Pages

Monday, February 8, 2016

நான் யார்? - 20



சுகமா இருந்தேன்னு சுசுப்தில இருந்தவங்க சொல்வாங்கன்னு சொன்னிங்களே, அந்த சுகம் என்கிறது என்ன?
ஆத்ம சொரூபமா இருக்கிறதே சுகம். அவை ரெண்டும் வேறு வேறு இல்லை. வெளியே இருக்கிற லோகத்து சமாசாரங்களில சுகம் இல்லை. அப்படி இருக்கிறதா நாமதான் தப்பா நினைக்கிறோம். அவற்றுக்கான நம்மோட ரிஆக்‌ஷன்லதான் அந்த சுகம் இருக்கு.
ஒரு குழந்தை ஒரு குறிப்பிட்ட பொம்மை வேணும்ன்னு பிடிவாதம் பிடிக்கறது. அது கிடைக்கும் வரை அதுவே அதோட எண்ணமா இருக்கு. அது கிடைச்சதும் அதோட சந்தோஷத்தை பாக்கணுமே! அதை வெச்சுண்டு விளையாடறது. அடுத்த நாள் பாத்தா அந்த பொம்மை ஒரு மூலையில கிடக்கும்! குழந்தை அதை பாத்தாக்கூட உதாசீனம் பண்ணிட்டு போய் கொண்டு இருக்கும். ஏன்? அப்ப அதுக்கு அந்த பொம்மை தேவையில்லை; அது வேணும்ன்னு தோணலை.
அப்ப சந்தோஷம் அந்த பொம்மையில இல்லை. அது நம்கிட்டே தோற்றுவிக்கற ரிஆக்‌ஷன்லதான் இருக்கு! இது போலத்தான் நம்மோட எல்லா ஆசைகளுமே! வேலை கிடைக்கணும்; ப்ரொமோஷன் வேணும், நிறைய பணம் வேணும்… இதுப்போல பலதும்.
நினைச்சது கிடைச்சது, வெறுத்தது நீங்கினது, ஆசை பூர்த்தியாறது இப்படி சிலதுல சுகம் இருக்குன்னா, அப்போ எண்ணதோட குறிக்கோள் பூர்த்தி ஆகிடறது. அந்த நேரத்துக்கு மனசு தன்னோட இருப்பிடத்துக்கு திரும்பறது. இருப்பிடம் ஆத்மா என்கிறதால அப்ப அனுபவிக்கறது ஆத்ம சுகமே!
ஆனா நாம் இந்த சுகத்திலேயே திளைச்சு இருந்துடறதில்லை. அடுத்த ஆசை ஆரம்பிக்கறது!
மனசு எப்போவெல்லாம் வெளியே அலையுமோ அப்ப துக்கம் ஏற்படறது. எப்பல்லாம் உள்நோக்கி திரும்புமோ அப்பல்லாம் சந்தோஷப்படுது! சுகமும் துக்கமும் மாறி மாறி வாழ்க்கையில வரும் என்கிறதுக்கு அர்த்தம் என்னன்னா மனசு உள்ளேயும் வெளியேயும் மாறி மாறி திரும்புது என்பதே!
கோடை காலத்தில வெளியே ஒரே சூடா இருக்கு. அப்படி இருக்கிறப்ப ஒத்தன் வெளியே அலைஞ்சான்னா சீக்கிரத்தில சூடு தாங்காம கஷ்டப்படுவான். அவன் ஒரு மரத்தடியை அடைஞ்சு அங்கே இளைப்பாறினா…. ஆஹா! என்ன சுகம்! இதுலேயே இருக்காம அவன் ஏதோ வேலை இருக்கிறதா நினைச்சு வெளியே திரும்பவும் போவான்னா திருப்பி துக்கத்தை அனுபவிப்பான்.
ஞானி எப்பவும் இந்த ஆத்ம சுகத்திலேயே இருக்கான். அஞ்ஞானி பிரபஞ்சத்தில உழலுவதால துக்கப்படறான். அப்பப்ப மனசு உள்முகமா திரும்பி கொஞ்சமே கொஞ்சம் சுகம் அனுபவிக்கிறான், திருப்பி வெளியே பார்க்க ஆரம்பிக்கறான்.
உலகம் என்கிறது நினைவுகள்தான். நினைவுகள் நீங்க சுகம் ஏற்படுது. அதாவது உலகம் தோன்றும் போது துக்கமும் அது மறையும் போது சுகமும் உண்டாகிறது.


24. சுகமாவது யாது?
சுகமென்பது ஆத்மாவின் சொரூபமே; சுகமும் ஆத்ம சொரூபமும் வேறன்று. பிரபஞ்சப் பொருள் ஒன்றிலாவது சுக மென்பது கிடையாது. அவைகளிலிருந்து சுகம் கிடைப்பதாகநாம் நமது அவிவேகத்தால் நினைக்கின்றோம். மனம் வெளி வரும்போது துக்கத்தை யனுபவிக்கிறது. உண்மையில் நமது எண்ணங்கள் பூர்த்தியாகும்போ தெல்லாம் அது தன்னுடைய யதாஸ்தானத்திற்குத் திரும்பி ஆத்ம சுகத்தையே யனுபவிக்கிறது. அப்படியே, தூக்கம், சமாதி, மூர்ச்சை காலங்களிலும், இச்சித்த பொருள் கிடைக்கிறபோதும், வெறுத்தபொருளுக்குக் கேடுண்டாகும்போதும், மனம் அந்தர்முகமாகி ஆத்ம சுகத்தையே யனுபவிக்கிறது. இப்படி மனம் ஆத்மாவை விட்டு வெளியே போவதும் உள்ளேதிரும்புவதுமாக ஓய்வின்றி யலைகிறது. மரத்தடியில் நிழல் சுகமா யிருக்கிறது. வெளியில் சூரிய வெப்பம் கொடுமையா யிருக்கிறது. வெளியி லலையு மொருவன் நிழலிற் சென்றுகுளிர்ச்சி யடைகிறான். சிறிது நேரத்திற்குப் பின் வெளிக்கிளம்பி வெப்பத்தின் கொடுமைக் காற்றாது, மறுபடியும் மரத்தடிக்கு வருகின்றான். இவ்வாறு நிழலினின்று வெயிலிற் போவதும், வெயிலினின்று நிழலிற் செல்வதுமாயிருக்கிறான். இப்படிச் செய்கிறவன் அவிவேகி. ஆனால் விவேகியோ நிழலை விட்டு நீங்கான். அப்படியே ஞானியின் மனமும் பிரம்மத்தை விட்டு நீங்குவ தில்லை. ஆனால் அஞ்ஞானியின் மனமோ பிரபஞ்சத்தி லுழன்று துக்கப்படுவதும், சிறிது நேரம் பிரம்மத்திற்குத் திரும்பி சுக மடைவதுமா யிருக்கிறது. ஜகமென்பது நினைவே. ஜகம் மறையும்போது, அதாவது நினைவற்ற போது, மனம் ஆனந்தத்தை யனுபவிக்கின்றதுஜகம் தோன்றும் போது அது துக்கத்தை யனுபவிக்கின்றது.

No comments: