கருப்பு உளுந்து, எள், யவை, நெல், கோதுமை, பயறு, கடுகு ஆகியவை சிராத்தத்தில் பயன்படுத்தலாம். எள் உளுந்து பயறு தவிர்த்த மற்ற கருப்பு தானியங்களை பயன்படுத்தக்கூடாது. கோதுமை, உளுந்து இரண்டையும் அவசியம் பயன்படுத்த வேண்டும்.
வில்வம் நெல்லி திராட்சை பலா மாதுளை இவற்றின் பழங்கள்; குங்குமப்பூ கருவேப்பிலை எலுமிச்சை வாழை இலந்தை திப்பிலி மிளகு புடலை நல்ல வாசனை இருக்கிற மீன் மாம்சம்; எல்லாவிதமான இனிப்புகள் தரமானவை. சுக்கு ஆகியவை ஏற்றுக் கொள்ளத் தக்கன. பாகற்காய் புடலங்காய் சிலாக்கியம். பசுவின் பால் நெய் காய்கறிகள் தேன் கரும்பு ரசம் வெல்லம் தும்பைப்பூ சிறுகீரை இவை கொடுக்கப்படவேண்டும். இவை அனைத்தும் பித்ருக்களுக்கு திருப்தி தருபவை. பாலுடன் கூடிய சர்க்கரை அவல் அளவற்ற திருப்தி கொடுக்கும். நெய் நிறைய விட வேண்டும். காட்டில் உண்டாகும் பழங்கள் கிழங்குகள் ஆகியவற்றை கொடுப்பது பித்ருக்களுக்கு அளவற்ற மகிழ்ச்சியை தரும். முள்ளு கத்தரிக்காய் மிகவும் சிறந்தது.
பசுவின் பால், பாயசம் ஆகியவற்றால் ஒருவருஷம் வரை பித்ருக்கள் திருப்தி அடைகின்றனர். கொடுக்கப்படும் நெல் உளுந்து கிழங்குகள் பழம் ஆகியவற்றால் ஒரு மாதம் வரை அவர்கள் திருப்தி அடைகின்றனர். கருவேப்பிலை தேன் அளவற்ற திருப்தி கொடுக்கின்றன. கொடுக்கப்படும் நெய் ஒரு வருஷம் வரை திருப்தி கொடுக்கிறது. கோதுமை மூன்று வருடங்கள் வரை திருப்தி கொடுக்கும்.
இந்தப் பட்டியல்களில் மீன் மாம்சம் ஆகியனவும் சொல்லப்பட்டுள்ளன. ஆனால் அவை க்ஷத்திரியர்களுக்கு என்று அறியவும். மேலும் கலியுகத்தில் தடை செய்யப்பட்ட சில பல விஷயங்களில் சிராத்தத்தில் மாமிசம் கொடுப்பதும் ஒன்று.
இவை சிராத்தத்தில் விலக்க வேண்டியவை என்று ஒரு பட்டியலை பார்க்கலாம். எதாக இருந்தாலும் அதை சம்பாதிக்க பயன்பட்ட பணமானது லஞ்சம் முதலியவற்றால் அடையப்பட்டது, பதிதனால் சம்பாதிக்கப்பட்டது, அநியாயமாக சம்பாதிக்கப்பட்டது, பெண்ணை விட்டு கிடைத்தது என்று இருந்தால் சாதுக்கள் இப்படி சம்பாதிக்கப்பட்டவற்றை விலக்க வேண்டும்,
வேதத்தை விற்று சம்பாதிக்கப்பட்டது, பெண்கள் சம்பாதித்தது, கழுதையால் சம்பாதிக்கப்பட்டது ஆகிய தனமும் கொடுக்க தகுந்தது இல்லை.
கொள்ளு, வரகு - ஸ்ராத்தத்துக்கு உகந்ததல்ல. பெருங்காயம் - சில ரிஷிகள் அதை நிச்சயம் கொடுக்க வேண்டும் என்றும் சில ரிஷிகள் விலக்கு என்றும் சொல்லியிருக்கிறார்கள் ஆகவே எப்படி செய்தாலும் தவறில்லை.
கருப்பு பச்சை நிறமில்லாத பயறு, மொச்சை, துவரை ஆகியவற்றைத் தவிர்த்து மற்ற த்விதளங்களை (dicotyledons, இரண்டாக உடைபடும் தான்யங்கள்) கொடுக்கலாம் . முருங்கையும் மிளகாயும் சிராத்தத்தில் கூடாது. பூசணி சுரைக்காய் கத்தரி சிறுகீரை பூண்டு வகைகள் எருமைப்பால்/ தயிர் ஆகியவையும் விலக்க தக்கன.
No comments:
Post a Comment