விட்சேப சக்தி நம்மை மாதிரி மக்களுக்கு வேற மாதிரி உலகத்தை காட்டி பிரச்சினை பண்ணுகிறது உண்மைதான். வித விதமா தெரிகிற உலகத்தை பாத்து மயங்கி போய் அது மேல ஆசை வந்து வலுப்பட்டு....... ஆனா அதே சமயம் இதே விட்சேப சக்திதான் நல்லவங்கண்ணு காட்டி அவங்களோட சத்சங்கத்தை ஏற்படுத்தி வாழ்க்கையை சீரமைச்சுக்க ஒரு வழியும் காட்டுது.சாத்திர நூல்களை காட்டுது. குருவை காட்டுது. இந்த உலகத்தில சாரம் இல்லை. இது நீ இல்லை. உன்னை புரிஞ்சுக்கன்னு சொல்லி புரிஞ்சுக்க வழிகளையும் காட்டுறது இதே விட்சேப சக்தி தான்.
இப்படி ஆன்மீக நாட்டம் வந்தவங்களுக்கு விட்சேப சக்தி நல்லதே செய்யும். மத்தவங்களுக்கு கெடுதல் செய்யும்.
ஆனா ஆவரணமோ எல்லாருக்குமே கெடுதல்தான் பண்ணும்.
54.
விட்சேப சக்தி ஆவரண சக்திகளின் நன்மை தீமை கூறல்:
தோற்றமாஞ் சத்திதானுந் துன்பமாம் பவமானாலும்
ஆற்றலான் முத்திசேர்வார்க் கநுகூல மாகுங்காணீ
ஊற்றமாம் பகற் காலம்போ லுபகார நிசியினுண்டோ
மாற்றமென் றுரைப்பேன் மைந்தா மறைப்பது மிகப்பொல்லாதே
தோற்றமாம் சத்திதானும் (விட்சேப சக்தியும்) [அஞ்ஞானிகளுக்கு] துன்பமாம் பவமானாலும் (சம்சாரத்தை கொடுப்பதானாலும்) ஆற்றலான் [சிரவணாதி முயற்சியால்] முத்திசேர்வார்க்கு (முத்தியடைய விரும்பு முமூட்சுகளுக்கு) அநுகூலமாகும் காண் நீ. ஊற்றமாம் பகற் காலம் போல் (அஞ்ஞானிகள், முமூட்சுகள் இருவருக்கும் நித்திரை சோம்பல் முதலியவற்றைப் போக்கும் பகல் வேளை போல்) உபகாரம் நிசியில் (இரவில்) உண்டோ? மாற்றம் (வேறு பதில்) என் உரைப்பேன் மைந்தா? மறைப்பது (மறைக்கும் ஆவரண சக்தி) மிகப்பொல்லாதே.
தாத்பர்யம்: விட்சேப சக்தி அஞ்ஞானிகளுக்கு துன்பமும் முமூட்சுகளுக்கு மோட்ச இன்பமும், ஆவரண சக்தி இருவருக்கும் துன்பத்தையும் தரும்.
தினமும் தூங்குக்கிறோம். சாப்பிடாம கூட இருந்துடலாம். ஆனா மனுஷனால தூங்காம இருக்க முடியாது. இப்படி தூங்குகிறப்ப நாம் பாக்கிற இந்த உலகம் எல்லாமே காணாமத்தான் போகுது. சுழுத்தில கனவு கூட இல்லை. அதாவது விட்சேப சக்தியோட விளைவு அத்தனையும் காணாம போயிடும்.
ஆனா இதனாலா யாருக்கான முக்தி கிடைச்சு இருக்கா என்ன?
போதிய அளவு தூங்கினதும் நம் வாசனைகள் நம்மை எழுப்ப திருப்பி இந்த உலகத்துக்கு வரோம்.
ஆக விட்சேபம் ஒழியறதுனால நமக்கு ஒரு பிரயோசனமும் இல்லை- மனசு ரிஃப்ரெஷ் ஆகிறதை தவிர.
மாறா இந்த ஆவரண சக்தி இருக்கிற வரை மோட்சம் கிட்டவே கிட்டாது. ஆவரணம் போனா உடனே மோட்சம்தான்!
55.
அநுபவத்தால் ஆவரணத்தின் கொடுமை காட்டல்:
சுழுத்தியிற் பிரளயத்திற் றோற்றமாஞ் சகங்கண்மாண்டும்
அழுத்திய பவம் போய்முத்தி யடைவரொரு வருண்டோ
முழுத்தவிட் சேபமெல்லா முத்தியிற் கூட்டுகிற்கும்
கொழுத்த வாவரணமுத்தி கூடாமற் கெடுத்தகேடே
சுழுத்தியில் (தினப்பிரளயத்தில்) பிரளயத்தில் (பிரமப் பிரளயத்தில்) தோற்றமாம் சகங்கள் மாண்டும் (விட்சேபமான சகங்கள் நசிந்து) [துன்பத்தில்] அழுத்திய பவம் (பிறவி) போய் முத்தி அடைவர் ஒருவர் உண்டோ? (எவருமில்லை) [ஆகவே,] முழுத்த விட்சேபம் எல்லாம் (உடல் முதலான விட்சேப சக்தியின் விளைவெல்லாம்) முத்தியிற் கூட்டுகிற்கும். (பரம சுகம் தர வல்லது). கொழுத்த (பலமான) ஆவரணம் முத்தி கூடாமற் கெடுத்தகேடே (முக்தி அடையாமல் கெடுதல் மட்டும் செய்யும்)
தாத்பர்யம்: அறிவு விளங்கும் விட்சேபம் முத்தியின்பத்துக்கு சாதனமாகும். அறிவு விளங்காத ஆவரணம் பிறவி துன்பத்துக்கு காரணமாகும். இது அநுபவம்.
2 comments:
//ஆவரணம் போனா உடனே மோட்சம்தான்!//
ஆவரணம் போகணும்னு வேண்டிக்கணும் இனிமேல்.
இப்போத் தான் கொஞ்சம் கொஞ்சமாப் புரியவும் ஆரம்பிக்கிறது. இது எல்லாம் கொஞ்சம் எளிமையாத் தெரியறது. நன்னி!
//இது எல்லாம் கொஞ்சம் எளிமையாத் தெரியறது. நன்னி!//
இந்த பதிவுகளிலேயே tough பகுதி முடிஞ்சாச்சு. இனி அனேகமா எல்லாமே சுலபம்தான்.
காணாம போனவங்க எல்லாம் தைரியமா திரும்பலாம்பா!
:-))))
Post a Comment