19 ஆம் தேதி. இன்றைக்கு மணிகர்ணிகா தீர்த்த ஶ்ராத்தம்.
வாத்தியார் காலையில் ஒன்பது மணிக்கு ஆரம்பிக்கலாம் என்று சொல்லியிருந்தார். நானும் அதற்கு தகுந்தார்போல் தயாராகிவிட்டேன். ஆனால் ஆளை காணவில்லை. 9 மணி ஒன்பதே கால் ஒன்பதரை என்று போய்க் கொண்டே இருந்தது. அலுத்துப்போய் நான் ரூமுக்கு போகிறேன் வாத்யார் வந்தால் சொல்லுங்கள் என்று சொல்லி விட்டு ரூமுக்கு போய் படுத்துக்கொண்டேன்.
பெண்கள் சமையலறையில் கொஞ்சம் கஷ்டப்பட்டு கொண்டிருந்தார்கள். நானுமே ஔபாசன அக்னியில் சரு வைப்பதற்கு சிரமப்பட்டேன். முக்கால் மணி நேரம் போல் ஆகிவிட்டது. இதுதான் பலருக்கு கஷ்டமாக இருக்கிறது. (வாத்தியார்கள் உள்பட!) வழக்கம்போல் குக்கரில் சமைத்ததை ஔபாசன அக்னியில் காட்டினோமோ ஹோமம் செய்தோமா என்று இருக்கிறார்கள். ஏனோ என்னால் இப்படி இருக்க முடியவில்லை.
காலையில் கஞ்சி கொடுத்திருந்தார்கள். வயிற்றுப்போக்கு இருக்கும்போது பால் சாப்பிடுவது அதை இன்னும் அதிகமாகும். ஒன்றும் சாப்பிடாமலும் இருக்க முடியவில்லை. குடும்ப சொத்தான சர்க்கரை வியாதி இருக்கிறது! ஆத்ம ரக்ஷணம் முதலில் என்பதால்…
சரு வைத்து முடித்துவிட்டு மாற்றம் செய்ய ஸ்நானம் செய்ய கங்கைக்கு கிளம்பிவிட்டேன். பின்னாலேயே அரவிந்தரும் வந்து வாத்தியார் வந்துவிட்டார் என்று சொன்னார். ‘ரொம்ப நல்லது! கிளம்பிவிட்டேன். கங்கைக்கு போய் குளித்து விட்டு வந்து விடுகிறேன் மாத்யான்ஹிகம் முடித்து வந்துவிடுகிறேன்’ என்று சொல்லிவிட்டு மேலே போய் விட்டேன். ரூமில் குளிப்பதை விட கங்கையில் குளிப்பது இன்னும் சிலாக்கியம் அல்லவா. போய் குளித்து மத்தியானம் செய்துவிட்டு திரும்பி வந்தாள் ஒரு காரியமும் நகரவில்லை. அந்த வாத்தியார் திரும்பி போய் விட்டார் போலிருக்கிறது. வேறு யாரையும் காணோம். கொஞ்ச நேரத்தில் வாத்தியார் திரும்பியும் வந்தார். அவருக்கு என்னமா அவசரமே இல்லை. ஐயரிடம் ஏதோ அளவளாவிக் கொண்டிருந்தார். அப்புறம் கொஞ்சம் கொஞ்சமாக பிராமணர்கள் வந்தனர். பத்து மணி போல ஆரம்பிக்கலாம் என்று பார்த்தோம். பத்தரை ஆகிவிட்டது. சரி போகட்டும் அவர்கள் வரட்டும் முதலில் தர்ப்பணத்தை செய்வோம் என்று தர்ப்பணத்தை செய்தோம். தீர்த்த சிரார்த்தத்தில் தர்ப்பணம் தான் முதலில். அதற்குப் பிறகுதான் மேலே. தர்ப்பணம் செய்து முடித்து பார்த்த போது இன்னும் இரண்டு பேர் வரவேண்டியிருந்தது. வாத்தியார் நானே போய் பார்த்துக் கொண்டு வருகிறேன் என்று கிளம்பிவிட்டார். என்னடா இது என்று இருந்தது. அவர் போன சற்று நேரத்தில் அவர் பார்க்கப் போன இரண்டு பேரில் ஒருவர் வந்துவிட்டார். வாத்தியாரை எதிரில் பார்த்தேன் என்று அவர் சொன்னதால் அப்பாடா ஒரு குழப்பம் இல்லாமல் போயிற்று என்று நினைத்துக் கொண்டோம். அந்த கடைசி பிராமணரும் வந்து சேர்ந்தார்கள். எல்லோரும் சங்கல்பம் செய்யும் இடத்திற்கு வந்து ஆரம்பிக்கலாம் என்றார்கள். என்னது வாத்யாரை காணோம்; ஆரம்பிக்கலாம் என்றால் என்ன அர்த்தம் என்று கேட்டேன். வாத்தியார்தான் ஆரம்பியுங்கள் இதோ வந்து விடுகிறேன் என்று சொன்னார் என்று ஒருவர் சொல்ல சரி நான் ரெடி என்றேன். அவரே சங்கல்பம் செய்து வைத்தார். வரணம் போன்ற உபசாரங்கள் நடந்து கொண்டிருக்கும்போது வாத்தியாரும் வந்துவிட்டார்.
துரு ருசி என்று 2 விஶ்வேதேவர்கள், பித்ரு வர்க்கம் ஒருவர், மாத்ரு வர்க்கம் ஒருவர், ஸபத்னீக மாதாமஹ வர்க்கம் ஒருவர், உபய வம்ச காருண்ய பித்ருக்கள் என ஒருவர். ஶ்ராத்த ஸம்ரக்ஷக மஹா விஷ்ணு என ஒருவர். இதெல்லாம் என் ஶ்ராத்தம் குறித்த தொடரில் விளக்கமாக சொல்லி இருக்கிறேன்.
தீர்த்த ஶ்ராத்தம் என்பதால் பல விஷயங்கள் இல்லையானாலும் நபர்கள் அதிகம் என்பதால் சிரமம் அதிகம்.
இந்த நிலை கால்களை கழுவி விடும் நேரத்தில் கொஞ்சம் பிரச்சனை இருந்தது. காரிடார் போல இருக்கும் இடத்தில்தான் செய்யவேண்டும் என்றார். இங்கேயே இன்னும் கொஞ்சம் தள்ளி போனால் ஒரு மரத்தடி கொஞ்சம் இடம் இருக்கிறது. இங்கேதான் துணிகளை உலர்த்தி இருந்தோம். அப்போது எனக்கு அது தெரியவில்லை. இந்த இடத்தில் செய்திருக்கலாம். இருந்தாலும் வாத்தியார் சொல்லும்படி கேட்க வேண்டியது அவசியம் என்பதால் விஶ்வேதேவர்களுக்கும் பித்ருக்களுக்கும் நடுவில் துண்டை போட்டேன். பகவத் சங்கல்பம் - தரையின் சாய்வு ஒரு மாதிரி இருந்ததில் நீர் வெவ்வேறு பக்கம் ஓடிவிட்டது. விகிரான்னம் கிடையாது, அபிஶ்ரவணம் இல்லை. மாசிகங்களில் சொல்லும் புருஷ ஸூக்தம் கூட இல்லை. வாயஸ பிண்டம் வைத்தேன். கொண்டு போட காக்கா இல்லை! என்ன செய்வது என்றால் அதையும் தீர்த்தத்திலேயே போட்டுவிடலாம் என்றார்கள். போக்தாக்கள் சாப்பிட்ட மிகுதி, வைத்த சருவின் மிகுதி எல்லாம் அப்படியே. யார் என்ன செய்தார்கள் என்று நினைவில் இல்லை. நாம் சாப்பிட்ட மிகுதியை அங்கிருந்த ஒரு டப்பாவில் போடச்சொன்னார்கள்.
இதெல்லம் நாய் தோண்டி எடுக்க முடியாதபடி ஒரு அடி ஆழம் தோண்டி புதைக்க வேண்டும். இங்கே அதற்கு வசதி இல்லை. நாராயணா!
போக்தாக்களை வழி அனுப்பிவிட்டு பிண்ட ப்ரதானம் செய்தேன். 17 பிண்டங்கள். பிழிய வேண்டிய வஸ்தம் எல்லாம் காய்ந்தே போயாயிற்று. ப்ரம்ஹ யக்ஞம் முடித்து சப்பிட உட்காரும் போது மணி நாலரை! ப்ரயாக்ராஜ்தான் லேட் என்று நினைத்தேன். இங்கே அதைவிட லேட்! அப்பாடா என்று படித்தேன். நல்ல வேளை மாலை அக்னிஹோத்திரம் கிடையாது.
இப்படியாக பார்வண ரூப தீர்த்த ஶ்ராத்தம் முடிந்தது.
மாலையில் திடுதிப்பென ஒரு திருப்பம்!
No comments:
Post a Comment