Pages

Thursday, March 19, 2009

மாயையில் இருந்து வருவது மாயை இல்லையா?




சந்தேகத்துக்கு மேலே சந்தேகம் எழுகிறது சீடனுக்கு. அதுதானே நல்ல சீடன் லட்சணம்? சந்தேகமே இல்லைனா ஒண்ணுமே புரியலையோன்னு சொல்கிறவருக்கு சந்தேகம் வந்துடும். :-))
குரு புத்திசாலி! அதனாலே சீடனுக்கு வர சந்தேகத்தை அவன் வாய்விட்டு கேக்கிறதுக்கு முன்னாலேயே தானே சொல்லி விடையும் சொல்கிறார். கேள்வி கேக்க கூச்சப்படுவான்னு சந்தேகமோ என்னமோ!

எதுலேந்து ஒண்ணு வந்ததோ அதோட குணம்தானே புதுசா தோன்றினதுக்கும் அடிப்படையிலே இருக்கணும்? கசப்பு பாகல் காயிலேந்து இனிப்பா ஒண்ணும் செய்ய முடியாதே? சர்க்கரை போட்டு காரமா ஒண்ணும் செய்ய முடியாதே?
சிப்பில வெள்ளியை பாக்கிறது ஆரோபம், அது மித்தை (மாயை) என்கிறீங்க! சரி. அது போல பிரம்மத்தில விட்சேப சக்தியால ஆரோபமாகி இந்த உலகம் எல்லாம் இருக்கு. இது மித்தைன்னு சொல்கிறீங்க; ஒத்துக்கிறேன். ஆனா அப்படினா அதே விட்சேப சக்தியால வந்த குரு, சாத்திரம் இதன் உதவியால கிடக்கிற மோட்சம் எல்லாமே மாயையாதானே இருக்கணும்?

செம லாஜிக்!

குரு சொல்கிறார்: அப்பனே அப்படி நீ நினைச்சா, இப்படி யோசிச்சு பாரு. ஒரு கனவு காண்கிறாய். அது மாயைதான் ன்னு கனவு கலைஞ்சதுமே நமக்கே தெரியுது.
கனவுல ஒரு சிங்கம் வந்தது. அது பாஞ்சு வந்து உன்னை தாக்கறா மாதிரி கனவு காண்கிறாய். அப்ப என்ன ஆகும்? கனவு கலைஞ்சுடும். திடுக்குன்னு முழிச்சுகிட்டு ¨ அப்பாடா, கண்டது கனவுதானா¨ அப்படின்னு நினைப்பாய். கண்டது கனவுதான். கனவில பாத்த சிங்கம் மாயைதான். ஆனா விளைவு என்ன ஆச்சுன்னு பாத்தியா? விழிப்பு வந்துடுத்து. கனவான சின்ன மாயை விழிப்பை கொடுத்தது.
அதே போல குரு, சாத்திரங்கள் போல  ஞான சாதனமா இருக்கிற விஷயங்கள் உண்மையிலே மாயைதான் ஆனாலும் அவை நல்லதே பண்ணும். அவற்றோட உதவியால கிடைக்கிற முத்தி -நிர்வாண நிலை மாயை இல்லை; உண்மையே!

56.
மித்தையான விட்சேபத்தால் வெளிப்படும் முத்தியும் மித்தையாம் எனில்:

சுத்தியில் வெள்ளிபோலத் தோன்றிய தோற்றமான
சத்தியும் பொய்யேயென்றாற் சத்திசா தனமாவந்த
முத்தியும் பொய்யேமென்னின் மோகநித்திரை விலங்கால்
நித்திரை தெளியுமாபோ னிருவாண நிலைமெய்யாமே

சுத்தியில் (சிப்பியில் ஆரோபமான) வெள்ளி போல, தோன்றிய தோற்றமான சத்தியும் (பிரமத்தில் ஆரோபமான விட்சேப சக்தியும்) பொய்யே என்றால் சத்தி சாதனமாக வந்த முத்தியும் (விட்சேப சக்தியால் தோன்றிய குரு, சாஸ்திரம் முதலான சாதனங்களால் கிடைத்த மோட்சமும்) பொய்யே என்னின், மோக நித்திரை விலங்கால் (சிங்கத்தால்) நித்திரை தெளியுமா போல் (தூக்கம் நீங்கி விழிப்பு ஏற்படுவது போல) நிருவாண நிலை மெய்யாமே.
+++++++++++++++

 அப்பப்ப ஆஸ்பத்திரிக்கு விஷம் குடிச்சுட்டு  கேஸ் வரும் இல்லையா? பூச்சி மருந்து, குவளைக்காயை அரைச்சு குடிக்கிறது... நிறைய இருக்கு. அதுக்கு என்னடா மாத்து மருந்துன்னு பாத்தா அதுவே ஒரு விஷமா இருக்கும். ஏற்கெனவே விஷம் இருக்கிறதால இதனால் விஷ விளைவு வராது. அதயே தனியா சாப்பிட்டா ஆள் காலி!

அதே போல இரும்பு துண்டை இன்னொரு இரும்பு துண்டால்தான் வெட்டுவாங்க; இல்லை அறுப்பாங்க. சோப்பு இல்லாத முன் காலத்திலே துணில இருக்கிற அழுக்கை உவர் மண் ன்னு ஒரு மண்ணை போட்டு தேச்சு எடுப்பாங்க.

இதே போல மாயையை மாயையாலேயே நீக்கலாம்.

சுடு காட்டுக்கு போய் பாத்தா சவத்தை எரிக்கிறப்ப ஒரு தடி வெச்சு இருப்பாங்க. நெருப்பு சுடுறப்ப தசைகள் எல்லாம் ப்ரோடீன் இறுகி பட் பட்டுன்னு வளையும். அப்ப கை கால் உதறுகிற மாதிரி இருக்கும். இதனால்தான் திரும்பி பாக்காம போங்கன்னு விரட்டி விடுவாங்க. அறியாமையிலே உசிர் இன்னும் போகலையோன்னு நினைக்க வாய்ப்பு இருக்கு இல்லையா? இந்த மாதிரி கை கால் உதறுகிற போது சிதை அடுக்கி அங்கேயே மீதம் இருக்கிற ஒரு சவுக்கு கட்டையை எடுத்து பட் பட்ன்னு உதறுகிற கை கால் மேலே போட்டு சிதையிலேயே தள்ளுவாங்க. நெருப்பு அணைகிற மாதிரி இருந்தா இந்த கட்டையாலேயே கிளறிவிடுவாங்க. ஒவ்வொரு முறை கிளறுகிற போதும் அதுவும் கொஞ்சம் எரியும் இல்லையா? கடைசியிலே எரியாம மீதி இருக்கிறதையும் எறியாம சிதையிலே போட்டுடுவாங்க. அதுவும் முழுக்க எரிஞ்சு போகும்.

மாயையிலும் நல்ல மாயை (நல்லது செய்கிற மாயை) கெட்ட மாயைன்னு வகைப்படுத்தி பாக்கலாம். இந்த நல்ல மாயை மோக்ஷத்துக்கு சாதனமானது. மோக்ஷத்துக்கு இழுத்து போய் ஞானம் வருகிற போதும் இதுவும் ¨சவம் சுடு தடி போல¨ மறைஞ்சு போகும்!


57.
இம்பரி னஞ்சைநஞ்சா லிரும்பினை யிரும்பா லெய்யும்
அம்பினை அம்பாற்பற்று மழுக்கினையழுக்கான் மாய்ப்பர்
வம்பியன் மாயைதன்னை மாயையான் மாய்ப்பர் பின்னைத்
தம்பமா மதுவுங்கூடச் சவஞ்சுடுதடி போற்போமே

இம்பரில் (இவ்வுலகில்) நஞ்சை நஞ்சால் (அதன் பிரதி கூலமான நச்சாலும்) இரும்பினை இரும்பால், (அதன் பிரதி கூலமான இரும்பு அரத்தாலும்), எய்யும் அம்பினை அம்பால், [துணியில்] பற்றும் அழுக்கினை அழுக்கால் (உவர் மண்ணாலும்) மாய்ப்பர். வம்பியல் (நழுவும் சுபாவமுள்ள) மாயைதன்னை மாயையால் மாய்ப்பர். பின்னை தம்பமாம் அதுவும் கூடச் சவஞ் சுடு தடி போல் போமே.

தாத்பர்யம்: தினமும் குறைந்து வருகின்ற படியால் நழுவுதல் சுபாவமான அஞ்ஞானமும் மறைப்பாயும், பெண்ணாதி, பொன்னாதி, மண்ணாதி, அன்னாதியாயும் இருக்கும் அசுத்த மாயையைச் சிரவணாதி சுத்த மாயை கெடுத்து பின் சவத்தை சுட பயன்படுத்திய தடியை முடிவில் அத்தீயிலேயே போட்டு எரிப்பது போல தானும் நீங்கும்.


2 comments:

Geetha Sambasivam said...

//சிப்பில வெள்ளியை பாக்கிறது ஆரோபம், அது மித்தை (மாயை) என்கிறீங்க! சரி. அது போல பிரம்மத்தில விட்சேப சக்தியால ஆரோபமாகி இந்த உலகம் எல்லாம் இருக்கு. இது மித்தைன்னு சொல்கிறீங்க; ஒத்துக்கிறேன். ஆனா அப்படினா அதே விட்சேப சக்தியால வந்த குரு, சாத்திரம் இதன் உதவியால கிடக்கிற மோட்சம் எல்லாமே மாயையாதானே இருக்கணும்?

செம லாஜிக்!//

ரெண்டு நாள் முந்தி தான் இது பத்திப் படிச்சேன், நல்லாவே புரியுது, இப்போ.

Geetha Sambasivam said...

//இதே போல மாயையை மாயையாலேயே நீக்கலாம்.//

புரிய ஆரம்பிச்சிருக்கு!