்த்தி வைத்து கர்மாவை ஒழுங்காக செய்து வைக்கிறார். வருகிற தக்‌ஷிணையை தான் உட்கார்ந்திருந்த விரிப்பின் முன் பகுதியை துக்கி கீழே தள்ளுகிறார். பணம் வந்துக்கொண்டே இருப்பது போல யாரோ எதற்கோ கேட்டுக்கொண்டே இருக்கிறார்கள். அசராமல் கொடுத்துக்கொண்டே இருக்கிறார்! மருமகளுக்கும் தான் பையனுக்கும் வேலை இருந்தது. வேணி தானதுக்கு அவர் சங்கல்பம் செய்வித்து ஸ்லோகங்களைச் சொல்லி கத்தரியை கொடுத்து கத்தரித்து என்ன செய்ய வேண்டும் என்பதை எல்லாம் சரியாக சொல்லிக் கொடுத்தார். பையர் மருமகளின் கூந்தலை பின்னி நுனியை கத்தரித்து வெற்றிலையில் போட அதை விசர்ஜனம் செய்து ஸ்நானம் செய்யச்சொன்னார். எங்களிடம் தண்ணீரில் இறங்கி வேணீ மாதவரை சேர்த்து விடுங்கள். முடிந்தால் இறங்குங்கள் இல்லாவிட்டால் அப்படியே சேர்த்து விட்டு தண்ணீரை ப்ரோக்ஷணம் செய்து கொள்ளுங்கள் என்று சொன்னார். மிகவும் வசதியாக குறுக்கே மூங்கில் உடன் ஒரு கயிற்று ஏணி தொங்க விட்டிருந்தார்கள் அதில் காலை வைத்து சுலபமாக இறங்க முடிந்தது. இறங்கினேன். ஆழம் அதிகம் இல்லை. அதை பார்த்துவிட்டு மனைவியும் இறங்கினார். வேணி மாதவரை தண்ணீரில் விட்டுவிட்டு முங்கி எழுந்தோம். கங்கையில் குளிக்க இறங்கியவர்களுக்கு சுலபத்தில் மேலே வர மனது வருவதில்லை. நேரம் ஆயிற்று போலாம் போலாம் என்று சொல்லிக்கொண்டே இருக்க வேண்டியிருந்தது.
 



No comments: