Pages

Wednesday, February 10, 2016

நான் யார்? - 21


அந்த லெவலுக்கு போயிட்டா ஞான த்ருஷ்டி எல்லாம் வந்துடும் இல்ல? மத்தவங்க மனசுல என்ன இருக்குன்னு கண்டுபிடிக்க முடியும்; எதிர் காலத்துல என்ன நடக்கும்ன்னு தெரியும்; கடந்த கால ரகசியங்கள் எல்லாம் தெரிஞ்சுக்க முடியும்; எங்கேயோ தூர தேசத்தில என்ன நடக்குதுன்னு இங்கிருந்தே சொல்ல முடியும். இல்லையா?
இல்லை.
! பின்னே?
அதெல்லாம் சில சித்திகள். உண்மையான ஞான த்ருஷ்டி சும்மா இருக்கறதுதான்.
அது என்ன கஷ்டம்?
கஷ்டம்தான். இருந்து பாத்தா தெரியும்! ஒரு கோவிலுக்கு புதுசா ஒரு நிர்வாகி வந்தார். கணக்கு வழக்கெல்லாம் கவனிச்சார். அதுல சும்மா இருக்கறவனுக்கு ஒரு பட்டை சாதம்ன்னு எழுதி இருந்தது. இது என்னன்னு விசாரிச்சார். இது ப்ரசாதத்தை யார் யாருக்கு கொடுக்கறோம்ன்னு பட்டியல் போட்டு இருக்குன்னு சொன்னாங்க.
சும்மா இருக்கறவன்னு போட்டு இருக்கே? அவர் வேலை ஒண்ணும் செய்ய மாட்டாரா?
ஆமா, அவர் சும்மா ஒரு தூண்ல சாஞ்சுகிட்டு இருப்பார்.
அப்ப அவனுக்கு எதுக்கு சாப்பாடு? இனிமே கொடுக்காதீங்க.
வேற வழியில்லை. அடுத்த நாள் அந்த நபருக்கு சாப்பாட்டுப் பட்டை கிடைக்கலை. அந்தப்பக்கம் போன ஆசாமியை ஏன்னு விசாரிச்சார். புது மணியக்காரர் உத்திரவுன்னாங்க. ஓஹோ அவரை இங்க கொஞ்சம் வரச்சொல்ல முடியுமான்னு கேட்டார். இதோ தற்செயலா அவரே வரார்; கேட்டுக்கோங்கன்னு சொன்னாங்க.
நீங்கதான் எனக்கு சாப்பாடு கொடுக்க வேணாம்ன்னு சொன்னீங்களா?
ஆமாம். சும்மா உக்காந்து இருக்க எதுக்கு சாப்பாடு?
சும்மா உக்காந்து பாத்தா புரியும்.
அதுல என்ன கஷ்டம்?
சரி; இங்க இந்த தூண்ல சாஞ்சுகிட்டு பத்து நிமிஷம் சும்மா இருங்க பாக்கலாம். ஒரு அசைவும் இருக்கக்கூடாது. ஒண்ணும் பேசக்கூடாது. சைகை காட்டக்கூடாது.
, என்ன கஷ்டம்ன்னு மணியக்காரர் உக்காந்தார். அஞ்சு நிமிஷத்துக்கு மேல உக்கார முடியலை! எழுந்துட்டார். இவருக்கு இனிமே ரெண்டு பட்டை பிரசாதம் கொடுங்கன்னு சொல்லிட்டு போயிட்டார்.
தமாஷ் கதைதான்னாலும் சும்மா இருக்கறதை போல கஷ்டமானது ஒண்ணுமில்லை. என்ன நடந்தாலும் எதிர்வினை இல்லாமல் எப்படி இருக்க முடியும்? மனசுல எண்ணங்கள் ஓடற வரை அவை ஏதேனும் செயலை தூண்டிகிட்டேத்தான் இருக்கும்.
உடம்பால சும்மா இருக்க முடிஞ்சாலும் மனசால சும்மா இருக்கணுமே; அது முடியுமா? கடந்த காலத்தை நினைச்சு அசை போட்டு திருப்பித்திருப்பி நடந்து முடிஞ்சு போன சமாசாரங்களூக்கு எல்லாம் வருத்தப்படறது; கோபப்படறது… இப்படி எத்தனை வீணான காரியம் எல்லாம் செய்யறோம். கடந்த காலம் பத்தி இல்லைன்னா எதிர் காலத்தை பத்திய பயம்! நாளைக்கு படுக்கையை விட்டு எழுதிருப்போமான்னு கூட நிச்சயமா சொல்ல முடியாது. இப்ப ரெண்டு வயசு இருக்கிற குழந்தையோட கல்யாணத்தைப்பத்தி கவலை படுவோம்!
இப்படி சும்மா இருக்கறது என்பது ரொம்ப ரொம்பவே கஷ்டம்! எது வேணா நடக்கட்டுமே; அதுக்கும் எனக்கும் சம்பந்தமே இல்லைன்னு யாரால சும்மா பார்த்துக்கொண்டு மட்டும் இருக்க முடியறதோ அவங்களுக்கு மட்டுமே ஞானம் பொருந்திய த்ருஷ்டி இருக்கு!

25. ஞானதிருஷ்டி என்றால் என்ன?
சும்மா விருப்பதற்குத்தான் ஞானதிருஷ்டி என்று பெயர். சும்மா விருப்பதாவது, மனத்தை ஆத்ம சொரூபத்தில் லயிக்கச் செய்வதே; அன்றி பிறர் கருத்தறிதல், முக்கால முணர்தல், தூர தேசத்தில் நடப்பன வறிதல் ஆகிய இவை ஞான திருஷ்டி யாகமாட்டா.


No comments: