Pages

Thursday, July 31, 2008

உபநயனம் - 2


காயத்ரி ஜபத்தால் மனது ஒருமை படுவதுடன் ஜபம் செய்பவர் புத்தி, மேதா விலாஸம் ஆகியன மிகச்சிறந்த விருத்தியை அடைகிறது. ஞான ஒளியை தருவது இது. காயத்ரி ஜபமும் மற்ற நல்ல கர்மங்களும் மேலும் நல்ல ஞாபக சக்தியையும், நீண்ட ஆயுளையும், வலிமையையும் தருகின்றன.

காமம் உள்புகுந்தபின் மந்திரம் நிலைக்காது. அதனால்தான் காம விகார உணர்வுகள் உள்ளே போகும் முன்னே காயத்ரீ உபதேசமும் ஜபமும் ஆரம்பித்துவிட வேண்டும் என்கிறார்கள். அதனால்தான் சிறு வயதிலேயே இதை செய்து கொள்ள சொல்கிறார்கள். எண்ணை பூசிக்கொண்ட கை பலாச்சுளைகளை பிரிப்பது போல மந்திரம் நிலைத்த பின் மனதை காமம் அதிகம் பாதிக்காது.

பத்து வயதில் க்ஷத்திரியனும் 11 இல் வைச்யனும் உபநயனம் செய்ய காலம். மற்ற மதத்தவர் கூட இதே வயதில் இது போன்ற கர்மா செய்கின்றனர். பார்சிகள் குழந்தையின் 6 வயது 3 மாதங்களில் நவ்ஜோத் என்று செய்கிறார்கள்.
மனிதனுக்கு இதற்கு முன்னால் செய்யப்பட்ட கர்மாக்கள் அனைத்துமே இதற்கு தகுதியை உண்டாக்கத்தான்.

உடல் சுத்திக்காக முதலில் வபனம் (முடி திருத்தம்); நீண்ட ஆயுளுக்காவும், தன் பிள்ளைபோல மாணவனை காப்பாற்றவும் அக்னியை வேண்டுகிறார்கள். முன் சொன்னபடி கருங்கல் மீது ஏறி மந்திரங்கள் சொல்லி ஆசீர்வாதம் செய்த பின் ஆடை, மேகலை, மான்தோல், தண்டம் முதலியன பல தேவதைகளின் அருளை வேண்டிக்கொண்டு மாணவனுக்கு தரப்படும்.

வாமன அவதாரத்தின் போது அவருக்கு நடந்த உபநயனம் விரிவாக பாகவதத்தில் எட்டாம் ஸ்கந்தம் 18 வது அத்தியாயத்தில் சொல்லப்படுகிறது. சூரியன் அவருக்கு நேரில் காயத்திரியை உபதேசம் செய்தான். உபவீதத்தை ப்ரஹஸ்பதியும்; மேகலையை கச்யப ப்ரஜாபதியும்; நீண்ட ஆயுள், யஷஸ் தரும் மான்தோலை பூமி தேவதையும்; நல்ல புத்தி, வேதத்தை காத்தல் இவை பொருட்டு பலாச தண்டத்தை ஸோமனும்; இந்திரிய நிக்ரஹத்தை தர கௌபீனத்தை அதிதியும்; குடையை தேவலோகமும்; தீர்த்த பாத்திரத்தை ப்ரம்மாவும்; சுத்தம் தரும் குச புற்களை ஸப்த ரிஷிகளும்; ஜப மாலையை ஸரஸ்வதியும் பிக்ஷை எடுக்கும் பாத்திரத்தை குபேரனும்; உலகுக்கே தாயாரான உமாதேவி பிக்ஷையும் அளித்ததாக சொல்லி இருக்கிறது.

இந்த தேவதைகளின் அருளினால் வாமனர் பிரகாசித்ததாக சொல்லப்படுகிறது.
மேலும் ஹோமங்கள் செய்வதில் பயனாகும் மந்திரங்கள் மாணவனின் நீண்ட ஆயுள், செல்வம், ஐச்வர்யம், மேதாவிலாசம், புகழ் இவற்றை வேண்டி அக்னியை பிரார்த்திப்பதாக உள்ளது. பின் ஸமித்துக்களை மாணவன் ஹோமம் செய்கிறான். இந்த ஸமிதாதானம் ப்ரம்மசாரியால் தினமும் செய்யப்பட வேண்டியது.

முப்புரி நூலை எப்போதும் தரித்து இருக்க வேண்டும். அந்தணர் அல்லாத பலர் இதை சில விசேஷங்களுக்கு மட்டும் போட்டுக்கொண்டு (திருமணம், அந்திம காரியம்) மற்ற நேரங்களில் அணிவது இல்லாமல் போய் விட்டது. பூணூல் மூன்று இழைகள் கொண்டதாக செய்து அதை கட்டைவிரல் அல்லாத மற்ற 4 விரல்களில் 96 முறை சுற்றி துணித்து; இந்த நூலை நனைத்து மீண்டும் மூன்றாக முறுக்கி (இப்போது 9 இழை ஆகிவிட்டது) மூன்றாக சுற்றி முடி போட வேண்டும். இது பிரம்ம கிரந்தி. இதில் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மூவரும் உள்ளனர். பூணூலின் நீளம் தொப்புள் வரை இருக்க வேண்டும்.

இந்த பூணூல் என்கிற பிரம்ம சூத்திரம்தான் ஒருவன் தபஸை காப்பாற்றுகிறது. இந்த பூணூல் இல்லாது செய்யும் கர்மாக்கள் பலன் சரியாக தருவதில்லை. தேவ காரியங்கள் செய்யும் போது இடது தோளில் இருந்து வலமாகவும், பித்ரு கார்யங்களில் வலது தோளில் இருந்து இடமாகவும் அணிய வேண்டும். மற்ற நேரங்களில் சாதாரணமாக மாலை போல் அணிய வேண்டும் என்றாலும் பலரும் இதை பின் பற்றுவதில்லை.


3 comments:

Geetha Sambasivam said...

ஒரு உள்ளேன் ஐயா, மட்டும்!! :))))))

Geetha Sambasivam said...

உபநயனம் பண்ணி வச்ச அலுப்போ??????? அதான் இன்னிக்கு போஸ்ட் இல்லை???? :)))))))

திவாண்ணா said...

வரும் வரும்! schedule பண்ணியாச்சு.
விருந்தினர் வந்திருக்கிறார்கள். அதனால் பார்த்து போட முடியலை.