Pages

Monday, February 29, 2016

மாதவிலக்கு -1


ஆரம்பத்திலேயே சொல்லிவிடுகிறேன். சாத்திரங்களிலேயோ வேதத்திலேயோ நம்பிக்கை இல்லாதவர்கள் இதை படிக்கத்தேவையில்லை.
சபரிமலை கோவிலுக்கு பெண்கள் செல்வது குறித்த கட்டுப்பாடு இப்போது சுப்ரீம் கோர்ட் அளவில் விவாதிக்கப்படும் விஷயம் ஆகிவிட்டது. கோவில் வழிபாடுகள் வரையறுக்கபட்டவை. ஆகமங்களும் வேதமும் சொல்லும் கருத்துக்களுக்கு இவை முரணாக போக முடியாது. இது சம்பந்தமாக சில விஷயங்களை முன்னிலை படுத்தப்படவில்லை.
பெண்கள் ஆன்மீகத்தில் நிறையவே ஈடுபாட்டுடன் இருக்கிறார்கள். நிறைய ஆண்கள் ‘பூஜையா அது பொம்பளைங்க சமாசாரம்’ என்று விட்டுவிடுகிறார்கள். பெரும்பாலான பூஜை நடக்கும் வீடுகளில் பூஜை செய்வது பெண்கள்தான்.
பாரம்பரியமாக வீட்டுப்பெண்கள் மாதவிலக்கு ஏற்படும் நாட்களில் பூஜை, சமையல் செய்வதில்லை. பலரும் இது ஏதோ பழக்கவழக்கத்தில் வருவதாக நினைக்கிறார்கள். அப்படி இல்லை. இதற்குப் ப்ரமாணம் வேதத்திலேயே இருக்கிறது.
க்ருஷ்ண யஜுர் வேதம் தைத்திரீய சாகை 2 ஆம் காண்டம் 5 ஆம் பிரச்னத்தில் வேதம் ஒரு கதையை சொல்லுகிறது. (அது கதையாக இல்லாமல் கதைச் சுருக்கமாக இருப்பதால் கொஞ்சம் கொஞ்சம் விவரம் கற்பித்து கதையாக ஆக்கி இருக்கிறேன்)
தேவர்களின் குருவான ப்ருஹஸ்பதி ஒரு முறை கோபித்துக்கொண்டு போய்விட்டார். குரு இல்லாமல் தேவர்கள் மிகுந்த துன்பத்துக்கு ஆளாயினர். என்ன முயற்சி செய்தும் அவரை கண்டுபிடிக்க முடியாததால் வேறு ஒருவரை குருவாக ஏற்க முடிவு செய்தனர்.
த்வஷ்டா என்று ஒரு முனிவர் இருந்தார். அவருடைய மகன் விஸ்வரூபன். அவன் நான்கு வேதங்களையும் நன்கு கற்றுத்தேர்ந்து இருந்தான். அவனுக்கு மூன்று தலைகள். அவனை குருவாக ஏற்க முடிவு செய்து அவனிடம் வேண்டி ஏற்றனர்.
விஸ்வரூபனின் தாய் ஒரு அசுர ஸ்த்ரீ. ஆகையால் அசுரர்களிடன் அவனுக்கு ஒரு அபிமானம் இருந்தது. ஆகவே யாகங்கள் நடக்கையில் விஸ்வரூபன் உரக்க தேவர்களுக்கு அவி கொடுங்கள் என்று கூவிவிட்டு ரகசியமாக ஹோமம் செய்பவரிடம் அசுரர்களுக்கு அவி கொடுங்கள் என்பான். எப்போதும் ரகசியமாக சொல்வது உரக்கச்சொல்வதைவிட வலுவானது; ஆகையால் அசுரர்களுக்கே அவி கொடுக்கப்பட்டது.

தேவ லோகத்தில் இந்திரன் திகைத்தான். ஹோமங்கள் நடைபெற்றும் தேவர்களுக்கு அவி வந்து சேரவில்லையே என்று குழம்பினான். சற்று கவனித்துப்பார்த்ததில் விஸ்வரூபன் அசுரர்களுக்கு அவி கொடுக்கச்சொல்வது தெரிய வந்தது. கோபத்துடன் இந்திரன் வஜ்ராயுதத்தை வீச அது விஸ்வரூபனின் மூன்று தலைகளையும் கொய்தது. அவன் இறந்து போனான்.
விஸ்வரூபன் வேதங்களை கற்றவன் ஆகையால் அவனைக்கொன்றது ப்ரம்ம ஹத்யா தோஷத்தை கொடுத்தது. இது கவனத்துக்கு வந்த போது இந்திரன் பயந்து நடுங்கினான். யாருக்கும் சொல்லாமல் கொள்ளாமல் ஓடிப்போய் தாமரைத்தண்டு ஒன்றில் மறைந்து ஓராண்டு காலம் வாழ்ந்தான். பின் மெதுவாக கொஞ்சம் தைரியம் வர வெளி வந்தான். எல்லா தேவர்களும் தமக்கு ஒரு பிரச்சினை என்றால் அணுகுவது ப்ரஜாபதியைத்தான். இவனும் பிரஜாபதியிடம் போய் தனக்கு ஒரு வழி சொல்லுமாறு வேண்டினான். அவரோ "விஸ்வரூபன் செய்தது தவறு என்றாலும் அவனைக்கொன்றது உனக்கு ப்ரம்மஹத்யா தோஷத்தை கொடுத்தது. இதை அனுபவித்தே தீர்க்க வேண்டும். உனக்காக ஒரு சலுகை தருகிறேன். இந்த தோஷத்தை உனக்காக அனுபவிக்க யாரும் மனம் ஒப்பி முன் வந்தால் அவர்களுக்கு இதை மாற்றிக்கொடுத்துவிடலாம்.” என்று அருளினார்.
தன் தோஷத்தை யார் ஏற்பார்கள் என்று இந்திரன் அலைந்து திரிந்தான். யாரும் ஒப்பவில்லை. ஒரு வழியாக பூமி ஒப்புக்கொண்டது. என்னால் முழுக்க ஏற்க முடியாது. வேண்டுமானால் மூன்றில் ஒரு பங்கை ஏற்கிறேன் என்றது. இந்திரனும் மகிழ்ந்து உனக்கு என்ன வரம் வேண்டும் என்று கேட்டான்.
இந்த மனிதர்கள் என்னைத்தோண்டி விட்டு குழியை மூடாமல் போய்விடுகிறார்கள். அதனால் இப்படிப்பட்ட குழிகள் தானாக ஒரு வருஷ காலத்தில் மூடிக்கொள்ளவேன்டும் என்று வேண்டியது. இந்திரனும் அப்படி வரமளித்தான். இதனால்தான் குழிகள் ஒரு வருஷ காலத்தில் புழுதி படிந்து தானாக நிரம்பிவிடுகின்றன. பூமி வாங்கிக்கொண்ட தோஷத்தால் அதன் சில பகுதிகள் ஒன்றுமே முளைக்காத கட்டாந்தரையாக ஆயிற்று. இந்த இடம் வசிப்பதற்கு உகந்த இடமல்லாமல் போயிற்று.
- தொடரும்

ஜீவனின் சரித்திரம் - 6


காலம் கழியக் கழிய ஜீவாவின் இளமை அவனறியாமல் விட்டுவிட்டு சென்றுவிட்டது. எப்போதும் மயக்கத்தில் இருந்தான். ம்ம்ம்….. இவர்கள் யார்? இவர்கள் என் பிள்ளைகள். பிள்ளைகள் ஆயிரத்து நூற்றுவர்…. என் பெண்கள் நூற்றிப்பத்து பேர்…. , அனைவருக்கும் விவாஹம் நடத்தியாயிற்றே! ஒவ்வொருவருக்கும் நூறு நூறு மக்கள் உண்டே! இதோ என் செல்லப்பேரன்…. பெயர்த்தி… எத்தனை பேர்கள் இருந்தாலும் இவர்களே என் செல்வமணிகள்…. இவர்கள் நலம் பேணும் பொருட்டு யாகங்கள் செய்வேன். ஹும்! எவ்வளவு கொடூரமான யாகங்களாக இருந்தாலும்தான் என்ன? அனைத்தையும் செய்து தேவர்கள், பித்ருக்கள், பூதகணங்களை திருப்தி செய்வேன். அதன் பின் யாரும் என்னை ஒன்றும் செய்ய முடியாது!
உலகத்தைப்பற்றி ஒரு சிந்தனையும் இல்லாமல் தன் குடும்பத்தை பற்றி மட்டுமே நினைத்துக்கொண்டு இருந்த ஜீவா முதுமை வந்து சேர்ந்ததை அறியவில்லை.
சண்டவேகன் கந்தர்வ அரசன். அவனிடம் 360 கந்தர்வர்கள் கொண்ட சேனை ஒன்று இருந்தது. பகலவன் என்ற கந்தர்வர்களும் நிஷா என்னும் பெயர் கொண்ட கந்தர்வ ஸ்த்ரீக்களும் இருந்தனர். இவர்கள் கையசைக்க ஆசை ஆசையாய் நிர்மாணித்த பொருட்கள் அழிந்துபோகும். இவர்கள் ஜீவாவின் கோட்டையை முற்றுகையிட்டனர். எப்போதும் விழித்திருக்கும் கோட்டைக்காவலன் பஞ்சநாகன் இவர்களை தடுக்க முயன்றான். தன் எழுநூற்று இருபது ’நாடி’ என்னும் வீரர்களுடன் கோட்டையை காக்க முயன்றான். நூறு வருடங்கள் தாக்குப்பிடித்தனர், ஆயினும் கந்தர்வர்களின் பலம் மிகப்பெரிதாக இருந்தது,
ஜீவா இதைப்பற்றி எல்லாம் கவலைப்படவில்லை. ஜனங்கள் மீது வரி விதித்து தான் நன்றாக உண்பதிலும் தன் மனைவியால் பரவசப்படுத்தப்பட்டும் மயக்கத்தில் இருந்தான், காவலன் குறித்து சிந்தையே இல்லாதிருந்தான். தன் நாட்டிற்கோ, நகரத்துக்கோ உறவினர்களுக்கோ வந்த ஆபத்தைப்பற்றி நினைக்கவே இல்லை.

Friday, February 26, 2016

ஜீவனின் சரித்திரம் - 5


என்னவள் எங்கே?”
அரசே, நாங்கள் அனைவரும் நலமே. ராணியின் சிந்தையில் என்ன இருக்கிறது என்று அறிய மாட்டோம். விரிப்புகூட இல்லாமல் கட்டாந்தரையில் விழுந்து கிடக்கும் உங்கள் மனைவியை அங்கு பாரும்!” எனக்காட்டினர்.
அப்போதுதான் ஜீவா பூமியில் விழுந்து கிடக்கும் தன் ராணி மதியை பார்த்தான். காமத்தால் தூண்டப்பட்டு ஐயோ இவள் ஏன் இப்படி இருக்கிறாள் என துக்கித்தான், இதயம் பரிதவிக்க மெல்லிய சொற்களால் அவளை சமாதானப்படுத்த முயன்றான். அவளது பாதத்தை தொட்டு அவளை எடுத்தள்ளி தன் மடியில் வைத்துக்கொண்டான். “என் அருமை மதி, யார் உனக்கு என்ன அபராதம் செய்தார்கள் சொல்! இப்போதே தண்டிக்கிறேன். எந்த சேவகனானாலும் சரி. அவன் எந்த குலத்தவனானாலும் சரி. நமக்கு வேண்டியவன் என்று நினைத்து எந்த சேவகனை ஒரு எஜமானன் தண்டிப்பதில்லையோ அந்த சேவகன் புண்ணியம் செய்தவனல்ல.
உன் முகம் இப்படி பாழும் நெற்றியுடன் இருக்கிறதே! சிரிப்பை காணவில்லையே! எப்போதும் விளங்கும் சோபை இல்லாமல் போயிற்றே! உடல் தாபத்தால் நடுங்குகிறதே! எனக்கு இது மிகவும் வேதனையாக இருக்கிறது. உன்னை விட்டுவிட்டு வேட்டையாடப்போனது என் பிழைதான். ஏதோ அந்த நேரத்தில் புத்தி கெட்டு உடனே கிளம்ப வேண்டும் என்று தோன்றியதால் கிளம்பிவிட்டேன். என்ன மன்னித்துவிடு. இனி இப்படி செய்ய மாட்டேன். என்றைக்கும் உனக்கு மனம் மகிழும்படிதானே எதையும் செய்கிறேன். இன்றொரு நாள் ஏதோ மாறிவிட்டது. மன்னித்துவிடு. இவ்வளவு வேண்டுகிறேனே? கொஞ்சம் கருணை காட்டேன்!”
அரை மணி கழிந்து மெதுவாக மதி எழுந்து அவனைப்பார்த்து சிரித்தாள். பின் குளித்து புதிய உடைகள் அணிந்து வர இருவரும் பழைய படி உண்டு களித்து சிற்றின்பத்திலேயே ஈடுபட்டனர். பகல் இரவு தெரியவில்லை. இது தனது இது பிறருடையது என ஒன்றும் தெரியவில்லை.

Thursday, February 25, 2016

ஜீவனின் சரித்திரம் - 4


அன்று காலை ஜீவா சீக்கிரமே எழுந்துவிட்டான். முழிப்புத் தட்டி விட்டது. மனைவியுடன் கேளிக்கைக்குப்பின் எப்போது தூங்கினான்? தெரியவில்லை. அவள் இன்னும் தூங்குகிறாள். கொஞ்சம் வெளியே போய் வரலாம். அரண்மனையை விட்டு வெளியே வர அவன் நினைத்த மாத்திரத்தில் ஒரு தேர் வந்து நின்றது. இரண்டு சக்கரங்கள் ஒரு அச்சும் கொண்டு லேசான கட்டுமானம்; வேகமாக செல்லக்கூடியது. சாரதி ஐந்து குதிரைகளை ஐந்து கடிவாளங்களால் ஆண்டான். ஒரு ஆசனம் மட்டுமே இருந்தது. இரு மாற்றுக்குதிரைகளை கட்ட வசதி இருந்தது. சிவப்பு, மஞ்சள், வெள்ளை என மூன்று கொடிகள் மேலே பறந்தன. ஐந்து வித ஆயுதங்கள் இருந்தன. ஏழு கவசங்கள் ஏற்றப்பட்டு இருந்தன. வினோதமான அது நாற்புறமும், தேவையானால் மேற்புறமும் கூட நகரும் போல் தோன்றியது. ஜீவா தங்க கவசம் பூண்டிருந்தான். குறைவுறா அம்பறாதூணியை சரி செய்து கொண்டான். பத்து சேவகர்களும் பதினோராவதாக சேனாதிபதியும் உடன் வர ஐந்து மலைச்சரிவுகள் கொண்ட காட்டை நோக்கி தேர் நகர்ந்தது.

வேட்டை வெகு உக்கிரமாக நடந்தது. அசுரர்கள் போல கருணையில்லாமல் வேட்டையாடினான். கூரிய அம்புகளால் கண்டதனைத்தையும் கொன்றான்.
வனத்தில் மிருகங்கள் பல்கிப்பெருகிவிட்டாலும், குடி மக்கள் மிருகங்களால் தொந்திரவு அதிகமாகிவிட்டது என்று புகார் செய்தாலும், உணவுக்கு எனில் தேவையான அளவு மட்டும் வேட்டைகளில் அரசர்கள் ஈடுபடுவது தர்மமே என்றாலும் அதே தர்மம் எந்த மிருகங்களை கொல்லலாம் எதைக்கொல்லக்கூடாது என்று விதிக்கிறது. அதை அவன் பொருட்படுத்தவில்லை. ’அதோ சாதுவாக விளையாடுகிற முயல். எவ்வளவு அழகாக பார்த்து சிரிக்கிறது. கொல்லு! அடடா! இந்த காட்டுப்பன்றிகள் எவ்வளவு ஆக்ரோஷமாக பாய்ந்து வருகிறது! கொல்லு! சோம்பலே உருவான எருமைகள்… கொல்லு!’ என்று எல்லாம் அவன் அம்புகளுக்கு இரை ஆகின. கொன்று கொன்று நாள் முடிவில் உடல் சோர்வு அடைந்தான். பசியும் தாகமும் பீடிக்க ஜீவா அரண்மனை திரும்பினான். சோர்வு நீங்க வென்னீரில் குளித்து உணவுண்ட பின் தன் ராணியின் நினைவு வந்தது. வேட்டை கிளப்பி விட்டிருந்த உத்ஸாஹமும் திருப்தியும் அடுத்து அவனை காமத்தை வேட்க வைத்தன. ராணியை தேடி காணமல் நொந்து அவளது சேடிகளை கேட்டான். “இனியவர்களே, நீங்களும் உங்கள் எஜமானியும் உடல் நலமாகத்தானே இருக்கிறீர்கள்? யாருக்கும் ஏதேனும் சுகவீனமா? என் பத்னி எங்கே? தாயோ பதிவிரதையான மனைவியோ இல்லாத வீட்டில் யார் சுகமாக இருக்க இயலும்? ஒடிந்த ரதத்தில் உக்காருவது போலிருக்கிறது. என் துக்கத்தை எப்போதும் நீக்கி உத்ஸாஹத்தை அளிக்கும் என்னவள் எங்கே?”

Wednesday, February 24, 2016

ஜீவனின் சரித்திரம் - 3


கோட்டையை சுற்றிப்பார்த்த ஜீவா அதன் முன் புற வாயில்கள் ஒளி பொருந்தியவையாக இருக்கக்கண்டான். கத்போதம் என்ற ஒன்றன் வழியாக ஒளி விட்டுவிட்டு மின்மினிப்பூச்சி போல் முனுமுனுத்தது, ஆவிர்முகம் என்ற மற்றதன் வழியாக ஒளி வெளியே பாய்ந்தது, இவற்றின் ஒளியாலேயே மக்கள் தம் வேலைகளை செய்கிறார்கள் எனக்கண்டான்.
நளினி. நாளினி என்ற இரண்டு வாயில்கள் வழியாக இனிய காற்று நகருள் புகுந்து வெளியேறியது. ஹா! இந்த வாயில் இன்னும் பெரியதாக இருக்கிறது. இதன் வழியேதான் கடைச்சரக்குகளும் பல வகை தானியங்களும் பால், பழரசங்கள் ஆகியவையும் கோட்டைக்குள் வருகின்றன, போகின்றன. ம்ம்ம் தெற்குப்பக்கம் இருப்பது என்ன? அதன் பெயர் பித்ருஹூ என்று எழுதி இருக்கிறது. இதன் வழியே போனால்? அது தெற்கு பாஞ்சால தேசத்துக்கு போவதாக தோன்றுகிறது. அப்போது வடக்கே உள்ளது வடக்கு பாஞ்சால தேசத்துக்கு வழியா? ஆமாம். அப்படித்தான். பின்பக்கம் இருந்த கோட்டை வாயில் வழியே பார்க்கலாம். ம்ம்ம் சில கிராமங்கள் தெரிகின்றன. ஓடைகளும் வாய்க்கால்களும் தெரிகின்றன. அதன் பக்கத்தில் நிர்ருதி என்று பெயரிட்ட வாயில்… க்க்க்… இது வழியே போகுமிடம் மஹா அசுத்தமாக இருக்கும் போலிருக்கிறதே!
இந்த நகரத்து நீதிபதிக்கு கண்பார்வை இல்லை. ஆனாலும் அவர் பாட்டுக்கு போய்க்கொண்டு இருக்கிறார். போக வேண்டிய வழியை காட்டுகிறார். இங்குள்ள பொற்கொல்லனும் கண்பார்வை இழந்தவனே! இருந்தாலும் எப்படி அழகான நகைகளை உருவாக்குகிறான்!

நல்ல காலம்! நாம் ஆட்சி செய்ய மற்றவர்கள் செயல்படுகிறார்கள். அவர்கள் கண்பார்வை உடையவர்களே!

அந்தப்புரத்துக்கு போகையில் ஜீவா மதிமயக்கமுற்றான், மிகுந்த கிளர்ச்சியும் திருப்தியும் ஏற்பட்டன. நாளடைவில் தன் மனையாள் சொல்வதை மட்டுமே கேட்பவன் ஆகிவிட்டான். அவள் சுகித்தால் தானும் சுகித்து அவள் துக்கித்தால் தானும் துக்கித்து அவளுடம் மதுபானம் செய்து, புசித்து, பாடி, ஆடி, ஓடி, அமர்ந்து, படுத்து, கேட்டு, பார்த்து, நுகர்ந்து, தொட்டு என்று எல்லா வகையில் அவள் செய்வதையே தானும் செய்தான். அவளுக்கு அடிமையாகி தன் பெருமை அனைத்தும் இழந்து விருப்பமில்லாவிட்டாலும் அவளையே அண்டி பேடித்தனத்துடன் விளையாட்டு மான் போலத்திரிந்தான்.

Tuesday, February 23, 2016

ஜீவனின் சரித்திரம் - 2


அவள் பின்னே சற்று விலகி நின்றனர் சேவகர் பதின்மர். செயலுக்கு துடிப்பவர் ஐவர். உள்ளதை உள் வாங்கும் உணர்வோடு நிற்பவர் ஐவர். ஒவ்வொருவரும் ஒரு விதம். பார்க்கையில் ஒவ்வொருவரின் பின்னும் நூற்றுக்கணக்கான வேலையாட்களும் சேடிகளும் இருந்ததாக தோன்றியது. முன்னாலோ ஐந்து பெரிய நாகங்கள் இடையறாது உலவின. ஒவ்வொன்றும் ஒரு விதமாக இருந்தாலும் அவற்றின் உலாவல் ஒரு பெரிய ஐந்து தலை நாகமோ என்று மயக்கத்தை கொடுத்தது.

நாணம் கலந்த புன்சிரிப்புடன் கூடிய அவளது பார்வையில் வீழ்ந்த ஜீவா மென்று விழுங்கி பேசலானான். “ கமலக்கண்ணி நீ யார்? நற்குணங்கள் படைத்தவள் போலிருக்கிறாய். நீ யாரைச்சேர்ந்தவள்? எங்கிருந்து வந்தாய்? இந்த நகரில் உனக்கு என்ன வேலை? உன்னுடைய இந்த சேவகர்கள் யார்? இந்த சேடிகள் யார்?
இந்த ஐந்து தலை நாகம் எப்படிப்பட்டது? அது ஏன் உன் முன் உலவுகிறது?
நீ ரமா தேவியா? பூமி தேவியா? சரஸ்வதியா? உமையா? இருக்காது, உன் கால்கள் பூமி மேல் படுகின்றன. முனிவர்போல இந்த வனத்தில் சஞ்சரிக்கிறாயே? உன் கணவனைத்தேடுகிறாயா?”
கேட்கத்தயங்கின கேள்வி திடுதிப்பென்று வெளியே வந்து விட்டது, “என்னை திருமணம் செய்துகொள்ளுகிறாயா?”

கம்பீரத்தை இழந்து யாசிக்கின்ற அந்த வீரனை பார்த்து அந்த பெண் தானும் காமமுற்று பேசலானாள். என் பெயர் மதி. நான் இங்கே இருக்கிறேன். அது மட்டுமே எனக்குத்தெரியும். எனக்கு தாய் தந்தை உண்டா, யாரவர்கள் என்பதெல்லாம் தெரியவே தெரியாது. இந்த ஆடவர்கள் பெண்கள் எல்லாரும் என் தோழர்கள். இந்த நகரத்தை யார் நிர்மாணித்தார்கள்? தெரியாது. இந்த நாகம் இந்த நகரின் பாதுகாவலன் போலிருக்கிறது, நான் உறங்கும்போது கூட இது இந்த நகரத்தை காத்து வருகிறது.
என்ன செய்வது என்று புரியாது இருக்கும் வேளையில் தெய்வமே அனுப்பியது போல தாங்கள் வந்து இருக்கிறீர்கள், உலக சுகங்களை விரும்புகிறீர்கள். நீர் நல்ல ரசிகனாக தெரிகிறீர். அறிஞரும் கூட. உமக்கல்லாது யாருக்கு நாங்கள் சுகத்தை கொடுப்போம்? நீரே இந்த நகரை ஆளும். நூறு வருடங்களுக்கு உங்களுக்கு நாங்கள் சுகங்களை அளிப்போம்.

நாம் மணந்து கொண்டு புத்திர புத்திரிகளை பெறுவோம். சுற்றம் இல்லாதவர்களுக்கு என்னத்தான் கிடைக்கும்? அறம், பொருள், இன்பம், மக்கட்பேறு, அம்ருதத்தை போன்ற சுக்லம், புகழ், சோகமும் மாசும் இல்லாத அனுபவங்களை வேறு யார் பெறக்கூடும்? முன்னோர்களுக்கோ தேவர்களுக்கோ முனிவர், மற்ற மனிதர்கள், விலங்குகள் எல்லாவற்றுக்கும் நன்மை செய்து தனக்கும் நன்மை செய்துக்கொள்ளக்கூடியவன் இல்லறத்தை அனுசரிப்பவன்தான். உங்கள் தோள்களைப்பார்த்தால் நாகம் படமெடுத்தது போலிருக்கிறது. இந்த வலிய தோள்களின் வலிமைக்கு யார் மயங்க மாட்டார்கள்?”
இப்படி பரஸ்பரம் மனமொப்பியே தாங்கள் மணந்து கொண்டதாகி பாணர்கள் பாட நகருள் புகுந்தனர்.

Monday, February 22, 2016

ஜீவனின் சரித்திரம் - 1



ஜீவனின் சரித்திரம்.
நீயும் வருகிறாயா ?” என்றான் ஜீவா.
பரமா பதில் ஒன்றும் சொல்லவில்லை.
ஆமாம். நாம் வரைந்த சித்திரம்தான். ஆனாலும் எவ்வளவு அழகாக இருக்கிறது, நான் கீழே போய் அதை இன்னும் அனுபவிக்கப்போகிறேன்.”
நிச்சலனமாய் இருந்த பரமாவை பார்த்துவிட்டு ஜீவா கீழே இறங்கினான்.
என்னை மறந்துவிடாதே; நினைவில் வைத்திரு. சமயம் பார்த்து கை கொடுக்க வேண்டி இருக்குமோ என்னவோ! ” என்றவாறு இறங்கிப்போனான் ஜீவா. ஜீவாவை பார்த்து “உன்னுடனேதான் இருப்பேன்; ஆனால் நீ என்னை நினைவில் வைக்க வேண்டுமே!”” என்று முனகிய பரமாவின் வார்த்தைகளை உள்வாங்காமலே சென்றுவிட்டான்.
மானஸஸரஸ்ஸில் சுற்றித்திரிந்த இரண்டு ஹம்ஸங்களில் ஒன்று பிரிந்து சென்றது.
--
ஹும்! நான் வசிக்கத்தகுந்த ஊராக தேடி அலைகிறேன், ஒன்று கூட உவப்பாக இல்லை. இப்போது ஹிமாலயத்தின் தெற்கு மலைச்சரிவில் அலைகிறேன். எவ்வளவு நாள்தான் அலைவது? ஆஹா! அதோ தூரத்தில் ஒரு கோட்டை தெரிகிறதே! அருகில் சென்று பார்க்கலாம்!’
கொஞ்சம் நெருங்கியபின் ஜீவாவுக்கு அந்த கோட்டை முழுதும் புலனாகியது.
லக்‌ஷணமாக இருக்கிறது” என்று நினைத்தான்..
எவ்வளவு நல்ல சாலைகள். சோலைகள் அற்புதம். பல மாடிக்கட்டிடங்கள்; அவற்றின் ஜன்னல்கள்… தங்கம், வெள்ளி, இரும்பு இவற்றால் அலங்கரித்து இருக்கிறார்கள். வீடுகளில் பல நவரத்தினங்கள் பதித்து இருக்கிறார்கள். ம்ம்ம்ம் அசுரர்களின் போகவதி என்று பெயர் பெற்ற நகரம் இப்படித்தான் இருக்குமோ? இந்த ஒரு கோட்டைக்குள் எத்தனை சபா மண்டபங்கள், நாற்சந்திகள், வீதிகள், விளையாட்டுக்கூடங்கள், கடைத்தெருக்கள், சத்திரங்கள், வெற்றித்தூண்கள்…. பலவித மரங்கள் வேறு, வரிசை வரிசையாய்.. எப்படி சாத்தியமாயிற்று?

ஜீவா அந்த கோட்டைக்குள் புகுந்தான். புற நகரிலேயே ஒரு அருமையான பூஞ்சோலை இருந்தது. தெய்வீகமான மரங்கள், செடி கொடிகள், பறவைகளின் இனிய கானம் தத்திச்செல்லும் தடாகங்கள். அட! புலி, சிங்கம் போன்ற காட்டெருமைகள் இருக்கின்றனவே? ஆனால் அவை சாதுவாக இருக்கின்றன. பயமில்லை. குயில்கள் கொஞ்சும் இந்த சோலைகளுக்கு வழிப்போக்கர்கள் தாமாகவே வருவர். சந்தேகமில்லை.

ஜீவா பிரமித்து நின்றான். உவமையில்லா சௌந்தரியம். அழகிய மூக்கு, முத்துப்பற்கள், கன்னங்கள், அழகிய வாய். காதுகள். அவளது முகத்தின் சமச்சீரான அமைப்பை பார்த்து ஜீவா வியந்தான். கரிய உடல் அழகில்லை என்று யார் சொன்னார்கள்? மஞ்சள் பட்டு எவ்வளவு பொருத்தமாக இருக்கிறது. தங்க நிற மேகலை, கால்களில் கிங்கிணி நாதம் எழுப்பும் கொலுசுக்கள்…. மதமடைந்த பெண் யானை என்று புலவர்கள் எழுதுவது இவளைப்பற்றித்தான் போலும் என்று நினைத்தான் ஜீவா.’

Friday, February 19, 2016

கிறுக்கல்கள்! -91



செயல் ஞானத்துக்கு கொண்டுப்போகுமா?”
கொண்டு போகும். ஆனா செயல் அதுக்காகவே செய்யப்படணும். அதுல லாபம் ஏதும் இருக்கக்கூடாது”

ஒரு முறை மாஸ்டர் தன் நண்பருடைய மகனுடன் புட் பால் மேட்ச் பார்க்கப்போனார். நண்பர் புட்பால் ப்ளேயர். ஆட்டம் ஒரு பயிற்சி ஆட்டம் மட்டுமே.

நண்பரின் ஆட்டம் அன்று பிரமாதமாக அமைந்தது. மிகுந்த எதிர்ப்பை சமாளித்து அருமையான கோல் அடித்த போது ஸ்டேடியமே எழுந்து நின்று கை தட்டியது.
ஆனால் பையன் அசுவாரசியத்துடன் இருந்தான்.

ஏன்பா, எல்லாரும் உங்க அப்பா அடிச்ச கோலை பாராட்டறாங்க, நீ ஏன் சுவாரசியம் இல்லாம இருக்க?
ஹும்! இன்னைக்கு செவ்வாக்கிழமை. இது ப்ராக்டிஸ் மேட்ச். வெள்ளிக்கிழமைதான் நிஜ மேட்ச். கோல் வேண்டியது அன்னைக்குத்தான்!


என்ன செய்யறது? கோலுக்காக கோல் அடிக்கற செயல் இல்லாம வேற செயல்களுக்குத்தான் மதிப்பு இருக்கு!

Thursday, February 18, 2016

மீண்டும் ரமணர்! -1



பக்தர் கேட்டார்: பகவானே, எப்பப்பாத்தாலும்  த்யானம் செய்யறப்ப இந்த கொசு வந்து கடிக்கறது. அதை அடிக்கலாமா?

என்ன த்யானம் செய்யறே?

நான் உடம்பு அல்ல ந்னு த்யானம் செய்யறேன்!

கொசுவும் அதைத்தானே செய்யறது? நீ உடம்பு அல்ல, நீ உடம்பு அல்ல ந்னு நியாபகப்படுத்திண்டே இருக்கு! அதை ஏன் அடிக்கணும்?

Wednesday, February 17, 2016

நான் யார்? - 24



முக்தி என்கிறது எது?
இப்ப நாம ஒரு மாயக் கட்டுக்குள்ள இருக்கோம். நாமல்லாத எதையோ நாம்ன்னு நினைச்சுக்கொண்டு இருக்கோம். அதனால நான் யார்ன்னு உண்மையா தீர விசாரிச்சு நம்மோட உண்மை சொரூபத்தை கண்டு பிடிச்சு அதிலேயே நிக்கறதுதான் முக்தி.

28. முக்தி யென்றா லென்ன?
பந்தத்தி லிருக்கும் தான் யாரென்று விசாரித்துத் தன் யதார்த்த சொரூபத்தைத் தெரிந்துகொள்வதே முக்தி.   

-நிறைந்தது- 

Tuesday, February 16, 2016

கிறுக்கல்கள்! -90



ஒரு சமூக சேவகி மாஸ்டரிடம் புலம்பித்தீர்த்து விட்டாள். ஏழைகளுக்கு இன்னும் எவ்வளவோ நல்லது செய்ய முடியும். என்ன செய்யறது? என் சக்தி, நேரத்தில பாதி வீண் குற்றச்சாட்டுகளுக்கு பதில் சொல்லறதிலேயும் தவறான புரிதல்களை சரி செய்யறதிலேயும் போயிடுது!”
மாஸ்டர் ஒரே வரியில் பதில் சொன்னார்.
காய்க்காத மரம் கல்லடி படாது!

Monday, February 15, 2016

நான் யார்? - 23


ஆரம்பத்திலேந்து அடிக்கடி விசாரணைன்னு சொல்லிகிட்டு இருக்கீங்களே; அதுக்கு த்யானத்துக்கும் என்ன வித்தியாசம்?
விசாரணை என்கிறது தன்னிலேயே மனசை வெச்சுக்கொண்டு இருக்கறது.
த்யானம் என்கிறது தன்னை ப்ரம்மம், சச்சிதானந்தம்ன்னு பாவிக்கிறது.
ஒரு விஷயத்தை ஒரு கருத்தும் இல்லாம பார்த்துக்கொண்டு இருக்கிறதுக்கும் ஒரு விஷயமா கருதி பாவிக்கிறதுக்கும் வித்தியாசம் இருக்கு இல்லையா?

27. விசாரணைக்கும் தியானத்திற்கும் பேதமென்ன?
விசாரணையாவது தன்னிடத்திலேயே மனதை வைத்துக் கொண்டிருப்பது. தியானமாவது தன்னை பிரம்ம மென்றும் சச்சிதானந்த மென்றும் பாவிப்பது.

Saturday, February 13, 2016

கிறுக்கல்கள்! - 89


மாஸ்டர் சொன்னார்: மக்கள் சந்தோஷமா இல்லாம இருக்க முக்கிய காரணம் அவங்களோட கஷ்டத்துல அவங்களுக்கு ஒரு குரூரமான திருப்தி கிடைக்குது.


மாஸ்டர் ஒரு முறை தொடர்வண்டியில் மேல் பெர்த்தில் படுத்து இரவுப்பயணம் செய்தார். தூங்கவே முடியவில்லை. காரணம் கீழ் பெர்த்தில் இருந்த கிழவி ஒருத்தி ஏதோ முனகிக்கொண்டே இருந்ததுதான். கூர்ந்து கேட்டார். “ கடவுளே எனக்கு எவ்வளோ தாகமா இருக்கு! கடவுளே, கடவுளே! எனக்கு எவ்வளோ தாகமா இருக்கு!”

பாவமே என்று கீழே இறங்கி இரண்டு பெரிய பேப்பர் கப் நிறை தண்ணீர் கொண்டுவந்து கொடுத்தார். ”இதோ உங்களுக்கு தேவையான தண்ணீர்.”
”கடவுள் உங்களை ஆசிர்வதிக்கட்டும்!” என்றவாறு வாங்கிக்குடித்தாள்.

அப்பாடா என்று மேல் பெர்த்தில் ஏறிப்படுத்து கொஞ்ச நேரத்தில் தூக்கம் வரப்போகும் நேரத்தில் கிழவி திருப்பி முனக ஆரம்பித்துவிட்டாள்.

கடவுளே எனக்கு எவ்வளோ தாகமா இருந்தது! கடவுளே, கடவுளே! எனக்கு எவ்வளோ தாகமா இருந்தது!”

Friday, February 12, 2016

நான் யார்? - 22



நிராசைந்னு சொல்லறாங்களே அதுக்கும் ஞானத்துக்கும் என்ன சம்பந்தம்?
ரெண்டும் கிட்டத்தட்ட ஒண்ணேதான். ஒண்ணுத்தோட இன்னொரு பரிணாமம்தான் இன்னொன்னு. நிறைய பொருட்கள் வெச்சு இருக்கு. அது எதுலேயும் நமக்கு மனசு போகலைன்னா அது நிராசை. இதேதான் வைராக்கியமும்; பற்றற்ற தன்மை. மனசு போகலை, சரி. அது தோன்றவே இல்லைன்னா? அதாவது தன்னைத்தவிர வேற எதுவுமே தோன்றலைன்னா? அதுதான் ஞானம். தன்னை விடாமலே இருக்கறதுதான் ஞானம்.


26. நிராசைக்கும் ஞானத்திற்கும் சம்பந்தமென்ன?
நிராசையே ஞானம். நிராசை வேறு ஞானம் வேறன்று; உண்மையில் இரண்டு மொன்றே. நிராசை யென்பது ஒரு பொருளிலும் மனம் செல்லாமலிருப்பது. ஞான மென்பது ஒரு பொருளும் தோன்றா திருப்பது. என்றால், அன்னியத்தை நாடா திருத்தல் வைராக்கியம் அல்லது நிராசை; தன்னை விடாதிருத்தல் ஞானம்.

Thursday, February 11, 2016

கிறுக்கல்கள்! - 88


சின்னக் குழந்தையை வளர்க்கிறது பத்தி ஒரு குழப்பத்தில இருந்த பெற்றோர்களுக்கு மாஸ்டர் சொன்னார் “ இந்த குழந்தையை உங்களுக்கு தெரிஞ்ச விஷயங்களை மட்டும் சொல்லிக்கொடுத்து வளர்க்காதீங்க. இவங்க பிறந்து இருக்கறது வேற காலம்!”

Wednesday, February 10, 2016

நான் யார்? - 21


அந்த லெவலுக்கு போயிட்டா ஞான த்ருஷ்டி எல்லாம் வந்துடும் இல்ல? மத்தவங்க மனசுல என்ன இருக்குன்னு கண்டுபிடிக்க முடியும்; எதிர் காலத்துல என்ன நடக்கும்ன்னு தெரியும்; கடந்த கால ரகசியங்கள் எல்லாம் தெரிஞ்சுக்க முடியும்; எங்கேயோ தூர தேசத்தில என்ன நடக்குதுன்னு இங்கிருந்தே சொல்ல முடியும். இல்லையா?
இல்லை.
! பின்னே?
அதெல்லாம் சில சித்திகள். உண்மையான ஞான த்ருஷ்டி சும்மா இருக்கறதுதான்.
அது என்ன கஷ்டம்?
கஷ்டம்தான். இருந்து பாத்தா தெரியும்! ஒரு கோவிலுக்கு புதுசா ஒரு நிர்வாகி வந்தார். கணக்கு வழக்கெல்லாம் கவனிச்சார். அதுல சும்மா இருக்கறவனுக்கு ஒரு பட்டை சாதம்ன்னு எழுதி இருந்தது. இது என்னன்னு விசாரிச்சார். இது ப்ரசாதத்தை யார் யாருக்கு கொடுக்கறோம்ன்னு பட்டியல் போட்டு இருக்குன்னு சொன்னாங்க.
சும்மா இருக்கறவன்னு போட்டு இருக்கே? அவர் வேலை ஒண்ணும் செய்ய மாட்டாரா?
ஆமா, அவர் சும்மா ஒரு தூண்ல சாஞ்சுகிட்டு இருப்பார்.
அப்ப அவனுக்கு எதுக்கு சாப்பாடு? இனிமே கொடுக்காதீங்க.
வேற வழியில்லை. அடுத்த நாள் அந்த நபருக்கு சாப்பாட்டுப் பட்டை கிடைக்கலை. அந்தப்பக்கம் போன ஆசாமியை ஏன்னு விசாரிச்சார். புது மணியக்காரர் உத்திரவுன்னாங்க. ஓஹோ அவரை இங்க கொஞ்சம் வரச்சொல்ல முடியுமான்னு கேட்டார். இதோ தற்செயலா அவரே வரார்; கேட்டுக்கோங்கன்னு சொன்னாங்க.
நீங்கதான் எனக்கு சாப்பாடு கொடுக்க வேணாம்ன்னு சொன்னீங்களா?
ஆமாம். சும்மா உக்காந்து இருக்க எதுக்கு சாப்பாடு?
சும்மா உக்காந்து பாத்தா புரியும்.
அதுல என்ன கஷ்டம்?
சரி; இங்க இந்த தூண்ல சாஞ்சுகிட்டு பத்து நிமிஷம் சும்மா இருங்க பாக்கலாம். ஒரு அசைவும் இருக்கக்கூடாது. ஒண்ணும் பேசக்கூடாது. சைகை காட்டக்கூடாது.
, என்ன கஷ்டம்ன்னு மணியக்காரர் உக்காந்தார். அஞ்சு நிமிஷத்துக்கு மேல உக்கார முடியலை! எழுந்துட்டார். இவருக்கு இனிமே ரெண்டு பட்டை பிரசாதம் கொடுங்கன்னு சொல்லிட்டு போயிட்டார்.
தமாஷ் கதைதான்னாலும் சும்மா இருக்கறதை போல கஷ்டமானது ஒண்ணுமில்லை. என்ன நடந்தாலும் எதிர்வினை இல்லாமல் எப்படி இருக்க முடியும்? மனசுல எண்ணங்கள் ஓடற வரை அவை ஏதேனும் செயலை தூண்டிகிட்டேத்தான் இருக்கும்.
உடம்பால சும்மா இருக்க முடிஞ்சாலும் மனசால சும்மா இருக்கணுமே; அது முடியுமா? கடந்த காலத்தை நினைச்சு அசை போட்டு திருப்பித்திருப்பி நடந்து முடிஞ்சு போன சமாசாரங்களூக்கு எல்லாம் வருத்தப்படறது; கோபப்படறது… இப்படி எத்தனை வீணான காரியம் எல்லாம் செய்யறோம். கடந்த காலம் பத்தி இல்லைன்னா எதிர் காலத்தை பத்திய பயம்! நாளைக்கு படுக்கையை விட்டு எழுதிருப்போமான்னு கூட நிச்சயமா சொல்ல முடியாது. இப்ப ரெண்டு வயசு இருக்கிற குழந்தையோட கல்யாணத்தைப்பத்தி கவலை படுவோம்!
இப்படி சும்மா இருக்கறது என்பது ரொம்ப ரொம்பவே கஷ்டம்! எது வேணா நடக்கட்டுமே; அதுக்கும் எனக்கும் சம்பந்தமே இல்லைன்னு யாரால சும்மா பார்த்துக்கொண்டு மட்டும் இருக்க முடியறதோ அவங்களுக்கு மட்டுமே ஞானம் பொருந்திய த்ருஷ்டி இருக்கு!

25. ஞானதிருஷ்டி என்றால் என்ன?
சும்மா விருப்பதற்குத்தான் ஞானதிருஷ்டி என்று பெயர். சும்மா விருப்பதாவது, மனத்தை ஆத்ம சொரூபத்தில் லயிக்கச் செய்வதே; அன்றி பிறர் கருத்தறிதல், முக்கால முணர்தல், தூர தேசத்தில் நடப்பன வறிதல் ஆகிய இவை ஞான திருஷ்டி யாகமாட்டா.