Pages

Friday, March 20, 2009

ஏழு அவஸ்தைகள்



இப்ப மாயையால சீவன்களுக்கு ஏற்படக்கூடிய இருப்பு நிலைகளை வரிசையா சொல்கிறார்.

ஏழு அவஸ்தைகள் உண்டாகுமாம். என்ன அவஸ்தைப்பா இது?
அதான் இருப்பு நிலைன்னு முன்னாலேயே சொன்னேன். படிக்க படிக்க புரியும்.

அந்த ஏழு அவத்தை:
1. அஞ்ஞானம்,
2.மூடல் (ஆவரணம்),
3.முளைத்தல் (விட்சேபம்), இது வரை இதெல்லாம் பாத்தாச்சு.
4.காணாத (பரோட்ச) ஞானம். ஞானம் இருக்கு; ஆனா தெளிவா இல்லை.
5.சந்ததம் கண்ட ஞானம் - தெளிவான ஞானம்.
6.தழல் கெடல் (துக்க நிவர்த்தி), தழல் கெடல். ஆஹா! என்ன வார்த்தை பிரயோகம் பாருங்க! துக்கத்தை தழல் - நெருப்பு என்கிறார்.
7.குளிர்மையாதல் (தடையற்ற ஆநந்தம்) நெருப்பு குளிர்ந்து போச்சு. அதாவது நீங்கிவிட்டது. துக்கம் போனால் நம்மோட இயல்பான நிலையான அனந்தம் வெளிப்படும்.

58.
ஜீவாத்மாக்களுக்கு இவ்விரு விதமான மாயையால் சப்தாவத்தைகள் வரும் வழி, அவற்றின் பெயர்கள்:

இந்தமா யையினாற் சீவர்க் கேழவத்தைக ளுண்டாகும்
அந்தவே ழவத்தை தம்மையடைவினின் மொழியக்கேளாய்
முந்தவஞ் ஞானமூடன் முளைத்தல் காணாதஞானம்
சந்ததங் கண்டஞானந் தழல்கெடல் குளிர்மையாதல்.

இந்த மாயையினால் சீவர்க்கு ஏழு அவத்தைகள் உண்டாகும். அந்த ஏழு அவத்தை தம்மை அடைவினில் (கிரமமாக) மொழியக் கேளாய். முந்த (முதலில்) அஞ்ஞானம், மூடல் (ஆவரணம்), முளைத்தல் (விட்சேபம்), காணாத (பரோட்ச) ஞானம், சந்ததம் கண்ட ஞானம், தழல் கெடல் (துக்க நிவர்த்தி), குளிர்மையாதல் (தடையற்ற ஆநந்தம்)

நீங்க பாட்டுக்கு லிஸ்ட் போட்டா? என்ன அதெல்லாம்ன்னு சொல்லுங்கன்னா:

1.பிரமமாம் தனை மறந்த பேதமையே அஞ்ஞானம்.
2.பரன் (பிரம்மம்) இல்லை, காணோம் என்று பகர்தல் ஆவரண மூடல்.
3.நரன், ஒரு கருத்தால் சீவன் நான் என முளைத்தல் (நான் மானுடன், கர்மா செய்பவன், பலன்களை புசிப்பவன் என்ற எண்ணத்தால் சீவன் என உண்டாதல்) தோற்றம் (விட்சேபமாம்).
4.குரவன் (குரு) வாக்கியத்தால் [பரமாத்மாவான] தன்னை [உண்டு என] குறிக்கொளல் (அறிதல்) [பிரமமில்லை எனும் அசத்தான ஆவரணத்தை நீக்கும்] பரோட்ச ஞானம்.

59. அந்த அவத்தைகளின் தன்மை:

பிரமமாந் தனைமறந்த பேதமையே யஞ்ஞானம்
பரனிலை காணோமென்று பகர்தலா வரணமூடல்
நரனொரு கருத்தாற்சீவ னானென முளைத்தறோற்றம்
குரவன்வாக் கியத்தாற்றன்னைக் குறிக்கொளல் பரோட்ச ஞானம்.

மேலே?
5.தத்துவ விசாரம் செய்து சகல சந்தேகமும் போய் அத்துவிதம் (அத்வைத, ஐக்கிய சொரூபம்) தான் ஆதல் அபரோட்ச ஞானமாகும். பிரமம் இல்லை என்னும் ஆவரணத்தை நீக்கும் பிரத்தியட்ச ஞானமாகும்.
6.கர்த்தனாம் சீவ பேதம் (கூடஸ்தனிடம் ஆரோபித்த நான் செய்பவன் என்ற சீவ பாவனை) கழிவதே துக்கம் போகல்.
7.முத்தனாய் எல்லாம் செய்து முடித்தது (சகல பந்தங்களில் இருந்தும் விடுபட்டது) ஆனந்தமாமே. (தடையற்ற ஆனந்தமாம்.)


2 comments:

Geetha Sambasivam said...

அப்பா! புரிஞ்சது, இது கொஞ்சம் பரவாயில்லை! மத்தவங்க இன்னும் ஒளிஞ்சுட்டு இருக்காங்க போல! :)))))))

திவாண்ணா said...

//அப்பா! புரிஞ்சது, இது கொஞ்சம் பரவாயில்லை! மத்தவங்க இன்னும் ஒளிஞ்சுட்டு இருக்காங்க போல! :)))))))//

மக்களே நல்லா கேட்டுக்கோங்கப்பா!