காசியில் இரண்டாம் நாள் … முதல் நாள் என்று கூட சொல்லலாம், வெறும் அனுஷ்டானத்துடன் வேலைகள் முடிந்தன. பிரதமை ஆதலால் ஸ்தாலீபாகம் செய்தேன். அரவிந்தன் அக்னிஹோத்திரம் காலையில் செய்தான். மாலையில் பக்ஷ ஹோமம் செய்தான். அதாவது அந்த கிருஷ்ண அல்லது சுக்ல பக்ஷத்திற்கு முழுக்க சேர்த்து ஒரே ஹோமம் ஆக செய்துகொள்ள ஒரு அனுமதி இருக்கிறது. அதற்கு யாயாவர தர்மம் என்று பெயர்.
பகலில் என்ன செய்தேன் என்று இப்போது நினைவுக்கு வரவில்லை. நிச்சயமாக எங்கும் சுற்றவில்லை.
இதற்குள் என்னுடைய உடல்நிலை கொஞ்சம் பிரச்சனையாக துவங்கிவிட்டது. எனக்கு எப்போதுமே இந்த வயதுக்கான மலச்சிக்கல் கொஞ்சம் உண்டு. பிரயாகையில் முதல் நாள் இரண்டாம் நாள் கொஞ்சம் சுலபமாகவே போயிற்று. வாரணாசிக்கு வந்து சேர்ந்த பிறகு இது வயிற்றுப்போக்கு ஆகிவிட்டது. முதல் இரண்டு மூன்று நாட்கள் ஏதோ இந்த ஊர் பால் ஒத்துக் கொள்ளவில்லை என்று நினைத்து அதை தவிர்த்து வந்தேன். இரண்டு நாள் பார்த்துவிட்டு மருந்து சாப்பிட ஆரம்பித்தேன். அதற்கு கொஞ்சம் குறைந்ததே தவிர விடவில்லை. கடைசியில் இது கடலூருக்கு வந்து விட்டு என் சர்ஜனை கன்சல்ட் செய்ததில் அவர் அதெல்லாம் இப்போது வேலை செய்வதில்லை என்று சொல்லி வேறு மருந்து கையில் கொடுத்து சாப்பிட சொன்னார்; அதை முழுசாக ஐந்து நாட்கள் சாப்பிட்ட பிறகுதான் நின்றது. மற்றவர்களுக்கு பாதிப்பு இல்லையா என்றால் அவர்களுக்கும் இருந்தது போலிருக்கிறது. ஆனால் தாக்கம் குறைவாக இருந்திருக்கிறது. நான்தான் கோளாறான ஆசாமி ஆயிற்று ஆயிற்றே சக்கரை வியாதி வேறு சேர்ந்து கொண்டது.
இதை எப்படி எடுத்துக் கொள்வது என்று தெரியவில்லை. ஒருபக்கம் மருத்துவத்தில் ஏதோ தீராத இன்பெக்சன் என்று நினைத்தாலும் இன்னொரு பக்கம் வேறு விஷயம், ஶ்ராத்தத்தில் அது முடித்து மற்ற எல்லாம் முடித்து சாப்பிடும் வரை நிர்ஜலமாக நிர் ஆகாரமாக இருக்க வேண்டும் என்பதே விதி. பலருக்கும் இதுவும் இந்த காலத்தில் முடிவதில்லை. எனக்கோ சர்க்கரை வியாதி இருப்பதால் வேறு வழியும் இல்லை. இதனால் மருந்தை தவிர்த்துவிட்டு சர்க்கரை போட்ட காப்பி இரு முறை ஶ்ராத்தம் ஆரம்பிக்கும் முன் குடித்து விடுவேன். அதே தான் இங்கேயும் செய்துகொண்டிருந்தேன்.
பகவானின் சங்கல்பம் என் வயிறு காலியாக இருக்க வேண்டும் என்பது போல இருக்கிறது. காலையில் என்ன சாப்பிட்டாலும் ஒரு அரை மணி நேரத்தில் காலியாகிவிடும். பிறகு சிரார்த்தத்துக்கு கிளம்பும்போது மீண்டும் பிரச்சனை வராமல் இருப்பதற்காக ஒரு மணிநேரம் முன் அதைத் தடுப்பதற்கு மருந்து சாப்பிட்டுவிட்டு போய்விடுவேன். இப்படியே மிகுதி நாட்கள் அனைத்தும் கழிந்தன.
அடுத்த நாளிலிருந்து கர்மா ஆரம்பித்தது.
No comments:
Post a Comment