Pages

Monday, March 23, 2009

பத்தாவது ஆள் - கதை
60.
தத்துவ விசாரஞ் செய்து சகலசந் தேகமும் போய்
அத்துவி தந்தா னாதலப ரோட்ச ஞானமாகும்
கர்த்தனாஞ் சீவ பேதங் கழிவதே துக்கம் போகல்
முத்தனா யெல்லாஞ் செய்து முடித்தா னந்தமாமே

இதை விளக்க ஒரு கதை வருது.

பத்து பேர் ஒண்ணா ஜாலியா பேசிகிட்டு போறாங்க. வழில ஒரு ஆறு வருது. அதை கடக்க வழியில்லை. ஆத்திலேயோ தண்ணி வேகமா நிறைய போகுது. கடந்து போக கொஞ்சம் பயமானாலும் வேற வழியில்லை. சரின்னு மெதுவா தண்ணில இறங்கி ஆறை தாண்டறாங்க. அக்கரைக்கு போனதும் அத்தனை பேரும் பத்திரமா கடந்தாச்சான்னு சந்தேகம். அவர்கள்ள ஒத்தன் எவ்வளோ பேர் இருக்கோம் ன்னு எண்ணிப்பாக்கிறான். ¨அட! ஒன்பதுதானே இருக்கு? ஒரு ஆளை காணோம்¨ ன்னு பயம் வந்தாச்சு. ¨அட! உனக்கு எண்ணவே தெரியாதேடா! நாண் எண்ணறேன்¨ ன்னு இன்னொருத்தன் எண்ணிப்பாக்கிறான். அவனுக்கும் ஒன்பதுதான் எண்ணிக்கை வருது. ¨யாருடா காணோம்?¨ ன்னு கேட்டா எல்லாரும் முழிக்கறாங்க. எல்லாரும் அழ ஆரம்பிச்சுடறாங்க.

அப்ப அங்க ஒரு வழிப்போக்கன் வரான். ¨என்னப்பா எல்லாரும் அழறிங்க? என்ன விஷயம்?¨ ன்னு கேட்டான். ¨ஐயா நாங்க பத்து பேர் ஆத்தை கடந்தோம். ஒத்தனை காணோம். யாருன்னும் தெரியலை¨ ன்னாங்க.

வழிப்போக்கன் எண்ணிப்பாத்தான். பத்து பேர் இருக்காங்கன்னு தெரிஞ்சது. என்ன விஷயம்ன்னு புரிஞ்சுடுத்து. ¨நீங்க பத்து பேர் இருக்கீங்கடா¨ன்னான். பசங்களுக்கும் இவர் சொல்கிறது சரியாதான் இருக்கும்ன்னு தோணித்து. ¨ஏண்டா! அவங்க அவங்க எண்ணினீங்க. தன்னை எண்ணாம மத்தவங்களை எண்ணினா எப்படிடா பத்து வரும்?¨ ன்னு கேட்டுட்டு போயிட்டான். ¨அட ஆமா! நம்பளையே எண்ணிக்காம விட்டுட்டோமே¨ ன்னு எல்லாரும் அ.வ.சி பண்ணிட்டு போய் சேந்தாங்க.

61.
இதுநினக் கறியும்வண்ண மிப்படி யொருதிட்டாந்தம்
புதுமையாங் கதைகேள் பத்துப்புருடரோ ராற்றை நீந்தி
உதகதீ ரத்திலேறி யொருவனொன் பதுபே ரெண்ணி
அதனொடு தசமன்றானென் றறியாமன் மயங்கி நின்றான்

இது நினக்கு (உனக்கு) அறியும் வண்ணம் இப்படி ஒரு திட்டாந்தம் புதுமையாம் கதைகேள். பத்து புருடர் ஓர் ஆற்றை நீந்தி உதக (நீர் அதாவது நதி) தீரத்தில் ஏறி, [அவற்றில்] ஒருவன் ஒன்பது பேர் எண்ணி அதனொடு தசமன் (பத்தாவது நபர்) தான் என்று அறியாமல் மயங்கி நின்றான்.

ஆத்தை தாண்டினதும் ஆளுங்களை எண்ணின ஆசாமி ஒன்பது பேரை எண்ணிட்டு பத்தாவதா தன்னை எண்ணாதது அஞ்ஞானம்.
பத்தாவது ஆசாமி காணோம் ன்னு தீர்மானிச்சது பிறியாத (அபரோட்ச ஞானம் வரும் வரை நீங்காத) ஆவரணமாகும்.
காணோமேன்னு துக்கத்தில அழுகிறது விட்சேபம்.
வழிப்போக்கன் பத்தாவது நபர் உண்டு, நிற்கின்றான் ன்னு சொன்னதை உண்மையா இருக்கும்னு எண்ணுவது பரோட்ச ஞானம்.
வழிப்போக்கன் ¨திருப்பி எண்ணிப்பாருப்பா ஆளுங்க ஒன்பது பேர் இருக்கீங்க. நீதான் பத்தாவது ஆள்¨ ன்னு சொல்லவே, எண்ணிப்பாத்து தன்னைக் காணல் கண்ணினில் கண்ட ஞானம். (அபரோட்ச ஞானம்).
ஒத்தன் இறந்துட்டான்னு இருந்த பயம் போகிறது - அழுதல் போவது நோய் போதல்.
மனசுல சந்தேகம் போய் எல்லாரும் இருக்கோம் என்கிற திடமான நிம்மதி - தெளிதல் - ஆநந்தமாமே.

62.
அறியாத மயலஞ் ஞான மவனில்லை காணோ மென்றல்
பிறியாவா வரணமாகும் பீழைகொண் டழல்விட் சேபம்
நெறியாளன் றசம ணுடு நிற்கின்றா னென்ற சொல்லைக்
குறியாக வெண்ணிநெஞ்சிற் கொள்வது பரோட்ச ஞானம்

அறியாத மயல் (9 பேரை கண்டும் பிராந்தியினால் தன்னை பத்தாவதாக அறியாத மயக்கம்) அஞ்ஞானம். அவனில்லை காணோம் என்றல் பிறியாத (அபரோட்ச ஞானம் வரும் வரை நீங்காத) ஆவரணமாகும். பீழை (துக்கம்) கொண்டு அழல் விட்சேபம். நெறியாளன் (வழிப்போக்கன்) தசமன் (பத்தாவது நபர்) உண்டு, நிற்கின்றான் என்ற சொல்லை குறியாக (உண்மையாக) எண்ணி நெஞ்சில் கொள்வது பரோட்ச ஞானம்.

63.
புண்ணிய பதிகன் பின்னும் புருடரொன் பதின்மர் தம்மை
எண்ணுநீ தசமனாவை யென்னவே தன்னைக் காணல்
கண்ணினிற் கண்டஞானங் கரைதல்போ வதுநோய்போதல்
திண்ணிய மனதி லையந் தெளிதலா நந்த மாமே

புண்ணிய பதிகன் பின்னும் (மீண்டும்) புருடர் ஒன்பதின்மர் தம்மை எண்ணு; நீ தசமன் ஆவை என்னவே தன்னைக் காணல் கண்ணினில் கண்ட ஞானம். (அபரோட்ச ஞானம்) கரைதல் (அழுதல்) போவது நோய் போதல். திண்ணிய (திடமான) மனதில் ஐயம் தெளிதல் ஆநந்தமாமே.


Post a Comment