சீவன் வியக்தி. ஈசன் சமஷ்டி.
கடல் அலையும் கடலும் போல. ரெண்டுக்குமே கடலோட தன்மை- உப்பு கரிக்கிற தண்ணீர் ன்னு இருந்தாலும் கடல் அலை கடலா ஆகாது இல்லையா?
44.
மரங்கள்போல் வியட்டிபேதம் வனமெனல் சமட்டிபேதம்
சரங்கடா வரங்கள்பேதத் தனியுடல் வியட்டியென்பார்
பரம்பிய வெல்லாங்கூட்டிப் பார்ப்பதே சமட்டியாகும்
இரங்கிய பல சீவர்க்கு மீசர்க்கும் பேதமீதே
மரங்கள் போல் (கருதுவது) வியட்டி (வியஷ்டி) பேதம். வனமெனல் சமட்டி பேதம். சரங்கள் தாவரங்கள் பேதத் தனியுடல் வியட்டி என்பார். பரம்பிய (விரிந்துள்ள) எல்லாம் (சகல தேகங்களையும்) கூட்டிப் பார்ப்பதே சமட்டியாகும். இரங்கிய (வருந்துகின்ற) பல சீவர்க்கும் ஈசர்க்கும் பேதம் ஈதே.
இப்பதான் இவ்வளோ பேசினதுக்கு பாய்ன்டுக்கு வரோம்.
இந்த பஞ்ச கோசங்களும் உண்மையிலே நாம் இல்லைன்னு புரிஞ்சு உணர்ந்து வெளியே வந்தா ஆத்மாவை உணரலாம். ஞானம் வந்துடும்.
யார் இந்த பரந்து விரிந்த உலகத்தை எல்லாம் கனவு போல நிலையற்றது - மாயை ன்னு புரிஞ்சுக்கிறாங்களோ அவங்க ஞானியா ஆவாங்க.
இதற்கான உத்தி அபவாதம் எனப்படும்.
45.
அத்தியாரோப உத்தியினால் தன்னிடத்து ஆரோபமாகத் தோன்றிய சகசீவ பரங்கள் மித்தை என உணர மித்தையா திருஷ்டியைக்கூறி, அதத்துவா விருத்தி இலக்கணையால் அவை உண்டான கிரமப்படி லயிக்கும் அபவாத உத்தியை சுருக்கமாக கூறல்:
கற்பனை வந்தவாறு காட்டினோங் காண்ப வெல்லாஞ்
சொற்பனம் போலுமென்றே துணிந்தவன் ஞானியாவன்
செற்புதை மழைக்காலம் போய்த் தெளிந்தவா காசம் போல
வற்புத முத்திசேரு மபவாத வழியுங்கேளாய்
கற்பனை (அத்தியாரோபம்) வந்தவாறு (வந்த வழியை) காட்டினோம். காண்ப எல்லாம் (காணும் சீவேஸ்வர ஜகத் முழுதும்) சொற்பனம் (கனவு) போலும் என்றே துணிந்தவன் (நிச்சயித்தவன்) ஞானியாவன். செற்புதை (மேகம் நெருங்கிய) மழைக்காலம் போய்த் தெளிந்த ஆகாசம் போல அற்புத முத்தி (நிரதிசய ஆநந்த மோட்சம்) சேரும் (அடைய காரணமாகும்) அபவாத வழியும் கேளாய்.
அப வாதம் என்ன? முடக்கு வாதம், கீல் வாதம் மாதிரின்னா.....
மாயையை நீக்குகிறதுதான் அபவாதம்.
கயிறுதான் இது; பாம்பா பாத்தது நம்மோட பிரமை.
இது மரம்தான். அரைகுறை வெளிச்சத்துலே பாத்து ஆளுன்னு தப்பா நினைச்சுட்டோம்.
இப்படி தெளிவா ஆகிறாப்போல
இந்த உலகங்கள் எல்லாம் இல்லை; ப்ரம்மம் ஒண்ணுதான் இருக்கு ன்னு தெளிவதே அபவாதம். இதுக்கு சாதனமா இருக்கிறது குருவோட உபதேசமும் சாத்திர நூல்களும்.
சொல்லறது ரொம்ப சுலபமா சொல்லியாச்சு! அனுபவத்துக்கு வரணுமே!
1 comment:
//சொல்லறது ரொம்ப சுலபமா சொல்லியாச்சு! அனுபவத்துக்கு வரணுமே!//
இதையும் நீங்களே சொல்லிட்டா, பின்னூட்டத்துல நாங்க என்ன சொல்லறதாம்? :)
Post a Comment